குறும்பதிவுகள் 

தண்டனைகளைக் கொண்டு மட்டுமே குற்றங்களை ஒழித்துவிட முடியுமா?

Loading

மக்களின் நடத்தையை ஒழுங்குபடுத்துவதற்கு ஆட்சியாளர்கள் பல்வேறு வழிமுறைகளைக் கையாள்கிறார்கள். அரசின் ஆணைகளை மீறும் எந்தவொரு நடவடிக்கையையும் தண்டனைக்குரிய குற்றமாகக் கருதி, கைது செய்து, தண்டனை விதித்தோ மற்ற வடிவங்களில் பலாத்காரத்தைப் பிரயோகித்தோ தயவுதாட்சண்யமின்றித் தண்டிக்கும் ஒரு போலீஸ் படை என்றே அரசதிகாரம் பற்றிய பொது மனச்சித்திரம் நிலவுகிறது

எனினும், மக்களை நெறிப்படுத்தும் செயற்திட்டத்தின் பல்வேறு அம்சங்களில் அரசு வேறு பல முறைகளைக்கூட பயன்படுத்த முடியும்.

போர்ச்சுகலின் உதாரணம் கவனத்திற் கொள்ளத் தக்கது. தண்டனைக்குரிய குற்றங்களின் பட்டியலிலிருந்து போதைப் பொருள் பாவனையை அது நீக்கியிருக்கிறது.

இப்போது எவரேனும் போதைப் பொருள் பாவித்தது கண்டுபிடிக்கப்பட்டால் “நல்லுரை மன்றங்களின்” முன் அவர் ஆஜராக வேண்டும். அங்கு அவருக்கு போதைப் பொருள் பாவனையின் அபாயங்கள் பற்றி நிபுணர்களைக் கொண்டு அறிவுறுத்தப்படுவதுடன் உளவியல், மருத்துவ உதவியும் வழங்கப்படும்.

இங்கும் போதைப் பொருள் தடைச் சட்டம் மக்கள் மத்தியில் நடைமுறைப்படுத்தவே படுகிறது, வேறொரு முறையில். போதைப் பொருட்களை உபயோகிப்பதிலிருந்து மக்களைத் தடுப்பதில் இது அதிக பலனைத் தந்துள்ளதாகவும் நிரூபணமாகி இருக்கிறது. (போதைப் பொருட்களை உற்பத்தி செய்வதும், விற்பனை செய்வதும் போர்ச்சுகலில் இன்றும் தண்டனைக்குரிய குற்றங்களே. அதனை பயன்படுத்தும் பொது மக்களை பற்றி மட்டுமே இங்கு கலந்துரையாடப்படுகிறது என்பதை மனதிற் கொள்க – மொழிபெயர்ப்பாளர்)

ஆட்சிக்கலை பற்றி சிந்திக்கும் முஸ்லிம்கள் இதனை மனதில் இருத்துவது முக்கியம்.

‘ஒரு முஸ்லிம் அரசு இஸ்லாமிய நெறிமுறைகளை எவ்வாறு அமலாக்கம் செய்ய வேண்டும்?’ ‘மக்களின் மனசாட்சியை எவ்வாறு வினைத்திறத்துடன் மாற்றியமைக்க வேண்டும்?’

இசைவான சூழ்நிலைகளை எப்படி உருவாக்குவது என்பது பற்றி அறிவிற் சிறந்தவர்கள் நவீன உலகின் நடைமுறை வரையறைகளையும் கருத்தில் எடுத்துக் கொண்டு மூலோபாய ரீதியில் சிந்திக்க முன்வர வேண்டும்.

மது ஒழிப்பு எனும்போது அது நேரடியாகவே மேற்கூறிய உதாரணத்தை ஒத்திருக்கிறது. உட்கொள்ளப்படும் பொருள் மட்டுமே வித்தியாசம்.

ஆனால், பாலுறவை நெறிப்படுத்துவது என்று வரும்போது அது இன்னும் சற்று சிக்கலானது. கல்வியூட்டலுக்கான செயற்திட்டங்கள், சமூக பொறியியல் முறைகள், பொருளாதார நெறிமுறைகள் என்பவற்றின் ஒரு கூட்டுக் கலவை அதற்கு அவசியமாகிறது.

நவீன பாலுறவு நடத்தையில் இவ்வனைத்து காரணிகளும் எவ்விதத்தில் பங்காற்றுகின்றன என்பதைப் புரிந்து கொள்வதுதான் முதல் படி என்பதில் ஐயமில்லை.

அதனைச் சரியாக இனம்கண்ட பிறகு மதிநுட்பத்துடன் கூடிய செயற்திட்டங்களை வகுத்து நடைமுறைப்படுத்தும் பட்சத்தில் ஒப்பீட்டளவில் குறுகிய காலத்திற்கு உள்ளாகவே நல்ல பலன்களை அவை ஈட்டித்தரக் கூடும். அல்லாஹ்வே நன்கறிந்தவன்!

(தமிழில்: உவைஸ் அஹ்மது)

மொழிபெயர்ப்பாளர் குறிப்பு

‘இஸ்லாமிய அரசு’, ‘இறைச் சட்டம்’ என்ற உடனேயே மக்களின் நினைவக்கு வருவது ஏதேனுமொரு மைதானத்தில் வைத்து நிறைவேற்றப்படும் சிரச்சேதம், கசையடி போன்ற கடுமையான தண்டனைகள்தான்.

இஸ்லாத்தின் எதிரிகளே உண்மையைத் திரித்து இத்தகைய சித்திரத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள் என்பது ஒரு வகையில் உண்மைதான் என்றாலும் முஸ்லிம் உலகில் நடப்பிலிருக்கும் சஊதி உள்ளிட்ட சட்டவிரோத அரசுகளும், ‘இஸ்லாமிய அரசுகள்’ என்று கூறிக் கொண்டு திடீர் திடீரென முளைக்கும் ISIS போன்ற பயங்கரவாதக் குழுக்களும் இதற்கு முக்கிய காரணங்கள் என்பதையும் நாம் மறுக்கவியலாது. முஸ்லிம்கள் பலரின் புரிதலும்கூட பெருமளவில் வேறுபட்டதாக இல்லை என்பது அவப்பேறு.

இன்று ‘அரசு’ என்பது மனித வாழ்வின் ஒவ்வொரு அங்குலத்தையும் கண்காணிக்கும், கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு கட்டுப்படுத்தும் ஒரு பிரம்மாண்டமான ஒடுக்குமுறை எந்திரமாக உருவெடுத்திருப்பதை நாமறிவோம். இவ்வகையில், இஸ்லாமிய அரசும் இதே போன்ற ஒன்று என்ற முடிவுக்கு வருவது சரியாக இருக்குமா? நவீன அரசு பற்றிய புரிதலைக் கொண்டுபோய் நபியவர்களின் ‘இஸ்லாமிய அரசு’ மீது வலிந்து திணிப்பதாலேயே இது நிகழ்கிறது என்பதே என் அவதானம்.

நபியவர்கள் இறைச் சட்டத்தை நடைமுறைப்படுத்திய விதத்தைக் கவனித்தால், அவர்கள் பிரதானமாக அதிகாரத்தையும் பலப் பிரயோகத்தையும் சார்ந்திராமல், மக்களின் மனசாட்சியை இறைநெறிக்கு உகந்தவாறு இசைவிப்பதிலேயே முதன்மைக் கவனம் செலுத்தியதும், தவிர்க்கவியலாத சந்தர்ப்பங்களிலேயே கடுமையான தண்டனைகளை நாடியதும் புலப்படும்.

அதாவது, மக்களை நெறிப்படுத்தும் இஸ்லாமியச் செயற்திட்டத்தைப் பொறுத்தவரை, குற்றவியல் தண்டனைகள் ஒரு கடைசி வழிமுறை மட்டுமே. நிர்பந்தமான சூழல்களில் கடுமையான தண்டனைகள் நிறைவேற்றப்படுமே அன்றி, அதற்கான சந்தர்ப்பங்களைத் தவறவிட்டுவிடக் கூடாது என்பதுபோல் நடந்துகொள்வது இஸ்லாத்தின் இயல்பு அல்ல.

சீறாவுடன் முறையான பரிச்சயமில்லாதவர்கள் இக்கருத்தை முற்றிலும் தவறாகப் புரிந்துகொள்ள வாய்ப்பிருக்கிறது என்பதை அறிந்த நிலையிலேயே நான் சகோ.Daniel Haqiqatjouன் பதிவை மொழிபெயர்த்து தந்துள்ளேன்.

Related posts

Leave a Comment