கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

மௌலானா மௌதூதி: ஒரு விரிவான அறிமுகம் (பகுதி 2) – மரியம் ஜமீலா

Loading

[மரியம் ஜமீலா Islam in Theory and Practice என்ற தனது நூலில் அபுல் அஃலா மௌதூதி பற்றி எழுதியுள்ள அத்தியாயத்தை இங்கு மொழிபெயர்த்துத் தந்திருக்கிறேன். நீண்ட ஆக்கம் என்பதால் பகுதி பகுதியாக வெளியிடுகிறோம். அதில் இரண்டாம் பகுதி கீழே. முதற் பகுதியை வாசிக்க: பகுதி 1]

1937 முதல் 1941 வரையிலான காலங்களில் ‘முஸ்லிம்களும் தற்கால அரசியல் போராட்டங்களும்’ என்ற தலைப்பின் கீழ் அவர் தொடர்ந்து எழுதிய கட்டுரைகளின் பொருள் இதுவாகத்தான் இருந்தது. அதில் பாகிஸ்தான், அசல் இஸ்லாமிய அரசாக நிறுவப்படாமல், அதன் தலைமையும் இஸ்லாத்தின் ஒன்றியக் கொள்கைகளை விடுத்து நயவஞ்சகக் கொள்கைகளையே தன் பண்பாகக் கொண்டிருந்தால், பிராந்திய அடிப்படையிலான தேசியவாதம் மீண்டும் தலைதூக்கி, இறுதியில் நாடு சிதறுண்டு போவது தவிர்க்க முடியாததாகிவிடும் என துணைக்கண்டத்தின் பிரிவினை ஏற்படுவதற்கு முன்னரே கணித்துக் கூறினார்.

“எனவே, என் முன் மூன்று பிரச்னைகள் இருந்தன; நாடு பிரிக்கப்படாவிட்டால் முஸ்லிம்களை பாதுகாக்க என்ன செய்வது; நாடு பிரிக்கப்பட்டால் இந்தியாவில் தங்கிவிடும் முஸ்லிம்களுக்காக என்ன செய்வது; பிந்திய நிகழ்வில், புதிய முஸ்லிம் நாடு இஸ்லாம் அல்லாத அரசாக உருவாகிவிடாமல் தடுத்து, அசல் இஸ்லாமிய அரசாக உருவாக வழி செய்வது எவ்வாறு? இம்மூன்று பிரச்னைகளையும் சிந்தித்த பின்னரே, நிலைமையை எதிர்கொள்ள ஜமாத்தே இஸ்லாமி என்னும் நிறுவனத்தை அமைக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குத் தோன்றியது. சமீபகாலமாக நான் கூறிய சில கருத்துக்கள் பெரும்பாலானவர்களைக் கவராதிருப்பினும், சில திசைகளிலிருந்து என் மீது பழிப்புரைகள் வீசப்படினும், ஒரு சிறு மக்கள் குழு என்னோடு உடன்பட்டது. இக் குழுவின் ஒத்துழைப்போடுதான் ஜமாத் உருவானது. இஸ்லாத்தின் மீதும் அது முன்னிறுத்தும் அனைத்து விஷயங்களின் மீதும்  உறுதியான நம்பிக்கை கொள்வது மட்டுமின்றி, உண்மையான ஆற்றல் என்பது எண்ணிக்கையிலன்றி பண்பில்தான் உள்ளது என்னும் நம்பிக்கையை பிறர் மத்தியில் தூண்டக் கூடிய, நம்பகமான பண்புள்ளவர்களையே ஜமாத் உறுப்பினர்களாகக் கொண்டிருக்க வேண்டும் என நிலையாக எண்ணியிருந்தேன்.

எனவே, தங்கள் சொல்லாலும் செயலாலும் நம்பிக்கையூட்டும், உறுதியான நம்பகமான பண்புள்ளவர்களையே –அவர்கள் எண்ணிக்கையில் குறைவாகவே இருப்பினும்- ஜமாத் தன் உறுப்பினர்களாக சேர்த்திட வேண்டும் என எண்ணினேன். இத்தகையவர்களால்தான், தங்களிடம் கொடுக்கப்பட்ட நிதி எந்த நோக்கத்திற்காக அளிக்கப்பட்டதோ, அதற்காகவே செலவழிக்கப்பட்டது என்ற நம்பிக்கையை முஸ்லிம்களிடம் ஊட்ட முடியும். மேலும் ஜமாத் கட்டுக்கோப்பான இயக்கமாகவும் இறுக்கமான ஒழுக்க வரம்புகளைக் கொண்டதாகவும், அதன் தரத்தில் எந்தவொரு தளர்வும் இருக்கக் கூடாது என்றும் முடிவு செய்தேன். ஜமாத் நிறுவப்பட்டபோது நான் கவனத்தில், கொண்ட மற்றொரு விஷயம் என்னவெனில், அதில் பழமை முறையில் கல்வி கற்றவர்களும் நவீன கல்வி கற்றவர்களும் இருக்க வேண்டும் என்பதே. இதன் மூலம் இஸ்லாமிய ஒழுங்கை நிறுவுவதற்காக அவர்கள் இணக்கமாக பணியாற்ற முடியும். அனைத்துப் பிரிவு மக்களையும் எல்லா சிந்தனைப் பள்ளிகளைச் சார்ந்தவர்களையும் இணைக்க ஜமாத் முயற்சி செய்தது. இதுவரை ஷியாக்களுள் எவரும் ஜமாத்தில் உறுப்பினராக இல்லாதிருப்பினும் பலர் அதன் நலம்விரும்பிகளாக (முத்தஃபிகீன்) உள்ளனர்.” (4)

முஸ்லிம் இந்தியாவில், மௌலானா மௌதூதியை போல் பேரார்வத்தோடு பாகிஸ்தான் இயக்கத்தை ஆதரித்தவர்கள் எவரும் இல்லை. இந்திய முஸ்லிம்கள் ஒரு தனிச் சமூகம் என்றும், அவர்கள் ஹிந்து ஆதிக்கத்தையும் ஒடுக்குமுறையையும் தடுக்க வேண்டுமெனில் தங்களைத் தாங்களே நிர்வகித்துக் கொள்ள வேண்டும் என்றும் தன் எழுத்திலும் பேச்சிலும் அவர் வலியுறுத்தினார். தீவிர விடுதலைப் போராட்ட வீரர்களான மௌலானா முஹம்மது அலி ஜவ்ஹர், மௌலானா ஷவ்கத் அலி மற்றும் காயிதே ஆஸம் முஹம்மது அலி ஜின்னா கூட ஏதோ ஒரு சமயத்திலாவது இந்திய தேசியக் காங்கிரசின் உறுப்பினர்களாக இருந்த நிலையில் மௌலானா மௌதூதி அதில் ஒரு முறை கூட இணையவேயில்லை. ஜமாத்தே இஸ்லாமியில் இணையும்படி காயிதே ஆஸமிடம் கூறப்பட்டபோது, ஜமாத்திற்கும் முஸ்லிம் லீக்கிற்கும் இடையில் முரண்பாடும் எதுவும் இல்லை என்பதை அவர் இவ்வாறு விளக்கினார்: ஒன்று உயர்ந்த நிறைநலனுக்காகப் பணியாற்றுகிறது, மற்றொன்று இந்திய முஸ்லிம்களின் உடனடித் தேவையான தனி நாடு கொள்கையை மெய்ப்பிக்கப் பணியாற்றுகிறது. இது நடக்காவிட்டால் ஜமாத்தின் குறிக்கோள் நடைமுறையில் முழுமையடைவது சாத்தியமின்றிப் போய்விடும். (5)

1947 ஆகஸ்டு 14 இன் பிரிவினைக்குப் பின் மௌலானா மௌதூதி, தன் ஆற்றல் முழுவதையும் பாகிஸ்தானில் ஒரு செறிவான இஸ்லாமிய வாழ்க்கை முறையை நிறுவுவதற்காக அர்ப்பணித்தார். 1948 ஜனவரி-மார்ச் மாதங்களில், ஆன்மீக, ஒழுக்க, சமூக, அரசியல் மற்றும் பொருளாதார விவகாரங்களில் இஸ்லாத்தின் முனைப்பான பண்புகளை விளக்கி வானொலியில் ஒரு தொடர் உரை ஆற்றினார். (6) அவரைப் பொறுத்தவரை இஸ்லாம் ஒரு வெற்று முழக்கம் அல்ல. சொல்லின் உறுதியை செயலால் நிரூபித்த மிகச் சில தலைவர்களுள் மௌலானா மௌதூதியும் ஒருவர். சோர்வின்றி நாடு முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்து முழுமையானதொரு இஸ்லாமிய அரசிற்காக ஆதரவு திரட்டினார். இத்தகைய நேர்மையான நோக்கத்தை சகித்துக் கொள்ளாத சில சுயநலச் சக்திகள், அவர் உண்மை இஸ்லாமிய அரசியல் சாசனத்தைக் கோரியபோது, தேசத் துரோக குற்றம்சாட்டி அவரை 1948 அக்டோபர் 4 முதல் 1950 மே 28 வரை சிறையிலடைத்தனர். எனினும், அவரது கோரிக்கைகளுக்கு உருக்கொடுப்பதாக அமைந்த ‘குறிக்கோள்கள் தீர்மானத்தை’, தேசிய அரசியல் சாசனப் பேரவை 1949 மார்ச் 7 இல் நிறைவேற்றிய போது, இஸ்லாமிய அரசியல் சாசனத்திற்கான அடிப்படையை அமைக்கும் அவரது முயற்சி பலன் தரத் தொடங்கியது.

‘குறிக்கோள்கள் தீர்மானத்தின்’ உரை மூலம் பின் வருமாறு:

 1. முழு அகிலத்தின் மீதான இறையாண்மை ஏக இறைவனுக்கு மட்டுமே உரியதாகும். பாகிஸ்தான் தேச மக்கள் வழியாக அவன் வகுத்தளித்துள்ள -அவன் விதித்துள்ள வரம்புகளுக்கு உட்பட்டு செயல்படுத்தப்பட வேண்டிய- அதிகாரம் ஒரு புனித அமானிதம் ஆகும்.
 2. பாகிஸ்தான் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் இந்த அரசியல் சாசனப் பேரவை, இறைமையுடைய, சுதந்திர பாகிஸ்தான் தேசத்திற்காக ஒரு அரசியல் சாசனத்தை வரைய தீர்மானிக்கிறது.
 3. இது வகையில், அரசு தன் ஆற்றல் மற்றும் அதிகாரத்தை தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் வழியாக செயல்படுத்தும்.
 4. இது வகையில் இஸ்லாம் தெளிவுபடுத்தியுள்ளபடி ஜனநாயக, சுதந்திர, சமத்துவ, சகிப்புத்தன்மை மற்றும் சமூக நீதிக் கோட்பாடுகள் முழுமையாக பேணப்படும்.
 5. இது வகையில் குர்ஆன் மற்றும் சுன்னாவில் விதிக்கப்பட்டுள்ள இஸ்லாமிய போதனைகள் மற்றும் கோரிக்கைகளின் அடிப்படையில் முஸ்லிம்கள் தங்கள் தனி மற்றும் கூட்டு வாழ்வை ஒழுங்கமைப்பதற்கான வழிவகை செய்யப்படும்.
 6. இது வகையில் சிறுபான்மையினர் தங்கள் மதத்தை சுதந்திரமாக வெளிப்படுத்தி நடைமுறைப்படுத்தவும், கலாச்சாரத்தை மேம்படுத்தவும் தேவையான ஏற்பாடுகள் செய்யப்படும்.
 7. இது காரணமாக இப்போது பாகிஸ்தானின் அங்கமாகத்திகழும் அல்லது அதன் உரிமையின் கீழ் வரும் பகுதிகளும், வருங்காலத்தில் அதன் அங்கமாக திகழவிருக்கும் அல்லது அதன் உரிமையின் கீழ் வர இருக்கும் பகுதிகளும் ஒரு கூட்டாட்சியாக விளங்கும். அவ்வாறிருக்க, அதன் அங்கம் ஒவ்வொன்றும் தன் ஆற்றல் மற்றும் அதிகாரத்தில், பரிந்துரைக்கப்பட்ட அளவு வரம்புகள் மற்றும் எல்லைகளோடு கூடிய தன்னாட்சி உரிமையுடன் விளங்கும்.
 8. சட்டத்தின் முன் சம வாய்ப்பு மற்றும் அந்தஸ்து; சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நீதி; சட்டத்திற்கும் சமூக நல்லொழுக்கத்திற்கும் கட்டுப்பட்ட சிந்தனை, வெளிப்பாடு, நம்பிக்கை, வழிபாடு மற்றும் சங்கமிக்கும் சுதந்திரம் ஆகியவை உட்பட்ட அடிப்படை உரிமைகள் உறுதிப்படுத்தப்படும்.
 9. சிறுபான்மையினர், பின்தங்கியோர் மற்றும் தாழ்த்தப்பட்டவர்களின் முறைமையான நலன்களைப் பாதுகாக்க தேவையான வழிவகைகள் செய்யப்படும்.
 10. நீதித்துறையின் சுதந்திரம் முழுமையாக பாதுகாக்கப்படும்.
 11. கூட்டாட்சியிலுள்ள பிரதேசங்களின் பேராண்மை, அவற்றின் சுதந்திரம் மற்றும் பிற உரிமைகள் –நீர், நிலம் மற்றும் வான்வெளி மீதான இறையாண்மைக்கான உரிமைகள் உட்பட பிற உரிமைகளும்- பாதுகாக்கப்படும்.
 12. இதன் மூலம் பாகிஸ்தானிய மக்கள் செழித்தோங்கி, பிற நாடுகள் மத்தியில் தங்கள் உரிமையையும் கண்ணியத்தையும் பெற்று, சர்வதேச அமைதிக்காகவும் முன்னேற்றத்திற்காகவும் மனித இனத்தின் மகிழ்ச்சிக்காகவும் தங்களின் முழுமையான பங்களிப்பை செலுத்த முடியும் (7)

பல நூற்றாண்டுகளில் முதன் முறையாக பாகிஸ்தானிலுள்ள எல்லா முக்கிய சிந்தனைப் பள்ளிகளையும் சார்ந்த முப்பத்தியொரு உலமாக்கள் –தேவ்பந்தி, பரேலவி, அஹ்லே-ஹதீஸ் மற்றும் ஷியா உட்பட- மௌலானா மௌதூதியின் வற்புறுத்திலின் பேரில், கராச்சியில் 1951 ஜனவரி 21 முதல் 24 வரை மாநாடு ஒன்றை நிகழ்த்தினர். அப்போது, அரசியல் சாசனத்தில் சேர்க்கப்பட வேண்டிய, நவீன இஸ்லாமிய அரசிற்கு இன்றியமையாத இருபத்தியிரண்டு கோட்பாடுகளை பூரண சம்மதத்துடன் உருவாக்கினர். இவ்வுலமாக்களின் ஒருமித்த முடிவு பின்வரும் கோரிக்கைகளை வலியுறுத்தியது:

இஸ்லாமிய தேசத்தின் அரசியல் சாசனம் கீழ்கண்ட அடிப்படைக் கொள்கைகளை வெளிப்படுத்த வேண்டும்:

 1. இயற்கை முழுவதின் மீதும், சட்டங்கள் அனைத்தின் மீதுமான இறையாண்மை அல்லாஹ் ரப்புல் ஆலமீனிற்கே உரியது.
 2. நாட்டின் சட்டதிட்டம் குர்ஆன் மற்றும் சுன்னாவின் அடிப்படையில் அமைக்கப்பட வேண்டும். அவற்றோடு முரண்படும் எந்தவொரு சட்டமோ நிர்வாக ஆணையோ பிறப்பிக்கப்படக் கூடாது. விளக்கக் குறிப்பு:- குர்ஆன் சுன்னாவோடு முரண்படும் சட்டம் ஏதும் தற்போது நடைமுறையில் இருப்பின், அது படிப்படியாக குறிப்பிட்ட காலத்தில் இஸ்லாமிய சட்டத்தோடு இணங்கும் வகையில் திருத்தப்படும் அல்லது நீக்கப்படும் என்று அரசியல் சாசனத்தில் குறிப்பிடப்பட வேண்டும்.
 3. புவியியல், மொழியியல் அல்லது பிற பொருள்முதல்வாத கோட்பாடுகளின் அடிப்படையிலன்றி இஸ்லாமியக் கோட்பாடுகளின் அடிப்படையிலேயே இந்நாடு அமைக்கப்பட வேண்டும்.
 4. குர்ஆன் மற்றும் சுன்னாவில் கூறப்பட்டுள்ளபடி நன்மையை ஏவி தீமையைத் தடுப்பது, இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகளுக்கு புத்துயிரூட்டி உயர்நிலையடைவதற்கான முயற்சிகளை எடுப்பது, இஸ்லாத்தின் பல்வேறு அங்கீகரிக்கப்பட்ட சிந்தனைப் பள்ளிகளின் தேவைகளுக்கேற்ப இஸ்லாமிய கல்விக்கான வழிவகைகளை செய்வது ஆகியவை அரசின் பொறுப்பாகத் திகழும்.
 5. உலக முஸ்லிம்கள் மத்தியில் ஒற்றுமைக் கயிற்றை வலுப்படுத்தி சகோதரத்துவத்தை பலப்படுத்துவதும், மில்லத்-ஏ-இஸ்லாமியாவை பாதுகாத்து அதன் ஒற்றுமையை உறுதிப்படுத்தும் பொருட்டு இன மொழி பிராந்திய அல்லது பிற பொருள்முதல்வாத பண்புகளை இந்நாட்டின் முஸ்லிம் குடிமக்களிடமிருந்து மட்டுப்படுத்துவதும் அரசின் கடமையாகும்.
 6. தற்காலிக அல்லது நிரந்தர வேலையின்மை, உடல் பலவீனம் போன்ற காரணங்களால் தங்கள் வாழ்க்கைத் தேவைகளை ஈட்டும் சக்தி பெறாதவர்களுக்கு –அவர்கள் எந்த மதம், இனத்தைச் சேர்ந்தவர்களாயினும்- அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, வீடு, மருத்துவ உதவி மற்றும் கல்வி ஆகியவற்றிற்கான உத்தரவாதம் வழங்குவதும் அரசின் பொறுப்பாக இருக்க வேண்டும்.
 7. இஸ்லாமிய சட்டம் வழங்கியுள்ள உரிமைகள் அனைத்தையும் பெறுவதற்கு குடிமக்கள் உரிமையளிக்கப்பட்டவர்களாக இருக்க வேண்டும்; அதாவது சட்ட வரம்புகளுக்கு உட்பட்டு அவர்களது உயிர் உடமை மற்றும் கண்ணியத்திற்கு முழுப் பாதுகாப்பு, சமயம் மற்றும் கொள்கைகளில் சுதந்திரம், தொழில் செய்வதில் சுதந்திரம், இணங்கிச் செயல்படுவதற்கான சுதந்திரம், சமவாய்ப்பு மற்றும் பொதுத்துறைகளிலிருந்து பயன்பெறும் உரிமை ஆகியவற்றை பெறுவதற்கு மக்கள் உரிமையளிக்கப்பட்டவர்களாக இருக்கவேண்டும்.
 8. சட்டப்படியே அல்லாமல் எந்தக் குடிமகனுக்கும் எந்நிலையிலும் இவ்வுரிமைகள் மறுக்கப்படக்கூடாது. தன்னைத் தற்காத்துக் கொள்ளும் உரிமையளிக்கப்படாத நிலையிலும், நீதிமன்றத்தின் தீர்மானமின்றியும் எவரும் எந்தவொரு குற்றச்சாட்டின் அடிப்படையிலும் தண்டனை விதிக்கப்படக் கூடாது.
 9. அங்கீகரிக்கப்பட்ட முஸ்லிம் சிந்தனைப் பள்ளிகளுக்கு சட்ட வரம்புகளுக்கு உட்பட்ட முழு சமயச் சுதந்திரமும், தங்கள் கொள்கைகளை பரப்பும் சுதந்திரமும், தங்கள் பின்பற்றாளர்களுக்கு மதக்கட்டளை பிறப்பிக்கும் உரிமையும் கொடுக்கப்பட வேண்டும். அவர்களின் தனிப்பட்ட விவகாரங்கள் அவரவர் ஃபிக்ஹின் அடிப்படையில் நிர்வகிக்கப்பட வேண்டும். அவற்றை அவர்களது காஸிகள்* மூலம் நிர்வகிக்க வழிவகை செய்வது உகந்தது.
 10. தேசத்தின் முஸ்லிமல்லாத குடிமக்கள் மதம், சமய வழிபாடு, வாழ்க்கை முறை, கலாச்சாரம் மற்றும் சமயக் கல்வி ஆகியவற்றில் சட்டத்திற்குற்பட்ட முழுச் சுதந்திரத்தை பெற்றிருக்க வேண்டும். அவர்கள் தங்கள் தனிப்பட்ட விவகாரங்களை அவர்களது சமயச் சட்டங்கள், வழக்காறுகள் மற்றும் வழக்குகளைக் கொண்டு நிர்வகிக்கும் உரிமையளிக்கப்பட வேண்டும்.
 11. முஸ்லிமல்லாத குடிமக்களுக்கு ஷரியத்திற்கு உட்பட்டு தேசத்தால் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட வேண்டும். பத்தி 7 இல் விளக்கப்பட்டுள்ளபடி அவர்களும் முஸ்லிம் குடிமக்களோடு சேர்ந்து சம குடியுரிமை பெற வேண்டும்.
 12. தேசத் தலைவர், தனது பக்தி ஆற்றல் மற்றும் நீதத்தன்மைகளில் மக்களின் நம்பிக்கையைப் பெற்ற ஒரு முஸ்லிம் ஆணாகவே இருக்க வேண்டும்.
 13. தேசத்தின் நிர்வாகப் பொறுப்பு, தேசத் தலைவர் மீதே முதன்மையாக சுமத்தப்பட வேண்டும். எனினும், அவர் தனது அதிகாரத்தின் எந்தவொரு பகுதியையும் வேறொரு நபருக்கோ குழுவுக்கோ பகிர்ந்தளிக்கக் கூடும்.
 14. தேசத் தலைவரின் ஆட்சி, சர்வாதிகாரப் போக்கிலன்றி ஆலோசனை முறையிலேயே (ஷுரா) நடைபெற வேண்டும். அதாவது அரசாங்கத்தின் பொறுப்பில் இருப்பவர்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுடன் ஆலோசனை செய்த பின்னரே தன் கடமையை அவர் செய்ய வேண்டும்.
 15. ஆலோசனையின் அடிப்படையிலன்றி, வேறு எந்த முறையிலும் தேசத் தலைவர் அரசியலமைப்பை முழுமையாகவோ பகுதியாகவோ தள்ளுபடி செய்யும் உரிமையை பெறமாட்டார். அவ்வாறே நிர்வாகத்தையும் ஆலோசனை அடிப்படையிலன்றி வேறு வழிகளில் நடத்தும் உரிமையை அவர் பெறமாட்டார்.
 16. தேசத் தலைவரை தேர்ந்தெடுக்கும் அதிகாரத்தை பெற்ற அமைப்பு, பெரும்பான்மை வாக்குகள் அடிப்படையில் அவரை பதவி நீக்கம் செய்யவும் அதிகாரம் பெற்றிருக்க வேண்டும்.
 17. குடியியல் உரிமைகள் சார்ந்த விஷயங்களில், தேசத் தலைவர் சட்டத்திற்கு கட்டுப்பட்டவராகவே இருக்க வேண்டும்.
 18. குடிமக்கள் –அரசாங்க உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள், தனி நபர்கள் என- அனைவரும், ஒரே நீதிமன்றத்தால் நடைமுறைப் படுத்தப்படும் ஒரே சட்டத்திற்கு கட்டுப்பட வேண்டும்.
 19. நீதித்துறை தன் கடமையைச் செய்வதில் நிர்வாகத்துறையிலிருந்து தனித்து சுதந்திரமாக செயல்பட வேண்டும்.
 20. இஸ்லாமிய அரசின் அஸ்திவாரங்கள் மற்றும் அடிப்படைக் கொள்கைகளை கீழறுப்பதாக கருதப்படும் கொள்கைகளை பரப்புவதும் பொதுப்படுத்துவதும் தடை செய்யப்பட வேண்டும்.
 21. நாட்டின் பல்வேறு பகுதிகளும் மண்டலங்களும் ஒரே தேசத்தின் நிர்வாக அலகுகளாகவே கருதப்பட வேண்டும். அவை இன, மொழி அல்லது கோத்திர அடிப்படையிலான அலகுகளாக அன்றி நிர்வாக அலகுகளாகவே இருக்க வேண்டும். நிர்வாக வசதிக்கேற்ப, மத்திய அரசின் மேற்பார்வையில் சில அதிகாரங்களை அவை பெற்றிருக்கலாம். பிரிந்து செல்லும் உரிமையை அவை பெற்றிராது.
 22. குர்ஆன்-சுன்னாவின் நிபந்தனைகளுக்கு முரணாக உள்ள அரசியலமைப்பின் விளக்கம் எதுவும் செல்லுபடியாகாது.

குறிப்புகள்

(4) முன்னது, பக் 49-55 சுருக்கம்

(5) தி திங்கர் வார இதழ், கராச்சி, டிசம்பர் 27, 1963 இல் வெளியான கமருத்தின் கானின் கூற்றிலிருந்து மேற்கோள்.

(6) இஸ்லாமிய வாழ்க்கை முறை, செய்யது அபுல் அஃலா மௌதூதி, இஸ்லாமிக் பப்ளிகேஷன்ஸ், லாஹுர், டிசம்பர் 1965

(7) பாகிஸ்தானில் மதமும் அரசியலும், லியோனார்ட் பைன்டர், கலிஃபோர்னியா பல்கலைக்கழக அச்சு, பெர்க்ளி, 1961, பக், 142-143

* காஸி அல்லது காதி என்பவர், முஸ்லிம் நீதிமன்றத்தின் நீதிபதி ஆவார்.

Related posts

Leave a Comment