இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் அரசும் அரச எதிர்ப்பும்
[இமாம் முஹம்மது அல்ஆஸியின் ஆங்கில உரையை மொழிபெயர்த்து, தலைப்புகளைக் கொடுத்துள்ளோம். உரையாற்றிய நாள்: 13-01-2006, இடம்: வாஷிங்டன் டி.சி. YouTube Link: The politics of state and Islamic opposition; தமிழில்: ஜுந்துப்]
அல்லாஹ் நமக்குப் பல செய்திகளை வழங்கியுள்ளான். இறைத்தூதருடைய (ஸல்) நடத்தைகளும் நம்மிடையே உயிர் வாழ்ந்துகொண்டிருக்கின்றன. இவையனைத்தும் நூற்றாண்டுகாலத் தவறுகள் மற்றும் திரிபுகளின் பாதிப்புகளுக்கு ஆட்பட்டிருக்க வேண்டும் என்பதற்காக வழங்கப்படவில்லை. அல்லாஹ்வோடும் அவனுடைய தூதரோடும் நாம் தொடர்புகொள்ளும்போது, பிற விஷயங்கள் மற்றும் சக்திகளின் தலையீடு இருக்கும்பட்சத்தில் அவற்றின் தாக்கம் நம்மீது அதிகம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அவர்களோடு கொண்டுள்ள உறவில் நாம் உண்மையாக இருந்தால், இவ்வாறு ஏற்படும் தலையீடு அவ்வுறவை வலுப்படுத்துமே ஒழிய அதை சமரசம் செய்வதாகவோ, பேரம் பேசி சரி செய்வதாகவோ, தவறான காரணங்களையும் சாக்குப்போக்குகளையும் சொல்லி அதைத் திணறடிப்பதாகவோ இருக்காது.
நம் மனங்களிலும் முஸ்லிம்களாகிய நம் பொதுப் புத்தியிலும் பல அடுக்குகளாகப் படிந்துவிட்ட மரபுகளையும் நியாயம் கற்பிக்கும் வாதங்களையும் தோலுரிக்கும் நம் தொடர் முயற்சியின் முன்னுரையாக இதைச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். கடந்த வாரங்களில் செய்ததுபோல இந்த வாரமும் நாம் பெற்றுள்ள தகவல்களைச் சுத்திகரிக்கவும் கடந்த காலங்களிலும் கடந்த காலத் தலைமுறைகளிலும் கலந்துவிட்ட மாசினை அகற்றவும் நாம் முயற்சி செய்வோம்.
அல்லாஹ்வின் மேற்பார்வையில் இந்த முறை நம் வரலாற்றின் அங்கமாகிவிட்ட அரசியல் பிறழ்வால் முன்வைக்கப்பட்ட ஒரு சூழ்ச்சியின் மீது கவனம் செலுத்துவோம். ஆரம்பகால வரலாற்றில் கலீஃபாக்களின் நிர்வாகத்துக்குப் பிறகு முஸ்லிம்கள் தவறான ஆட்சி முறைக்கு உள்ளாயினர் என்று நாம் கூறினோம். புலப்பெயர்வு (ஹிஜ்றத்) நிகழ்ந்து நாற்பத்தி ஒன்றாவது ஆண்டு போலியாக ‘கருத்தொற்றுமையின் ஆண்டு’ (ஆம் அல் ஜமாஅத்) என்று குறிப்பிடப்படுகிறது. இது நம் வரலாற்றில் படிந்துவிட்ட மற்றொரு கறை ஆகும். அந்த ஆண்டில்தான் அதிகாரத்துக்கு வருவதற்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் பெறவேண்டும் என்ற முன்மாதிரி தகர்க்கப்பட்டது.
முடிவெடுப்பவர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையே ஒரு சமூக ஒப்பந்தத்தை ஏற்படுத்தக் கூடிய பொதுமக்களின் கருத்து இல்லாமல் போனது. முஸ்லிம் பொதுமக்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் முடிவெடுப்பவர்கள் தங்கள் அதிகாரத்தை அவர்கள் மீது திணித்தனர். சம்பிரதாயத்துக்காக சிலர் அரசருக்குப் பற்றுறுதி (பைஅத்) அளிக்கும் நிகழ்வு வெறும் சடங்காகவே நீடித்தது. ஆயிரத்து முன்னூறு ஆண்டுகளாகத் தொடர்ந்து வரும் இந்த நடைமுறை இன்றளவும் நீடிக்கிறது. அரசர் தன்னைத்தானே பதவியில் அமர்த்திக்கொண்ட பிறகு சம்பிரதாயத்துக்காக சிலர் அவருக்கு தம் பற்றுறுதியை வழங்குவதைப் பார்க்கிறோம். முஸ்லிம் பொதுமக்களின் கருத்தைப் பொறுத்தவரை, இந்த நடைமுறையிலிருந்து அது விலக்கியே வைக்கப்படுகிறது.
அஹ்லுஸ் சுன்னத் வல்ஜமாஅத்
‘கருத்தொற்றுமையின் ஆண்டு’ என்று அதிகாரபூர்வமாக பெயரிடப்பட்ட இந்த ஆண்டில்தான் அரசாங்கங்களைத் தேர்ந்தெடுப்பது-அகற்றுவது, கலீஃபாக்களுக்கும் இமாம்களுக்கும் பொறுப்பு வழங்குவது போன்ற செயல்பாடுகளிலிருந்து முஸ்லிம்கள் தொடர்பறுந்து போயினர். இதற்கு நேர்மாறாக மன்னர்களும் முடியரசர்களும் தங்கள் சொந்த மக்களிடமிருந்து இப்பொறுப்பை களவாடிக் கொண்டனர். இது நடந்தபோது முஸ்லிம்கள்மீது தன்னை பலவந்தமாகத் திணித்துக் கொண்ட மன்னர் ஒரு கூர்மதி கொண்ட திட்டத்தைக் கொண்டிருந்தார். இப்போது தனக்குக் கிடைத்துவிட்ட வல்லமை, ஆட்சி, அரசாங்கம் மற்றும் அதிகாரத்தின் உதவியோடு அத்திட்டத்தைச் செயல்படுத்தி முஸ்லிம்களை சூழ்ச்சியில் ஆழ்த்தினார். அது இன்றளவும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இப்போது மன்னராகிவிட்ட முஆவியா தன் கட்சிதான் ‘அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாத்’ —சுன்னத் மற்றும் முஸ்லிம் பொதுக் கருத்தைச் சார்ந்த மக்கள்— என்றார். எனவே அவருக்கு எதிராக இருப்பவர்கள் அனைவரும் தாமாகவே ‘அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாத்துக்கு’ எதிரானவர்களாக ஆகிவிடுகின்றனர்.
அரசு இயந்திரங்களின் உதவியின்றி இது முஸ்லிம்களுடைய வாழ்வின் அங்கமாக மாறியிருப்பது சாத்தியமில்லை. சாதாரணமாக யாரும் வந்து நாங்கள்தான் முஸ்லிம் பொதுமக்களை, முஸ்லிம் பொதுக்கருத்தை, முஸ்லிம் வெகுஜனத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறோம் என்று பொதுமைப்படுத்திச் சொல்லிவிட முடியாது. அப்படிச் செய்வதற்கு அவர்களிடம் அதிகாரம், பலம் மற்றும் அரசாங்கத் துறைகளின் உதவி இருந்திருக்க வேண்டும். இதைக் கொண்டு அவர்கள் தங்கள் கருத்தை சாமானிய முஸ்லிம்களுக்கும் ஏற்புடைய அடிப்படை உண்மைபோல மாற்றியது மட்டுமில்லாமல் இத்தனை ஆண்டுகாலம் அப்படியே வாழவும் செய்துவிட்டனர்.
இப்போது உமையாக்களின் இந்தப் பரப்புரையையும் ‘துலக்கா’க்களின் கருத்தாதரவு தேடும் முயற்சிகளையும் (lobby) அருகில் சென்று பார்ப்போம். இங்கு ‘துலக்கா’ என்போர் மக்கா வெற்றிக்குப் பிறகு இறைத்தூதரால் மன்னித்து விடப்பட்டவர்களைக் குறிக்கும். இப்போது அவர்கள்தான் முஸ்லிம்களின் ஆட்சியாளர்களாக மாறிவிட்டிருந்தனர். மக்காவாசிகளோ (முஹாஜிர்கள்), மதீனாவாசிகளோ (அன்சார்கள்), முஹம்மதின் குடும்பத்தார்களோ (ஆலு முஹம்மது) ஆட்சியாளர்களாக அல்லாமல் இந்தத் ‘துலக்கா’க்கள்தான் இப்போது ஆட்சியாளர்களாக இருந்தனர்.
சுன்னத்
இங்கு பயன்படுத்தப்பட்டுள்ள ‘சுன்னத்’ என்ற பதத்தை விரிவாகப் பார்ப்பதற்காக நாம் முதலில் அல்லாஹ்வின் வேதத்தில் இதனைப் பொருத்திப் பார்ப்போம். இச்சொல்லை இஸ்லாமியப் பார்வையில் வழிதவறிவிட்ட அரசாங்கங்கள் அன்றிலிருந்தே பயன்படுத்தியுள்ளன. குர்ஆனில் இடம்பெற்றிருக்கும் ‘சுன்னத்’ என்ற சொல் முஆவியா உள்ளிட்ட உமையாக்கள் அவர்களுக்குப் பிறகு வந்த அப்பாஸியாக்கள், ஃபாத்திமியாக்கள் மற்றும் பிற ஆட்சியாளர்கள் செய்த பரப்புரையோடு பொருந்தவில்லை.
இந்த ஆட்சியாளர்களைத்தான் சிலர் —இஸ்லாமிய அரசாங்கத்தை மீள் உருவாக்கும் அவசரத்தில்— ‘முஸ்லிம்கள் ஏறக்குறைய நூறு ஆண்டுகளுக்கு முன்னர்கூட கிலாஃபத் ஆட்சியைப் பெற்றிருந்தனர்’ என்று இன்றும்கூட கூறுகின்றனர். இத்தகைய பார்வை கிலாஃபத் காலத்திலிருந்து ஏறக்குறைய நூறு ஆண்டுகளுக்கு முன்னர் இல்லாமல் போன மத்திய இஸ்லாமிய அதிகார காலம்வரை இருந்த ஆட்சியை நுணுகி ஆராயும் பார்வை ஆகாது. ‘சுன்னத்’ என்று அல்லாஹ் குர்ஆனில் குறிப்பிட்டுள்ள சில வசனங்களைப் பார்ப்போம். அல்லாஹ் கூறுகிறான்:
فَلَنْ تَجِدَ لِسُنَّتِ اللّٰهِ تَبْدِيْلً
…அல்லாஹ்வின் சமூக விதிகளுக்குப் பதிலாக மாற்று வழி எதையும் நீர் காணமாட்டீர் (திருக்குர்ஆன் – 35:43)
அநேகமாக இந்த அளவுக்குத்தான் இந்த வசனத்தின் அர்த்தத்தை நம்மால் சொல்ல முடியும். இங்கு ‘சுன்னத்’ என்பது அல்லாஹ்வின் சமூக விதிகளைக் குறிக்கிறது. ஆனால் கிலாஃபத்திலிருந்து விலகிச் சென்ற முதல் அரசியல் நிர்வாகம், ‘அஹ்லுஸ் சுன்னத் வல்ஜமாஅத்’ என்ற பதத்தைப் பயன்படுத்திய விதம் அல்லாஹ்வின் சமூக விதிகளைக் குறிப்பதாக இல்லை. ‘அல்லாஹ்வின் சமூக விதிகள் மற்றும் சட்டங்களைச் சார்ந்த மக்கள்’ என்று நினைத்து யாரும் ‘அஹ்லுஸ் சுன்னத் வல்ஜமாஅத்’ என்ற சொற்றொடரைப் புரிந்துகொள்வதில்லை. அவ்வசனம் கூறுவதாவது,
وَلَن تَجِدَ لِسُنَّتِ اللَّهِ تَحْوِيلًا
…நம்முடைய சமூக விதிகளின் திசையில் எந்த மாற்றத்தையும் நீர் காண மாட்டீர். (திருக்குர்ஆன் – 35:43)
முஸ்லிம் உள்ளங்கள் அனைத்தும் இந்த வசனத்தை ‘சமூகத்தில் நிலவும் அல்லாஹ்வின் ஒழுங்குமுறைச் சட்டங்களைக் —சமூகங்களின் எழுச்சி-வீழ்ச்சியை— குறிப்பதாகவே புரிந்துகொள்ளும். ஆனால் ‘சுன்னத்’ என்ற சொல்லுக்கான இந்தக் குர்ஆனிய வரைவிலக்கணத்தை, விளக்கத்தை உமையாப் பரப்புரை ஏற்றுக் கொள்வதுமில்லை; அனுமதிப்பதுமில்லை.
قَدْ خَلَتْ مِن قَبْلِكُمْ سُنَنٌ
அல்லாஹ்வின் சமூக விதிகள் உமக்கு முன்னரே செயல்பட்டுள்ளன… (திருக்குர்ஆன் – 3:137)
‘சுனன்’ என்பது ‘சுன்னத்’ என்பதன் பன்மை ஆகும். “அல்லாஹ்வின் சமூக விதிகள் உமக்கு முன்னரே செயல்பட்டுள்ளன”, என்று அல்லாஹ் கூறுகிறான். மனித வாழ்வில் அல்லாஹ்வின் சமூக விதிகள் செயல்பட்ட நிகழ்வுகள்பற்றி ஏராளமான வரலாறுகள் உள்ளன. மீண்டும் ‘சுன்னத்’ என்ற சொல்லுக்கு குர்ஆனில் காணப்படும் அர்த்தம், ‘அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமா அத்துக்கு’ உமையாக்கள் செய்யும் பரப்புரையை உறுதிசெய்வதாகவோ விளக்கமளிப்பதாகவோ இல்லை.
அடுத்து ஹதீஸ்களைப் பார்ப்போம். ஸஹீஹ் முஸ்லிமில் அசல் (ஸஹீஹ்) தரத்தைப் பெற்ற ஒரு ஹதீஸ் இவ்வாறு கூறுகிறது: “இஸ்லாத்துக்குள் யார் ஒரு நன்மையான சமூக வழக்கத்தைத் தொடங்கிவைப்பாரோ அவர் அதற்கான வெகுமதியைப் பெறுவார். யார் தவறான, எதிர்மறையான சமூக வழக்கத்தைத் தொடங்கிவைப்பாரோ அவர் அதற்கான மோசமான விளைவுகளை எதிர்கொள்வார்.”
இந்த ஹதீஸில் ‘சுன்னத்’ என்பது சமூக வழக்கத்தைக் குறிக்கிறது. இங்கு இச்சொல்லுக்கு நாட்டின் உயர் அதிகாரத்தில் இருக்கும் அரசியல் நெறிபிறழ்ந்தவர்கள் கூறும் அர்த்தத்தை நாம் காண முடியவில்லை. ஆக ‘சுன்னத்’ என்ற சொல் குர்ஆனிலும் சரி இறைத்தூதரின் கூற்றுகளிலும் சரி, கிலாஃபத் முறையிலிருந்து உடைந்து சென்ற பரப்புரையோடு ஒத்துப் போகவில்லை என்று பார்க்கிறோம். இன்னும் சான்றுகள் வேண்டுமெனில் நம் இஸ்லாமிய வரலாற்றை பார்ப்போம்.
‘அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத்’தும் நான்கு இமாம்களும்
இந்த இஸ்லாமிய வரலாற்றில் இஸ்லாமிய நெறியிலிருந்து வழிபிறழ்ந்த அரசாங்கங்கள் செல்வாக்கு செலுத்தத் தொடங்கிய பிறகு ‘அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத்தை’ அறிவுத் தளத்தில் பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள் யார்? ‘அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத்தின் பிரதிநிதிகள் யார்?’ என்று யாராவது கேட்டால், நம் மனம் சட்டென அபூ ஹனீஃபா, அஷ்ஷாஃபியீ, அல்மாலிக் மற்றும் இப்னு ஹம்பல் ஆகியோரின் பக்கம் திரும்புகிறது.
அல்லாஹ் மற்றும் அவனுடைய தூதரின் தாக்கத்துக்குப் பதிலாக அடுத்தடுத்து வந்த வழிபிறழ்ந்த அரசாங்கங்களின் தாக்கத்துக்கு உள்ளான நாம் ‘அஹ்லுஸ் சுன்னத் வல்ஜமாஅத்தை’ இந்த நால்வரோடு அடையாளப்படுத்துகிறோம். ஆனால் இந்த நான்கு இஸ்லாமிய அறிஞர்களைப் பொறுத்தவரை அரசாங்கங்கள் பயன்படுத்தும் சொற்களான ‘அஹ்லுஸ் சுன்னத் வல்ஜமாஅத்’ என்பது அவர்களுக்குத் தொடர்பு இல்லாதது எனும்போது நாம் மீண்டும் ஒரு வரலாற்று நெருக்கடியைச் சந்திக்கிறோம். ஏனெனில் இவர்களின் அறிவுசார் படைப்புகளை ‘அஹ்லுஸ் சுன்னத் வல்ஜமாஅத்’ எனச் சொல்லப்படுவதோடு தொடர்புபடுத்தும் ஒரேயொரு மேற்கோளைக்கூட இவர்கள் எவரிடமிருந்தும் நம்மால் பார்க்க முடியவில்லை.
அவர்கள் சிந்தனைப் பள்ளிகளைக் கொண்டிருந்தனர். யார் யார் எந்தெந்தச் சிந்தனைப் பள்ளியோடு உடன்பட்டார்களோ அவர்கள் அந்தந்த ஆளுமையோடு அடையாளம் காணப்பட்டனர். ஆக ஒருவர் ஹனஃபீ என்றோ ஷாஃபியீ என்றோ மாலிகீ என்றோ ஹம்பலீ என்றோ அறியப்பட்டார். அன்று உமையா மற்றும் அப்பாஸியா அரசவம்சத்தின் கீழ் அவர்கள் வாழ்ந்துகொண்டிருந்தபோது ஒருபக்கம் அல்லாஹ், இறைத்தூதர், குர்ஆன் மற்றும் இறைத்தூதரின் கூற்றுகளிலிருந்து பெறப்பட்ட சமூக நீதி, அரசியல் முறைமை ஆகியவற்றோடு அடையாளம் காணப்படுவதற்கும் மறுபக்கம் அதிகாரத்தை அபகரித்த ஆட்சியாளர்களோடு அடையாளம் காணப்படுவதற்கும் இடையே வேறுபாடு இருந்தது. இந்த வேறுபாட்டை முஸ்லிம்கள் கவனமாகக் கருத்தில் கொள்வதை அரசாங்கங்கள் விரும்பவில்லை. அரசியல் வசதிக்காக அரசாங்கங்கள் பெயரிட்ட ‘அஹ்லுஸ் சுன்னத் வல்ஜமாஅத்’ என்பதற்கும் பிரபலமான சட்டவியலாளர்களின் அறிவுசார் படைப்புகளுக்கும் இடையே இருந்த வேறுபாட்டை அவை மழுங்கடிக்க விரும்பின.
அபூ ஹனீஃபா, அஷ்ஷாஃபியீ மற்றும் ஓரளவுக்கு அல்மாலிக் மற்றும் இப்னு ஹம்பலின் வாழ்க்கையைப் பார்த்தால், அவர்கள் அனைவரும் நிறுவப்பட்ட அரசியல் அமைப்புக்கு எதிராக இருந்தனர் என்று பார்க்க முடிகிறது. அவர்கள் தம் காலத்து உமையா மற்றும் அப்பாஸியா ஆட்சிகளுக்கு எதிராக இருந்தனர். இப்றாஹீம், நஃப்ஸுஸ் ஸகிய்யாவின் அரசியல் எதிர்ப்புக்கு அபூ ஹனீஃபா பொருளாதார, தார்மீக ஆதரவளித்தார். (முஹம்மது/நஃப்ஸுஸ் ஸகிய்யா, இப்றாஹீம் இவர்கள் இருவரும் இமாம் ஹசனின் பேரர்கள் ஆவர். அப்பாஸி மன்னர் அல்மன்ஸூருக்கு எதிராகக் கிளர்ச்சிசெய்து அரசுப் படைகளால் கொல்லப்பட்டனர்) அத்தகைய மற்றொரு அரசாங்கம் அஷ்ஷாஃபியீக்கு மரணதண்டனை விதித்து கிட்டத்தட்ட கொலைசெய்ய இருந்தது. கடைசி நேரத்தில் நண்பர் ஒருவர் அளித்த நற்சான்றின் பேரில் அவர் விடுவிக்கப்பட்டார்.
அபூ ஹனீஃபா, அஷ்ஷாஃபியீ அளவுக்கு அல்மாலிக்கும் இப்னு ஹம்பலும் முனைப்புடன் எதிர்ப்பியக்கத்தில் ஈடுபடவில்லை என்றாலும் அவர்களும் தம் கால அரசாங்கங்களுக்கு எதிரான எதிர்ப்பியக்கத்தில் ஈடுபாட்டோடு இருந்தனர். அதனால் சிறையில் அடைக்கப்பட்டு சித்தரவதைக்குள்ளாயினர். அரசாங்க ஆதரவில் உருவான விரிந்த பொருள் கொண்ட ‘அஹ்லுஸ் சுன்னத் வல்ஜமாஅத்’ என்பதில் அவர்கள் சேர்க்கப்படவில்லை. இந்த அரசாங்கங்களும் முடியாட்சிகளும் எந்த அர்த்தத்தில் நாம் இச்சொல்லைப் புரிந்துகொள்ள வேண்டும் என்று விரும்புகின்றனவோ அந்த அர்த்தத்தில் இச்சொல் குர்ஆனிலும் இல்லை; இறைத்தூதரின் உறுதிப்படுத்தப்பட்ட வழிமுறையிலும் (சுன்னத்) இல்லை.
ஷீஆக்கள் என்று தங்களை அழைத்துக்கொள்பவர்களுக்கும் இது பொருந்தும். இன்று ‘அஹ்லுத் தஷய்யு’ என்று தங்களைக் கருதிக்கொள்பவர்கள் இச்சொல்லுக்குக் கொடுக்கும் விளக்கத்தை குர்ஆன் கொடுப்பதில்லை. ஒருபக்கம் அரசுகளுக்காகச் செயல்படுவது, மறுபக்கம் அரசுகளுக்கு எதிர்வினை ஆற்றுவது என இரு தளங்களிலும் இந்த முரண்பாடு ஊக்குவிக்கப்படுகிறது.
ஒற்றைச் சாயம் ஏன்?
அடுத்ததாக, ‘அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத்’ என்று இந்த அரசாங்கங்கள் கூறும் அமைப்புக்கு ஒற்றைச் சாயம் பூசும் முயற்சியையும் நாம் கேள்விக்குட்படுத்துகிறோம். இக்கருத்தை அப்படியே ஏற்றுக்கொள்ளாமல், “நாங்கள் இப்பரப்புரையை ஏற்கமாட்டோம்” என்று சொல்வதற்குத் தேவையான அறிவையும் தகவல்களையும் குர்ஆனிலிருந்தும் இறைத்தூதரிடமிருந்தும் நாம் பெற வேண்டும்.
அரசாங்கங்கள் சொல்லும் ‘அஹ்லுஸ் சுன்னத் வல்ஜமாஅத்தின்’ மக்களை அருகில் சென்று பார்த்தால், பரவலான முஸ்லிம்களைக் கொண்டுள்ள இதற்குள்ளாகவே தீவிரமான வேறுபாடுகள் இருப்பதைக் காண முடிகிறது. இதில் முதல் தீவிர வேறுபாடு அஷாயிரா என்போருக்கும் முஃதஸிலா என்போருக்கும் இடையே ஏற்பட்டது. வருந்தத்தக்க வகையில் இவை இறை நிராகரிப்புக் குற்றச்சாட்டுகள் சுமத்தும் அளவுக்குச் சென்றன. வரலாற்று ரீதியாகவும் இன்றும்கூட இதைப் பார்க்கிறோம். இப்படிச் செய்வது சரியல்ல.
அப்பாஸியா மன்னராட்சிக் காலத்தில் முஸ்லிம் பொதுமக்கள் இவ்விரு சிந்தனைப் போக்குகளுக்கிடையில் சம அளவில் பிரிந்து நின்றபோது பெரும் நெருக்கடி ஏற்பட்டது. ‘குர்ஆன் படைக்கப்பட்டதா இல்லையா’ என்ற கேள்வியை ஒட்டி அவர்களிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் உச்சத்தை அடைந்தன. பல லட்சம் மக்களைக் கொண்டிருந்த இரு சாராரும் மோதலில் ஈடுபட்டு ஒருவருக்கெதிராக ஒருவர் இறை நிராகரிப்பு முத்திரை குத்தும் அளவுக்கு நிலைமை தீவிரமாகியது. ‘குர்ஆன் படைக்கப்பட்டது அல்ல’ என்று அஷாயிராகளும், ‘படைக்கப்பட்டது’ என்று முஃதஸிலாக்களும் கூறினர். இவ்விரு கருத்துகளும் தமக்கான நியாயங்களையும், விளக்கங்களையும், வாதங்களையும் கொண்டிருந்தன. உள்ளுக்குள்ளாக இந்த வேறுபாடுகள் இருக்க, இது அனைத்தும் ‘அஹ்லுஸ் சுன்னத் வல்ஜமாஅத்’ என்ற அரசாங்கப் பொதுப்படுத்துதலின் கீழ் நடந்தது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
மேலும் ஹம்பலி சிந்தனைப் பள்ளி அல்அஷாயிராவோடு தீவிர கருத்து வேறுபாடுகளைக் கொண்டிருந்தது. ஹம்பலி சிந்தனைப் பள்ளிக்கு நெருக்கமானதாகக் கருதப்படும் ஷாஃபியீ சிந்தனைப் பள்ளி அல் அஷாயிரா சிந்தனையின் சட்டவியல் மறுபக்கம் என்றும் கருதப்படுகிறது. ஃபிக்ஹுஷ் ஷாஃபியீயும் ஃபிக்ஹுல் அஷ்அரீயும் ஒன்றோடொன்று இணங்கிச் சென்றன. ஆனால் ஷாஃபியீ சிந்தனைப் பள்ளியின் நீட்சியாகக் கருதப்படும் ஹம்பலி சிந்தனைப் பள்ளி அஷாயிராவோடு ஒத்துப் போகவில்லை என்றும் பார்க்கிறோம். அதேபோல, அஷாயிராக்கள் அஹ்னாஃப்களோடும் (அபூ ஹனீஃபாவின் பின்பற்றாளர்கள்) ஒத்துப் போவதில்லை.
‘இப்போது இந்த வேறுபாடுகளெல்லாம் சரி செய்யப்பட்டிருக்கும். நம் வரலாற்றின் இந்த அத்தியாயத்திலிருந்து நாம் பாடம் கற்கலாம்’ என நீங்கள் நினைக்கக் கூடும். ஆனால் யாரும் பாடம் கற்கும் நோக்கில் இந்த வரலாறுகளை குர்ஆனிய, முஹம்மதிய வழியில் முறையாக அணுகுவதில்லை. அப்படியே யாரேனும் இவ்வரலாறுகளைப் படிக்க நேர்ந்தால், அவர்கள் அதிலிருந்து பிற உறுதிமிக்க முஸ்லிம்களுக்கெதிரான கருத்தாயுதங்களைப் பெறுவதற்காகவே அவற்றைப் பயன்படுத்துகின்றனர். இது விரும்பத்தக்கது அல்ல. ஆனால் இன்றைய நடைமுறை இப்படித்தான் இருக்கிறது.
சகோதர சகோதரிகளே! இந்த விவகாரங்களைக் கிளப்புவதற்காக நான் வருந்துகிறேன். ஆனால் நாம் இதைப் பேசியாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். பாடக் கல்வி என்ற தளத்திலிருந்து மட்டும் இவற்றை அணுகினால் போதும் என்ற நிலையில் நாம் இப்போது இல்லை. நாம் எதிர்நோக்கி இருக்கும் ஆபத்துகளைத் தவிர்க்கும் நோக்கத்தில் இவற்றை அணுக வேண்டும். ஏனெனில் அன்றுபோல இன்றும் அரசாங்கங்கள் நமக்கெதிராக அணிதிரண்டு நிற்கின்றன. நாம் ஒருவருக்கொருவர் ரத்தம் சிந்துவதையும் நம்மிடையே இருக்கும் பலகருத்து இஸ்லாமியத் தன்மைகளை எண்ணி நாம் பதற்றமடைய வேண்டும் என்றும் அவை விரும்புகின்றன. இப்பிரச்சாரங்களுக்குப் பலியாகும் உண்மை முஸ்லிம்களும் இருக்கவே செய்கின்றனர்.
சில ஹம்பலீகள், அபூ ஹனீஃபா அசலில் சிந்தனைப் பள்ளி எதையும் கொண்டிருக்கவில்லை என்று கூறுகின்றனர். ‘”வெறும் பதினேழு ஹதீஸ்களை மட்டுமே என்னால் உறுதி செய்ய முடிந்தது” என்று சொன்ன ஒருவர் எப்படி ஒரு சிந்தனைப் பள்ளியைப் பெற்றிருக்க முடியும்? சொந்தக் கருத்துகளை முன்வைத்த ஒரு அறிஞர்தான் இவர் (யகூலு பிர் றஃஈ)’ என்கின்றனர். அன்றைய சில நூல்களும் இன்றைய சில முஸ்லிம்களின் பாழடைந்த மனங்களும் இத்தகைய கருத்துகளை வெளிப்படுத்துகின்றன.
சகோதர சகோதரிகளே! இத்தகைய கருத்துகளால் என்ன பலன் கிடைக்கப் போகிறது?! இவர்கள் என்னதான் செய்ய முயற்சிக்கின்றனர்? இத்தகையவர்களை ‘இஸ்லாத்தின் வரலாற்று ரீதியான எதிரிகளோடு அணி சேர்ந்திருப்பவர்கள்’ என்றும், ‘இன்றைய ராணுவ ரீதியான எதிரிகளோடு சேர்ந்திருப்பவர்கள்’ என்றும்தான் சொல்ல முடியும். அதிகாரத்தில் இருப்பவர்களோடு இவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்துள்ளனர்.
பொதுவான விரிவான பொருள் கொண்டதாக அரசாங்கங்கள் பயன்படுத்திய ‘அஹ்லுஸ் சுன்னத் வல்ஜமாஅத்’ என்பது குறித்துப் பார்க்கும் நாம் அதன் மற்றொரு பகுதியாக அஹ்லுல் ஹதீஸ் பற்றியும் பார்ப்போம். இறைத்தூதரோடு தொடர்புபடுத்தப்படும் ஹதீஸ்களை உறுதிப்படுத்திச் சரிபார்க்கும் முயற்சியில் வாழ்நாள் முழுதும் உழைத்த அறிஞர்கள் இருந்தனர். இவ்வகை அறிஞர்கள் அஷ்ஷாஃபியீயை ‘நம்பகமற்றவர்’ என்று கருதினர். ஆகவே அஷ்ஷாஃபியீ வழியாக அறிவிக்கப்படும் ஒரு ஹதீஸ்கூட இல்லை. ஹதீஸ் நூல்களைப் பார்த்தால் அஷ்ஷாஃபியீ அறிவிப்பாளராக (றாவீ) இடம்பெறும் ஒரு சரியான (ஸஹீஹ்) ஹதீஸ் கூட இருக்காது. அவர்களுடைய பழைய நூல்களிலிருந்தே நான் மேற்கோள் காட்டுகிறேன். அஹ்லுல் ஹதீஸ் கூறுவதாவது ‘அஷ்ஷாஃபியீ மினல் லுஅஃபா வல் மத்ருகீன்’. இதற்காக என்ன செய்ய முடியும்? இவற்றையெல்லாம் கண்டுகொள்ளாமல், அறிஞர்களுக்குப் பதிலாக அவ்வறிஞர்களை தங்கள் சொந்த லாபத்துக்காகப் பயன்படுத்தும் அரசாங்கங்களோடு நாம் தோழமையோடு இருக்க வேண்டும் என்று நம்மிடமிருந்து எதிர்பார்க்கப்படுகிறது.
‘அஹ்லுஸ் சுன்னத் வல்ஜமாஅத்’தும் நான்கு கலீஃபாக்களும்
அடுத்து மற்றொரு தளத்திலிருந்து இதைப் பார்ப்போம். அரசியல் ஆதாயம் பெறும் நோக்கத்தில் அவர்கள், ‘இறைத்தூதருக்குப் பிறகு வந்த நான்கு கலீஃபாகளின் சட்டப்பூர்வத் தன்மையை யாரெல்லாம் ஏற்றுக்கொள்கிறார்களோ அவர்கள் அனைவரும் ‘அஹ்லுஸ் சுன்னத் வல்ஜமாஅத்’தைச் சார்ந்தவர்கள்’ என்று கூறுகின்றனர். ஆனால் முஸ்லிம் பொதுமக்களிடையே அபூ பக்கர், உமர், உஸ்மான் மற்றும் அலீ (றழி அல்லாஹு அன்ஹும்) ஆகியோரின் சட்டபூர்வத் தன்மையை ஏற்றுக்கொண்ட சில உறுதியான தோழமைக் குழுக்கள் அல்லது சமூகப் போக்குகள் இருந்தன. அவற்றை இந்த அரசாங்கங்கள் அஹ்லுஸ் சுன்னத் வல்ஜமாஅத் என்பதில் சேர்த்துக் கொள்ளவில்லை.
ஸைதீ ஷீஆக்கள் நான்கு கலீஃபாக்களின் சட்டபூர்வத் தன்மையை ஏற்றுக்கொள்கின்றனர். அவர்களை ஏன் இந்த அரசாங்கங்கள் அஹ்லுஸ் சுன்னத் வல்ஜமாஅத்தில் சேர்க்கவில்லை? பிற்காலத்தில் ஃகவாரிஜ்கள் என்று அறியப்பட்டவர்களுள் ஒரு பகுதியினரும் நான்கு கலீஃபாக்களின் சட்டப்பூர்வத் தன்மையை ஏற்றுக்கொண்டனர். ஆனால் அவர்களும் இதில் சேர்க்கப்படவில்லை. பகுத்தறிவுச் சிந்தனைப் பள்ளியை உருவாக்கிய முஃதஸிலாக்களும் நான்கு கலீஃபாக்களின் சட்டப்பூர்வத் தன்மையை ஏற்றுக்கொண்டனர். ஆனால் தம் கால அரசாங்கங்களை ஆதரித்தவர்களின் பட்டியலில் இவர்கள் இல்லை. நம்மிடையே உருவாகிக்கொண்டிருக்கும் பிரிவினைக்கு வலுசேர்க்கும் இத்தகைய அடிப்படைப் பிரச்சனைகளைக் களையெடுப்பதிலிருந்து முஸ்லிம்களின் கவனம் சிதறியே இருக்க வேண்டும் என்பதுதான் இவர்களின் நோக்கம்.
கைலான் அத்திமஷ்கியின் அரசியல் எதிர்ப்பியக்கம்
எளிதாக விளங்கிக் கொள்ள உதவும் என்பதால் ஒரு நிஜ மனிதரின் உதாரணத்தைப் பார்ப்போம். நம்மில் பெரும்பாலோர் கேள்விப்படாத அல்லது கேள்விப்பட்டிருந்தாலும் அதிக விவரம் அறியப்படாத ஒருவரின் வரலாறைப் பார்ப்போம். அவருடைய பெயர் கைலான் அத்திமஷ்கி. அவர் தமஸ்கஸில் வாழ்ந்துகொண்டிருந்தார். அசலில் அவர் எகிப்திலிருந்து வந்தவர் என்று சொல்லப்படுகிறது. அவர் ஒரு கோப்டு (பண்டைய எகிப்திய) கிறிஸ்துவராகக் கூட இருந்திருக்கலாம். எது எப்படியிருப்பினும் இப்போது அவர் ஒரு உறுதிமிக்க முஸ்லிமாக உமையா மன்னராட்சியின் கீழ் வாழ்ந்துகொண்டிருந்தார்.
இந்த மன்னராட்சி முஸ்லிம் பொதுமக்களிடையே ‘அல்ஜபரிய்யா’ என்றொரு போக்கை ஆதரித்துப் பரப்பியபோது அவர் அதை எதிர்த்தார். ‘ஏற்கனவே விதிக்கப்பட்டுவிட்டது என்ற காரணத்தால்தான் மக்கள் ஒவ்வொரு செயலையும் செய்கின்றனர்’ என்ற கோட்பாடு அன்று பெரும் விவாதமாக விளங்கியது. அதாவது ஒருவர் ஆட்சிக்கு வருகிறார் என்றால் அவர் ஆட்சிக்கு வர வேண்டும் என அல்லாஹ் விதித்துள்ளான். முஆவியா பதவிக்கு வந்தால், அதற்குக் காரணம் அல்லாஹ் அவ்வாறே விதித்துள்ளான். அதை யாரும் கேள்விக்குட்படுத்த முடியாது. இத்தகைய கோட்பாடு, இஸ்லாமிய நம்பிக்கையின் (ஈமான்) செயல்துடிப்பு மிக்க பகுதியை நீக்கிவிட்டது. இப்போது இந்த ‘ஜப்ர்’ சிந்தனையின் காரணமாக ஒடுக்குபவருக்கும் (ழாலிம்) ஒடுக்கப்பட்டவருக்கும் (மழ்லூம்) இடையே சமத்துவம் ஏற்பட்டுவிட்டது. சமூக நீதிப் பிரச்சனைகளை யாரும் வெளிப்படையாகப் பேசவில்லை.
ஆனால் கைலான் அத்திமஷ்கி இந்த விவகாரத்தை வெளிப்படையாகப் பேசினார். ஹசன் இப்னு முஹம்மது இப்னுல் ஹனஃபியா இப்னு அலீ இப்னு அபீ தாலிபின் செல்வாக்குக்கு அவர் ஆட்பட்டிருந்தார் என்று சொல்லப்படுகிறது. இன்று இருப்பதுபோல அன்றும் அரசியல் நெறிபிறழ்வுக்கு எதிரான ஒரு இஸ்லாமிய எதிர்ப்பு இருந்தது. அன்றும் இன்றும் இஸ்லாமிய எதிர்ப்பு இருந்துவருகிறது என்பதை நாம் இங்கு கவனிக்க வேண்டும். அன்றும் இத்தகைய இஸ்லாமிய எதிர்ப்பை வெளிப்படுத்துவது தடை செய்யப்பட்டதாக (ஹறாம்) இருந்தது. அது இன்றும் தொடர்கிறது. இன்றும் ஆட்சியாளர்களுக்கு எதிராக இஸ்லாமிய எதிர்ப்பை வெளிப்படுத்துவது தடை செய்யப்படுகிறது.
கைலான் அத்திமஷ்கி இதை ஏற்றுக்கொள்ளவில்லை. ‘மனிதர்கள் தங்கள் செயல்களுக்குப் பொறுப்பானவர்கள்’ என்று அவர் நம்பினார். அரசாங்கம் ஆதரவளித்த முன்விதிக் கோட்பாட்டின் காரணமாக யாரும் எதையும் செய்வதில்லை என்றார். அப்படி இருந்தால் எந்த ஒரு செயலுக்கும் யாரையும் பொறுப்பாக்க முடியாது. இது அல்லாஹ்வின் பண்புகளாகிய அல்அத்லு, அர்றஹீம், அல்கஹ்ஹார் போன்றவற்றுக்கு முரணாக இருக்கிறது. சுய விருப்பத் தேர்வின்றி அல்லாஹ் விதித்துள்ளான் என்பதாலேயே ஒவ்வொரு செயலையும் நாம் செய்கிறோம் என்று ஒவ்வொருவரும் நம்பினால் என்ன நடக்கும்? அல்லாஹ்வின் வசனம் தெளிவாக இருக்கிறது:
فَمَن شَاءَ فَلْيُؤْمِن وَمَن شَاءَ فَلْيَكْفُرْ
…யார் விரும்புகிறாரோ அவர் நம்பிக்கை கொள்ளட்டும். யார் விரும்புகிறாரோ அவர் நிராகரிக்கட்டும்… (திருக்குர்ஆன் – 18:29)
குர்ஆனில் காணப்படும் அல்லாஹ்வின் இச்சொற்களில் தேர்வுசெய்யும் சுதந்திரம், விரும்பும் சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் இருப்பதைப் பார்க்க முடிகிறது.
وَمَا تَشَاءُونَ إِلَّا أَن يَشَاءَ اللَّهُ
எனினும் அல்லாஹ் நாடினாலன்றி நீங்கள் நாட மாட்டீர்கள்… (திருக்குர்ஆன் – 76:30)
‘அல்லாஹ் நாடுவதை மட்டுமே நீங்களும் நாடுவீர்கள், செய்வீர்கள்’ என்று ‘ஜப்ரிய்யா’ சிந்தனை கொண்டவர்களைப் போல இந்த வசனம் விளங்கிக் கொள்ளப்படுவதில்லை. மாறாக மனிதன் நம்பிக்கை-நிராகரிப்பு இவ்விரண்டில் எதைத் தேர்ந்தெடுத்தாலும் அவனுடைய விருப்பத்தின் இறுதி விளைவு —எப்படிப் பார்த்தாலும்— அல்லாஹ்வின் நாட்டத்தோடு பொருந்திப் போகும் என்றுதான் இவ்வசனம் பொருள்படுகிறது. அவன் நல்லதைச் செய்தால் அவனுக்கு வெகுமதி வழங்குவதும் தீயதைச் செய்தால் அவனை தண்டிப்பதும்தான் அல்லாஹ்வின் நாட்டம் ஆகும். ஆனால் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட வேறொரு கோட்பாடு அன்று நிலவியபோது அதற்கு எதிரான அரசியல் எதிர்ப்பும் இருந்தது. இந்த எதிர்ப்பு பற்றிய செய்தி நமக்குத் தெரிந்துவிடக்கூடாது என்றும், அத்தகைய எதிர்ப்பின் நீட்சி இன்று தொடர்ந்துவிடக்கூடாது என்றும் சிலர் செயல்படுகின்றனர்.
தெளிவாகவே வழிதவறும் போதிலும் யாரும் எதிர்ப்பை வெளிக்காட்டக் கூடாது என்று எல்லா முஸ்லிம் ஆட்சியாளர்களும் கூறுகின்றனர். அவர்கள் இஸ்லாத்தின் மீது தாக்குதல் தொடுக்கும் நோக்கத்தில் குர்ஆனில் இடம்பெறும் சொற்களை வீரியமிழக்கச் செய்ய முயற்சிக்கின்றனர். அல்முஷ்ரிக், அல்காஃபிர் என்ற சொற்களெல்லாம் முனைமழுங்கடிக்கப்பட்டுவிட்டன. இச்சொற்களுக்கு உரிய விளக்கங்கள் எதுவும் இப்போது இல்லை. அப்படியே இருந்தாலும் அவை தற்கால நிஜ உலகத்தைப் பிரதிபலிக்காமல் வரலாற்று ரீதியான அர்த்தங்களை மட்டுமே சுமந்து நிற்கின்றன.
இது அனைத்திலிருந்தும் கைலான் அத்திமஷ்கி மாறுபட்டார். ‘நம்பிக்கையின் (ஈமான்) மதிப்பு நம் செயலிலும் தீர்மானங்களிலும்தான் இருக்கிறது’ என்றும், ‘அல்லாஹ்வையோ இஸ்லாத்தையோ தெரிந்துவைத்திருப்பதில் மட்டும் இல்லை’ என்று அவர் கருதினார். இது அவரை அன்றைய அரசாங்கத்துக்கு நேர் எதிராக நிறுத்தியது. மக்கள் மத்தியில் பிரபலமடைந்த அவர் பிரச்சாரம் செய்யத் துவங்கினார். இரண்டாயிரம் பக்கங்கள் அளவுக்கு நூற்களை எழுதினார். எனினும் அதில் ஒன்றுகூட இன்று மிஞ்சவில்லை. அரசாங்கங்களோடு முரண்படும் மக்களின் நிலைமை என்னவாகும் என்பதற்கு இது சான்றாகும்.
தமஸ்கசில் மக்கள் இயக்கத்தைத் தொடங்கிய அவர் மேலும் பிரபலம் அடைவதைக் கண்ட அரசாங்கம், அவரைச் சரிகட்ட முடிவெடுத்தது. அவர் தப்பியோடி தலைமறைவானார். ஆனால் அவர்கள் அவரை விடாது துரத்தினர். அதிகாரிகள் அவரைக் கைது செய்வதற்கு முன்னர் —ஐந்தாம் கலீஃபா என்று கருதப்படும்— உமர் இப்னு அப்துல் அஸீஸோடு ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டார். அவர்கள் இருவரும் சந்தித்து உரையாடினர். அவர்கள் பல விஷயங்களில் ஒன்றுபட்டனர்; சிலவற்றி வேறுபட்டனர்.
ஹிஜ்ரீ 99 முதல் 102 வரையான மூன்றாண்டு காலத்தைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம். உமர் இப்னு அப்துல் அஸீஸ் காலத்தில் அரசியல் சூழல் மாறியது. எதிர்கட்சியினர் தமக்குத் தோன்றியதை வெளிப்படையாகப் பேசலாம் என்ற நிலைமை உருவானது. பல சீர்திருத்தங்கள் செய்யப்பட்டன. அதில் ஒன்றாக உமர் இப்னு அப்துல் அஸீஸ், கைலான் அத்திமஷ்கியை இஸ்லாமியக் கருவூலத்தில் இருந்த செல்வத்தை மறுவிநியோகம் செய்யும் பொறுப்பில் அமர்த்தினார். அதற்கு முன்னர் அச்செல்வம் உமையா ஆளும் வர்க்கத்துக்குச் சொந்தமாக இருந்தது. இப்போது அது மக்களுக்குச் சொந்தமாகியது. மக்கள் மத்தியில் சென்று கைலான் இவ்வாறு கூறினார்: “மக்களே! மோசடிக்காரர்களின் (ஆட்சியாளர்களின்) செல்வத்தை நோக்கி வாருங்கள்! அநியாயம் இழைத்தோரின் செல்வத்தை நோக்கி வாருங்கள்!” இது அனைத்தும் பொதுவெளியில் சொல்லப்பட்டது. ஆளும் வர்க்கத்துக்கு மட்டுமே சொந்தமாக இருந்த வசதி வாய்ப்புகளை, தனியுரிமைகளை அவர்களிடமிருந்து எடுத்து தேவையுடைய மக்கள் மத்தியில் மறுவிநியோகம் செய்தார்.
கைலான் ஒருமுறை தமஸ்கசின் பொதுச் சதுக்கத்தில் இவ்வாறு பேசிக்கொண்டிருந்ததைக் கேட்ட ஹிஷாம் இப்னு அப்துல் மலிக், பின்வருமாறு கூறினார்: “இந்த நபர் என்னைத் தூற்றுகிறார். என் குடும்பத்தையும் என் முன்னோர்களையும் தூற்றுகிறார். என் கையில் அதிகாரம் வந்தால் இவருடைய கை கால்களை வெட்டிவிடுவேன்”. அப்போது ஹிஷாம் மன்னராக பொறுப்பேற்றிருக்கவில்லை. உமர் இப்னு அப்துல் அஸீஸின் ஆட்சி மூன்று ஆண்டுகள் நீடித்தது. அவருடைய குடும்பத்தினரே அவரை எதிர்த்தனர். அவருடைய செயல்களின் விளைவுகள் குறித்து அவரை எச்சரித்தனர்.
நேர்மையான ஒரு ஆட்சியாளர் நிலைமையை சரிசெய்ய முயற்சிக்கும்போது தன்னுடைய நெருங்கிய வட்டத்திலிருந்தே மிரட்டல்களை எதிர்கொள்ள நேர்ந்தது. அப்போது “தீர்ப்பு நாளின் கேள்விக் கணக்குக்கு அஞ்சத் தேவையற்ற எந்த ஒரு விஷயத்தைப் பற்றியும் நான் அஞ்சப் போவதில்லை”, என்று உமர் இப்னு அப்துல் அஸீஸ் பதிலளித்தார். பின்னர் ஹிஷாம் இப்னு அப்துல் மலிக் மன்னரானதும் கைலான் அத்திமஷ்கியை வேட்டையாடத் தொடங்கினார். கைலானும் அவருடன் இருந்த மற்றொருவரும் மீண்டும் தலைமறைவாயினர்.
இறுதியாக அதிகாரிகள் அவரைக் கைது செய்தனர். அவ்ஸாயீ என்றொரு சட்டவியலாளரை (ஃபகீஹ்) அழைத்து அவரிடம் இவர் குறித்து தீர்ப்பு கேட்டனர். அவ்ஸாயீ —இன்றைய சட்டவியலாளர்களைப் போல— குர்ஆன் மற்றும் சுன்னாஹ்வின் குரலில் பேசாமல் அரசாங்கத்தின் குரலில் பேசுபவராக இருந்தார். கைலான் அத்திமஷ்கிக்கு மரணதண்டனை விதிக்கலாம் என்று அவர் தீர்ப்பளித்தார் (ஃபத்வா). இன்றும் கூட இத்தகைய மார்க்கத் தீர்ப்புகளைப் பார்க்க முடிகிறது. அவை அன்றிலிருந்தே தொடங்கிவிட்டன. பின்னர் ஹிஷாம் இப்னு மலிக், கைலான் அத்திமஷ்கியையும் அவருடன் இருந்த ஸாலிஹ் என்பவரையும் பாப் கைசான் எனும் தமஸ்கசின் நுழைவாயில் ஒன்றில் சிலுவையில் அறைந்தார். சிலுவையில் அறையப்பட்ட நிலையிலும் இந்தக் கொடுமைகளைப் பார்த்துக்கொண்டிருந்த மக்களை நோக்கி கைலான் பிரச்சாரம் செய்துகொண்டிருந்தார்.
இஸ்லாமிய எதிர்ப்புக்கு இது ஒரு எடுத்துக்காட்டு ஆகும். அரசியல் அடக்குமுறைக்கு எதிராக, பொருளாதாரச் சுரண்டலுக்கு எதிராக, சமூக நீதி வேண்டி நிகழ்த்தப்பட்ட மேலும் பல இஸ்லாமிய எதிர்ப்பின் வரலாறுகளை நாம் பார்க்க இருக்கிறோம். இவையெல்லாம் அல்லாஹ்வுக்கு உறுதியாகக் கட்டுப்படுவதில் உள்ளடங்குவதாகும். வெறும் அறிவு மட்டும் நம்பிக்கை (ஈமான்) ஆகாது என்று கைலான் அத்திமஷ்கி கூறினார். அறிவோடு சேர்த்து அல்மஹப்பாஹ், அல்குதுவ்வா மற்றும் அல்இக்றார் ஆகியவற்றையும் உள்ளடக்கியதுதான் நம்பிக்கை ஆகும். இத்தகைய நம்பிக்கை எப்படி நம்மை வந்தடையப் போகிறது என்றும், அது எப்படி ஒரு சமூகச் செயல்பாடாக மாறப் போகிறது என்பதையும் நாம் பார்க்க விரும்புகிறோம். நம்பிக்கை (ஈமான்) என்பது கொடூரமான ஆட்சியாளர்களுக்கும் நாட்டை ஆளும் எதேச்சாதிகார ஆட்சியாளர்களுக்கும் அடிவருடி நிற்பதல்ல.
ஹஜ்ஜுக்குரிய காலம்
சகோதர சகோதரிகளே, உறுதிமிக்க முஸ்லிம்களே!
நமக்கு அந்நியமான தகவல்களைக் களையெடுக்கவும் நம் மனதிலுள்ள மாசுக் கருத்துகளை அகற்றவும் நாம் மேற்கொண்டுள்ள தொடர் முயற்சியில் இறைத்தூதரின் செயல்களையும் சொற்களையும் உரைகல்லாகக் கொண்டுள்ளோம். அல்லாஹ்வின் சொற்கள், அவனுடைய அத்தாட்சிகள், அவன் நமக்கு வழங்கியுள்ள செய்திகள் ஆகியவற்றின் சூழமைவில் இதைச் செய்கிறோம். வெறும் வரலாற்றுப் பாடம் என்ற கோணத்தில் நாம் இதைச் செய்யவில்லை. இன்று நாம் எப்படி நடத்தப்படுகிறோம் என்பதைப் புரிந்துகொள்ளும் நோக்கத்திலேயே நாம் இதைப் பேசுகிறோம்.
மக்கா, மதீனா, அல்குத்ஸ் ஆகிய மூன்று புனிதத் தலங்களை (ஹறம்) ஆட்சிபுரிபவர்களை எடுத்துக்கொண்டால், நம் வரலாற்றின் ஏற்ற இறக்கங்களை, அதில் நிகழ்ந்த சோதனைகளை, தவறுகளை ஆழமாகப் புரிந்துவைத்திருந்தால், தற்போது நிலவும் நிலைமையைத் தொடர நாம் அனுமதித்திருக்க மாட்டோம். இஸ்லாத்துக்கு எதிரான அமைப்புகள் வலுப்பெறுவதையும், மத அங்கிகளைப் போர்த்திக்கொண்டு இத்தகைய அரசாங்கங்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் சட்டப்பூர்வத் தன்மையை கொடுப்பவர்களையும் நாம் அனுமதித்திருக்க மாட்டோம்.
ஓரிரு நாள்களுக்கு முன்னர் மக்காவில் முன்னூற்றி நாற்பத்தைந்து முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். இது அரிதாக நடக்கும் சம்பவம் அல்ல. இப்போதெல்லாம் இது வாடிக்கையாகிவிட்டது. மக்காவுக்குச் சென்றாலே ஏதோ ஒரு கொலைக் களத்துக்குச் செல்வது போலாகிவிட்டது. இத்தனைக்குப் பிறகும் இதற்காக யார் மீதும் நம்மால் பொறுப்பு சுமத்த முடியவில்லை.
ஜப்ரியாக்களின் கொள்கை இன்றும் நம்மிடையே உயிருடன், துடிப்புடன் இருப்பதைப் பார்த்தீர்களா? நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். ஏன் இவ்வாறு நடக்கிறது? இதற்கெதிராக நாம் எதுவும் சொல்லிவிடுவோமோ என்று எண்ணி அதற்கு முன்னரே அவர்கள் “இதைத் தடுக்கும் பொருட்டு அடுத்த வருடம் மற்றொரு தளத்தை, ஒரு பாலத்தை, குறுக்குப் பாதையை அல்லது ஏதோ ஒன்றைக் கட்டுவார்கள்” என்று சொல்கின்றனர். இதை எத்தனை முறை கேட்டுவிட்டோம்?! “இதற்காக 120 கோடி டாலர்கள் செலவு செய்ய உள்ளோம்” என்றும் கூறுகின்றனர்.
பணம் செலவு செய்வது தேவைதான் என்றாலும் அது மட்டும் தீர்வாகிவிடாது. அவர்களிடம்தான் கோடிக்கணக்கில் பணம் இருக்கிறதே! அதைத்தானே அவர்கள் போர்க்களத்தில் நமக்கெதிராக இருப்பவர்களுக்குக் கொடுக்கின்றனர்! ஆனால் நாம் “இதெல்லாம் அல்லாஹ்வின் நாட்டம். நம் செயல்களுக்கு நாம் பொறுப்பாக மாட்டோம்!” என்று நம்ப வேண்டும் போலும்! பிரச்சனைக்கான தீர்வு இதுவல்ல.
பிரச்சனை என்னவென்றால் பல லட்சம் முஸ்லிம்கள் குறுகிய காலத்தில் பல சடங்குகளைச் செய்ய நிர்பந்திக்கப்படுகின்றனர். அக்குறுகிய கால அளவு நீட்டிக்கப்பட வேண்டும். இதற்கு முன்னர் ஷைத்தானை (இப்லீஸ்) குறிக்கும் —’றமீ அல்ஜமறாத்’ என்ற— தூண்கள் அங்கு இருந்தன. ஷைத்தான் மீது கல்லெறியும்போது அத்தூண்கள் அல்லது கம்பங்களின் மீதுதான் கற்களை வீசிக்கொண்டிருந்தோம். பின்னர் இந்தச் சட்டவியலாளர்கள் யாரோடும் கலந்தாலோசிக்காமல், “ஹாஜிகளின் வசதிக்காக இக்கம்பங்களை அகலப்படுத்தி ஒரு சுவராக மாற்றிவிடலாம்” என்றனர்.
‘இது ஒரு நூதனம் (பித்ஆ). நீங்கள் என்ன செய்கிறீர்கள்?! இப்படிச் செய்வதற்கு முன் ஏதாவது கலந்தாலோசனை நடைபெற்றதா? கருத்தொற்றுமை ஏற்பட்டதா?’ என்று அவர்களிடம் கேட்கும் தைரியம் யாருக்காவது இருக்கிறதா?! இப்படிச் செய்வதற்கு முன் ஏதாவது கலந்தாலோசனையோ கருத்தொற்றுமையோ ஏற்பட்டதா? சர்வாதிகார ஆட்சிகள் நடந்துகொள்வதைப் போலவே அவர்கள் விரும்பியதை அவர்களாகச் செய்து கொண்டனர். இப்பிரச்சனைக்கான தீர்வு அக்கம்பங்களை சுவராக அகலப்படுத்துவதில் இல்லை. மாறாக சில வார அளவு கொண்ட காலத்தை மாதங்களாக நீட்டுவதில்தான் இதற்கான தீர்வு உள்ளது.
الْحَجُّ أَشْهُرٌ مَّعْلُومَاتٌ
ஹஜ்ஜுக்குரிய காலம் குறிப்பிடப்பட்ட மாதங்களாகும்… (திருக்குர்ஆன் – 2:197)
குர்ஆனின் இந்த வார்த்தைகளைப் புரிந்து கொள்வதற்கு நீங்கள் பெரிய விஞ்ஞானியாகவோ அறபு மொழியில் முனைவர் பட்டம் பெற்றவராகவோ இருக்க வேண்டிய அவசியம் இல்லை. செய்ய வேண்டிய காரியங்களைச் செய்வதற்கு மூன்று வாரங்கள் என்பதற்குப் பதிலாக மூன்று மாதங்கள் என்று அவகாசம் அளித்தால் நாம் ஒருவர் மீது ஒருவர் ஏறி மிதித்துக்கொண்டோ இடித்துத் தள்ளிக்கொண்டோ இருக்கமாட்டோம். இப்போது இது ‘ஹஜ் தள்ளு-முள்ளு’ என்றாகிவிட்டது. உண்மைத் தகவல்களின் அடிப்படையில் இச்சம்பவங்களை அணுகினால் இப்படித்தான் அதற்குப் பெயர் வைக்கத் தோன்றும்.
நம்மிடமிருந்து எந்த ஆலோசனைகளையும் எதிர்பார்க்காத ஆட்சியாளர்கள் இன்று உள்ளனர். பதிமூன்று நூற்றாண்டுகளுக்கும் மேலாக இவ்விவகாரங்களிலிருந்து நாம் வெளியே தள்ளப்பட்டுவிட்டோம். இந்தக் குழப்பங்களிலிருந்து வெளியே வருவதற்காக சிந்திக்கக் கூட முடியாத முஸ்லிம்களுக்கு துன்பம்தான் எஞ்சி நிற்கிறது. “அவர்களை வெளியே தெருக்களில் வீசுங்கள்! அவர்களை ஹஜ்ஜுக்கு அனுமதிக்காதீர்கள்! அவர்களுக்கு எதிராக எல்லா குற்றச்சாட்டுகளையும் அள்ளி வீசுங்கள்! அவர்களை இழிவுபடுத்துங்கள்” என்பதுதான் அவர்களின் அணுகுமுறையாக இருக்கிறது. ஆனால், அல்லாஹ் நம்மோடு இருக்கின்றான். அவர்கள் செய்யும் எல்லாவற்றையும் விட அவன் மேலானவன்.
(நன்றி: மெல்லினம்)