கட்டுரைகள் 

நாசகார ISIS-ம் தக்ஃபீரிசமும் – பதிவு 5

Loading

ISIS எனும் தக்ஃபீரிச நாசகாரக் கும்பல் ஈராக்கிலும் சிரியாவிலும் ஏற்படுத்தியிருப்பது ‘இஸ்லாமிய ஃகிலாஃபத்’ எனும் மாயையில் சிலர் இருக்கின்றனர். எனவே தான், அந்தக் கும்பல் செய்யும் அட்டூழியங்களை எல்லாம் ‘இஸ்லாத்தின் உண்மை அமலாக்கம்’ என்று வலிந்து நியாயப்படுத்த முனைவதுடன், அதுவே ‘சமரசம் செய்துகொள்ளாத உறுதியான ஈமானின் அடையாளம்’ என்று கற்பிதம் செய்துகொள்கிறார்கள்.

“ISIS உள்ளிட்ட தக்ஃபீரிகள் இன்னின்ன வகையிலெல்லாம் இஸ்லாத்தையும் அதன் அமலாக்கத்தையும் பற்றி மிக மோசமானவொரு சித்திரத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள்” என்று தொடரின் முதற் பதிவில் குறிப்பிட்டிருந்தோம்.

அதைப் பார்த்த சில சகோதரர்கள், “வெறுமனே விளைவுகளை வைத்து மட்டும் ஒன்றை சரி அல்லது தவறு என்று தீர்மானிப்பது சரியாகுமா?” என்ற ரீதியில் சந்தேகம் எழுப்பியிருந்தார்கள்.

அதற்கடுத்து வந்த பதிவுகளில், தக்ஃபீரிசமே இவர்களின் அடிப்படை சித்தாந்தமாக இருக்கிறது என்பதையும், அது எங்கிருந்து ஊற்றெடுக்கிறது என்பதையும் தொட்டுக் காட்டியிருந்தோம்.

அதைத் தொடர்ந்து, தமது தக்ஃபீரிச சித்தாந்தத்தை வைத்துக் கொண்டு, போரில் கடைபிடிக்க வேண்டிய இஸ்லாத்தின் கட்டளைகளை எல்லாம் கால்களுக்கடியில் போட்டு மிதிக்கும் வகையில் குழந்தைகள், பெண்கள், முதியோர் உள்ளிட்ட பொதுமக்களை குறிவைத்து பள்ளிவாசல்களிலும் கடைவீதிகளிலும் வெடிகுண்டுத் தாக்குதல்கள் நடத்திக் கொன்றுவிட்டு, அதனை தமது ‘இராணுவ தந்திரம்’ என்று கொஞ்சமும் உறுத்தலின்றி பீற்றிக் கொள்கிறார்கள் என்பதையும் அவர்களின் கூற்றுக்களில் இருந்தே அம்பலப்படுத்தியிருந்தோம்.

‘இஸ்லாமிய அரசை உருவாக்குவதற்கான மன்ஹஜ் (முறைமை)’ என்றும், ஆக்கிரமிப்புப் படைகளை முறியடிப்பதற்கான இராணுவ தந்திரம் என்றும் இவர்கள் முன்வைக்கும் மாபாதகங்களுக்கும் இஸ்லாத்திற்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை என்பதை அனைவரும் நன்கு புரிந்துகொள்ள வேண்டும். இது தொடர்பாகவே இப்பதிவில் பேசவிருக்கிறோம்.

‘இதுதான் சரியான மன்ஹஜ்’ என்று இவர்களின் குற்றங்களைச் சரிகாண முனையும் எவரும் உண்மையில் இறைகட்டளைகளையும் நபிகளாரின் இருபத்தி மூன்றாண்டுகால தூதுத்துவப் புரட்சியையும் கேவலப்படுத்துகிறார்கள் என்பதை மறந்துவிடக் கூடாது என்கிறேன்.

அவர்களின் ‘இஸ்லாமிய ஆட்சி’ உருவான அழகினை அவர்களின் வாயாலேயே கேட்டு மகிழுங்கள்:

(கீழ்வரும் வரிகள் ISIS-ன் ஆங்கில வெளியீடான Dabiq-ன் முதலாவது இதழில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது என்பதை கவனிக்கவும்.)

“(அபூ முஸ்அப் அல்-ஸர்காவி) ஃகிலாஃபத்தை நிறுவுவதற்கு அவசியமான மூலோபாயங்களையும் உத்திகளையும் கொஞ்சமும் தயக்கமின்றி நடைமுறைப்படுத்தினார். சுருக்கமாகச் சொல்வதென்றால், எவ்வளவு முடியுமோ அவ்வளவு சீர்குலைவை உருவாக்குவதற்காக அவர் கடும் பிரயத்தனம் மேற்கொண்டார்… எந்தவொரு தாகூத் அரசும் நிலைத்தன்மை அடைந்துகொள்ள விடாமல் தடுப்பதையே இச்சீர்குலைவு நடவடிக்கைகளின் நோக்கமாகக் கொண்டிருந்தார்… ஆகக் கூடுதல் சீர்குலைவை ஏற்படுத்த வேண்டுமென்பதற்காக ஷைஃக் (அல்-ஸர்காவி) முஜாஹிதீன்களின் கைவசமிருந்த ஆகச் சிறந்த ஆயுதங்களான வாகன வெடிகுண்டுகள், IED-க்கள், உயிர்த்தியாகத் தாக்குதல்கள் என்பவற்றின் மீது கவனத்தைக் குவித்தார். ஒவ்வொரு நாளும் டஜன் கணக்கான பகுதிகளில் டஜன் கணக்கான ‘நிகாயா’ தாக்குதல்களை (இயன்றளவு அதிகமான உயிரிழப்புகளை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட தாக்குதல்கள்) நடத்தும்படி ஆணையிடுவார். போலீஸ் படைகளையும் ராஃபிழாக்களையும் குறிவைத்து மேற்கொள்ளப்படும் இத்தாக்குதல்கள் ஒவ்வொன்றிலும் சிலபோது நூற்றுக்கணக்கான முர்ததுகள் கொல்லப்படுவார்கள்…”

“இத்துடன் கூடுதலாக, ஈராக்கிலுள்ள எல்லா முர்தத் குழுக்களும் ஒட்டுமொத்தமாக அஹ்லுஸ் சுன்னாவின் மீது முழுவீச்சில் போரில் இறங்கும்படியான ஒரு நிர்பந்தச் சூழலை அவர் ஏற்படுத்த முயன்றார்… இதற்காகவே அவர் ஈராக்கிய முர்தது படையணிகள், ராஃபிழாக்கள், குர்திய மதச்சார்பின்மைவாதிகள் ஆகியோரைக் குறிவைத்துத் தாக்குதல்களை அரங்கேற்றினார்… இவை போன்ற முறைகளைப் பிரயோகித்து ஆகக் கூடுதலான சீர்குலைவை ஏற்படுத்தியதன் மூலமும், எல்லாப் பின்னணிகளைச் சேர்ந்த முர்ததுகளின் மீதும் குறிவைத்து தாக்குதல் நடத்தியதன் மூலமும், ஈராக்கை மாறாத அமைதியின்மையிலும் போரிலுமே வைத்திருந்து, எந்தவொரு முர்தத் குழுவும் ஒரு கணமேனும் பாதுகாப்பை உணர முடியாதபடி செய்வது முஜாஹிதுகளுக்குச் சாத்தியமானது…”

“அரசின் வீழ்ச்சியால் ஏற்பட்ட வெற்றிடத்தினுள் விரைவாக நுழைந்த முஜாஹிதீன்கள், …. அபூ உமர் அல்-ஹுசைனி அல்-பாக்தாதியின் தலைமையில் ஈராக்கில் இஸ்லாமிய அரசைப் பிரகடனம் செய்து நிறுவினார்கள்… சுருக்கமாகச் சொன்னால், பலவீனமான மைய அதிகாரமுள்ளவொரு நிலப்பகுதிக்கு புலம்பெயர்வது, அதனை நிலைத்தளமாகப் பயன்படுத்தி ஒரு ஜமாஅத்தை (கூட்டமைப்பை) உருவாக்குவது, அதற்கான உறுப்பினர்களைச் சேர்த்துக் கொண்டு அவர்களுக்குப் பயிற்சி அளிப்பது என்பவையே இச்செயல்முறையில் உள்ள வெவ்வேறு படிநிலைகளாகும்… அதன் பிறகு, சந்தர்ப்ப சூழ்நிலைகளைப் பயன்படுத்தி அதிகமதிகம் சீர்குலைவு நடவடிக்கைகளை மேற்கொண்டு, எல்லாப் பிராந்தியங்களிலும் தாகூத்திய அரசு முற்றாக நொறுங்கி விழும்படியான நிலைமைக்கு இட்டுச்செல்ல வேண்டும்; இதனைச் சிலர் ‘தவஹ்ஹுஷ்’ (கட்டற்ற வன்முறையைப் பயன்படுத்தி அரசை முடமாக்குதல்) என்று அழைக்கின்றனர்… இதற்கு அடுத்த கட்டம் என்னவென்றால், உருவான வெற்றிடத்தை நிரப்பி ஒரு முழு வீச்சிலான அரசு அமைப்பதற்குத் தோதுவாக விவகாரங்களை முன்னெடுக்கவும், இன்னமும் தாகூத்தின் கட்டுப்பாட்டின் கீழுள்ள பிராந்தியங்களையும் படிப்படியாக வென்று விரிவடைந்து செல்லவும் வேண்டும். எல்லாக் காலங்களிலும் ‘ஃகிலாஃபத்தை நோக்கிய பயணத் திட்டமாக’ முஜாஹிதீன்களிடம் இருந்து வந்திருப்பது இதுதான்.”

சீறாவைக் குறித்த இக்கும்பலின் புரிதலை நினைத்தால் புல்லரிக்கிறது. இவர்களுடைய தர்க்கத்தின்படி பார்த்தால், நபியவர்கள் இதைத் தான் செய்திருக்கிறார்கள் போலும் (அல்லாஹ் என்னை மன்னிப்பானாக!):

அதாவது, மைய அதிகாரம் பலவீனமாக இருந்த மதீனாவுக்குப் புலம் பெயர்ந்து, உறுப்பினர்களை சேர்த்துக் கொண்டு ஒரு கூட்டமைப்பை உருவாக்கி, மாபாதக சீர்குலைவு நடவடிக்கைகளையும் பச்சைப் படுகொலைகளையும் நிகழ்த்தி அங்கிருந்த நிலைமையை வேண்டுமென்றே மோசமாக்கி, அதனால் உருவாகும் அதிகார வெற்றிடத்தின் மீது தனது இஸ்லாமிய அரசை நிறுவி, தொடர்ந்து வேறு பகுதிகளுக்கும் விரிவாக்கிச் சென்றிருக்கிறார்கள் (நஊதுபில்லாஹ்!) என்பது போன்றது இவர்களின் வாதம்.

அல்லது, நபியவர்கள் மதீனாவுக்கே சென்றிருக்கத் தேவையில்லை. மக்காவிலும் கூட மைய அதிகாரம் என்ற ஒன்று வலுவாக இருக்கவில்லை என்பதை நுணுகியுணர்ந்து, படுகொலைகளை நிகழ்த்தி, நிலைமையை சீர்குலையச் செய்து, அதிகார வெற்றிடத்தை உருவாக்கி, மக்காவிலேயே இஸ்லாமிய அரசை நிறுவியிருக்கலாம். தேவையில்லாமல் ஹிஜ்ரத் செய்து மெனக்கெட்டிருக்கிறார்கள் என்று கூட சொல்வார்கள் போலும். (நஊதுபில்லாஹ்!) என்னவொரு அபத்தம் இது!

காருண்ய நபிகளாரின் தூதுத்துவப் பணியை இஸ்லாமிய எதிரிகள் கூட இந்தளவு தூரம் திரித்துப் புரிந்துகொள்ள துணிந்ததில்லை.

நபியவர்கள் அவ்ஸ் மற்றும் கஸ்ரஜ் கோத்திரங்களுக்கு நடுவிலிருந்த பகைமைகளைத் தீர்க்க முனைவதற்குப் பதிலாக, தாமே இரகசிய சீர்குலைவு நடவடிக்கைகளை மேற்கொண்டு, பகைமையை மேலும் முற்றச் செய்து, ரணகளத்தையும் ரத்தக் களறியையும் வேண்டுமென்றே உக்கிரப்படுத்தி, மதீனாவை சீர்குலையச் செய்து, அதனால் தோன்றும் அதிகார வெற்றிடத்தை நல்வாய்ப்பாகப் பயன்படுத்தி தனது இஸ்லாமிய அரசை நிறுவினார்கள் என்பது போல் அல்லவா இருக்கிறது இவர்களின் புரிதல்?! (அல்லாஹ் நம்மைக் காப்பானாக!)

இஸ்லாமிய அரசை உருவாக்குவதற்கான சரியான மன்ஹஜ் (முறைமை) இதுதான் என்கிறார்கள் இந்த ‘முஜாஹிதுகள்’.

இதை நடைமுறைப்படுத்தி இவர்கள் உருவாக்கியுள்ளதற்குப் பெயர் ‘இஸ்லாமிய அரசாம்!’ இயலுமானவர்கள் அனைவரும் அதற்குப் புலம்பெயர்ந்து செல்வது (ஹிஜ்ரத் செய்வது) கட்டாயக் கடமையாம்! இதனை அம்பலப்படுத்தினால், நம்முடைய முகத்திரை கிழிகிறதாம்!

இத்தொடரின் முதல் பதிவில், ISIS உள்ளிட்ட நாசகார தக்ஃபீரிகள் இஸ்லாத்தையும் அதன் அமலாக்கத்தையும் மிகத் தீவிரமாக உருச்சிதைக்கிறார்கள் என்று நாம் குறிப்பிட்டதைக் கண்டு மனம்கொதித்த மகாகனம் பொருந்திய ‘இஸ்லாமிய அறிஞர்களும்’ ‘சீறா ஆய்வாளர்களும்’ இங்கு வந்து திருவாய் மலர்ந்தருளுமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்வதுடன் இப்பதிவை (தொடரை அல்ல) நிறைவு செய்கிறேன்.

Related posts

Leave a Comment