கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

காலனிய நீக்கம்: கோட்பாடும் நடைமுறையும்

அறிமுகம்

காலனியம், பின்காலனியம் மற்றும் அரசியல் சமூகவியல் தொடர்பான ஆய்வாளர் ரமோன் கிரோஸ்ஃபுகேல். காலனியம், அதன் தாக்கங்கள் மற்றும் கிழக்குலகில் அதனை எதிர்கொள்ளும் முறை போன்ற பரப்புகளில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வுரைகளையும் கட்டுரைகளையும் முன்வைத்திருக்கிறார். அமெரிக்காவின் பெர்க்லி பல்கலைக்கழகத்தில் அவர் சிறப்புப் பேராசிரியாகவும் பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. மேலும், பேராசிரியர் ரமோனுடைய கருத்துக்களில் இழையோடும் சிறப்பம்சம் என்னவென்றால், பிரபல காலனிய எதிர்ப்புக் கோட்பாட்டாளர்கள் தவறவிட்டவைகளை அடையாளப்படுத்துவதுடன், ‘காலனிய நீக்கம்’ (Decolonization) எனும் கோட்பாடு சார்ந்து விரிந்ததொரு பார்வையை முன்வைப்பதுமாகும்.

இக்கட்டுரையின் முக்கியத்துவத்தை உணர்த்தும் மற்றொரு அம்சத்தையும் இங்கு குறிப்பிட வேண்டும். நேற்று அக்டோபர் 12-ம் தேதி (2016) அமெரிக்காவின் சிறப்பு விடுமுறை தினமாகும். அதற்கான வரலாற்று நியாயம் என்னவென்றால், 1492-ம் ஆண்டு ஒக்டோபர் 12-ம் தேதி நாடு காண் பயணியாக தன்னை அறிமுகம் செய்து கொண்ட கிறிஸ்டோஃபர் கொலம்பஸ் அமெரிக்காவில் காலடியெடுத்து வைத்த தினம் என்பதே. அதனை ஐக்கிய அமெரிக்கா தேசிய விடுமுறையாகக் கொண்டாடுகிறது. ஆனால், ஆய்வாளர் ரமோனின் பார்வையில் ‘காலனிய சிந்தனை’ சர்வதேசமயமான நாள் என கொலம்பஸ் அமெரிக்காவில் தரையிரங்கிய தினத்தை அடையாளப்படுத்துகிறார். எனவே காலனியம் , பின்காலனியம் மற்றும் காலனித்துவ நீக்கம் ஆகியகோட்பாடுகள் சார்ந்த விவாதங்களைத் தோற்றுவிக்கும் தினமாக அக்டோபர் 12-ம் தேதியைக் குறிப்பிடலாம்.

இப்பின்புலத்தில் காலனியம், பின்காலனியம் மற்றும் காலனிய நீக்கம் தொடர்பாக ஆய்வாளர் ரமோனின் சில அவதானங்களை பின்வரும் கிளைத் தலைப்புகளில் இக்கட்டுரை அலச முயல்கிறது.

• காலனியத்தின் மூலவேர் எது?
• நான்கு அறிவியல் படுகொலைகளும் நவீனத்துவமும்
• விடுதலை இறையியலை மீள்வாசிப்புச் செய்தல்
• காலனிய நீக்கத்திற்கான திட்டவரைவு

காலனியத்தின் மூலவேர் எது?

‘இன்றும் காலனியம் உயிர்வாழ்கிறது. ஏனெனில், அதன் மூலவேரினை அடையாளம் காண்பதற்கு கிழக்குலகால் முடியவில்லை’ என்ற ஆய்வாளர் ரமோனின் சொற்களைக் கொண்டு கட்டுரையைத் தொடங்குகிறேன். அதாவது, காலனியத்தின் கூறுகள் கிழக்குலகினை இன்றும் ஆட்சி செய்து வருகின்றன என்பதையே அவரது கூற்றின் உள்ளர்த்தம் சுட்டிக்காட்டுகிறது. அதற்குக் காரணம், காலனியத்தின் மூலவேர்களை அதன் எதிர்ப்பாளர்கள் அடையாளம் காண்பதற்கு தவறிவிட்டமையே என்பது ரமோனின் வாதம். ஏனெனில், சிலர் காலனியத்தின் மூலவேரினை ‘அரசியல் சார்ந்தது’ என்கின்றனர். அதாவது, கிழக்குலகை மேற்குலகு அரசியல் ரீதியாகக் கட்டுப்படுத்தி வருகின்றமையே காலனியத்தின் பிரதான யதார்த்தம் என்பது அவர்களின் பார்வை. வேறு பலர் ‘பொருளாதாரப் பரிமாணத்திற்குள்’ காலனியத்தின் தாக்கங்களைச் சுருக்கி விடுகின்றனர். அகன்ற முதலாளித்துவ உலகுக்கு ஊட்டம் கொடுக்கும் உலகளாவிய திட்டமிடலே ‘காலனியம்’ என்பது அத்தகையவர்களின் கருத்தாகும். சற்று வித்தியாசமாக, ‘கலாச்சாரப் பரிமாணத்தில்’ காலனியத்தை ஆய்வு செய்யும் பலரும் இருக்கின்றனர். அதற்கு எட்வட் சைதின் ‘கீழைத்தேயவாதம்’ என்ற நூல் சிறந்த உதாரணமாகும். மேற்கூறப்பட்ட யாவும் காலனியத்தின் வடிவங்கள் என்பதில் முரண்படப் போவதில்லை. காலனியத்தின் ஆழத்தைப் புரிந்து கொள்வதற்கு கலாச்சார, பொருளதார மற்றும் அரசியல் பரிமாணம் சார்ந்த ஆய்வுகள் நிச்சயம் துணை செய்யும் என்பதிலும் உடன்பாடு காணப்படுகிறது. ஆனால், ‘காலனியத்தின் மூலவேர்’ மேற்கூறப்பட்ட மூன்றையும் தாண்டிச் செல்லும் ஒன்றாகும்’ என்று ஆய்வாளர் ரமோன் வாதிடுகிறார்.

‘அறிவுத்தோற்றவியல் காலனியம்’தான் (Epistemological colonization) உண்மையில் காலனியத்தின் மூலவேர் என பேராசிரியர் ரமோன் எழுதிச் செல்கிறார். அதாவது, உலகின் பிரச்சினை என்ன, அதற்கான தீர்வுகள் என்ன, உலகிற்குத் தேவையான கோட்பாடுகள் என்ன, அரசியல் பொருளதார சமூகவியல் கருத்தாடல்களுக்களுக்கான வரையறைகள் மற்றும் அணுகுமுறைகள் என்ன முதலிய மிக முக்கியமான கேள்விகளுக்கான பதிலை ஐரோப்பாவே வடிவமைத்து வருகிறது. இதுவே, ‘காலனியத்தின் மூலவேர்’ என்று அவர் குறிப்பிடுகிறார். உதாரணமாக, ‘இன்று சமூக விஞ்ஞானங்களில் மூலாதாரங்களாகக் காணப்படும் பிரதிகள் வெறும் ஐந்து நாடுகளின் தத்துவவியளாளர்கள் பிரசவித்தவை மட்டுமே. அவை இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி மற்றும் ஐக்கிய அமெரிக்கா என்பனவாகும். இந்த ஐந்து நாடுகளிலும் பிரசவிக்கப்பட்ட கோட்பாடுகள், சிந்தனைகள் மற்றும் இவர்கள் முன்வைத்த தீர்வுத் திட்டங்களே சமூகவிஞ்ஞானங்களில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. அரசியல், பொருளாதாரம், கல்வி, கலை, சமூகவியல், உளவியல் என எல்லாத் துறை சார்ந்த பாடத்திட்டங்களிலும், பயிற்சி நெறிகளிலும் இந்த ஐந்து நாடுகளின் அறிஞர்களை மட்டுமே காண்பீர்கள். உலகின் பல்வேறு மொழி, இன, மத மற்றும் கலாச்சாரப் பின்புலத்தைக் கொண்ட சமூகங்களின் தலைவிதியைத் தீர்மானிக்கும் ‘சமூகக் கலைகளை’ இந்த ஐந்து நாடுகளைச் சேர்ந்த அறிஞர்களின் தனியுடைமையாக மாற்றியது எது, அது எப்போது நிகழ்ந்தது எனும் கேள்வியை ரமோன் எழுப்புகிறார்.

அது மட்டுமன்றி, சமகாலக் கோட்பாடுகள், தத்துவங்கள், சிந்தனைகளைப் புரிந்து கொள்வதற்கு ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன் ஆகிய மொழிகளில் ஏதேனுமொன்றைக் கற்றிருக்க வேண்டும். இம்மூன்று மொழிகளையும் பேசாத ஏனைய 90 வீதமான சமூகங்களுக்கு அரசியல், பொருளாதாரம் போன்ற சமூகவியல் கலைகளைப் புரிந்து கொள்வதற்கான வாய்ப்பில்லை. அப்படியென்றால், சமூகவியல் அறிவியல் துறைகளை வெறும் மூன்று மொழிகளுக்குள் முடக்கி வைத்திருக்கும் திட்டம் எப்போது வகுக்கப்பட்டது? இவையே காலனியத்தின் மூலத்தை அடையாளம் காண்பதற்குத் துணை செய்யும் கேள்விகள் என ரமோன் கூறுகிறார். இத்தகைய அறிவுத்தோற்றவியல் காலனித்துவமே ஏனைய சகல காலனிய வடிவங்களுக்கும் வித்திட்டது என அவர் மேலும் குறிப்பிடுகிறார். இந்த வகையில், இன்று உலகில் எட்டுத் திசைகளிலும் பரவியிருக்கும் ‘பல்கலைக்கழக ஒழுங்குகள், பாடத்திட்டங்கள்’ காலனியத்தின் மூலவேரான ‘ஐரோப்பிய அறிவுத்தோற்றவியல் துறையை’ பாதுகாக்கும் அதிகார அரண்கள் என்பது ரமோனின் கருத்தாகும். சர்வதேச காலனியத்தின் ஆணிவேராக’ மேற்குமயப்பட்ட பல்கலைக்கழகக் கட்டமைப்பையே’ (Westernized universities) தான் அடையாளப்படுத்துவதாகவும் அவர் வலியுறுத்துகிறார்.

அடுத்து, பெரும்பாலும் ஐரோப்பாவின் சமூகச் சூழ்நிலைகள், கலாச்சார மோதல்நிலைகள் மற்றும் மதவியல் பின்புலங்களின் அடிப்படையிலேயே ஐந்து நாடுகளின் கோட்பாட்டாளர்களும் தம் கருத்துக்களை முன்வைத்துள்ளனர். அப்படியிருக்கும் பட்சத்தில், அவை எப்படி சர்வதேசச் சமூகவியலுக்கான பொதுக் கோட்பாடாக ‘சர்வதேசத்தன்மையை’ (Universality) பெற்றுக் கொண்டன? 14-ம் நூற்றாண்டு முதல் 18-ம் நூற்றாண்டு வரை இடம்பெற்ற மதத்துக்கும் அரசியலுக்குமான போராட்டம், தொழிலாளிக்கும் முதலாளிக்கும் இடையிலான வர்க்க முரண்பாடுகள், மதத்துக்கும் பகுத்தறிவுக்கும் இடையிலான போட்டித் தன்மை , பெண்ணடக்குமுறைகள், இனங்களுக்கு இடையிலான முரண்பாடுகள் என்பன ஐரோப்பாவின் தோற்றப்பாடுகள் மட்டுமே. அத்தகைய முரண்நிலைகளைத் தீர்ப்பதற்கு வகுக்கப்பட்ட சித்தாந்தங்கள் ஆப்பிரிக்காவையோ ஆசியாவையோ முஸ்லிம் உலகையோ கருத்தில் கொண்டு வகுக்கப்பட்டவையல்ல. ஆனால், இன்று ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் முஸ்லிம் உலகு போன்றவை ஐரோப்பாவை மையப்படுத்தி பேசப்பட்ட கோட்பாடுகளை ‘சர்வதேசத்தன்மை கொண்டவை’ எனக் கருதி கற்றுக் கொண்டிருக்கிறது என்கிறார் ரமோன்.

ஏன் பகுத்தறிவின் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்கு இம்மானுவேல் காண்ட்டைத் தவிர ஆப்பிரிக்க, முஸ்லிம் உலக, ஆசிய வரலாற்றில் யாருமே தோன்றவில்லையா? தொழிளாளர் உரிமையைப் பற்றி பேசுவதற்கு கார்ல் மார்க்ஸைத் தவிர முஸ்லிம் உலகிலோ ஆசியாவிலோ வேறு யாரும் இல்லையா? ஜனநாயத்தைப் பற்றி பேசுவதற்கு தோமஸ் ஹொப்ஸைத் தவிர ஆப்பிரிக்காவுக்கு வேறு யாரையும் தெரியாதா? ஐரோப்பாவை மையப்படுத்தி முன்வைக்கப்பட்ட மார்க்ஸ், காண்ட் மற்றும் ஹொப்ஸின் சிந்தனைகள் எப்படி கிழக்குலகில் பல்கலைக்கழகப் பாடத்திட்டமாக மாற்றம் கண்டன? ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் முஸ்லிம் உலகு போன்ற நாகரிகப் பின்புலமும் தனித்துவ மொழி கலாச்சாரப் பின்னணியும் கொண்ட 90 வீதமான மக்கள் நவீன சமூகவியலில் புறக்கணிக்கப்பட்ட நிலையில், ஐரோப்பாவின் ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மானிய மொழிகள் எவ்வாறு உலகின் சமூக உள்ளடக்கத்தை (Context) புரிந்து கொள்வதற்கான ‘மூலாதார மொழிகளாக’ மாற்றப்பட்டன என்பனவே காலனியத்தின் மூலவேரைத் தொடும் கேள்விகளாகும் என ரமோன் எழுதிச் செல்கிறார்.

அதனோடிணைந்த வகையில் கலை மற்றும் இலக்கியம், பால்நிலை, அரசியல், பொருளாதாரம், மொழி, ஆன்மிகம், ஊடகம் எனப் பல்வேறு பரிமாணங்களில் ஐரோப்பிய அறிவுத்தோற்றவியல் கிழக்குலகு மீது காலனிய ஆதிக்கம் செலுத்துகிறது. எனவே, வெறுமனே பொருளதார அரசியல் கலாச்சாரப் பரிமாணங்களுக்குள் காலனியத்தைச் சுருக்குவதை விட ‘காலனிய நாகரிம்’ என்ற பரந்த வட்டத்தில் அதை அணுகுவதே பொருத்தம் என்பது பேராசிரியர் ரமோனின் அவதானமாகும்.

நான்கு அறிவாதாரப் படுகொலைகளும் நவீனத்துவமும்

சரி, இவ்வளவு ஆழமாகவும் அகலமாகவும் உலகச் சமூகவியலை, மொழியை காலனியத்திற்கு உட்படுத்தும் ஐரோப்பிய நகர்வு எப்போது தொடங்கியது என்ற கேள்வியும் இங்கு முக்கியத்துவம் பெறுகிறது. அது நான்கு கட்டங்களாக நிகழ்ந்ததாக பேராசிரியர் ரமோன் கூறுகிறார்.

• முதலாவது கட்டம் 1492 ஜனவரி 12-ம் தேதி ஆரம்பிக்கப்பட்டது. அது முஸ்லிம் ஸ்பெயின் வீழ்ந்த நாளாகும். முஸ்லிம் ஸ்பெயினை ஐரோப்பா வெற்றிகொண்டவுடன் பாக்தாதின் அறிவுப் பொக்கிஷங்களை, முஸ்லிம் உலகம் பாதுகாத்து வந்த கிரேக்க தத்துவ ஞானிகளின் முதுசங்களை ஐரோப்பா தனதாக்கிக் கொண்டது. ஆனால், அறிவியல் கலைக்களஞ்சியத்தை எங்கிருந்து பெற்றோம் என்பதை ‘ஐரோப்பாவின் இருண்ட காலம்’ (Dark ages of Europe) எனும் சொல்லாடலினுடாக ஐரோப்பா மறைத்துக் கொண்டது. இந்த வகையில் முஸ்லிம் ஸ்பெயின் சூறையாடப்பட்டதை முதலாவது ‘அறிவாதாரப் படுகொலை’ (Epistemicide) என்று ரமோன் கூறுகிறார்.

• 1492 ஆகஸ்ட் 12-ம் தேதி கொலொம்பஸின் கைகளால் அமெரிக்கா, இலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் தீவுகளில் இரண்டாவது அறிவாதாரப் படுகொலை இடம்பெற்றது. எப்படி முஸ்லிம் ஸ்பெயினைச் சுரண்டினார்களோ, அதுபோலவே அன்றைய அமெரிக்காவின் அறிவுத்தோற்றவியல் அனுபவங்களை ஐரோப்பா சூறையாடியது.

• மூன்றாவது அறிவாதாரப் படுகொலை ஆப்பிரிக்காவை ஐரோப்பா ஆக்கிரமித்த போதும், அதன் சுதேசிகளை அடிமைகளாக அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்த போதும் இடம்பெற்றன.

• ஐரோப்பாவில் வாழ்ந்த சிறந்த பெண் ஆளுமைகளை, சிந்தனையாளர்களை சுட்டெரித்ததன் ஊடாக நான்காவது அறிவாதாரப் படுகொலையை ஐரோப்பா அரங்கேற்றியது.

ஐரோப்பாவின் அறிவாதாரப் படுகொலைகளை ரமோன் இவ்வாறு நிரல்படுத்துகிறார்.

இந்நான்கு அறிவாதாரப் படுகொலைகளின் பின்புலத்திலேயே ஐரோப்பியமையச் சமூகவியல் கோட்பாடுகள் ‘சர்வதேசத்தன்மையை’ பெற்றுக் கொண்டன. அதாவது ஐரோப்பா உலகின் பொருளாதாரத்தை, அரசியல் கட்டமைப்பை கட்டுப்படுத்துவதற்கு முன்னர், நான்கு அறிவாதாரப் படுகொலைகளின் மூலம் ‘அறிவுத்தோற்றவியல் பன்மைத்துவத்தை’ (Epistemological Pluralism) ஒழித்துக் கட்டியது. ஐரோப்பிய மொழிகள், சமூகக் கோட்பாடுகள் மற்றும் வாழ்வியல் நோக்குகளை கிழக்குலகில் அது திணிக்க ஆரம்பித்தது. இந்த ஐரோப்பிய மைய அறிவுத்தோற்றவியலின் நிழலிலேயே பொருளதார, அரசியல் மற்றும் கலாசார ஆதிக்கத்தை ஐரோப்பா கட்டமைத்துச் சென்றது என காலனிய வரலாற்றாய்வாளர் ரமோன் கூறுகிறார்.

உலகம் போற்றும் ஐரோப்பியத் தத்துவவியளாளர்கள் பலரும் ஐரோப்பிய காலனியத்தையும் விரிவாக்கத்தையும் வரவேற்றதாக அவர் மேலும் விளக்குகிறார். குறிப்பாக, பிரிட்டனின் இந்திய ஆக்கிரமிப்பையும், அமெரிக்காவின் மெக்ஸிகோ ஆக்கிரமிப்பையும் கார்ல் மார்க்ஸ் வரவேற்றார். மட்டுமன்றி, ‘ஆப்பிரிக்காவை நாகரிகப்படுத்த வேண்டும், பகுத்தறிவுக்கும் அவர்களுக்கும் எந்த உறவும் இல்லை’ என்பது இம்மாவேல் காண்டின் நிலைப்பாடாக இருந்தது. அதுபோன்றே, ஆப்பிரிக்கா மீதான ஐரோப்பாவின் காலனியத் திட்டத்தை காண்ட் மறைமுகமாக ஆதரித்தார். இங்கு புரிந்து கொள்ளப்பட வேண்டியது என்னவென்றால், நவீனத்துவமும் அதன் தத்துவியளாளர்களும் ‘காலனிய அறிவாதாரப் படுகொலைகளை’ தமது கருத்துகளுக்கு சர்வதேசத் தன்மையைப் பெற்றுக் கொள்வதற்கான ஒரு சிறந்த ஊடகமாகக் கருதினார்கள் என்பதே. காண்ட், மார்க்ஸ், ஹொப்ஸ் போன்ற நவீனத்துவச் சிந்தனையாளர்கள் அனைவரும் ‘காலனிய அறிவாதாரப் படுகொலைகள்’ ஏற்படுத்திய இரத்தம் தோய்ந்த கைகளுடன் ‘சர்வதேசமயமானவர்கள்’ என்று ரமோன் வாதிக்கிறார். வர்க்கவாதம் பேசிய கார்ல் மார்க்ஸ், ஜனநாயகம் பேசிய ஹொப்ஸ், பகுத்தறிவுவாதம் பேசிய காண்ட் போன்ற அனைவரும் ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் இலத்தீன் அமெரிக்காவில் நடைபெற்ற காலனியச் சக்திகளின் அறிவாதாரப் படுகொலைகளை சரி கண்டனர் என்பது, காலனியத்திற்கும் நவீனத்துவச் சிந்தனையாளர்களுக்கும் இடையிலிருந்த இரகசியக் காதலை விளக்குவதாக ஆய்வாளர் ரமோன் சுட்டிக் காட்டுகிறார்.

உலகின் பிரச்சினை ‘பொருளாதாரம் சார்ந்தது’ என்பது ஐரோப்பாவில் இருந்த மார்க்ஸின் பார்வை; ‘ஜனநாயகம்’ என்பது அதே ஐரோப்பாவில் இருந்த ஹொப்ஸின் பார்வை; ‘பகுத்தறிவின்மை’ என்பது இங்கிலாந்தில் வசித்த காண்ட்டின் பார்வை. ஆனால் ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் இலத்தீன் அமெரிக்காவின் உண்மையான பிரச்சினை ‘காலனியச் சுரண்டல் நாகரிகத்தின் வருகைதான்’ என்ற பரிமாணத்தை ஐரோப்பியத் தத்துவவியளாளர்கள் புரிந்து கொள்ளவே இல்லை என்கிறார் ரமோன். பின்காலனிய ஆய்வாளர்களான எட்வட் சைத் போன்றவர்கள் தமது ஆய்வுகளில் தவறவிடுவது என்னவென்றால், அவர்கள் முஸ்லிம் உலகின் காலனிய வரலாற்றை 18-ம் அல்லது 19-ம் நூற்றாண்டிலிருந்து ஆரம்பிப்பதாகும். இதனால் 1492 முதல் 1798 வரை ஐரோப்பியக் காலனியம் நடத்திய அறிவாதாரப் படுகொலைகளையும், அதன் பின்புலத்தில் இடம்பெற்ற நவீனத்துவத்திற்கும் காலனியத்திற்கும் இடையிலான கள்ளக் காதலையும் கடந்து சென்று, வெறுமனே காலனியம் என்பது ‘கலாசார, பொருளாதார, அரசியல்’ பரிமாணம் கொண்டது எனச் சுருக்கி நோக்குகிறார்கள். அதாவது, ‘காலனியம் ஓர் ஆக்கிரமிப்பு நாகரிகம்’ என்ற மெய்நிலையை பின்காலனிய ஆய்வாளர்கள் புரிந்து கொள்ளவில்லை என காலனிய ஆய்வாளர் ரமோன் தெளிவுபடுத்துகிறார்.

விடுதலை இறையியலை மீள்வாசிப்புச் செய்தல்

காலனியத்திற்கு எதிரான விடுதலை இயக்கங்கள் முன்வைத்த ‘விடுதலை இறையியல்’ (Liberation theology) ஐரோப்பிய மையவாதிகளிடம் தோல்வி கண்டு விட்டது எனப் பேராசிரியர் ரமோன் கருதுகிறார். அதற்கு பிரதான இரண்டு நியாயங்களை அவர் வாதிக்கிறார்.

• முதலாவது, 20-ம் நூற்றாண்டின் விடுதலை இறையியல்கள் வெறுமனே ‘காலனியத்தின் அரசியல், பொருளாதார பரிமாணங்களை’ மட்டுமே எதிர்கொண்டன. அதன் கலை, கலாச்சாரம் ,மொழி, பாலியல், ஆன்மிகம் போன்ற அகன்ற பரப்புகளை அது ஆராயவில்லை.

• இரண்டாவது, காலனியத்தின் மூலவேரான ‘அறிவுத்தோற்றவியல் காலனியத்தை’ அடையாளம் காண்பதற்கு விடுதலை இறையியலால் முடியாமல் போனது. எனவே, விடுதலை இறையியல் வெற்றிகண்ட பூமிகள்கூட, தொடர்ந்தும் ஐரோப்பிய ஆசியர்கள், ஐரோப்பிய இலத்தீன் அமெரிக்கர்கள் மற்றும் ஐரோப்பிய ஆப்பிரிக்கர்களை பிரசவித்து வருகின்றன. விடுதலை இறையியல் கட்டமைப்பிற்குள்ளாக இருந்தே அதன் எதிர்ப்பாளர்கள் தோற்றம்பெறுவதை அவதானிக்க முடியும்.

மட்டுமன்றி, விடுதலை இறையியல் சிந்தனை முகாம்கள் பயன்படுத்திய ‘காலனிய எதிர்ப்பு’, ‘பின்காலனியம்’ போன்ற பிரயோகங்கள் கூட பிரச்சினைக்குரியனவே என ரமோன் கூறுகிறார். ஏனெனில், ‘காலனிய எதிர்ப்பு’ (anti colonialism) என்பது காலனியத்தின் புலப்படும் எதிரியான (visible enemy) அரசியலை மட்டுமே இலக்கு வைக்கும் உள்ளர்த்தத்தை கொண்ட சொல்லாகும். அதேபோன்று, பின்காலனியம் என்பது காலனியத்தின் கலாச்சாரப் பரிமாணங்களை மட்டுமே ஆய்வு செய்யும் உள்ளடக்கத்தைக் கொண்ட பிரயோகமாகும். இவை இரண்டு பிரயோகங்களாலும் காலனியத்தின் மூலத்தை அடைய முடியவில்லை என்கிறார் ரமோன். மாறாக, ‘காலனிய நீக்கம்’ என்ற பிரயோகமே காலனியத்தின் அறிவுத்தோற்றவியல் பரிமாணம் தொடங்கி கலை, கலாச்சாரம், மொழி, பால்நிலை, அரசியல், பொருளதாரம், ஆன்மிகம் என சகல தளங்களையம் ஊடறுத்துச் செல்லும் வலிமையைக் கொண்டது என்று அவர் முன்மொழிகிறார்.

இப்பின்புலத்தில் சமூக அறிவியல்களை காலனிய நீக்கம் செய்தல், பல்கலைக்கழகங்களை காலனிய நீக்கம் செய்தல், பின்காலனியத்தை காலனிய நீக்கம் செய்தல், அறிவுத்தோற்றவியலை காலனிய நீக்கம் செய்தல், விடுதலை இறையியலை காலனிய நீக்கம் செய்தல் போன்ற தலைப்புகளில் புதிய கருத்தாடல்களை ஏற்படத்த வேண்டும் எனவும் ரமோன் வாதிக்கிறார்.

காலனிய நீக்கம் செய்வதற்கான சில வழிகாட்டல்கள்

1) ஐரோப்பாவின் ஐந்து நாடுகள் மற்றும் அதன் மொழிகள் பிரசவித்த கோட்பாடுகளை ‘சர்வதேசத்தன்மை வாய்ந்தவை’ என்ற மனோநிலையில் சமூகவியல் கலந்துரையாடல்களில் பிரயோகிப்பதைத் தவிர்த்து, ஏனைய ஆப்பிரிக்க, ஆசிய மற்றும் முஸ்லிம் உலக அறிவுஜீவிகளின் சுதேச அனுபவங்களிலிருந்து பெற்ற முடிவுகளை சர்வதேசத் தளத்தில் விவாதிக்க வேண்டும். இதனூடாகவே ‘அறிவித்தோற்றவியல் பன்மைத்துவத்தை’ (Epistemological Pluralism) நோக்கி நகர்ந்துசெல்ல முடியும்.

2) ‘காலனிய எதிர்ப்பு’ என்ற தளத்திலிருந்து மேற்குலக-கிழக்குலக ‘அறிவுத்தோற்றவியல் சமநிலையை’ (Epistemological Equality) ஏற்படுத்துவதை இலக்காகக் கொண்டு அறிவுப்பணிகளை திசைப்படுத்துதல்.

3) பல்கலைக்கழகம், ஆய்வு மாநாடுகள் மற்றும் உரையாடல்களில் மேற்குலகச் சமூகவியல் எண்ணக்கருக்களையும் அனுபவங்களையும் விசாரனைக்குட்படுத்தும் விவாதங்களை ஆரம்பித்தல். ‘மேற்குலகச் சமூக அறிவியல்களை பொறுப்புக்கூறச் செய்தல்’ (Creating an accountability to western social sciences) என்று ரமோன் இதனை அழைக்கிறார்.

4) உலகில் எந்தக் கோட்பாடும் சிந்தனையும் தத்துவமும் மொழியும் ‘சர்வதேசத்தன்மையானது’ கிடையாது என்பதையும், சமூகத்திற்கான பொதுக் கோட்பாடுகளை வரையும்போது சகல சமூகங்கள் மற்றும் இனக்குழுக்களுடைய அனுபவங்கள், மொழியியல் பாரம்பரியங்கள், கலாச்சார மரபுகள், ஆன்மிக ஒழுக்கப் பெறுமானங்களை கருத்தில் கொள்ளுமாறும் விவாதங்களைத் தொடங்குதல்.

துணைநின்றவை

  1. Decolonizing Post-Colonial Studies and Paradigms of Political Economy: Transmodernity, Decolonial Thinking, and Global Coloniality
  2. Decolonizing the university
  3. Decolonial methods and Epistemology
  4. Historical perspective
  5. Decolonizing the academy
  6. Post-colonization or Decolonization
  7. Cartography of power

Related posts

2 Thoughts to “காலனிய நீக்கம்: கோட்பாடும் நடைமுறையும்”

  1. […] கிரஸ்ஃபொகேல் கூறுவது போல ஓர் ‘அறிவாதாரப் படுகொலையை‘ (Epistemicide) ஒன்றை நிகழ்த்தி அமெரிக்கப் […]

  2. […] கிரோஸ்ஃபுகேல் என்ற ஆய்வாளர் இதை அறிவாதாரப் படுகொலை (Epistemicide) என்று குறிப்பிடுகிறார். அங்கே […]

Leave a Reply to காலனித்துவமும் இஸ்லாமியக் கல்விமுறையின் வீழ்ச்சியும் – மெய்ப்பொருள் காண்பது அறிவு Cancel reply