கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

நடப்பு தேர்தல் முறையின் பிரச்னைகளும் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ முறையும்

Loading

இந்தியச் சிறுபான்மையினரை மேம்படுத்துவதற்கு உடனடியாகச் செய்ய வேண்டிய அமைப்புசார் சீர்திருத்தங்களுள் ஒன்றுதான் தேர்தல் முறையைச் சீரமைப்பது. இந்தியாவில் நாடாளுமன்றத்திலிருந்து சட்டமன்றம் வரையிலான தேர்தல்களை நடத்த அரசியல் சாசனம் வகுத்தளித்திருக்கும் முறை FPTP (First-past-the-post) எனும் நடப்பு தேர்தல்முறை. இதில் புவியியல் அடிப்படையில் தொகுதிகள் பிரிக்கப்பட்டு, தொகுதிக்கு ஒரு பிரதிநிதி என்று தேர்வுசெய்யப்படுகிறது. இந்தத் தேர்வு வாக்குகளின் மூலம் நடைபெறுகிறது. வேட்பாளர்களில் அதிக வாக்குகள் பெறுபவர் — அவர் வெறும் 20% வாக்குகளே பெற்றிருந்தாலும் — தேர்வானவராகக் கொள்ளப்படுகிறார்.

1952இலிருந்து (அதற்கு முன்பும்கூட) பிரிட்டிஷாரிடமிருந்து பெற்றுக்கொண்ட இந்தத் தேர்தல் முறையைக் கொண்டே நாம் தேர்தல்களை நடத்திவருகிறோம். மொத்த வாக்குகளில் மூன்றில் ஒரு பகுதியைப் பெறும் கட்சிகள்கூட அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெறுவதற்கு இது வழியேற்படுத்துகிறது. இதுதான் காங்கிரஸை 35% வாக்குகளைக் கொண்டு 60% தொகுதிகளைப் பிடிக்க வாய்ப்பளித்தது. அதுபோல, 2019 நாடாளுமன்றத் தேர்தலில் வெறும் 37% வாக்குகளுடன் 56% இடங்களைக் கைப்பற்ற பாஜகவுக்கும் உதவியது.

நடப்பு தேர்தல்முறை ஏற்படுத்தியுள்ள பாதிப்புக்கு சமீபத்திய மாநிலத் தேர்தல்களும்கூட சான்றுரைக்கின்றன. பிஹாரில் பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணி (தே.ஜ.கூ.), மகாகத்பந்தன் (மெகா கூட்டணி) ஆகியவை 37-38% வாக்குகளைப் பெற்றிருந்தன. ஆனால், தே.ஜ.கூ. 51.4% தொகுதிகளையும், மெகா கூட்டணி 45.3% தொகுதிகளையும் பெற்றன. 2021 அஸ்ஸாம் சட்டமன்றத் தேர்தலை எடுத்துக்கொண்டால், தே.ஜ.கூ. 45% வாக்குகளைக் கொண்டு 59.5% தொகுதிகளை வென்றது. அதே ஆண்டு மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ் 48.5% வாக்குகளுடன் 73% தொகுதிகளையும், பாஜக 38.5% வாக்குகளுடன் 26.4% தொகுதிகளையும், பிற கட்சிகள் 9.4% வாக்குகளுடன் இரண்டு தொகுதிகளையும் பெற்றிருந்தன. கேரளாவில் இடது ஜனநாயக முன்னணிக்கு 67% இடங்கள் 41.5% வாக்குகள் மூலம் கிடைத்தன. அதேவேளை, காங்கிரஸின் ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு 28.6% இடங்கள் 38.4% வாக்குகள் மூலம் கிடைத்தன. அங்கே பிற கட்சிகள் 11.4% வாக்குகளை ஈட்டியிருந்தாலும் அவற்றுக்கு ஒரு தொகுதியும் கிடைக்கவில்லை.

2014 நாடாளுமன்றத் தேர்தலைக் கருத்தில் கொண்டாலும் இந்தச் சிக்கல் புலப்படும். அப்போது உபியில் பாஜக 89% தொகுதிகளை 42.6% வாக்குகளைக் கொண்டு வென்றது. சமாஜ்வாதி கட்சி 22% வாக்குகளை ஈட்டினாலும் வெறும் 5 தொகுதிகளிலேயே வெற்றி பெற்றது. மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ் 39.8% வாக்குகள் பெற்று 34 இடங்களையும், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 22.96% வாக்குகள் பெற்று 2 இடங்களையும் பெற்றன. இதேபோல், 2019 மக்களவைத் தேர்தலின்போது பஞ்சாப்பில் காங்கிரஸ் 40.6% வாக்குகள் பெற்று 8 தொகுதிகளையும், அகாலி தளம் 27.8% வாக்குகளைப் பெற்று 2 தொகுதிகளையும் வென்றன. சத்தீஸ்கரில் 51.4% வாக்குகளைப் பெற்ற பாஜக 9 இடங்களையும், 41.5% வாக்குகளைப் பெற்ற காங்கிரஸ் 2 இடங்களையும் பெற்றன.

மாநிலம்கட்சிதொகுதிவாக்கு சதவீதம்
உத்தரப் பிரதேசம்பாஜக7142.6%
சமாஜ்வாதி522%
மேற்கு வங்கம்திரிணாமுல் காங்கிரஸ்3439.8%
சிபிஐ (எம்)222.96%
அட்டவணை 1. நாடாளுமன்ற தேர்தல் 2014

மாநிலம்கட்சிதொகுதிவாக்கு சதவீதம்
பஞ்சாப்காங்கிரஸ்840.6
அகாலி தளம்227.8
சத்தீஸ்கர்பாஜக951.4
காங்கிரஸ்241.5
அட்டவணை 2. நாடாளுமன்ற தேர்தல் 2019

மேலே தரப்பட்டுள்ள விவரங்களை வைத்துப் பார்த்தால், வாக்குகளுக்கும் வெற்றிபெறும் தொகுதிகளுக்கும் இடையே நிலவும் பாரிய வேறுபாட்டுக்கு FPTP தேர்தல்முறை காரணமாக இருப்பது தெளிவாகும். சிலபோது இந்தப் பிரச்சினை இன்னும் தீவிரமாக வெளிப்படுகிறது. நடப்பு தேர்தல்முறையானது தேர்தல்களை இருமுனைப் போட்டியாக மாற்றிவிடுகிறது என்பது இன்னொரு பிரதானச் சிக்கல். ஏனெனில், பெரும்பாலான வாக்காளர்கள் தோற்கும் கட்சிக்கோ வேட்பாளருக்கோ வாக்களிப்பதற்குத் துணியமாட்டார்கள். அதனால் இரு செல்வாக்குமிக்க வேட்பாளர்களுக்கு மத்தியிலான போட்டியாக தேர்தல் சுருங்கிவிடுகிறது; மூன்றாமவர் புறந்தள்ளப்படுகிறார். ஆக மொத்தத்தில், இங்கு பெரும்பாலானோரின் வாக்குகள் வீணாவதுடன், எண்ணிக்கையில் குறைவானோரின் வாக்குகள் பிரதிநிதியைத் தேர்வுசெய்வதாய் அமைந்துவிடுகின்றன.

இப்படியான சூழல் நமக்கு உணர்த்துவது, நமது கல்விமுறையின் தோல்வியையும், ஜனநாயகத்தின் உண்மையான பொருள் குறித்து குறைந்தபட்ச விவாதங்கள்கூட நம்மிடையே இல்லை என்பதையும்தான். FPTP முறையிலுள்ள குறைபாடுகளைக் குறித்தோ, தேர்தல்களை வேறு விதமாகவும் நடத்தலாம் என்பதைக் குறித்த விழிப்புணர்வேகூட பெரும்பாலான வாக்காளர்களுக்கு இருப்பதில்லை. ஆனால், தேர்தல்களை நடத்தவும், பிரதிநிதிகளைத் தேர்வுசெய்யவும் ‘கடவுள் வகுத்துத்தந்த’ முறைமையையே மாபெரும் ஜனநாயக நாடான இந்தியா பின்பற்றுவது போன்று கருதப்பட்டுவருகிறது!

தேர்தல் முறையில் மாற்றை நாம் பரிசீலிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். ஓர் உதாரணத்தைப் பாருங்கள்: ஐந்து தொகுதிகளில் X, Y ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து 65% வாக்குகளைப் பெறுவதாக வைத்துக்கொள்வோம். Z கட்சி தனித்துப் போட்டியிட்டு 35% வாக்குகளைப் பெறுகிறது. ஆனால், ஐந்து தொகுதிகளையுமே கூட்டணி அமைத்த கட்சிகள் வென்று, Z கட்சி ஒரு தொகுதியும் கிடைக்காமல் தோற்றுப்போகிறது. 2015இல் இதேபோன்றதொரு தேர்தல் முடிவை பிஹாரில் காணலாம். அப்போது ராஷ்டிரிய ஜனதா தளமும், ஐக்கிய ஜனதா தளமும் சேர்ந்து அமோக வெற்றிபெற்றன. இந்த ஒரு நிகழ்வு மட்டுமல்ல, கடந்த 70 ஆண்டுகளாகவே இதுதான் இந்நாட்டில் நடந்துகொண்டிருக்கிறது. நம்முடைய வாக்குகளில் பாதி அப்படியே வீணாகின்றன. இதிலுள்ள முக்கியமான விளைவு என்னவென்றால், பெரும்பாலான வாக்குகள் வீணாவதுடன், எண்ணிக்கையில் குறைவாக இருப்போருக்கு அதிக தொகுதிகள் கிடைக்க வழியேற்படுகிறது. 50களில், 60களில் காங்கிரஸும், சமீபமாக பாஜக, ஆம்ஆத்மி ஆகியவையும் இவ்விதத்தில்தான் பலனடைந்து வருகின்றன. 2014 தேர்தலில் பகுஜன் சமாஜ் 4% வாக்குகள் வாங்கியும் ஒரு இடமும் கிடைக்கவில்லை. பல வகுப்பினரும், கலாச்சாரமும் உள்ள இந்தியாவில் இந்த அணுகுமுறை ஜனநாயக விரோதமானது.

தற்போதைய தேர்தல் முறையிலுள்ள மற்றொரு பலவீனம், சிறிய கட்சிகளின் இருப்பையே அது பாதிக்கிறது. அந்தக் கட்சிகளுக்கு முன் இருக்கும் தெரிவுகள் மூன்றுதான். ஒன்று, தம்மை ஒரு கூட்டணியில் இணைத்துக்கொள்ள வேண்டும். அடுத்து, தனித்து நின்றால் வாக்குகளைப் பிரிப்பதாக வரும் குற்றச்சாட்டை சுமக்கத் தயாராக இருக்க வேண்டும். இவ்விரண்டையும் தவிர்த்து அவர்களுக்கு இருக்கும் தெரிவு, முழுமையாக செயலிழந்துவிட வேண்டும்.

தேர்தலில் 35% வாக்குகளைப் பெறக்கூடிய A எனும் கூட்டணியில் பிளவு ஏற்பட்டு அதிலிருந்து பிரிந்த C கட்சி 5% வாக்குகளை வாங்கிவிடுவதாகக் கொள்வோம். ஆனால் அது எந்தத் தொகுதியிலும் வெற்றி பெறவில்லை. B எனும் கூட்டணி 33% வாக்குகளுடன் எல்லாத் தொகுதிகளையும் வென்றுவிடுகிறது. இந்தச் சூழலில், Aஇலிருந்து பிரிந்த C கட்சி வாக்குகளைப் பிரித்துவிட்டதாகவும், அது B கூட்டணியின் மறைமுகக் கூட்டாளி என்றும் குற்றம்சாட்டப்படும். ஆக, இந்தத் தேர்தல் முறைமை ஆரோக்கியமான பிளவுக்கும் முட்டுக்கட்டையாக இருப்பதோடு, பலமான கட்சிகளின் ஏகபோக உரிமைக்கும் வழியமைத்துக் கொடுக்கிறது. வெஸ்ட்மின்ஸ்டர் மக்களாட்சி முறைமையை (Westminster system) பின்பற்றி, இந்திய அமைப்புமுறையில் நிர்வாகமும் சட்ட அவையும் பிரிக்கப்படவில்லை. மட்டுமின்றி, இவை இரண்டும் தேர்தலில் தேர்வாவோரின் அதிகாரத்தில் வந்துவிடுவதாலும், வேட்பாளர்கள் பிரிட்டனைப் போல் அடிமட்டத்திலிருந்து தேர்வாவதில்லை என்பதாலும் இந்த 30% வாக்குகளின் பிடி மிகவும் இறுக்கமாக இருக்கும். இந்தப் பின்னணியில்தான் மூன்றில் ஒரு பகுதி வாக்காளர்களைத் தம் பின்னால் வைத்துக்கொண்டு காங்கிரஸோ பாஜகவோ அரசாங்கத்தின் எல்லாக் கிளைகளிலும் ஆதிக்கம் செலுத்துவது எளிதாகிறது.

அநேகமாக, இந்த FPTP முறையைக் கொண்டு சட்டமன்றத் தேர்தலையும் மக்களவைத் தேர்தலையும் ஒருங்கிணைந்த தேர்தலாக நடத்துவதுதான் படுமோசமான ஒரு முறையாக இருக்கும். அது சிறுபான்மையினர் தம் பிரதிநிதியைத் தெரிவுசெய்ய முடியாத கையறு நிலையை ஏற்படுத்தும். குறிப்பாக, இந்த முறையானது சிதறி வாழக்கூடிய மதச் சிறுபான்மையினர், சிறிய எண்ணிக்கையிலுள்ள பிற்படுத்தப்பட்ட சாதியினர் போன்ற சமூகங்களின் நலன்களுக்கு தீங்கு விளைவிக்கும். ஏனெனில், ஒரு தொகுதியையும் அவர்களால் சுயமாக வெல்ல இயலாது.

FPTPயிலுள்ள இன்னொரு அப்பட்டமான குறைபாடு என்னவென்றால், தொகுதிகளை தம் நலனுக்குத் தக்க மாற்றிக்கொள்ளும் உச்சபட்ச அதிகாரத்தை அது வழங்குகிறது. நாட்டுப் பிரிவினைக் காலம் தொட்டு தொடர்ச்சியாக தொகுதிகளை மறுவரையறை செய்வது (Delimitation) சிறுபான்மையினரை — குறிப்பாக முஸ்லிம்களை — சிதறடிக்கவும் அதிகாரமிழக்கச் செய்யவுமே பயன்படுத்தப்பட்டது. எப்படியென்றால், அவர்கள் செறிவாக வசிக்கும் தொகுதிகள் துண்டாடப்பட்டதன் விளைவாக, தேர்தல் முடிவில் அவர்கள் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாத நிலை உருவாக்கப்பட்டது. இந்த நடைமுறை அமெரிக்காவில்கூட முயற்சிக்கப்பட்ட ஒன்று. அங்கு இதை “Gerrymandering” என்றழைப்பார்கள். இது கறுப்பினத்தவர்களை, லத்தீன் அமெரிக்கர்களை அதிகாரத்திலிருந்து விலக்கி வைக்கப் பயன்பட்டது. சொல்லப்போனால், தொகுதிகளை சீரமைக்கும் தன்னிச்சையான அதிகாரத்தை வழங்குவது மட்டுமே FPTP முறை மோசம் என்பதை நிறுவப் போதுமானதாகும்.

இவ்வளவு வெளிப்படையான சிக்கல்கள் இருந்தும் ஏன் இந்நாட்டுக்கு அடிப்படைகளை வகுத்தளித்த ”founding fathers” (இது அமெரிக்கச் சொல்லாடலிலிருந்து கடன்பெற்றதொரு வார்த்தை) இதைச் சிந்திக்க முடியவில்லை என்ற கேள்வி எழலாம். வேறு சிறந்த முறைமை ஏதும் இல்லையா என்றும் கேட்கலாம். இதற்கான பதில் சற்று சிக்கலானது. காங்கிரஸ் தனித்தொகுதி முறையை ஒழித்த பின்னணியில் அரசியல் நிர்ணய சபையில் நடைபெற்ற விவாதங்களில் இந்த முறையில் கருத்து வேறுபாடு இருந்திருக்கிறது. சில முஸ்லிம்கள் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவம் கோரி குரலெழுப்பியிருக்கிறார்கள். தனித்தொகுதியைப் பொறுத்தவரை, அதிலுள்ள ஒரு குறிப்பிடத்தக்க குறைபாடு, இந்துக்கள் முஸ்லிம்களுக்கோ, முஸ்லிம்கள் இந்துக்களுக்கோ வாக்களிக்க இயலாது. இந்த அம்சத்தைச் சுட்டிக்காட்டிய ஹஸ்ரத் மோஹானி, FPTPயைக் கொண்டு ஒரே ஒருங்கிணைந்த தேர்தலை நடத்துவது முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை ஒழிக்கும் என்று குறிப்பிட்டார். ஹஸ்ரத் மோஹானி FPTP முறையை மிகக் கடுமையாக எதிர்த்தவர்களுள் ஒருவர். அவர் மற்ற அவை உறுப்பினர்களுடன் சேர்ந்து விகிதாச்சாரப் பிரதிநிதித்துவத்துக்காக வாதிட்டார். ஏனெனில், அது ஒரு கட்சி பெற்றுள்ள வாக்குச் சதவீதத்துக்குத் தகுந்தார்போல் தொகுதிகளை வழங்குகிறது.

விகிதாச்சாரப் பிரதிநிதித்துவத்தில் முஸ்லிம்கள் இந்துக்களுக்கும், இந்துக்கள் முஸ்லிம்களுக்கும் வாக்களிக்க இயலும் அதேவேளை, சிறுபான்மையினரின் குரலை உதாசீனப்படுத்தவும் முடியாது. சொல்லப்போனால், இது கருத்தியல் ரீதியாக வாக்களிக்கவும் வழியமைத்துத் தருவதோடு, பெரும்பான்மைவாதத் தாக்குதலை நிறுத்தவும் அல்லது சொந்தச் சமுதாயத்துக்குள் இருக்கும் சாதி/வார்க்கம் சார்ந்த விவகாரங்களை எதிர்த்துப் போராடுவதற்கும் சிறுபான்மையினர் ஒருங்கிணைய உதவுகிறது. பெரும்பான்மை அச்சுறுத்தல் அரசியல் களங்களிலிருந்து மேலெழுந்தால் அதனை சக சிறுபான்மையருடன் ஒன்றிணைந்து எதிர்கொள்ள முடியும். ஏனெனில், வாக்குச் சதவீதத்துக்குத் தக்க எண்ணிக்கையில் தொகுதிகள் கிடைத்துவிடும். நியூசிலாந்து, துருக்கி, இலங்கை முதலானவை இந்நடைமுறையைக் கடைப்பிடித்து வருகின்றன. ஒரு கட்சிக்கு 1%, 2% அல்லது 5% என ஒரு குறிப்பிட்ட வீதத்துக்கு மேல் வாக்குகள் விழுந்தால் அந்த வாக்குகளில் எதுவும் வீண் போவதில்லை. துருக்கி இந்த விழுக்காட்டை 10% என நிர்ணயித்திருக்கிறது.

விகிதாச்சாரப் பிரதிநிதித்துவத்திலுள்ள இரண்டாவது சாதகமான அம்சம் என்னவென்றால், யாரும் வாக்குகளைப் பிரிப்பவராகவோ, போட்டியிடுவதன் மூலம் மற்றவரை வீழ்த்துபவராகவோ இருக்க முடியாது. பெறும் வாக்குகளுக்குத் தக்க பிரதிநிதித்துவம் கிடைக்குமே அன்றி, எதிராளியின் வாக்குகளிலிருந்து யார் எத்தனை வாக்குகளைப் பிரிக்கிறார்கள் என்பதையெல்லாம் பொறுத்து தேர்தல் முடிவுகள் அமையாது. மூன்றாவது, சிறு கட்சிகள் சிறிய அளவிலிருந்து தம் கணக்கைத் தொடங்க முடியும்.

ஆனால், இந்தத் திட்டத்தை ஹஸ்ரத் மோஹானி முன்வைத்தபோது காங்கிரஸ்காரர்கள் கூச்சலிட்டனர். சிலர் இந்த முறைமை மிகவும் சிக்கலானது என்று வாதிட்டனர். உண்மையில், இந்தத் துணைக் கண்டத்தில் ஜனநாயகம் சற்று சிக்கல் தன்மையுடன்தான் இருக்க வேண்டியிருக்கிறது! இல்லையென்றால், பின்தங்கிய வகைப்பாட்டிலுள்ள சாதிகளும் சிறுபான்மையினரும்தான் அவதிக்குள்ளாக நேரிடும். தற்போதைய முறைமை அவர்களின் பிரதிநிதித்துவத்தை இல்லாமலாக்கியிருக்கிறது. அன்று காங்கிரஸ் அதிகாரத்தை தம்மிடம் குவித்துக்கொள்ள முயன்ற பின்னணியில், FPTP அதை அவர்களுக்குச் சாத்தியப்படுத்திக் கொடுத்தது. பிற குழுக்கள் அல்லது மாற்றுச் சித்தாந்தங்கள் முற்போக்கான அடித்தளத்தை உருவாக்குவதை விட்டும் அது தடுத்தது.

தலித் விவகாரத்திலும் FPTP ஒரு குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறது. தலித் ஆய்வாளர்களுக்கு இவ்விஷயம் மிக நன்றாகத் தெரியும். தனித்தொகுதிகளில் உயர் சாதிக் கட்சிகளின் பினாமி வேட்பாளர்களை நிறுத்தி, அவர்கள் அந்தத் தொகுதியைத் தம் வசம் வைத்துக்கொள்ளும் போக்கு நிலவுகிறது.

விகிதாச்சாரப் பிரதிநிதித்துவத்தில் இப்படியான சார்புநிலை இருக்காது. அதில் அச்சமின்றி சித்தாந்த அடிப்படையில் வாக்களிக்கலாம். உயர் சாதி வாக்காளர்களை எதிர்நிலையில் நிறுத்தாமலேயே அம்பேத்கரியத் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட முடியும். இத்தகைய அணுகுமுறை தேர்தல் இடஒதுக்கீட்டை தேவையற்றதாக மாற்றும் அல்லது குறைந்தபட்சம் குறிப்பிட்ட தொகுதிகளுக்குள்ளாக மட்டுப்படுவதிலிருந்து விடுவித்து, எஸ்சி/எஸ்டியினருக்கு போதிய சதவீதத்தையேனும் பெற்றுத்தரும். இந்த அணுகுமுறை சிறுபான்மையினருக்கும், இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களிலுள்ள சிறிய பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கும் உதவிகரமாக அமையும். மட்டுமின்றி, லோஹியாவின் பின்பற்றாளர்களான கர்பூரி தாக்கூர், லல்லு பிரசாத், நிதிஷ் குமார் போன்றோர் தலைமை தாங்குகிற பிரிவினருக்கும்கூட இது உதவியாக இருக்கும். தேர்தல்முறையில் அடிப்படை மாற்றமும் அதனடிப்படையில் பிரதிநிதிகள் தேர்வும் நடைபெறாதவரை பெரும்பான்மையானோர் சட்டமன்றத்திலோ நாடாளுமன்றத்திலோ பிரதிநிதித்துவப்படுத்தப்பட மாட்டார்கள். இந்த உரிமையை நாம் பெறுவதே உண்மையான ஜனநாயகத்தின் பக்கம் நம்மை ஒரு அடி நெருக்கமாக்கும். இதனால் மட்டும்கூட நாம் ஜனநாயகத்தை அடைந்துவிட்டதாக ஆகாது. நாம் செய்ய வேண்டியது:

  1. கூட்டாட்சிமுறை புரிந்துகொள்ளப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுவது;
  2. சட்ட அவையும் நிர்வாகமும் பிரிக்கப்படுவது.

இந்தத் தலைப்புகளெல்லாம் விரிவாக விவாதிக்கப்பட வேண்டியவை. உண்மையான மக்கள் பிரதிநிதிகள் அடங்கிய அமைப்பை உருவாக்குவதை நோக்கி நாம் செயல்படுவதே முதல்கட்டமாக நாம் செய்ய வேண்டியது. அப்போதுதான் தேர்வாகும் பிரதிநிதிகள் நம்முடைய எதிர்பார்ப்புகளையும் தேவைகளையும் பிரதிபலிப்போராக இருப்பார்கள்.

கடந்த எழுபதாண்டுகளாக இந்திய முஸ்லிம்கள் இந்தத் தேர்தல்முறையால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் அவர்கள் வகித்த பிரதிநிதித்துவம் தொடர்பான விவரங்கள் இதற்குச் சான்றாக உள்ளன. பாஜகவால் இன்று செய்ய முடிவதையே பல தசாப்தங்களாக காங்கிரஸ் செய்துவந்திருக்கிறது. இந்த அமைப்புமுறை எப்போதும் நியாயமாக இருந்ததில்லை. புதிய தேர்தல் கூட்டணிகள், புதிய தலைவர்கள், புதிய கட்சிகள் சிறுபான்மையினருக்கோ, சிறிய பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கோ உதவப் போவதில்லை. நமக்கு அவசரத் தேவையாக இருப்பது என்னவென்றால், தேர்தலை தற்போது இருப்பது போலல்லாமல் நடத்துவதற்கான அமைப்பியல் சார்ந்த, அடித்தளம் சார்ந்த மாற்றம்தான். இந்த அமைப்புமுறையை வெளிப்படைத்தன்மை கொண்டதாகவும், பிரதிநிதித்துவ ஜனநாயகமாகவும் மாற்றியமைக்க வேண்டியது நமது கடமையும், காலத்தின் கட்டாயமும் ஆகும்.

ஒரு கட்சி அல்லது இரு கட்சி ஆட்சிமுறையை நோக்கிய முன்னெடுப்பே இங்கு நெடுங்காலமாக நடைபெற்று வருகிறது. சிலர் இரு தேசியக் கட்சிகளான பாஜக, காங்கிரஸ் ஆகியவற்றைக் கொண்ட இரு கட்சி ஆட்சிமுறையைக்கூட ஆதரிக்கிறார்கள். இந்தத் திசையை நோக்கித்தான் தேசிய ஊடகங்களும் தொடர்ச்சியாக கருத்துருவாக்கத்தைச் செய்திருக்கின்றன. சுருங்கக்கூறின், அமெரிக்கக் கூட்டாட்சிமுறையின் எந்த நல்லம்சத்தையும் கருத்தில் கொள்ளாமல், அங்குள்ள அமைப்புமுறையின் குறைபாட்டில் ஒன்றான இரு கட்சி ஆட்சிமுறையை அப்படியே தழுவிக்கொள்ள இங்கு முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இந்தியா போன்ற தென் ஆசிய நாடு வியத்தகு வகையில் பன்முகத்தன்மை மிக்கது. இங்கு இரு கட்சிமுறை என்பதே ஜனநாயக விரோதமானது. ஆனால், இங்கு மிகக் குறைவான கட்சிகள் மட்டுமே தம் இருப்பைத் தக்க வைத்துக்கொள்ள முடியும் என்ற சூழல் நிலவி வருகிறது.

வெறுமனே ஜனநாயகம், மதச்சார்பின்மை எனக் கூக்குரல் எழுப்பிக்கொண்டிருப்பது எளிது. செய்ய வேண்டியது என்னவென்றால், சிறுபான்மையினரை ஆதரவற்றவர்களாக ஆக்கிய அமைப்பியல் குறைபாடுகளை இனங்கண்டு கலைய முன்வருவதுதான். இந்தப் பின்னணியில், நடப்பு FPTP முறையைக் கைவிட்டு விகிதாச்சாரப் பிரதிநிதித்துவத்தை நடைமுறைப்படுத்துவதே மிக முக்கியமான, அவசரமான அமைப்புசார் மாற்றமாகும். எல்லா “மதச்சார்பற்ற” கட்சிகளும் சுய ஆய்வு செய்துகொள்ள வேண்டியிருக்கிறது. மதச்சார்பின்மை என்ற முழக்கத்தைத் தாண்டி அது இப்படியான மாற்றங்கள் குறித்து சிந்திப்பதே தற்போதைய தேவையாக உள்ளது.

(மக்தூப் மீடியா தளத்தில் ஷர்ஜீல் இமாம் எழுதிய Demand ‘Proportional Representation’ in elections என்ற கட்டுரையைத் தழுவி எழுதப்பட்டது)

Related posts

Leave a Comment