கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

உன் பெயரின் ரோஜாக்கள்

Loading

ரோஜாப் பூவுக்கு ஆங்கிலத்தில் Rose என்று பெயர்.

இறை தியானத்திற்கு, இறைவனை நினைவு கூர்ந்து ஓதுவதற்குப் பயன்படுத்தப்படும் மணிமாலைக்கு ஆங்கிலத்தில் Rosary என்று பெயர்.     

ரோஜாப் பூவுக்கும் ஜெப மாலைக்கும் என்ன தொடர்பு? இதற்கு ஆங்கிலம் விடை தருகிறதோ இல்லையோ, ஆங்கில மொழியே தோன்றியிராத காலத்தில் செம்மொழியாகிவிட்ட அறபியில் விளக்கம் கிடைக்கிறது.

அறபு மொழியில் உள்ள சொற்களுக்கெல்லாம் மூன்றெழுத்து வேர்ச் சொற்கள் உள்ளன. அப்படியான ஒரு வேர் “வ-ர-த” (و- ر- د) என்பது.

இந்த வேரிலிருந்து கிளைக்கும் சொற்களுள் இரண்டு சொற்கள்: வர்தா (ரோஜா), வர்திய்யா (ஜெப மாலை).

இப்படிச் சொல்லிவிட்டால் போதுமா? ரோஜாவுக்கும் ஜெப மாலைக்கும் என்ன தொடர்பு என்னும் வினா இன்னமும் நிற்கிறதே? பொறுங்கள். இதற்கான விடையை அடைய நாம் இந்த வேரிலிருந்து கிளைக்கும் வேறு சில சொற்களையும்  பார்க்க வேண்டும்.

வ-ர-த என்னும் வேர்ச் சொல்லுக்கு ’வருதல்’, ‘வந்து சேர்தல்’, ‘தோன்றுதல்’, ‘காட்சியாதல்’, ‘காணப்படுதல்’ ஆகிய அர்த்தங்கள் உள்ளன.

ஸூஃபிகள் அன்றாடம் வழமையாக ஓதும் ஆன்மிக வாசகங்களுக்கு “விர்த்” என்று பெயர் (இதன் பன்மை ’அவ்ராத்’.)

”விர்த்” என்னும் அறபிச் சொல் நீர்த்துறையைக் குறிக்கும். விலங்குகள் நீர் அருந்துவதற்காக வந்து சேருமிடத்துக்கு விர்த் என்று பெயர்.

வ-ர-த என்னும் வேரிலிருந்து கிளைக்கும் இன்னொரு சொல் ‘மவ்ரித்’ (பன்மை: மவாரித்). இச்சொல்லும் இலக்கிடம், சேருமிடம், வந்தடையும் இடம் ஆகியவற்றைக் குறிக்கும். மேலும், நீர் இருக்கும் இடத்தை வந்தடைதலை இது சிறப்பாகக் குறிக்கிறது. நீர்த்துறை, கேணி, கிணறு, நீரூற்று, நீரோடை ஆகியவற்றையும் மவ்ரித் என்று கூறுவர். ’மூலம்’ (தோன்றுமிடம்) என்பதையும் இச்சொல் குறிக்கும். (இதன் மாற்று வடிவமான மவ்ரிதா என்னும் சொல்லும் தண்ணீர் கிடைக்குமிடத்தைக் குறிக்கும்.)

இறைத்தூதர் மூசா நபி அவர்கள் ஃபிர்’அவ்னின் நகரத்தை விட்டும் தப்பித்து மத்யன் என்னும் ஊரை நோக்கிச் செல்கிறார்கள். அவர்கள் அந்த ஊருக்கு வந்துசேர்வதைக் கூறுமிடத்தில் குர்ஆன் இப்படிச் சொல்கிறது: “வ லம்மா வரத மா’அ மத்யன” (28:23). “அவர் மத்யனின் தண்ணீரிடம் வந்துசேர்ந்தபோது…” என்பது இதன் பொருள். இவ்வசனப் பகுதியில் உள்ள மா’உ என்னும் சொல்லின் நேர்ப் பொருள் தண்ணீர் என்பதே. எனினும் இவ்விடத்தில் அது ஆகுபெயராக உள்ளது. அது மத்யன் நகரத்தில் இருந்த நீர்த்துறையைக் குறிப்பதாக முஹம்மது ஜான் அவர்களும், கிணற்றைக் குறிப்பதாக அ.கா.அப்துல் ஹமீது பாகவி அவர்களும் மொழிபெயர்த்துள்ளனர்.

அறபு நாடு ஒரு பாலைவன நிலப்பரப்பு என்பதைக் கவனிக்கவும். அதன் சூழலில் நீர் என்பது மிகவும் மதிப்புள்ள ஒன்று. நீர் வைத்திருப்பவன் மிகப் பெரிய உடைமையை வைத்திருக்கிறான். நீரை அடைந்தவன் வாழ்க்கையை அடைகிறான். பாலைவனத்தில் அலையும் உயிரினங்கள் நீர் இருக்கும் இடத்திற்கு வந்துசேர்வது அவற்றின் இலக்கை அடைவதாகிறது.

பாலைவனத்தில் நீரை அடைவது பெரும் செல்வத்தை அடைவதாகும். எனவே, வ-ர-த என்னும் வேரில் இருந்து கிளைக்கும் இன்னொரு சொல்லான “தவ்ரீத்” என்பது உடைமை என்று பொருட்படுகிறது, “ஈராத்” என்னும் சொல் லாபம் என்னும் அர்த்தம் தருகிறது.

’வ-ர-த’ என்னும் வேர்ச் சொல்லுக்கு இன்னொரு பொருள் “மலர்தல்” என்பதாகும். இது குறிப்பாகச் சிவப்புப் பூக்களைக் குறிக்கும். வெட்கத்தால் கன்னங்கள் சிவப்பதையும் அறபு மொழி இச்சொல்லால் சுட்டுகிறது.

’வர்த்’ (பன்மை: வுரூத்) என்னும் சொல்லுக்குப் பூக்கள் என்று பொருள். இச்சொல்லின் மாற்று வடிவமான ’வர்தா’ என்னும் சொல் ரோஜாப் பூவைக் குறிக்கிறது.

ஸூஃபிகள் வழமையாக ஓதும் ஆன்மிக வாசகங்களுக்கு விர்த் என்று பெயர் என்று கண்டோம். ஆன்மிகத் தேடல் என்பது உள்ளுக்குள் நிகழும் தேடலாகும். இது பாலைவனத்தில் மண்ணைத் தோண்டி, ‘தொட்டணைத்தூறும் மணற்கேணி’யை உண்டாக்கி நீரை அடைவதைப் போன்றது. சாதகன் ஆன்ம தாகம் அடைந்திருக்கிறான். அவன் இறையுணர்வு என்னும் நீரினைத் தேடுகிறான். எனவே தியானத்தில் தன்னுள் நுழைகிறான்.

ஏன் அவன் தன்னுள் மூழ்கித் தேடுகிறான்?

இந்தக் கேள்விக்கு ‘வ-ர-த’ என்னும் வேரிலிருந்து கிளைக்கும் இன்னொரு சொல் விடை தருகிறது: “வரீத்”. இச்சொல் பிடரி நரம்பைக் குறிக்கிறது. இறைவன் மனிதனுக்கு அவனின் பிடரி நரம்பை விட நெருக்கமாக இருக்கிறான் என்கிறது குர்ஆன்: “நாம் அவனிடம் பிடரி நரம்பினும் மிக நெருங்கியுள்ளோம்” (வ நஹ்னு அக்ரபு இலைஹி மின் ஹப்லில் வரீத் – 50:16)

இறைவனை தியானித்து ஓதுபவன் தன்னுள் மூழ்கும்போது இறைவனின் ஒளிச்சுடர்களை அடைகிறான். அதனால், ’வாடிய பயிர்’ நீர் பாய்வதால் செழிப்படைவதுபோல் அவனின் உள்ளம் உயிரூட்டம் அடைகிறது. செடியில் பூக்கள் மலர்வதுபோல் அவனில் ஞானச் சிந்தனைகள் வெளிப்படுகின்றன. அவையே ஆன்மிக ரோஜாக்கள். ஸூஃபி கவிதைகளில் ரோஜா என்னும் குறியீடு இதையே உணர்த்துகிறது.

இறைவனை அடைதலின் பரவசங்களை “வாரித்” என்னும் சொல்லால் ஸூஃபிகள் சுட்டுகின்றனர். இதுவும் வ-ர-த என்னும் வேரிலிருந்து கிளைக்கும் சொல்லே. இதற்கு நேரடிப் பொருள் வருமானம், இறக்குமதிகள் என்பதாகும்.

ஸூஃபி ஞானி தன் கையில் ஜெப மாலையை (வர்திய்யா) ஏந்தியபடி ஒவ்வொரு மணியாக நகர்த்தி நகர்த்தி இறைவனின் திருநாமங்களையும் ஆன்மிக வாசகங்களையும் (அவ்ராது) ஓதுகிறார். அவர் ஓத ஓத அவருள் ஞானப் பரவசம் என்னும் ரோஜா (வர்தா)க்கள் பூக்கின்றன.

இறைவனின் தரப்பிலிருந்து அருளப்படும் இந்த ஞானக் கொடைகளுக்கு வஸீலா என்னும் ஊடகமாக இருப்பது “ஹக்கீக்கத்தே முஹம்மத்” என்னும் நபி (ஸல்) அவர்களின் எதார்த்தம் ஆகும். அண்ணலாரின் சுயம் (தாத்) ”மழ்ஹரே அதம்மு” (முழுமையான வெளிப்பாட்டுத் தலம்) என்று ஸூஃபிகளால் போற்றப்படுகிறது. இறைஞானப் பரவசங்கள் என்னும் அத்தனை ரோஜாக்களும் ஒற்றை ரோஜாவானால் அதுவே நபியின் எதார்த்தம். இந்தக் கோணத்தில் கேட்கும்போது,

”பாலைவனத்தில் ஒரு ரோஜா மலர்ந்தது – இந்தப்
பாருலகெங்கும் தீன் மணம் வீசுது”

என்று நாகூர் ஹனீஃபாவின் குரலில் ஒலிக்கும் பாடல் வரிகள் வரலாற்றுக் குறிப்பாக மட்டுமன்றி ஆன்மிக வருணிப்பாகவும் அமைகிறது.

மவ்லானா ரூமி, ஹகீம் சனாயி, முல்லா ஜாமி, அத்தார் போன்ற மாபெரும் ஸூஃபி மகான்கள் ரோஜா என்று பாடும்போது அந்தக் குறியீடு இறை தியானத்தின் பரவசங்களையும் ஞானங்களையுமே சுட்டுகிறது. இந்த அகப்பார்வை வந்துவிட்டால் ரோஜா என்று யார் சொன்னாலும் இந்த ஆன்மிக அர்த்தமே நம் சிந்தையில் தோன்றும். அப்போது,

”உன் பேர் மெல்ல நான் சொன்னதும்
என் வீட்டு ரோஜாக்கள் பூக்கின்றன”

என்று கவிஞர் வாலி எழுதிய திரைப்பாடல் வரிகள் கூட ஸூஃபி கவிதையாகவே காதில் ஒலிக்கிறது.

Related posts

Leave a Comment