கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

ஆய்வுக் கட்டுரை: இஸ்லாமிய பார்வையில் அரசியல் பொருளாதாரம்

Loading

[முதலாளித்துவச் சுரண்டலுக்கும் தாராளமயக் கொள்ளைக்கும் முடிவுகட்ட வேண்டுமென்பதில் பலருக்கும் உடன்பாடுதான். நாட்டை பெருமுதலாளிகளுக்கு தாரைவார்ப்பதற்கென்றே இயற்றப்படும் அரசுக் கொள்கைகளை தீவிரமாக எதிர்க்கிறோம். “புற்றுநோய்க்குப் புனுகு தடவுவது போன்ற சீர்திருத்தங்களால் இனி ஆவதற்கு ஒன்றுமில்லை, அனைத்தையும் புரட்டிப்போடும் புரட்சி ஒன்றே தீர்வு” என முழங்குகிறோம்.

நடப்பிலிருக்கும் சுரண்டல்வாத அமைப்பில் பயனீட்டி வரும் உயர் மற்றும் உயர்-நடுத்தர வர்க்கத்தினர் மட்டுமே இந்தப் பார்வையுடன் பெருமளவு முரண்படுகின்றனர். “அமைப்பில் பிரச்சினை இல்லை, செயல்படுத்துவோரிடம்தான் கோளாறு” என்றும்; “ஆகவே, தீர்வை அமைப்புக்குள்ளேதான் தேடவேண்டும்” என்றும் நம்புகின்றனர். இது எப்படி மொண்ணையான ஒரு பார்வை என்பதைப் பிறிதொரு சந்தர்ப்பத்தில் அலசுவோம். நடப்பிலுள்ள அமைப்பை மாற்றீடு செய்ய வேண்டும் என்பதில் கருத்துடன்பாடு கொள்வோரை மட்டும் இப்போது கருத்தில் எடுத்துக் கொள்வோம்.

கம்யூனிஸ்டுகள் சோஷலிசத்தைத் தீர்வாக முன்வைக்கிறார்கள். அவர்கள் முன்மொழியும் அரசியல், பொருளியல் அமைப்பு எத்தகையது என்பது பற்றி பேசும் விரிவான ஆக்கங்கள் தமிழில் கிடைக்கின்றன. ஆனால், ‘இஸ்லாமே தீர்வு’ என்ற முழக்கத்தைத் தாண்டி, முஸ்லிம்கள் முன்வைக்கும் மாற்று அரசியல், பொருளியல் அமைப்பு எத்தகையது என்பது பற்றி அறிந்து கொள்வதற்கு ஓரளவு விரிவான ஆக்கங்கள் கூட தமிழில் அறவே கிடையாது என்றுதான் சொல்ல வேண்டும். அவ்வாறு முழக்கமிடும் பெரும்பாலானோருக்கு இஸ்லாமிய அரசியல், பொருளியல் அமைப்பின் அரிச்சுவடி கூட தெரியாது என்பது அவப்பேறான நிதர்சனம்.

இந்நிலையில் எமக்கிருக்கும் எளிய வளங்களைக் கொண்டு, எம்மால் இயன்றவரை அந்த இடைவெளியை நிரப்ப வேண்டும் என்ற முடிவில் நாங்கள் எடுத்து வைக்கும் முதற் காலடி இது. இஸ்லாமிய உலகக் கண்ணோட்டத்திலிருந்து எழுதப்படும் சமகால சமூக, அரசியல், பண்பாட்டு விமர்சன ஆக்கங்களுக்கு மத்தியில் அவ்வப்போது இஸ்லாமியக் கோட்பாட்டுக் கல்வியை வலுப்படுத்தும் விதமான ஆக்கங்களையும் ‘மெய்ப்பொருள்’ தளத்தில் வெளியிட எண்ணியிருக்கிறோம். எல்லாவற்றிலும் போல் இதிலும் இறைவனே எம் உற்ற துணைவன்!

எந்தவொரு அரசியல், பொருளாதார, பண்பாட்டு அமைப்பாயினும் அதுவொரு உலகநோக்கு அல்லது மெய்யியலில் இருந்தே உருவாகி வளர்கிறது. தனக்கென வரையறுக்கப்பட்ட கோட்பாட்டுச் சட்டகத்தை அது கொண்டிருக்கும். அனைத்து சித்தாந்தங்களுக்கும் இது பொருந்தும். எனவே, இஸ்லாமியப் பொருளியல் மாதிரியின் நடைமுறை வடிவங்களை புரிந்துகொள்ளத் தொடங்கும் முன் அதன் அடித்தளத்தை உருவாக்கும் மெய்யியலை உள்வாங்கிக் கொள்வது அவசியம்.

அந்த வகையில் ஆரம்பமாக, முஹம்மது பாக்கிர் அஸ்-ஸத்ரு என்ற ஈராக்கிய அறிஞர் முன்வைத்த ‘இஸ்லாமிய அரசியல் பொருளாதாரம்’ பற்றிய பார்வைகளைச் சுருக்கமாக அறிமுகப்படுத்தும் ஆங்கிலக் கட்டுரையொன்றை மொழிபெயர்த்துத் தருகிறோம்.

கட்டுரையாசிரியர்: தாலிப் எம். அஸீஸ்]

கம்யூனிசம் கிழக்கு ஐரோப்பாவிலும் அதன் கேந்திரமான சோவியத் ஒன்றியத்திலும் வீழ்ச்சி கண்டதையடுத்து, மீண்டும் முதலாளித்துவ நடைமுறைகளும் சட்டங்களுமே உலகில் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்திருக்கின்றன. இன்றைய உலகப் பொருளாதாரம் ஆதம் ஸ்மித்தின் கருத்துக்களுக்கு அமைவாகவே வடிவமைக்கப்பட்டுள்ளது. பொருளாதார வளர்ச்சிக்கான மாற்றுப் பாதைகள் பற்றி எவரும் சிந்திக்க முன்வருதில்லை என்பதுடன், “சந்தை விதிகளே” சந்தையைக் கட்டுப்படுத்தும்படி விடப்பட்டுள்ளது.

தேசங்களினதும் மக்களினதும் வாழ்வைத் தீர்மானிக்கும் காரணியாக சந்தையின் ‘மறைமுகக் கரம்’ உருவெடுத்திருப்பது வெளிப்படை, முன்பைக் காட்டிலும் வலுவாக. விளைவு என்னவென்றால், சமூகத்திலுள்ள தனிநபர்களின் நலன்களே பொருளாதாரத்தை இயக்கும் சக்தியாக மாறியிருப்பதுடன், கொள்ளை லாபமீட்டுவோரை நெறிப்படுத்துவதற்குள்ள ஒரே பொறிமுறை வரத்து மற்றும் தேவையின் (supply and demand) விதி என்பதே நிலை. தமது தேசங்களின் பொருளியல் பிரச்சினைகளுக்குத் தீர்வு என்பதாக ‘மார்க்சிய அணி’ எனச் சொல்லப்படுவதைச் சேர்ந்த பொருளியல் நிபுணர்கள் முன்வைப்பதும் கூட சற்றேறக்குறைய இதனை ஒத்ததாகவே இருக்கின்றது.

ஆனால் முஸ்லிம் சிந்தனையாளர்களும் அரசியல் செயல்பாட்டாளர்களும் இதுவல்ல உண்மை என்கிறார்கள். மனிதர்களால் உருவாக்கப்பட்ட குறைபடைத்த அரசியல் அமைப்புகள், அற விழுமியங்கள் ஆகியவற்றால் உருவாகும் பிரச்சினைகளுக்குரிய தீர்வினை மனிதகுலத்துக்கு இஸ்லாம் வழங்குகிறது என்றவர்கள் நம்புகிறார்கள். சடத்துவம், மானசீகம் என்று வாழ்வின் எல்லா அம்சங்களிலும் அமைதியையும் நிறைவையும் எய்துவதை நோக்கி வழிநடத்தும் திறன்படைத்ததும், இறைவனால் வழங்கப்பட்டதுமான சமூகக் கட்டமைப்பு இஸ்லாம் மட்டுமே என்பது அவர்களின் துணிபு.

அத்தகைய ஒரு சிந்தனையாளர், அரசியல் செயல்பாட்டாளர்தான் ஈராக்கைச் சேர்ந்த முஹம்மது பாக்கிர் அஸ்-ஸத்ரு. ஈராக்கின் பாதிஸ்டு அரசினை எதிர்த்துப் புரட்சிகர இயக்கத்தை வழிநடத்தியதற்காக 1980ஆம் ஆண்டு அவருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது. அவர் முஸ்லிம் உலகில் நடப்பிலிருக்கும் ஆட்சிகளைச் சீரழிந்தவை என மதிப்பிட்டதுடன், அவற்றைப் பதிலீடு செய்யத்தக்க இஸ்லாமிய அரசியல் அமைப்பொன்றைக் கருத்துருவாக்கம் செய்வதிலும் வெற்றிகண்டார். முஸ்லிம் உலகில் முதலாளித்துவ, சோஷலிச அமைப்புகள் ஆதிக்கம் செலுத்திவரும் நிலையில், புதியதோர் சமூக-பொருளாதார அமைப்பைக் கொண்டு அவற்றைப் பதிலீடு செய்வதே அவரின் வருங்காலத் திட்டம்.

இஸ்லாமியப் பொருளாதார அமைப்பு பற்றிய அவரின் பார்வைகளையும் அடிப்படைக் கோட்பாடுகளையும் கவனப்படுத்துவதையே இக்கட்டுரை நோக்கமாகக் கொண்டுள்ளது. முதலாளித்துவ அமைப்பின் முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கும், அதன் மூலம் மனிதர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் இஸ்லாமியப் பொருளாதார அமைப்பு மட்டுமே அதிகத் திறன்படைத்தது என்பதையும்; மேலும் முக்கியமாக, மனிதர்களின் உள்ளார்ந்த திறன்களுக்கு இயைந்த வகையில் வளர்வதற்கும் முன்னேறுவதற்குமான ஆற்றல் இஸ்லாத்திடம் மட்டுமே உண்டு என்பதையும் அவர் திடமாக நம்பினார்.

ஒரு இஸ்லாமிய சட்ட அறிஞர் என்ற வகையில் தனது வாதத்துக்கான அடித்தளத்தை இஸ்லாமிய அடிப்படைக் கோட்பாடுகளிலிருந்தும் புனித உரைகளிலிருந்தும் பெறுகிறார் ஸத்ரு. அவருடைய கருத்தியல் வாதங்களையும் சமூகத்துக்கான பொருளியல் பொறிமுறையையும் அறிமுகப்படுத்துவதும்; அந்தப் பார்வைகளும் திட்டங்களும் யதார்த்தத்துடன் பொருந்துபவைதானா என்று காண்பதுமே  இங்கு நமது நோக்கம். அவருடைய வாதத்தின் முக்கியக் கருவை எடுத்துக் காட்டுவதும், இஸ்லாமியப் பொருளாதார அமைப்பின் கட்டமைவினைப் புரிந்துகொள்ள முனைவதுமே இந்த ஆய்வுக் கட்டுரையின் குறிக்கோள்.

முஹம்மது பாக்கிர் அஸ்-ஸத்ரு

அவருடைய பொருளியல் பார்வைகள், உண்மையில் ஒரு பூரணத்துவ இஸ்லாமிய சமூக அமைப்பை நிறுவுவதற்காக அவர் வடிவமைத்தவோர் பொது அரசியல் கோட்பாட்டின் ஒரு பகுதி மட்டுமே. எனவே ஒட்டுமொத்த சமூக-பொருளாதார புலத்திலுமான மனித நடத்தையும் இஸ்லாத்தினால் தீர்மானிக்கப்படும் வகையில் ஓர் இஸ்லாமிய அரசு உருவாக்கப்பட்டதன் பிறகே, இஸ்லாமியப் பொருளாதார அமைப்பின் வினைத்திறத்தை மதிப்பிட வேண்டும். பொருளாதாரம் பற்றிய ஸத்ருடைய முக்கிய ஆக்கம் 1960-61 ல் எழுதப்பட்டதாகும். இதுவன்றி அவர் தனது வாழ்வின் பிந்தைய காலத்தில் எழுதியவோர் சிற்றேடும் உண்டு. எவ்வாறாயினும், ‘இக்திஸாதுனா‘ (‘நமது பொருளியல்’) என்றவோர் ஆக்கத்திலேயே அவருடைய சிந்தனையின் முக்கியக் கரு அடங்கியுள்ளது என்று சொல்ல முடியும்.

இஸ்லாமிய அரசின் பொருளியல் என்பது இறைவனின் பிரதிநிதியான (கலீஃபா) தனிமனிதனுக்கும், அதற்கு சாட்சியாக (ஷாஹித்) இருந்து இறைவனின் சட்டங்களை முன்னின்று அமலாக்கம் செய்யும் ஆட்சியாளருக்கும் நடுவே பகுக்கப்பட்டுள்ளது என்கிறார் ஸத்ரு. எனவே, இஸ்லாமிய அரசின் பொருளியல் கட்டமைப்பானது, தனிச் சொத்து – பொதுச் சொத்து இரண்டையும் கொண்டுள்ளது. அதற்காக அதனை முதலாளித்துவம், சோஷலிசம் இரண்டினது ஒருவகைக் கலவை என்று கருதிவிட முடியாது. அவ்வாறு தவறாகப் புரிந்துகொள்வதை ஸத்ரு வன்மையாக நிராகரிக்கிறார்.

தனி மற்றும் பொதுச் சொத்துரிமைகளுக்கு இடையிலான இணக்கமென்பது இஸ்லாத்தின் அடிப்படை நம்பிக்கைக் கோட்பாடுகளிலிருந்து பிறக்கிறது என்று வாதிக்கிறார் ஸத்ரு.[1] எந்த அடிப்படையில் முதலாளித்துவத்தில் தனிச் சொத்துரிமைக்கும், சோஷலிசத்தில் பொதுச் சொத்துரிமைக்கும் ஆதரவாக வாதிக்கப்படுகிறதோ அதனை ஒத்ததுதான் இதுவும்:

அதாவது, தனிச் சொத்துரிமையும் பொதுச் சொத்துரிமையும் அந்தந்த கருத்தியல்-மெய்யியல் நம்பிக்கைகளின் தர்க்க விளைவான முடிவுகளே.

இஸ்லாம் முன்வைக்கும் தனி மற்றும் பொதுச் சொத்துரிமைகளின் நியாயத்தை புரிந்துகொள்ள வேண்டுமெனில், இஸ்லாத்தில் தனிமனிதருக்கும் அரசுக்கும் உள்ள உரிமைகள்-கடமைகள் பற்றி புரிந்துகொள்ள வேண்டும். ஓர் இஸ்லாமிய அரசில் பொருளாதார உறவுகள் பற்றியும், அதன் பொருளியல் கட்டமைப்பு பற்றியும் ஸத்ரு வழங்கும் விரிவான வருணனைதான், ‘இஸ்லாமியப் பொருளாதாரம்’ தொடர்பாக முன்வைக்கப்படும் வாதங்களில் தலைசிறந்து விளங்குகிறது.

பொருளாதார உறவுகள்

மனிதனின் நடத்தையை மூன்று விதமான உறவுகளுக்குள் வகைப்படுத்தலாம் என்கிறார் ஸத்ரு. அவை முறையே சமூக, பொருளாதார, சமய உறவுகள் என்பனவாகும். மனிதன் பிற மனிதர்களுடனும், சுற்றுச் சூழலுடனும், இறைவனுடனும் கொண்டுள்ள அடிப்படை உறவிலிருந்தே மேற்சொன்ன மூன்று வகை உறவுகளும் முளைவிடுகின்றன. இதில், “நல்லவற்றை தனக்கெனத் திரட்டிக் கொள்ளவும், தனது நலன்களை பாதுகாத்துக் கொள்ளவும், தனது தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளவும்” வேண்டுமென மனிதனை உந்துகிற ‘தன்னல விருப்பம்’ எனும் உள்ளார்ந்த உணர்வின் வெளிப்பாடே பொருளாதார உறவுகள்.[2]

அந்த வகையில் சுற்றுச் சூழலுடன் உறவாடிய மனிதன் தனது தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்காகவும், இன்பத்தை அதிகப்படுத்திக் கொள்வதற்காகவும் இயன்றவரை வளங்கள் அனைத்தையும் பயன்படுத்திக் கொள்ள விழைந்தான். சுற்றுச் சூழலுடனான தனது போராட்டத்தில் அவன் காலவோட்டத்தில் விலங்குகளையும் தாவரங்களையும் தனக்கு உதவும்படி செய்ய விரும்பினான்.

வரலாற்றின் ஆரம்பக் கட்டத்தில் மனிதனின் அடிப்படைத் தேவைகள் எளிமையானவையாகவே இருந்தன. ஆனால் சுற்றுச் சூழலின் வளங்களை பயன்படுத்துவதற்கான புதிய வழிமுறைகளை உருவாக்கிக் கொள்வதற்கு அவனுடைய அறிவுத் திறன் வகை செய்தது. சுற்றுச் சூழலின் வளங்களை பயன்படுத்துவதில் உள்ள சிக்கல் தன்மையைப் பொறுத்து அவனுடைய தேவைகளும் சதா விரிந்து செல்கின்றன.

மனிதனுக்கு அவனையொத்த பிறருடன் உள்ள உறவென்பது, தனது தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கு அவனுக்கிருந்த அவசியத்தின் காரணத்தால் இயல்பாக உருவான ஒன்றாகும். சுற்றுச் சூழலுடன் அவனுக்குள்ள உறவின் பின்னணியில் எழும் வாழ்வின் சிக்கல் தன்மையானது, அவன் தனது தேவைகளை போதுமானளவு பூர்த்தி செய்துகொள்வதை கடினமாக்குகிறது.

தேவைகளை பூர்த்தி செய்துகொள்வதற்காக அவன் மேற்கொள்ளும் முயற்சிகள், மற்றோருடன் ஒத்துழைக்கும் போது சக்திக்கு உட்பட்டவையாக மாறுகின்றன. கிடைக்கும் நலன்களை சமுதாயத்தின் உறுப்பினர்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்வதற்கு இந்த ஒத்துழைப்பு காரணமானது.[3] இவ்வாறு தன்னல விருப்பு எனும் உள்ளுணர்வினால் உந்தப்பட்டே மனிதன் முதலாவது சமுதாயத்தை உருவாக்கினான் என்பது தெளிவாகிறது. அதே உள்ளுணர்வுதான் அவன் தனது சகோதரனை சுரண்டுவதற்கும் காரணமானது.

மனிதர்கள் தமது உடல்-மன திறன்களில் சமமானவர்களில்லை என்பதால், சுற்றுச் சூழலின் வளங்களை பயன்படுத்துவதிலும் அவர்கள் வேறுபடுகிறார்கள். மனிதச் சமுதாயத்தில் வேலைப் பகிர்வின் ஊடாக ஒத்திசைவை ஏற்படுத்தும் இறைத் திட்டத்தின் ஒரு பகுதிதான், மனிதர்களிடையே காணப்படும் இந்த திறன் வேறுபாடு. சமூக ஒழுங்கிற்குள் வாழும் வேறுபட்ட திறன்களை கொண்ட மனிதர்கள் ஒவ்வொருவரும் வேறுபட்ட பணிகளில் ஈடுபடுகிறார்கள்.[4]

எனினும் தனது நலன்களை அதிகபட்சமாக்கிக் கொள்ள வேண்டுமென்ற மனித ஆசையால் தூண்டப்படும் சிலர் சந்தர்ப்பச் சூழலை தமக்குச் சாதகமாக ஆக்கிக் கொள்கின்றனர். மனிதனின் அறிவு, பொருளாதாரம் ஆகியவை வளர வளர, மனிதத் தேவைகளும் வளர்ந்தன. சுற்றுச் சூழலின் வளங்களை பயன்படுத்துவதற்கான அவனுடைய திறன்களை அவன் பெற்ற அனுபவம் அகலப்படுத்தியது. சுற்றுச் சூழலின் வளங்களை தனக்கெனத் திரட்டி வைத்துக் கொள்ளும் உணர்வு வலுவாகிக் கொண்டே வந்தது. இதன் தொடர்ச்சியாக சிலர் தமது பேராசையையும் தன்முனைப்பையும் (இரண்டுமே தன்னல விருப்பின் விளைவுகள்தாம்) திருப்திபடுத்திக் கொள்வதற்காக மற்றவர்களை ஒடுக்கத் தலைப்பட்டனர். பொருளாதாரச் சுரண்டலின் வடிவிலான ஒடுக்குமுறைக்கு மனித சமுதாயம் முதன்முறை முகம்கொடுத்தது அப்போதுதான்.

சமூக அமைதிக்கும் மனிதனின் தன்னல வெறிக்கும் இடையிலான இம்மோதல், வரலாறு நெடுகிலும் நிலையாக இடம்பெற்று வந்துள்ளது. இந்த வரலாற்று மோதல் இரண்டு வர்க்கங்களுக்கு இடையிலானது என்று வாதிடுகிறார் ஸத்ரு: சுற்றுச் சூழலின் வளங்களை தமது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு தம்முடைய சொந்த நலன்களை பாதுகாத்துக் கொள்ளப் போராடும் தனிமனிதர்களுக்கும், சமூகத்தில் அமைதியுடனும் ஒத்துழைப்புடனும் வாழ விரும்பும் ஏனையவர்களுக்கும் இடையிலான மோதல் அது.

சொற்ப எண்ணிக்கையிலானவர்கள் பொருளாதார வளங்களைக் கட்டுப்படுத்த ஆரம்பித்ததிலிருந்தே பிரச்சினை தோன்றியது என்றும்; ஒடுக்கப்பட்ட வர்க்கத்தின் புரட்சியை நிகழ்த்தி, சலுகைபெற்ற வர்க்கத்தின் சிறப்புரிமைகளை ஒழித்துக் கட்டுவதே சமூக அமைப்பில் அமைதியைக் கொண்டு வருவதற்குள்ள ஒரே வழி என்றும் மார்க்சியர்கள் நம்புகின்றனர்.

மறுபுறம், சுற்றுச் சூழலின் வளங்கள் எல்லா மக்களின் தேவைகளையும் பூர்த்தி செய்வதற்கு போதுமானவையாக இருப்பதில்லையென்ற காரணத்தாலேயே சமூகத்தில் இத்தகைய மோதல்நிலை தோன்றுகிறது என்றும்;  எனவே இத்தகைய முரண்பாடு எப்போதும் இருக்கத்தான் செய்யும் என்றும்; மனித வளர்ச்சியை பலிகொடுக்காத வகையில் மேற்கொள்ளப்படும் படிப்படியான சீர்திருத்தங்களின் வழியாக மட்டுமே அந்தச் சமூக முரண்பாட்டை கட்டுப்படுத்த முடியும் என்றும் முதலாளித்துவ வாதிகள் நம்புகின்றனர்.[5] இந்தப் பார்வையின் அடிப்படையில் அவர்கள் எந்தவொரு சமூகப் புரட்சியையும் எதிர்க்கிறார்கள்.

ஆனால் இஸ்லாம் இவ்விரு பார்வைகளுடனும் வேறுபடுகிறது. எல்லா மக்களின் தேவைகளையும் பூர்த்தி செய்வதற்கு போதுமானவையாகவே சுற்றுச் சூழலின் வளங்கள் இருப்பதாக அது நம்புகிறது.

மனித இயல்பை நெறிப்படுத்துவதில்தான் பிரச்சினை தங்கியுள்ளது என்பதே ஸத்ரின் புரிதல்: தன்னல விருப்பு எனும் உணர்வை முறையாக நெறிப்படுத்துவது எப்படி?

மனிதனின் ஆசைகளை கட்டுக்குள் வைப்பதற்கும், பிறரைச் சுரண்டுவதற்கான அவனுடைய திறனை மடைமாற்றுவதற்கும் ஓர் வழி காணப்படாத வரையில், சமூக அமைப்பானது பலவீனமான அடித்தளங்களின் மீதே அமர்ந்திருக்கும். எனவே, சமூக-பொருளாதார பிரச்சினை என்பது மனிதனின் பிறழ்நடத்தையால் விளைவது என்று ஸத்ரு திட்டவட்டமாகக் கூறுகிறார். சமூக-பொருளாதார பிரச்சினைகளுக்கான காரணங்களென அவர் இரண்டை குறிப்பிடுகிறார்:

  1. தன்னல விருப்பிலிருந்து பிறக்கும் மனிதனின் ஒடுக்குமுறை இயல்பு
  2. பொருளாதார வளங்களைப் பயன்படுத்துவதில் மனிதனின் வினைத்திறமின்மை

ஒருபுறம், வாழ்வின் பொருளியல் புலத்தில் மனிதனின் ஒடுக்குமுறைத் தன்மையானது ‘சமநீதியற்ற விதத்தில் வளங்களின் பகிர்வு’ எனும் வடிவில் நிலைபெறுவதிலிருந்தும்; மறுபுறம், இந்த வளங்கள் வினைத்திறத்துடன் பயன்படுத்தப்படாத காரணத்தால் விருத்தியுறாமல் வீணாவதிலிருந்தும்தான் பிரச்சினைகள் முளைவிடுகின்றன என்பதே ஸத்ரின் புரிதல்.

மனிதனின் பொருளியல் நடத்தையில் உள்ள இவ்விரு அடிப்படைப் பிரச்சினைகளுக்கும் தீர்வு கண்டாக வேண்டும். அவற்றுக்கான இஸ்லாமியத் தீர்வின் மூன்று அம்சங்களென பின்வருவனவற்றை ஸத்ரு குறிப்பிடுகிறார்:

  1. சமநீதியற்ற பொருளாதார வளப்பகிர்வின் விசயத்தில் பல்வேறு வடிவங்களில் வெளிப்படும் ஒடுக்குமுறைகள் அனைத்தும் நிறுத்தப்பட வேண்டும்;
  2. தன்னல விருப்பு எனும் உணர்வை கட்டுப்படுத்தும் வகையில் ‘மனித இயல்பு’ நெறிப்படுத்தப்பட வேண்டும்;
  3. முழு மனித சமுதாயத்தின் தேவைகளையும் பூர்த்தி செய்கிற வகையில் பொருளாதார வளங்களை பயன்படுத்த வேண்டும்.

பகிர்வு பற்றிய இஸ்லாமியக் கோட்பாடு

சமூகத்தின் பொருளியல் கட்டமைப்பில் நிலவும் முரண்பாடுகளை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான முதலாவது காலடி, பொருளாதார வளங்களை மக்களுக்குப் பகிர்ந்து அளிப்பதிலிருந்து ஆரம்பிக்கிறது. எந்தச் சமூக அமைப்பு எல்லா மக்களையும் தனது பொருட்செல்வத்திலிருந்து பயனடைய அனுமதிக்குமோ அது நீதமான சமூக அமைப்பாகும். இஸ்லாமிய பொருளியல் அமைப்பு இக்கோட்பாட்டின் அடிப்படையிலேயே அமைந்திருக்கிறது.

பொருள் வளத்தின் முதன்மை வடிவம் சுற்றுச் சூழலிலிருந்து கிடைக்கும் இயற்கை வளங்களாகும். இயற்கை வளங்களின் மீதான உடமைத்துவத்திலிருந்தே சமநீதியற்ற பொருளாதார வளப்பகிர்வு துவங்குகிறது. இஸ்லாத்தின் கண்ணோட்டத்தில் இவ்வளங்களின் உடமைத்துவம் யாருக்குச் சொந்தம் என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும். இந்த வகையில் ஸத்ரு இயற்கை வளங்களின் பகிர்வு பற்றிய கோட்பாட்டை உற்பத்திக்கு முன், உற்பத்திக்குப் பின் என இரண்டு கட்டமாக விருத்திசெய்ய வேண்டியிருந்தது. அவற்றை அவர் முறையே முதல்நிலைச் செல்வம் என்றும், இரண்டாம்நிலைச் செல்வம் என்றும் அழைத்தார்.[6]

பொருளியல் உடமைத்துவம் பற்றிய இஸ்லாமியப் போதனைக்கான கோட்பாட்டு அடிப்படையை அவர் கண்டறிய முயன்றார். சமூக நீதி எனும் பிரச்சினைதான் இந்தக் கட்டத்தில் முதன்மையானது; நடைமுறைப் பொருளியலை ஆராய்வது இந்தக் கட்டத்தில் தொடர்பற்றது என்பது ஸத்ரின் கருத்து. வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், முதன்மைப் பிரச்சினையை தீர்ப்பதற்கான சித்தாந்தக் கோட்பாட்டொன்றை அவர் கட்டியெழுப்ப முயன்றார். அந்தச் சித்தாந்தக் கோட்பாட்டை வாழ்க்கைப் புலத்தில் அமலாக்கம் செய்வதற்கு யதார்த்தத்தில் போதுமான அடிப்படை இருக்கிறதா இல்லையா என்பதை மதிப்பிடுவதற்கான நடைமுறைப் பொருளியல் ஆய்வு இதற்கு வெகு பிறகுதான் வருகிறது.

இயற்கைச் செல்வத்தின் பகிர்வு

தனது கோட்பாட்டுக்கான கருத்தியல் சட்டகத்தை உருவாக்க முயன்ற ஸத்ரு, பொருளியல் வளங்களுக்கான வரையறையின் விசயத்தில் ஏனைய அரசியல் பொருளாதார வல்லுனர்களுடன் கருத்து முரண்பட்டார். மூலதனம், உழைப்பு ஆகியவையும் பொருளாதார வளங்களின் ஒரு பகுதிதான் என்பதை  அவர் ஏற்கவில்லை.

இயற்கை வளங்களின் பகிர்வுக்கான கோட்பாடு என்று வரும்போது இயற்கையானவற்றை மட்டுமே கருத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். “மூலதனம் என்பது உற்பத்தி செய்யப்பட்டவொரு செல்வமேயொழிய, உற்பத்திக்கான முதன்மை மூலவளம் அல்ல.  ஏனெனில் பொருளியல் ரீதியில் சொன்னால், மனித உழைப்பின் மூலம் உற்பத்தி செய்யப்பட்டவொரு செல்வம்தான் அது; புதிய செல்வத்தை உற்பத்தி செய்வதில் மீள முதலீடு செய்யக்கூடிய செல்வம் அது.”[7]

மறுபுறம், இயற்கை வளங்களை நான்கு வகையாகப் பகுக்கலாம்:

  1. நிலம்
  2. கச்சாப் பொருள்
  3. நீர்
  4. காற்று, கடல், நிலம் ஆகியவற்றிலுள்ள உயிரிகள் உள்ளிட்ட ஏனைய இயற்கை வளங்கள்[8]

இஸ்லாமியச் சட்டவியல் இவை ஒவ்வொன்றுக்கும் வேறுபட்ட நெறிமுறைகளை வழங்கியிருப்பது போல் தெரிந்தாலும், ஸத்ரு தனது மேதமையைப் பயன்படுத்தி அவற்றுக்கு மத்தியில் பொதுப் பண்புகளைக் கண்டறிந்து விளக்கமளித்தார். அதை ‘பொருளியல் குறித்த இஸ்லாத்தின் பொதுக் கோட்பாடு’ என்றழைத்தார்.

indian-mine-workers

நிலம், கச்சாப் பொருட்கள் ஆகியவற்றின் முழுமுதல் உடமையும் இஸ்லாமிய அரசுக்கே சொந்தம். இயற்கை வளங்களை விருத்தி செய்யும் நோக்கத்தில் உழைப்பை முதலீடு செய்வதன் மூலம் தனிமனிதர்கள் அவற்றின் மீது சிறப்பு உரிமைகளைப் பெறமுடியும். நிலத்தில் பயிரிடுதல், தாது வளங்களைத் தோண்டி எடுத்தல் போன்றவற்றை உதாரணமாகச் சொல்லலாம். இவ்வகையில் சில தனிமனிதர்கள், குறித்த நிலத்தின் மீதும் தாது வளங்களின் மீதும் ஏனையோரைக் காட்டிலும் அதிக முன்னுரிமையைப் பெற முடியும்.

குறித்த நிலம் அல்லது கச்சாப் பொருட்களை விருத்தியுறச் செய்வதற்கான உழைப்பை முதலீடு செய்வதன் மூலமே அவற்றின் மீது சிறப்புரிமையைப் பெறமுடியும் என்பதால், விருத்தியுறச் செய்வதற்கான செயல்பாடு முடிவுற்றதுமே அவற்றின் மீதான சிறப்புரிமையும் காலாவதியாகி விடுகிறது.[9] இவ்வளங்களைப் பயன்படுத்துவோர் இஸ்லாமிய அரசுக்கு சொத்து வரியைச் செலுத்த வேண்டும்.

மறுபுறம், பொருளாதார விருத்திக்காகப் பயன்படுத்தும் நோக்கில் நீர்வளத்தின் மீது உரிமை பெறமுடியும். நீர்வளத்தின் மீதான முழுமுதல் உடமை அரசிடமே உள்ளது என்றாலும், மக்களனைவரும் தமது பயன்பாட்டுக்காக அதனை அணுகலாம். நிலத்தடி நீர் மட்டுமே ஒரே விதிவிலக்கு. அதன் பயனுடைமையை விருத்தி செய்வதில் உழைப்பை முதலீடு செய்யும் தனிமனிதர், அதன் பயன்பாடு மற்றும் நலன்கள் மீது தனியுரிமை பெற்றவராகிறார்.[10]

பறவைகள், விலங்குகள், தாவரங்கள், கடல் உயிரினங்கள் போன்ற ஏனைய இயற்கை வளங்கள் அனைத்தும் பொதுவுடமை ஆகும். இவை போன்ற பொருளியல் மூலவளங்கள் தனிப்பட்ட முயற்சியின் ஊடாகத் தனியுடமையாக மாற முடியும்.[11] தம்முடைய உழைப்பின் ஊடாக மக்களே இவற்றின் மீது தனியுரிமை பெறுகிறார்கள்; அரசு அல்ல. அவர்கள் இவற்றின் மீதான உரிமையை நிரந்தரமாக இழப்பதுமில்லை; அவற்றின் மீது உடமை கொண்டிருப்பதற்காக சொத்து வரிகள் செலுத்துவதுமில்லை.

இக்கண்ணோட்டத்தின் அடிப்படையில் பார்க்கும்போது, இயற்கை வளங்களின் மீதான முழுமுதல் சட்டபூர்வ உடமையாளர்கள் மக்களே—இன்னும் தூலமான வார்த்தைகளில் சொல்வதென்றால், மக்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் அரசே அவற்றின் உடமையாளன் என்ற முடிவுக்கு வருகிறார் ஸத்ரு. இவ்வளங்களை விருத்தியுறச் செய்வதில் தமது உழைப்பை முதலீடு செய்வதன் மூலம் மட்டுமே தனிமனிதர்கள் அவற்றைப் பயன்படுத்திக் கொள்வதற்கான சிறப்புரிமைகளை பெறமுடியும்.

பலவந்தமாக உடமையாக்கிக் கொள்ளுதல் போன்ற ஏனைய வகை தனிமனித உழைப்புகள் எதுவும் உடமைத்துவத்துக்கான சட்டபூர்வ வழிமுறைகள் அல்ல. குறிப்பாகச் சொல்வதென்றால், முதலீடு செய்யப்படும் மனித உழைப்பு மட்டுமே இயற்கை வளங்களின் மீது உடமைத்துவம் பெறுவதற்கான சட்டபூர்வ முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. பொதுவாகச் சொல்வதென்றால், ஒட்டுமொத்த சமூகத்தின் நலனுக்காக இவ்வளங்களை விருத்தியுறச் செய்வதில் மேற்கொள்ளப்படும் தொடர் உழைப்பின் மூலம் மட்டுமே தனிமனிதர்கள் அவற்றைத் தனியுடமை ஆக்கிக் கொள்வதற்கான உரிமையைப் பெறுகிறார்கள். இந்த இயற்கை வளங்களை விருத்தியுறச் செய்வதற்கான தனியுழைப்பு நிறுத்தப்படும் போது, அவற்றின் மீதான தனியுடமையும் முற்றுப்பெற்று விடுகிறது.[12]

இதிலிருந்து ஸத்ரு தனது கோட்பாட்டின் முதல் விதியை வருவிக்கிறார்:

இயற்கைச் செல்வமனைத்தும் பொதுவுடமையாகும். தனிமனிதர்கள் அவற்றை விருத்தியுறச் செய்யும் வகையில் நேரடி உழைப்பைக் கொடுப்பதன் மூலம் மட்டுமே, அவற்றைப் பயன்படுத்திக் கொள்வதற்கான சிறப்புரிமைகளை பெறமுடியும்.[13]

மேற்சொன்ன விதியின் படி பார்க்கும்போது, பரந்தவொரு விவசாய நிலம் போன்ற இயற்கை வளத்தின் மீது உடமைத்துவம் பெறுகிற நோக்கத்தில், அதனை விருத்தியுறச் செய்யும் செயல்முறையில் பிறருடைய உழைப்பை ஒருவர் பயன்படுத்திக்கொள்ள முடியாது என்பதை உதாரணமாகச் சொல்லலாம். அவ்வாறு செய்யும் பட்சத்தில், அவர்கள் அனைவருமே தத்தமது உழைப்புக்கு ஏற்ப அவ்வளத்தின் மீது உரிமையையும் அதிலிருந்து கிடைக்கும் பலன்களையும் பகிர்ந்து கொள்வார்கள். மிகப் பரந்த இயற்கை வளங்கள் மீது தனியொருவர் உடமைத்துவம் கொண்டிருக்கும் நிலையில், ஏனையோர் தமது உழைப்பின் மூலம் அவற்றை விருத்தி செய்யலாம் எனும் முதலாளித்துவக் கோட்பாட்டை இஸ்லாம் முற்றாக நிராகரிக்கிறது.

இதன் காரணமாகவே  எண்ணை, தாது போன்ற இயற்கை வளங்களை விருத்தி செய்வதற்கான தொழிற்சாலைகள் அரசுரிமை நிறுவனங்களாகவும், அரசால் நடத்தப்படுபவையாகவும் மட்டுமே இருக்க முடியும். இயற்கை வளங்கள் மீதான பொதுவுடமையை வலியுறுத்தியது மட்டுமின்றி, இயற்கைப் பொருளாதார வளங்களை தனிமனிதர்கள் பயன்படுத்துவதற்கான  ‘பயன்பாட்டு முன்னுரிமை’ எனுமொரு எண்ணக்கருவையும் ஸத்ரு அறிமுகம் செய்தார். அதாவது எவரிடம் உழைப்பும், வளத்திலிருந்து பயனீட்டுவதற்கான நாட்டமும் இருக்குமோ —அந்தப் பயனீட்டல் பொதுநலனுக்கு உகந்ததாக அமையும் பட்சத்தில்— அவர் அவ்வளத்தை அணுகுவதற்கான உரிமையைப் பெறுகிறார் என்பதுவே அது.

உற்பத்தி செய்யப்பட்ட செல்வத்தின் பகிர்வு

மேலும், உற்பத்தி செய்யப்பட்ட பண்டங்கள் பற்றிய இஸ்லாமியக் கோட்பாட்டையும் விருத்தி செய்திருக்கிறார் ஸத்ரு. உற்பத்தி செய்யப்பட்ட செல்வம் இரண்டாக வகைப்படுத்தப் படுகின்றது:

  1. வேளாண் உற்பத்தி, கச்சாப் பொருட்கள் போன்ற முதல்நிலைப் பண்டங்கள்
  2. முதல்நிலைப் பண்டங்களைப் பயன்படுத்தி வேறு பொருட்களாகத் தயாரிக்கப்பட்ட இரண்டாம்நிலைப் பண்டங்கள்

இவ்விரு நிலைகளிலுமான உற்பத்திச் செயல்முறையில் —முன்னேறிய பொருளியல் நடவடிக்கைகளில்— முந்தைய பொருளியல் முயற்சியால் உருவாக்கப்பட்ட மூலதனமும், (கருவிகள், எந்திரங்கள் போன்ற) உற்பத்திச் சாதனங்களும்  பங்கெடுக்கின்றன. எனினும், முதலாளித்துவக் கோட்பாட்டுக்கு முரணாக, உற்பத்தி செய்யப்படும் பண்டத்தின் மீது அவற்றுக்கு எந்தவித உரிமையும் இல்லை. மாற்றமாக, உற்பத்திச் செயல்முறையில் அவை பயன்படுத்தப்படுவதாலும், அவற்றில் ஏற்படும் தேய்மானத்தின் பொருட்டும் அவை சில சிறப்புரிமைகளைப் பெறுகின்றன.

ஏற்கனவே குறிப்பிடப்பட்ட விதியின் கீழ் சொன்னபடி, உற்பத்தி செய்யப்பட்ட பண்டங்களின் மீதான முழு உரிமையையும் அவற்றை உற்பத்தி செய்தவருக்கே வழங்குகிறது இஸ்லாம். எனினும், மனித உழைப்பு என்பது முதல்நிலைப் பண்டங்களின் உற்பத்தியில் சம்பந்தப்பட்ட பல்வேறு ஆக்கக் கூறுகளுள் ஒன்று மட்டுமே என்பதை ஸத்ரு உணர்ந்திருக்கிறார். இயற்கைச் சூழல், உற்பத்திச் செயல்முறையில் மனிதனுக்கு உதவும் கருவிகள் என்பனவே ஏனைய ஆக்கக் கூறுகள்.

கருவிகள் அல்லது உற்பத்திச் சாதனங்கள் என்பவை, “முந்தைய உற்பத்தி கட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட உழைப்பின் சேமிப்புதான்; உற்பத்திச் செயல்முறையில் பயன்படுத்தப்படும் போது அது தீர்ந்து போகின்றது அல்லது குறைவடைகின்றது” என்கிறார் ஸத்ரு.[14] உற்பத்திச் செயல்முறையில் பயன்படுத்தப்படும் கருவிகள் உழைப்பாளிக்குச் சொந்தமானவையல்ல எனும்போது, அவர் அவற்றிலிருந்து பயனடைகிறார் என்பதால் அக்கருவிகளின் சட்டபூர்வ உரிமையாளருக்குக் கட்டணம் வழங்கப்படல் வேண்டும். ஏனெனில், அக்கருவிகள் அவ்வுரிமையாளரது உழைப்பின் சேமிப்புதானேயன்றி வேறில்லை. உற்பத்திச் செயல்முறையில் அவை தேய்மானம் அடைகின்றன. அதற்காக அவருக்குக் கட்டணம் வழங்கப்படுதலே நியாயம்.[15]

இங்குதான் ‘முதலாளித்துவத்துக்கும் இஸ்லாத்துக்கும் இடையே பெரியதோர் கருத்தியல் வேறுபாடு’ இருக்கின்றது என்கிறார் ஸத்ரு. உற்பத்திச் சாதனங்களின் உரிமையாளர்தான் உற்பத்தி செய்யப்பட்ட பண்டங்களுக்கும் உரிமையாளர் என்று முதலாளித்துவம் கூறுகின்ற அதேவேளை, உழைப்பாளியே உற்பத்தி செய்யப்பட்ட பண்டங்களின் மீது சட்டபூர்வ உரிமை கொண்டவர் என்று இஸ்லாம் கூறுகிறது. முதலாளித்துவத்தைப் பொறுத்தவரை, உற்பத்தி செய்யப்பட்ட பண்டங்களின் மீது கருவிகளுக்கும் பங்குண்டு. உற்பத்திச் செயல்முறையில் செலவிடப்படும் குறிப்பிட்டளவு உழைப்பையே அது பிரதிநிதித்துவம் செய்கின்றது என்பது அதன் வாதம். நேரடி மனித உழைப்பைப் போன்றதுதான் இதுவும் என்கிறது அது. இஸ்லாத்தைப் பொறுத்தவரை, கருவிகள் என்பவை உற்பத்தி செயல்முறையை நிகழ்த்துவதில் மனிதனுக்கு உதவி-ஒத்தாசை வழங்குபவை மட்டுமே. எனவே அவற்றுக்கு வாடகை கொடுக்கப்பட வேண்டுமேயொழிய, லாபத்தில் பங்கு கொடுக்க வேண்டியதில்லை.[16]

அதேபோல், தனது உழைப்பின் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட பண்டங்களின் மீது உழைப்பாளி மட்டுமே சட்டபூர்வமாக உரிமை கோர முடியும். எனவே, யாரேனும் ஒருவர் மற்றவர்களை வேலைக்கமர்த்தி, அவர்களுக்குக் கூலியையும் கருவிகளையும் வழங்கி, அவர்களின் உழைப்பில் உற்பத்தி செய்யப்படும் பண்டங்களைத் தனது உடமையாக்கிக் கொள்வதென்பது இஸ்லாத்தைப் பொறுத்தவரை நினைத்தும் பார்க்க முடியாத ஒன்றாகும் என்கிறார் ஸத்ரு.[17] அதே போல், பல உழைப்பாளிகளை வேலைக்கமர்த்தும் ஆலைகளும் உற்பத்தி சாலைகளும் பொதுவுடமை நிறுவனங்களாக இயங்கினாலேயன்றி இஸ்லாமிய அரசில் சாத்தியமில்லை.

பொருளியல் வளர்ச்சியைப் பொறுத்தவரை அரசின் நேரடி ஈடுபாடும் கட்டுப்பாடும் இன்றி, முதலாளித்துவ பாணி ஆலை உற்பத்தி உருவாவதற்கு இஸ்லாமிய பொருளியல் அமைப்பில் வழியேதும் இல்லை என்பதே ஸத்ரின் கோட்பாட்டுப் பார்வை. மக்களை வேலைக்கமர்த்தி, உற்பத்தி செய்யப்படும் பண்டங்களில் அவர்களுக்குப் பங்கு கொடுக்காமல், கூலி மட்டும் வழங்குவதை பொருளாதார வளங்களின் முழு உடமையாளனும் மக்களின் பிரதிநிதியுமான அரசு மட்டுமே செய்ய முடியும்.

அது மட்டுமின்றி, சுற்றுச் சூழலின் பொருளாதாரச் செல்வத்தைப் பயன்படுத்தும் பொறுப்பு ஒட்டுமொத்த சமூகத்துக்குரியது என்பதால் (இயற்கை வளங்களிலிருந்து பயனீட்டும் உரிமையும், முழுமுதல் உடைமையும் ஒட்டுமொத்த சமூகத்துக்குரியது என்பதால்), முதல்நிலைப் பண்டங்களின் உற்பத்தியில் அதற்கொரு பங்குண்டு. உற்பத்தியின் இந்தக் கட்டத்தில், உற்பத்தியாளர்களிடமிருந்து வருமான வரியை அறவிடும் உரிமை அரசுக்கு இருக்கிறது. சமூக நலத் திட்டங்களிலும், மக்களின் பொருளியல் தேவைகளை நிறைவேற்றுவதிலும் அரசு அதனைச் செலவிடும்.[18]

இரண்டாம்நிலைப் பண்டங்களின் உற்பத்தியை பொறுத்தவரை, முதல்நிலைப் பண்டங்களின் உரிமையாளர் இறுதி உற்பத்திகளின் மீது தனது உரிமையை நிலைநாட்டிக் கொள்வதை இஸ்லாம் அனுமதிக்கிறது. அவருடைய உற்பத்தியை வேறு வடிவங்களுக்கு நிலைமாற்றம் செய்வதில் வேறொருவர் உதவுவதாலேயே, அவற்றின் மீதான அவருடைய சட்டபூர்வ உரிமை முற்றுப்பெற்று விடுவதில்லை. கச்சாப் பொருட்களிலிருந்து உற்பத்தி செய்யப்படும் பண்டங்கள், கச்சாப் பொருட்களின் உரிமையாளருக்கே சொந்தம்.

நேரடியாகச் சொல்வதென்றால், ஓர் உழைப்பாளி இயற்கை வளங்களிருந்து தாம் உற்பத்தி செய்யும் பண்டங்களின் மீது மட்டுமின்றி, அதற்குப் பிந்தைய உற்பத்திக் கட்டங்களின் பண்டங்களின் மீதும் உடமை பெற்றவராகிறார். உதாரணமாக, ஓர் அரசு தனது பொதுவுடமை நிறுவனங்களின் மூலம் சில குறிப்பிட்ட இயற்கை வளங்களைத் திரட்டும் அல்லது அகழ்ந்தெடுக்கும் பட்சத்தில், அவ்வளங்களிலிருந்து உருவாக்கப்படும் இறுதிப் பொருட்களின் மீதான உரிமையும் அரசுக்கே சொந்தம். உற்பத்தியில் பங்கெடுக்கும் மக்களுக்கு உழைப்புக்கேற்ப கூலி வழங்கப்படும்.

கோட்பாட்டளவில் சொல்வதென்றால், ஓர் இஸ்லாமிய பொருளியல் அமைப்பில் எண்ணை, தாது போன்ற இயற்கை வளங்களை விருத்தி செய்யும் ஆலைகள் தனியாருக்குச் சொந்தமானவையாக இருக்க முடியாது. ஏனென்றால், இயற்கை வளங்களின் முதன்மை உரிமை அரசுக்கே சொந்தம் என்பதால், அவற்றிலிருந்து உற்பத்தி செய்யப்படும் பண்டங்களை உடமையாக்கிக் கொள்வதற்கான உரிமையையும் அது அரசுக்கே வழங்குகிறது.

எனினும், இஸ்லாமியப் பொருளியல் அமைப்பில் முதலாளித்துவவாதிகள் உருவாகிச் செழிப்பதற்கு வழிவகுக்கக் கூடிய ஒரு கருத்தியல் ஓட்டை இருக்கிறது. அதைப் பயன்படுத்தி அவர்கள் தனியார் தொழிற் கழகங்களின் மூலம் அரசிடமிருந்து இயற்கை வளங்களைக் குத்தகைக்குப் பெற முடியும். அதன் மூலம், உற்பத்திப் பண்டங்களை அவர்கள் சட்டபூர்வமாக உடமையாக்கிக் கொள்ள முடியும்.

எப்படியாயினும், வேறொருவருக்குச் சொந்தமான உற்பத்திச் சாதனங்களைப் பயன்படுத்தப்படுவதால் அது உடமைத்துவத்தை எந்த விதத்திலும் பாதிப்பதில்லை என்பதை மனதிலிருத்த வேண்டும். உற்பத்திச் செயல்முறையில் பயன்படுத்தப்படும் கருவிகள், எந்திரங்கள் ஆகியவற்றுக்காக அவற்றின் உரிமையாளர்களுக்குக் கட்டணம் வழங்கப்படும். இதே அடிப்படையில், முதல்நிலைப் பண்டங்களின் உடைமையாளர் தனது பொருட்களை உற்பத்தி செய்வதற்கு மற்றொருவரைப் பணிக்கமர்த்த முடியும். அப்போது அந்தப் பணியாளர் தனது உழைப்புக்கான கூலியைப் பெறுவார். பணி ஒப்பந்தத்தில் அது குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். இவ்வகையில் உற்பத்தி செய்யப்படும் இறுதிப் பொருளின் மீது பணியாளருக்கு எந்தவுரிமையும் இல்லை.[19]

வேலைக்கமர்த்தப்படும் பணியாளருக்குக் கூலி வழங்குவதற்கு இஸ்லாம் இரண்டு வழிமுறைகளைக் குறிப்பிட்டுள்ளது: கூலி வழங்குவது முதலாவது வழிமுறை; பணியை நிறைவு செய்வதில் அவர் அளித்த உழைப்புக்கு ஏற்றவாறு கூலி வழங்கப்படும். இறுதிப் பொருளின் லாபத்தில் பங்கு வழங்குவது இரண்டாவது வழிமுறை. இதில் பணியாளர் லாபத்தில் குறிப்பிட்டதொரு வீதத்தை மட்டும் பெறுகிறார். முதல்நிலைப் பண்டங்களின் உரிமையாளரும் அவரும் செய்துகொள்ளும் ஒப்பந்தத்தில் அது குறிப்பிடப்பட்டிருக்கும்.

இஸ்லாத்தில் பொருளீட்டுவதற்கான பொதுக் கோட்பாடு என்னவெனில்:

(உற்பத்திச்) செயல்முறையின் போது உழைப்பை வழங்குவதன் அடிப்படையிலேயே பொருளீட்டுதல் அமைய முடியும். எனவே, உழைப்பை வழங்குவதன மூலம் மட்டுமே ஒருவர் உற்பத்திச் செயல்முறையின் உடைமையாளர்களிடமிருந்து சட்டபூர்வமாகக் கூலியைப் பெறமுடியும்… அத்தகைய பங்களிப்பு இன்றி அவர் பொருளீட்டுவதற்கான சட்டபூர்வ வழிமுறை ஏதுமில்லை.[20]

இப்பொருளியல் கோட்பாட்டின் அடிப்படையில் பார்க்கும்போது, மூலதனத்தின் உடைமையாளர் முதல்நிலைப் பண்டங்களின் உடமையாளரிடமிருந்து நிலையான தொகை எதையும் பெறமாட்டார். அவ்வாறு பெறுவது, தடைசெய்யப்பட வட்டியாகும். நிதிமூலதனம் என்பது எவ்வகையிலும் உழைப்பைப் பங்களிப்பதாகக் கருதப்பட மாட்டாது.[21]

நிலையான தொகையைப் பெறுவது ஒரேயொரு சூழ்நிலையில் மட்டுமே இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளது: உழைப்பாளியின் மூலம் நேரடியாகவோ, உற்பத்திச் சாதனங்களின் மூலம் மறைமுகவோ உழைப்பை வழங்கும்போது மட்டும்தான் அவ்வாறு நிலையான தொகையைப் பெறுவது சாத்தியம்.

நிதிமூலதனத்தைப் பொறுத்தவரை மேற்கூறியது போல் உழைப்பு பயன்படுத்தப்பட்டு தீர்வதோ குறைவதோ இல்லை. இந்நிலையில் மூலதனத்தின் உடைமையாளர் முதல்நிலைப் பண்டங்களின் உடைமையாளருடன் லாப நஷ்டத்தைப் பகிர்ந்துகொள்ள முடியும். இச்சூழ்நிலையைப் பொறுத்தவரை, உற்பத்திச் செயல்முறைக்கு அவர் வழங்குகின்ற உதவிதான் பொருளீட்டுவதற்கான சட்டபூர்வ நியாயத்தை அவருக்கு வழங்குகிறது. லாபத்தில் பங்கு தருவதன் மூலம் இதில் அவருக்கு வெகுமதி வழங்கப்படுகிறது.

மனித இயல்பை நெறிப்படுத்துதல்

பொருளியல் உறவுகளில் இடம்பெறும் அனைத்து வகை ஒடுக்குமுறைகளை ஒழித்துக்கட்டுவதும், பொருளாதார வளப் பகிர்வுக்கான நீதமிக்க அமைப்பொன்றை நிறுவுவதற்கு உகந்த சூழலைத் தயார் செய்வதுமே இஸ்லாமிய அரசியல் அமைப்பின் முதற் பணியாகும். எனினும், அநீதியின் ஊற்று சமூக அமைப்புகளோ உற்பத்திச் சாதனங்களோ அல்ல. அது மனிதனின் இயல்பில் இருக்கின்றது; தான் மட்டும் பிழைத்தால் போதுமென நடந்துகொள்ளும்படி மனிதனை உந்தும் தன்னல விருப்பு எனும் உள்ளுணர்ச்சிதான் அநீதியின் ஊற்று என்கிறார் ஸத்ரு. பூமியில் மனிதன் பிழைத்து வாழ்வதற்கு அவ்வுள்ளுணர்ச்சி அவசியமானது.

லாபம் என்பது தன்னல விருப்பின் பொருளியல் வெளிப்பாடு; தனியார் மூலதனத்தால் உருவாக்கப்படுவது; பொருளியலில் மனிதனைச் சாதிக்கத் தூண்டும் மகத்தான இயங்குசக்தி அது. கடுமையாக உழைப்பதற்கும், கஷ்டங்களை-சவால்களை மேலோங்குவதற்கும் அவசியமான ஊக்கத்தை அது வழங்குகிறது. எனினும், ஒழுக்கக் கட்டுப்பாடு இன்றி விடப்படும்போது அது பல்வேறு வடிவங்களில் ஒடுக்குமுறைகளாகத் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும்.

பிறரின் நலன்களை நசித்தேனும் தனது நலன்களைப் பாதுகாப்பதில்தான் மனிதன் கரிசனை கொள்வான். மனித இயல்பின் இப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் வரை, பகிர்வுக்கான நீதமிக்கதொரு அமைப்பிலும் கூட துஷ்பிரயோகம் செய்வதற்கான குறுக்கு வழிகளை மனிதன் கண்டுகொள்ளவே செய்வான். உண்மையைச் சொன்னால், சமூக முரண்பாடென்பதே மனிதனின் தன்னல விருப்பு எனும் உணர்விலிருந்துதான் முளைவிடுகின்றது. அது முதலாளித்துவ அமைப்பில் மற்றவர்கள் மீதான பொருளாதாரச் சுரண்டல் எனும் வடிவில் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது. தனிச்சொத்துரிமை ஒழித்துக்கட்டப்படும் கம்யூனிச அமைப்பிலோ, மனிதனின் தன்னல விருப்பானது அரசியல் ஒடுக்குமுறை எனும் வடிவில் வெளிப்படுகிறது. சமூகத்தில் அதிகாரத்தையும், சிறப்புச் சலுகைகளையும் பெறுவதற்கான போராட்டத்தை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.[22]

மிகவும் அடிப்படையானதும், மனித இயல்பிலேயே ஆழப் பொதிந்திருப்பதுமான இப்பிரச்சினைக்கு மதம் மட்டுமே தீர்வு தருகிறது என்கிறார் ஸத்ரு. மனிதனின் உணர்வுகளை முறையான சமூக நடத்தைக்குள்ளாக ஆற்றுப்படுத்தும் அல்லது நெறிப்படுத்தும் வகையில் சுயகட்டுப்பாட்டுக்கான பல வழிமுறைகளைக் காட்டித் தந்து மனித இயல்பிலுள்ள பிரச்சினையை தீர்க்கிறது மதம். வேறு வார்த்தைகளில் சொன்னால், இதன் மூலம் அது தனிமனித, சமூக நலன்களுக்கு இடையிலான முரண்பாட்டை முடிவுக்குக் கொண்டு வருகிறது.

சுயகட்டுப்பாட்டுக்கான பொறிமுறைகளில் முதலாவது ஆன்மிகம் சார்ந்தது. அதாவது, மனிதன் தனது நடத்தையைக் கட்டுப்படுத்துவதற்கான மனோவியல் சக்தி தொடர்பானது. மனிதன் இறைவனின் பிரதிநிதி. எல்லாம் வல்ல நாயனின் பூலோகப் பிரதிநிதி. பொருளியல் ரீதியில் சொல்வதென்றால், மனித குலத்துக்காகப் படைக்கப்பட்ட செல்வத்துக்கெல்லாம் இறைவனால் நியமிக்கப்பட்ட அறங்காவலர் அவன். மனிதன் தனது பொருளியல் செயல்பாடுகள் பற்றி இறைவனிடம் பொறுப்புக் கூற வேண்டிய கடப்பாடு கொண்டவன் என்பதையே இந்தப் பிரதிநிதித்துவ உணர்வு உணர்த்துகிறது. தனிப்பட்ட நடத்தையைக் கட்டுப்படுத்திக் கொண்டு, இயற்கை வளங்களின் பயன்பாட்டை இறைவனின் நாட்டத்துக்கு இசைவாக அமைத்துக் கொள்வது என்றொரு பொருளும் அதற்குள்ளது.[23] முறையற்ற நடத்தையை மேற்கொண்டு இறைவன் வழங்கிய செல்வத்தை வீணடிப்பானாயின், அவன் அதற்குப் பதில்கூற வேண்டியிருக்கும் என்பதோடு கடுமையான தண்டனைக்கும் ஆளாவான். அதே போன்று, இறைவனின் நாட்டத்துக்கு இசைவாக நடந்துகொள்ளும் போது வெகுமதியும் இறைப்பொருத்தமும் அவனுக்கு வாக்களிக்கப்படுகின்றது.

மேலும் அவன்தான் உங்களைப் பூமியில் பிரதிநிதிகளாக ஆக்கினான். அவன் உங்களுக்குக் கொடுத்துள்ளவற்றில் உங்களைச் சோதிப்பதற்காக உங்களில் சிலரை சிலரை விட அந்தஸ்தில் உயர்த்தினான். நிச்சயமாக உம் இறைவன் தண்டிப்பதில் விரைவானவன்; மேலும் நிச்சயமாக அவன் மன்னிப்பவன், மிக்க கருணையுடையவன். (திருக்குர்ஆன் 6:165)

அதே போல் இறைவன் கொடுத்த செல்வத்தை எப்படிப் பகிர்ந்தளிக்க வேண்டும், எப்படிக் கையாள வேண்டும் என்ற வழிகாட்டுதல் மனிதனுக்குத் தேவையாயிருக்கிறது. இம்மைக்கும் மறுமைக்குமான இந்த இணைப்புக் கண்ணிதான் சமூக-தனிமனித நலன்களுக்கு நடுவே இணக்கப்பாட்டை ஏற்படுத்துகிறது.  பிறருக்காகத் தியாகம் செய்பவருக்கு நிறைவான கூலி வழங்கப்படுகிறது.

இவ்வகையில் மதம் வழங்குகிற தீர்வு சட ரீதியிலானது அல்ல, ஆன்மீக ரீதியிலானது. அது மனிதனை பிறருக்குச் சேவை செய்யும்படியும், சமூக நலனுக்காக தனிப்பட்ட நலன்களைத் தியாகம் செய்யும் படியும் பயிற்றுவிக்கிறது. இவ்வாறு செய்கையில் அவன் தனக்கும் சேர்த்தே சேவையாற்றுகிறான். இஸ்லாத்தைப் பொறுத்தவரை இறைவனைக் குறித்த கூருணர்வும் (தக்வா) அவனுடைய திருப்பொருத்தத்தைப் பெறவேண்டுமென்ற ஆசையும், மனித இயல்பிலுள்ள போட்டி-பேராசை போன்ற உணர்வுகளைப் பதிலீடு செய்கின்றன.

மனிதர்கள் தமது உள்ளுணர்வுகளையும் அபிலாஷைகளையும் கட்டுக்குள் கொண்டுவரச் செய்வதில் மதம் வெற்றியடையும்போது சமூக ஒழுங்கானது முரண்பாடுகள், தனிமனிதத் துஷ்பிரயோகங்கள், சூழ்ச்சிகள் ஆகியவற்றை விட்டுப் பாதுகாப்பு பெற்றதாக மாறுகிறது.

வெளிப்படையில் இந்த இலட்சியம் கற்பனாவாதமாகத் தெரிந்தாலும், சமூகத்தில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் நிலைபெறச் செய்வதற்கான சமூகப் பொறிமுறையை இஸ்லாம் உருவாக்கித் தந்திருக்கிறது. பிரதிநிதி என்ற பாத்திரத்தை இறைவன் தனிமனிதனுக்கு அல்ல, மொத்த மனிதகுலத்திற்குத்தான் தந்துள்ளான். பொருளாதாரச் செல்வத்தின் மீது இறைவனின் அறங்காவலராக நியமிக்கப்பட்டிருப்பது சமுதாயமாகும். ஒட்டுமொத்த மனிதகுலத்தின் நல்வாழ்வுக்காக இயற்கை வளங்களையும் மனித வளத்தையும் மேலாண்மை செய்ய வெண்டிய பொறுப்பினை ஒரு குழு என்ற வகையிலேயே அது சுமக்கிறது. கீழ்வரும் திருக்குர்ஆன் வசனம் அத்தகைய சமூகப் பொறுப்பு பற்றிப் பேசுவதைப் பார்க்கலாம்,

மேலாண்மை செய்வதற்காக இறைவன் உங்களிடம் வழங்கியுள்ள அவர்களின் செல்வத்தை, அவர்கள் அறிவு முதிர்ச்சியற்றவர்களாக இருக்கும் நிலையில் அவர்களிடம் ஒப்படைக்க வேண்டாம். (திருக்குர்ஆன் 4:5)

மேற்கண்ட வசனத்துக்கு ஸத்ரு வழங்கும் அர்த்தத்தின் படி, அறிவு முதிர்ச்சியற்றவர்களின் செல்வமென்பது சமூகத்தின் பொறுப்பிலுள்ள செல்வமாகும். அறிவு முதிர்ச்சியற்ற அவர்களின் செல்வம் எந்த வகையிலும் துஷ்பிரயோகம் செய்யப்படாமல் பாதுகாக்க வேண்டியது ஒட்டுமொத்த சமூகத்தின் மீதும் பொறுப்பாகின்றது. பொருளியல் செல்வத்தின் மீதான இத்தகைய சமூகக் கட்டுப்பாடானது ஒருவரை இறைவனுக்கு மட்டுமின்றி, சொந்த மக்களுக்கும் பொறுப்புக் கூறக் கடமைப்பட்டவராக ஆக்குகிறது.

மேலும், பொருட்செல்வத்தை உடைமையாகக் கொண்டிருப்பதுடன் சம்பந்தப்பட்ட சமூக அந்தஸ்து அனைத்தையும் இஸ்லாம் திட்டவட்டமாக நிராகரிக்கிறது. ஒரு மனிதர் பெற்றிருக்கும் செல்வச் செழிப்பும் பொருளாதார வளமும் சமூகத்தில் அவரின் கௌரவத்தைக் காட்டும் அறிகுறிகள் அல்ல. ஒருவர் செல்வத்தை பாரமாகக் கருத வேண்டுமென இஸ்லாம் விரும்புகிறது. தன்னோடு சேர்த்து பிறருக்கும் சேவையாற்றும் பொறுப்பை அது செல்வம் படைத்தவரின் தோள்களில் சுமத்துகிறது.

செல்வம் என்பது மனிதகுலத்தின் குறிக்கோள்களை அடைவதற்கானவொரு வழிமுறை.[24] முதலாளித்துவ சமூகத்தில் உள்ளது போல் செல்வச் செழிப்பை பெற வேண்டுமென்பது ஒரு தனிமனிதரின் வாழ்க்கை இலட்சியமாக இருக்கக் கூடாது. இன்றேல், மனிதன் தன் வசமிருக்கும் அத்துணை வழிமுறைகளையும் பயன்படுத்தி தனது செல்வ வளத்தை அதிகப்படுத்திக் கொள்வதையே அது தூண்டும்; அதற்காக அவன் மற்றவர்களை துன்புறுத்தவும் ஒடுக்கவும் கூட துணிந்து விடுவான்.

ஆனால், இறைவனின் திருப்பொருத்தத்தைச் சம்பாதிப்பதற்கான ஒரு வழிமுறையாக செல்வத்தைக் கருதும்போது, மற்றவர்களை ஒடுக்குவதற்குப் பதிலாக, அவர்களுக்கு உதவுவதென்பது பணக்காரர்கள் மற்றும் செல்வம் படைத்தோரின் சமூக இயல்பாக மாறிவிடும். வேறுவிதமாகச் சொன்னால், செல்வத்தையும் சொத்துக்களையும் உடமையாகக் கொண்டிருப்பதுடன் தொடர்புடைய சமூக மதிப்பீடுகள் அனைத்தையும் மாற்றியமைக்கத் தீர்மானம் பூண்டுள்ளது இஸ்லாம். மார்க்சியம் கூறுவது போல் தனிச் சொத்துரிமையை ஒழிக்கத் தேவையில்லை. தனிச் சொத்துரிமையை ஒழிப்பது என்ற சமூகக் கொள்கை மனித இயல்புக்கு எதிரானது என்பதால் அது வெற்றியடையாது என்கிறார் ஸத்ரு. செல்வம் என்பதை ஒரு தனிமனித இலட்சியம் என்ற நிலையிலிருந்து, அதனை விட உயர்ந்த அறவியல் இலட்சியத்தைச் சாதிப்பதற்கான ஒரு வழிமுறை என்பதாக மாற்றி சமூகப் பண்புகளை திருத்தியமைப்பது மட்டுமே ஒரே தீர்வு.

பொருளியல் வளர்ச்சி

பொருளாதாரப் பிரச்சினைக்கான இஸ்லாமியத் தீர்வின் மூன்றாவது பகுதியானது “அதிகபட்ச அளவில் உற்பத்தியை பெருக்குவதுடனும் சுற்றுச் சூழலின் இயற்கை வளங்களை பயன்படுத்துவதுடனும்” தொடர்புடையது என்பது ஸத்ரின் கருத்து.[25] புவியிலுள்ள மனிதர்கள் அனைவரினது தேவைகளையும் பூர்த்தி செய்வதற்குப் போதுமானளவை விட மிகுதியாகவே இயற்கை வளங்களை இறைவன் படைத்திருக்கிறான். இறைவனின் இந்த அளவிலா அருட்கொடைகளை மனிதன் தனது நலனுக்குப் பயன்படுத்திக் கொள்ளும்படி ஆர்வமூட்டப் பட்டுள்ளான்.

“சித்தாந்த ரீதியில் சொல்வதென்றால், பொருளியல் செல்வத்தின் விருத்தியையும் இயற்கை வளங்களின் பயன்பாட்டையும் இயன்றவரை அதிகபட்சமாக அமைத்துக்கொள்ள வேண்டியதை சமூகத்தின் குறிக்கோளாகவே ஆக்கியிருக்கிறது இஸ்லாம்” என்கிறார் ஸத்ரு.[26] இந்த அம்சத்தை பொறுத்தவரை இஸ்லாம் முதலாளித்துவத்தை ஒத்திருந்தாலும் அதனை சாதிப்பதற்கான வழிமுறையில் அதிலிருந்து வேறுபட்டு நிற்கிறது.

“பொருளியல் சுதந்திரம் எனும் கோட்பாட்டுக்கு தடையாக அமையக்கூடிய உற்பத்தி விருத்திக்கான சாதனங்கள், செல்வப் பெருக்கத்துக்கான வழிமுறைகள் எவையாக இருப்பினும் அவற்றை” முதலாளித்துவம் நிராகரிக்கின்றது. அதேவேளை இஸ்லாமோ “தனது (பொருளியல் வளங்கள் தொடர்பான) பகிர்வு கோட்பாட்டுக்கும் நீதிக் கோட்பாட்டுக்கும் முரணான” எல்லாவித வழிமுறைகளையும் நிராகரிக்கிறது.[27]

ஏற்கனவே குறிப்பிட்டது போல் பச்சையான பொருளாயத குறிக்கோள்களின் பின்னால் தனிமனிதர்கள் செல்வதை இஸ்லாம் ஊக்கம்குன்றச் செய்வதுடன், இந்த தற்காலிக வாழ்வில் கடந்து போய்விடக் கூடிய ஆதாயங்களை மனிதர்களின் பார்வையில் மதிப்பிழக்கச் செய்கின்றது. பொருளியல் ரீதியில் செழுமை பெறுவதென்பது ஒரு நற்சமூகத்தின் குறிக்கோளாக இருக்கலாமேயொழிய, ஒரு தனிமனிதனின் குறிக்கோளாக இருக்கக் கூடாது என்பதே ஸத்ரின் கருத்து. பூமியிலும் வானத்திலும் உள்ள யாவற்றையும் இறைவன் ஒட்டுமொத்த மனிதகுலத்தின் இருப்புக்கு சேவை செய்வதற்காகத்தான் படைத்துள்ளான்.[28]

பொருளாயத நலன் என்பது மனிதனின் அறுதி இலக்காக அமைதல் கூடாது எனக்கூறி இஸ்லாம் நிராகரிக்கிறது. அவ்வாறு அமைத்துக் கொள்ளும்போது அவன் பிறரை ஒடுக்குவதற்கு அது காரணமாக அமைந்துவிடும். பற்றின்மை (ஸுஹ்து) எனும் விழுமியத்தை இஸ்லாம் ஊக்குவிக்கின்றது. தனது வாழ்வின் இறுதி இலக்காக பொருட் செல்வத்தை ஆக்கிக் கொள்ளாதபடி மனிதனை ஸுஹ்து பயிற்றுவிக்கிறது.[29] ஸுஹ்து என்பது மனிதனின் சுயகட்டுப்பாட்டுக்கான ஒரு பொறிமுறையாகும். தனது இச்சைகளோடு போரிட்டு தனது குறிக்கோள்களை இறைவனை நோக்கியதாக அமைத்துக் கொள்வதற்காக மனிதன் அதனை பயன்படுத்துகின்றான். ஆனால் விசுவாசிகளுடைய சமூக ஒழுங்கின் குறிக்கோளாக அது இருக்க முடியாது.

செழுமையும் உயர் வாழ்க்கை தரமும் இறைவனை நோக்கிய பயணத்தில் மனிதகுலத்துக்கு உதவுபவை என்று சொல்வது இங்கு போதுமானது. துன்பகரமான வாழ்க்கை அந்த நகர்வினை தடுக்கக் கூடியதாகவே அமையும். உண்மையைச் சொல்வதாயின் இறைவனோடு மனிதனுக்கிருக்கும் உறவுக்கும், இயற்கையோடு அவனுக்கிருக்கும் உறவுக்கும் நேரடித் தொடர்புள்ளது. மனிதர்கள் இறைவனுக்காக அதிகம் உழைக்கும்போது, மனிதனின் தேவைகளை பூர்த்தி செய்வதில் இயற்கையானது தயாளம் கொண்டதாக இருப்பதைக் காண்பார்கள். வளமான சமூகமென்பது மனிதன் மீது இறைவன் கொள்ளும் திருப்தியின் அடையாளமாகும்.

இதன் மறுதலையாக, இறைவன் பால் மனிதன் காட்டும் நன்றிகெட்ட மனநிலையானது பொருளாதார வளங்கள், உற்பத்தி ஆகியவை நசிவடைவதற்கும், மனிதனின் சமூக இருப்பு சீரழிவதற்கும் காரணமாக அமைகின்றது. இதனுடைய ஒரு புற வெளிப்பாடு அல்லது அறிகுறிதான் சமூக அநீதி.[30]

இஸ்லாம் தனது சமய போதனைகள் வழியாகவும் கூட உற்பத்தியை அதிகரிப்பதற்கான சமூக உந்துதலை முடுக்கி விடுகின்றது. இஸ்லாமிய பொருளியல் அமைப்பின் கீழ் பொருளீட்டுதல் என்பது பிரத்யேகமாக உழைப்பதுடன் பிணைக்கப்பட்டுள்ளது. பொருளீட்டுதலுக்கும் உடமைத்துவத்துக்குமான மற்றெல்லா வழிமுறைகளும் ஒழிக்கப்பட்டு விடுகின்றன. இயற்கை வளங்களை விருத்தி செய்வதற்காக தொடர்ந்தேச்சையான மனித உழைப்பை கொடுக்காத நிலையில் அவ்வளங்களின் மீதான உடமைத்துவம் சட்டபூர்வமானதாக கருதப்படமாட்டாது.

வணிகத்திலும் சரி, உற்பத்தியிலும் சரி – மனித உழைப்பு அவசியப்படாத எந்தவொரு வகை பொருளீட்டுதலும் தடுக்கப்பட்டதாகும். இதன் காரணமாகவே, பணத்தை பெருக்குவதற்காக நிதிமூலதனத்தை பயன்படுத்துவது தடுக்கப்படுகிறது. மூலதனத்தை உற்பத்தியில் முதலீடு செய்து லாப-நஷ்ட இடரில் பங்குபெறுவது மட்டுமே அதனை பயன்படுத்துவதற்கான ஒரே சட்டபூர்வ வழிமுறையாகும்.

பொருளியல் வளர்ச்சியில் மூலதனம் பயன்படுத்தப்படுவதை உத்தரவாதம் செய்வதற்காக இஸ்லாம் செல்வக் குவிப்பை கடுமையாக தடை செய்வதுடன், உற்பத்தி செயல்முறையில் ஈடுபடுத்தப்படாத எல்லா செல்வங்களின் மீதும் வருடாந்தர வரியை விதித்து அவற்றை குன்றச் செய்கிறது. அது மட்டுமின்றி பயனற்ற பொருளியல் செயல்பாடுகளான சூதாட்டம், மந்திரம், செப்பிடு வித்தை போன்றவை இஸ்லாத்தில் தடைசெய்யப்பட்டுள்ளன.[31]

மேலும் எல்லா துறை அறிவுகளையும் கற்றுத் தேர்வதுடன், சுற்றுச் சூழலின் இயற்கை வளங்களிலிருந்து அதிகபட்ச பலன்களை ஈட்டுவதற்கான வினைத்திறமிக்க உற்பத்தி சாதனங்களை கண்டறிவதை முஸ்லிம்கள் மீது இஸ்லாம் கடமையாக்கி இருக்கிறது.[32]

முஸ்லிம்களின் பொருளாதார வலிமையானது அவர்களின் இராணுவ வலிமையுடன் ஒப்புமை கொண்டது.  இஸ்லாமிய அரசின் பொருளாதார வளர்ச்சி, சமூக செழிப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டுதான் நாம் அதன் சக்தியை மதிப்பிட முடியும். எனவேதான் சமூகத்தின் பொருளியல் நடவடிக்கைகளை நெறிப்படுத்துவதில் அதன் அரசியல் தலைமைக்குள்ள பொறுப்பினை இஸ்லாம் அதிகம் வலியுறுத்துகிறது. அதன் மூலம் பொருளாதர விருத்தியை மேம்படுத்தவும் விரயத்தை ஒழித்துக்கட்டவும் அது நாடுகிறது.

அரசின் பாத்திரம்

வளப்பகிர்வு கோட்பாட்டில் சுட்டிக் காட்டப்பட்டது போல் இயற்கை வளங்கள் மீதான முழு முதல் உரிமையும் இஸ்லாமிய அரசை சேர்ந்ததாகும். இதன் தொடர்ச்சியாக பொருளாதார நடவடிக்கைகளின் அனைத்து அம்சங்கள் மீதான முழுக் கட்டுப்பாடும் அதனிடமே உள்ளது. இயற்கை வளங்கள் அல்லது முதல்நிலை பண்டங்களின் உடமையாளர்தான் இரண்டாம்நிலை பண்டங்களுக்கும் முழுமுதல் உடைமையாளர் என்கிறார் ஸத்ரு.

சமூகத்தில் செல்வச் சுழற்சியையும் பொருளியல் செயல்முறையையும் அடிப்படையில் தீர்மானிப்பது இஸ்லாமிய அரசின் அரசாங்கமே ஆகும். ஒட்டுமொத்த சமூகத்தின் நலனுக்கு உகந்த வகையில் இயற்கை வளங்களை அவற்றின் அதிகபட்ச பயன்பாட்டுக்காக விருத்தியுறச் செய்வதற்கு ஏதுவான கொள்கை முடிவுகளை நடைமுறைப்படுத்துவதே இஸ்லாமிய அரசின் பிரதான குறிக்கோளாகும்.

அத்தகைய பொருளாதார குறிக்கோளை சாதிப்பதற்கும் மக்களனைவருக்கும் செழுமையைக் கொண்டுவரும்படி அதிகபட்ச உற்பத்தியை எட்டுவதற்கும் பொருத்தமான வகையில் சமூகத்தின் பொருளியல் வளங்களை பகிர்ந்தளிப்பதற்கு அரசுக்கு உரிமை இருக்கின்றது. சமூகத்தின் குறைந்தபட்ச அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதும் மக்களின் பொருளாதார நல்வாழ்வை உத்தரவாதம் செய்வதும் அரசின் பொறுப்புடைமை ஆகும்.

இச்செயற்பாட்டை சந்தையின் ஏற்ற இறக்கங்களிடம் விட்டுவிடுகின்ற முதலாளித்துவ அரசுக்கு இது மாற்றமானது. அதே சமயம் பொருளாதார செயல்பாடுகளின் சகல அம்சங்களின் மீதும் அரசுக் கட்டுப்பாட்டை ஆதரிக்கும் மார்க்சிய-லெனினிய கோட்பாட்டுக்கும் இது மாற்றமானது. இஸ்லாமிய அரசு பொருளாதார செயல்பாட்டின் திசைவழியை அமைத்துக் கொடுப்பது மட்டுமின்றி, சமூக குறிக்கோளை சாதிப்பதற்காக தனிமனிதர்களுக்கு தனிச் சொத்துரிமையையும் வழங்குகின்றது. பொருளியல் செயற்பாடுகளை மேற்பார்வை பார்ப்பதும் நெறிப்படுத்துவதுமே இங்கு அரசின் பாத்திரம்.

அதே போல் சமகாலத்தில் தோன்றக்கூடிய பொருளாதார சூழ்நிலைகளுக்கு முகம்கொடுக்கும் வகையில்  புதிய நெறிமுறைகளை உருவாக்கிக் கொள்வதற்கான அதிகபட்ச நெகிழ்வுத் தன்மையையும் அரசுக்கு வழங்கியிருக்கிறது இஸ்லாம். இறைச் சட்டத்தில் தடைகள் இல்லாத பகுதியை ‘மனாதிக் அல்-ஃபறாக்’ (அறிவுடைமையுடன் கூடிய விவேகத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட வேண்டிய சட்டப் பகுதி) என்றழைக்கிறார் ஸத்ரு. இதில் ஒரு சட்டவியல் வல்லுநர் சட்டவாக்க கோட்பாடுகளுக்கு இசைவாக சட்ட முடிவுகளையும் தீர்ப்புகளையும் வகுத்துக் கொள்ளலாம்.[33]

பொருளாதாரம், உற்பத்தி சாதனங்கள் ஆகியவற்றின் விருத்தியை உத்தரவாதம் செய்வதற்காக சட்ட நாயகன் (இறைவன்) வழங்கியுள்ள யதார்த்தபூர்வ அணுகுமுறைதான் சட்டவாக்கத்தின் இப்பகுதி என்பது ஸத்ரின் கருத்து. புதிதாகத் தோன்றும் சூழ்நிலைகளுக்கு பொருந்தும்படியான எந்தவொரு புதிய சட்டத்தையும் இஸ்லாமிய அரசின் தலைமைத்துவம் கொண்டுவர முடியும். அவ்வாறு செய்வதன் மூலம் அது மக்களின் பொருளியல் தேவைகளை பூர்த்தி செய்வதுடன், பொருளியல் வளங்களின் அதிகபட்ச பயன்பாட்டை உறுதிசெய்யவும் வேண்டும்.

வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால் சமூக குறிக்கோள்களை சாதிப்பதற்கு ஏதுவாக பொருளாதாரத்தின் மீது முழுக் கட்டுப்பாடு தொடங்கி தடையில்லா தொழில் வரையுள்ள ஒரு பரந்த வீச்சிலான பொருளாதாரக் கொள்கைகளை வகுத்துக் கொள்வதற்கு இஸ்லாமிய அரசுக்கு முழுச் சுதந்திரம் உண்டு. அரசு இவ்விடயத்தில் பொருளாதார வல்லுநர்களை சார்ந்து நின்று, அரசாங்க பொருளாதாரத்தின் திசைவழியை அமைத்துக் கொள்வதற்கான ஆகச் சிறந்த மாற்றுக் கொள்கைகளை தேட முயற்சிக்க வேண்டும். வளப் பகிர்வுக்கான கோட்பாட்டை எந்தச் சூழ்நிலையிலும் மீறக் கூடாது என்பது மட்டுமே ஒரே நிபந்தனை.

சமூக விவகாரங்களில் அரசுக்குள்ள கணிசமான ஈடுபாடுதான் பொருளாதாரத்தில் வரம்பற்ற முறையில் அது வகிக்கும் இப்பாத்திரத்துக்கான நியாயமாகும். சகல மக்களின் சமூக நல்வாழ்வுக்கும் அரசுதான் பொறுப்பு.[34] ஓர் இஸ்லாமிய அரசில் உழைப்புக்கும் உற்பத்தி திறனுக்கும் ஏற்ப மட்டுமின்றி தேவைகளுக்கு ஏற்பவும் பொருளாதார வளங்கள் பகிர்ந்தளிக்கப் படுகின்றன.

சமூகத்திலுள்ள எல்லா மக்களாலும் உழைக்க முடிவதில்லை. அவர்களில் சிலரால் தமது தேவைகளைக் கூட பூர்த்தி செய்துகொள்ள முடிவதில்லை.  பொருளாதார அடிப்படையில் சமூகத்தில் மூன்று வர்க்கங்கள் இருப்பதாக ஸத்ரு அடையாளம் காண்கிறார்:

  1. தமது தேவைகளைக் காட்டிலும் அதிகமாக உற்பத்தி செய்வதற்கான மன-உடல் திறன் படைத்தோர்
  2. தம்முடைய அடிப்படைத் தேவைகளை பூர்த்திசெய்து கொள்ளுமளவு மட்டுமே உழைப்பதற்கு திறன் படைத்தோர்
  3. மன அளவிலும் உடல் அளவிலும் உற்பத்தி உழைப்புக்குத் தேவையான திறன் இல்லாதோர்

பிந்தைய இரண்டு வர்க்கங்களின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டியது அரசின் பொறுப்பாகும். அது குறைந்தபட்ச அடிப்படைத் தேவைகளுடன் மட்டும் சுருங்கியதல்ல என்பதை மனதிலிருத்துவது முக்கியம். இஸ்லாமிய அரசின் கீழ் வாழும் மக்கள் சுயமரியாதையுடன் வாழ்வதற்கு வகைசெய்ய வேண்டும். அதாவது அவர்களின் பொருளாதார அந்தஸ்து பொதுவாக ஏற்கத்தக்கவொரு மட்டத்துக்கு உயர்த்தப்பட வேண்டும். எனவே சமூக நலவாழ்வுத் திட்டங்களுக்கு செலவிட இயலுமளவுக்கு அரசிடம் பொருளாதார வளங்கள் இருக்க வேண்டும்.

(வெற்றிகொள்ளப்படும்) ஊர்களிலிருந்து அல்லாஹ் தன் தூதருக்கு மீட்டுக் கொடுத்தவை அல்லாஹ்வுக்கும், (அவன்) தூதருக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கருக்கும் உரியதாகும். உங்களிலுள்ள செல்வந்தர்களுக்கு உள்ளேயே (செல்வம்) சுற்றிக் கொண்டிருக்காமல் இருப்பதற்காக (இவ்வாறு பங்கிட்டுக் கொடுக்குமாறு கட்டளையிடப் பட்டுள்ளது. (திருக்குர்ஆன் 59:7)

மேற்கூறிய வசனம் இரண்டு விடயங்களை சுட்டுவதாக ஸத்ரு கூறுகிறார்:

  1. முதலாவது, பொருளாதார வளங்கள் அரசுக்கும் தேவையுடைய மக்களுக்கும் மத்தியில் பகிர்ந்து அளிக்கப்படுகின்றது
  2. இரண்டாவது, செல்வந்தர்கள் பொருளாதாரத்தை கட்டுப்படுத்துவதை தடுக்கும் வகையில் செல்வம் பகிர்ந்து அளிக்கப்படுகின்றது

மேற்கூறிய புரிதலின் அடிப்படையில் பார்க்கும்போது பின்வருவனவே இஸ்லாமியப் பொருளாதாரத்தின் முக்கிய கோட்பாடுகளாகும்:

  1. பொதுவுடமை (அரசுடமை) ஆக்கப்பட்ட உற்பத்தி சாதனங்கள் மற்றும் செல்வப் பகிர்வு
  2. ஒருமுகப்படுத்தப்பட்ட பொருளாதார திட்டமிடல்

சமுதாயத்தின் வளங்கள் அனைத்தின் மீதுமான கட்டுப்பாட்டின் வழியாக மட்டுமே சமூக பாதுகாப்பு எனும் பொதுத் தேவையை உத்தரவாதம் செய்வதும், தனிமனிதர்களின் அடிப்படையான பொருளாதார உரிமைகள் பாதுகாக்கப்படுவதும் சாத்தியமாகும். எனவே பொதுநலனுக்கு சேவை செய்யும் வகையிலும், சந்தையின் நிலையற்ற தன்மைக்கு ஈடுகொடுக்கும் வகையிலும் நீண்டகால திட்டங்களை வகுத்துச் செயற்படுவது  சட்டபூர்வ இஸ்லாமிய அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

மக்களுக்கு மத்தியில் வேறுபட்ட வருமானங்கள் நிலவுவதை அங்கீகரிக்கின்ற அதேவேளை, ஒரு சமாந்தரமான வாழ்க்கை தரத்தை உருவாக்க இஸ்லாம் கடுமையாக முயற்சிக்கின்றது. அத்தகையதொரு சமூக-பொருளாதார சூழலை மெய்ப்படுத்திக் காண்பதற்காக அது செல்வம் படைத்தோரிடமிருந்து நிலையான வீதத்தில் வரியை அறவிடுவது மட்டுமின்றி,  விரிவானவொரு சமூக-அறவியல் பொறிமுறையை இஸ்லாம் நிலைநிறுத்துகின்றது.  ஆடம்பர படோபடாப வாழ்க்கை முறை இஸ்லாத்தில் முற்றாக தடுக்கப்பட்டுள்ளது.

அது மட்டுமின்றி எல்லா மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வது, சமூக சமத்துவத்தை ஏற்படுத்துவது ஆகிய நோக்கங்களுக்காக பண்டங்களை உற்பத்தி செய்வதில் பொருளாதார வளங்களை பயன்படுத்த விரும்பும் இஸ்லாம், பொருளியல்  உற்பத்தியிலும் நுகர்விலும் செய்யப்படும் வீண்விரயத்தை முற்றாகத் தடைசெய்கிறது. அதே போல் பொருட் செல்வத்தை வைத்திருப்போரின் சுயநலம், பேராசை ஆகியவற்றை கட்டுப்படுத்தும் வகையில் ஊதியம், விலைவாசி போன்றவற்றை நெறிப்படுத்துவதற்கான அதிகாரம் அரசுக்கு இருக்கிறது. மொத்தத்தில் குடிமக்கள் அனைவருக்கும் வளமானதொரு வாழ்வை உத்தரவாதப்படுத்துவதே இஸ்லாமிய அரசின் பிரதான குறிக்கோளாகும்.

குறிப்புகள்

  1. அஸ்-ஸத்ரு, அல்-ஜனிப் அல்-இக்திஸாதி மின் அல்-நிழாம் அல்-இஸ்லாமி (இஸ்லாமிய அமைப்பில் பொருளாதார நோக்கு), இஃக்தர்னலக், பக். 112-113
  2. அஸ்-ஸத்ரு, அல்-நிழாம் அல்-இஸ்லாமி முகரனன் பில் நிழாம் அல்-றஅஸ்மலி வ அல்-மார்கிசி (முதலாளிய, மார்க்சிய அமைப்புகளுடன் ஒப்பிடுகையில் இஸ்லாமிய அமைப்பு), இஃக்தர்னலக், பக். 60
  3. முன்னது, பக். 161
  4. அஸ்-ஸத்ரு, இக்திஸாதுனா (எமது பொருளியல்), (பெய்ரூத்: தார் அல்-தஅர்ருஃப், 1982) பக். 311-313
  5. ஸத்ரு இங்கு தாமஸ் ராபர்ட் மால்துசின் பார்வை பற்றி குறிப்பிடுவதாகத் தெரிகிறது. பொருளாதார வளங்களின் பகிர்வுதான் பொருளியல் பிரச்சினையின் மூலஊற்று என்று நம்பும் ஏனைய முதலாளித்துவ பொருளாதார வல்லுநர்களை அவர் பொருட்படுத்தியதாக தெரியவில்லை.
  6. அஸ்-ஸத்ரு, அல்-நழரிய்யா அல்-இஸ்லாமிய்யா லி தவ்ஸி அல்-மசாதிர் அல்-தபியிய்யா (இயற்கை வளங்களின் பகிர்வு பற்றிய இஸ்லாமிய கோட்பாடு), இஃக்தர்னலக் (பெய்ரூத்: தார் அல்-ஸஹ்றா, 1982), பக். 136-137
  7. அல்-நழரிய்யா, பக். 138
  8. இக்திஸாதுனா, பக். 433
  9. முன்னது, பக். 483
  10. இக்திஸாதுனா, பக். 519-520
  11. முன்னது, பக். 52
  12. அல்-நழரிய்யா அல்-இஸ்லாமிய்யா லி தவ்ஸி, பக். 148
  13. அஸ்-ஸத்ரு, அல்-ஃகுதத் அல்-தஃப்சீலியா அன் இக்திஸாது அல்-முஜ்தமா அல்-இஸ்லாமி (இஸ்லாமிய சமூகத்தில் பொருளாதாரத்துக்கான பொது அடிப்படை), இஸ்லாம் யகுத் அல்-ஹயாத், பக். 88
  14. இக்திஸாதுனா, பக். 619
  15. இக்திஸாதுனா, பக். 584
  16. அல்-ஃகுதத் அல்-தஃப்சீலியா, பக். 97
  17. முன்னது, பக். 99
  18. அல்-ஃகுதத், 561
  19. இக்திஸாதுனா, பக். 605
  20. இக்திஸாதுனா, பக். 618
  21. முன்னது, பக். 625-62
  22. அல்-நிழாம் அல்-இஸ்லாமி முகரனன், பக். 170
  23. இக்திஸாதுனா, பக். 536-537
  24. இக்திஸாதுனா, பக். 568
  25. இக்திஸாதுனா, பக். 649
  26. இக்திஸாதுனா, பக். 650
  27. முன்னது, பக். 649
  28. எகிப்து ஆளுநருக்கு இமாம் அலீ (றழி) எழுதிய கடிதத்தை ஸத்ரு தனது வாதத்துக்கு ஆதரவாக மேற்கோள் காட்டுகிறார். விசுவாசிகளின் சமூக ஒழுங்கானது இவ்வுலகிலும் மறுவுலகிலும் செழிப்பினால் சூழப்பட்டவொன்றாக இருக்குமென்று வருணிக்கிறது அக்கடிதம். பார்க்க. இக்திஸாதுனா, பக். 651
  29. வெளிப்படையில் முரண்படுபவையாகத் தெரியும் இரண்டுவகை நபிமொழிகளுக்கான விளக்கத்தை ஸத்ரு இங்கு தருகிறார். அவற்றுள் ஒன்று பொருளாயத நலன்களை நிராகரித்து எளிமையை வலியுறுத்தும் அதேவேளை, மற்றதோ செல்வத்தை தமது நலனுக்குப் பயன்படுத்திக் கொள்ளும்படி மனிதனை அழைக்கின்றது. ஒரு தனிமனிதன் பொருட் செல்வத்தை தனது வாழ்வின் அறுதி இலட்சியமாக ஆக்கிக் கொள்ளக் கூடாது என்பதையே முதல் வகை நபிமொழிகள் உணர்த்துவதாகப் புரிந்து கொண்டால் இரண்டுக்கும் நடுவே முரண்பாடு எதுவுமிருப்பதாக ஸத்ரு காணவில்லை. பார்க்க. இக்திஸாதுனா, பக். 669-672
  30. அஸ்-ஸத்ரு, முகத்திமா ஃபீ அல்-தஃப்சீர் (குவைத்: அல்-தார் அல்-இஸ்லாமிய்யா, 1982), பக். 104-107
  31. இக்திஸாதுனா, பக். 670
  32. முன்னது, 671
  33. இஸ்லாத்தின் முதன்மைக் கோட்பாடுகள் எதனையும் சட்டவியல் வல்லுநர் மாற்ற முடியாது என்கிறார் ஸத்ரு. அதாவது, கடமையானவை-தடுக்கப்பட்டவை ஆகியவற்றின் வரம்புகளை அவர் மாற்றிவிட முடியாது.  ஆனால், விரும்பத்தக்கவை-வெறுக்கத்தக்கவை போன்ற “இரண்டாம்நிலை” விவகாரங்களில் செயற்பட அவருக்கு இடமிருக்கிறது. அதாவது அவசியம் ஏற்படுகையில் விரும்பத்தக்க ஒன்றை தடைசெய்யவோ, வெறுக்கத்தக்க ஒன்றை ஆர்வமூட்டவோ அவருக்கு அதிகாரமிருக்கிறது.
  34. இக்திஸாதுனா, பக். 607

(தமிழில்: உவைஸ் அஹமது)

Related posts

Leave a Comment