என்றார் சூஃபிநூல் அறிமுகம் முக்கியப் பதிவுகள் 

… என்றார் ஸூஃபி (நூல் அறிமுகம்)

Loading

‘அற்-றிஸாலத்துல் லதுனிய்யா’ (இறையருள் ஞானம்) என்னும் நூலில் இமாம் கஸ்ஸாலி (றஹ்) அவர்கள், “மண்ணுக்குள் கிடக்கும் விதையைப் போல, கடல் ஆழத்தில் கிடக்கும் முத்தைப் போல, உலோகச் சுரங்கங்களில் கிடக்கும் வைரங்களைப் போல மானிட ஆன்மாக்கள் உண்டாக்கப்படும்போதே அரும் சக்திகளால் பதிக்கப்பட்டு விடப்படுகின்றன. கல்வி, படிப்பு இவற்றால் நாம் செய்வது யாதெனில், ஏற்கனவே நம்முள் மறைந்துக் கிடக்கும் சக்தியை வெளியில் யதார்த்தத்திற்குக் கொண்டு வர முயலுவதேயாகும். கல்வி என்றால் ஆன்மாவை அதன் சரியான நிலைக்குக் கொண்டு வருவதுதான்” என்று குறிப்பிடுகின்றார்கள்.

அந்த அரிய கல்வியின் பக்கம் நம் கவனத்தை ஈர்க்கும் வகையில் சின்னச் சின்ன உரையாடல்களாக 50 உரையாடல்கள் அடங்கிய “..என்றார் ஸுஃபி” என்ற ரமீஸ் பிலாலியின் இந்த நூல் எளிமையானது, அளவில் மிகச் சிறியது. ஆனால் உள்ளடக்கத்தால் மிகவும் கனமானது.

“உலகத்தின் எல்லாச் சிக்கலான விஷயங்களும் அடிப்படையில் எளிமையானவை” என்றொரு கருத்து உண்டு. இந்நூலை மேற்போக்கான வாசிப்புக்கு உட்படுத்தும் வாசகர் தமிழ் தினசரிகளில் வரும் துணுக்குச் செய்திகளை மெல்லிய புன்முறுவலுடன் அலட்சியமாகக் கடந்து செல்வதுபோல் இந்தப் புத்தகத்தின் பக்கங்களைப் புரட்டிச் செல்லக்கூடிய அளவுக்கு ஏமாற்றும் எளிமை கொண்டது இந்நூல். முறையான ஆன்மிகம், இன்னும் பரந்த வாசிப்பனுபவமும் கொண்ட ரமீஸ் பிலாலி ஒவ்வொரு உரையாடலையும் ஞான விளக்கம் பொதிந்த புதிர் மாலையாகக் கோர்த்திருக்கிறார்.

உண்மை நிலையில் ஒவ்வொரு உரையாடலும் வாசகப் பங்கேற்பைக் கோரும் புதிர்த் தன்மை கொண்டவை. உதாரணத்துக்கு நூலிலிருந்து இரு உரையாடல்களை எடுத்துக்கொள்வோம்.

1. நூலகத்தில் ஒரு வாசகம் எழுதப்பட்டிருந்தது: ‘நூல் ஒன்றை எடுத்து அதில் உன்னைக் கண்டுபிடி.’
“சொல்லப்பட வேண்டிய அறிவுரை இதற்கு நேர் மாற்றமானது. ‘உன்னில் நூலைக் கண்டுபிடி’” என்றார் ஸூஃபி.

நம் அகத்தில் தேட வேண்டிய அந்த நூல் எது என்பதைச் சிந்தித்தால் வாசகர்கள் பல்வேறு புதிய பரிமாணங்களைச் சென்றடையக்கூடும். எனது விளக்கம் உங்கள் சிந்தனைக்கு:

“வானத்திலும் பூமியிலும் மறைந்துள்ளவற்றில் நின்றும் எதுவும் (லவ்ஹுல் மஹ்ஃபூள் என்னும்) தெளிவான குறிப்பேட்டில் பதிவு செய்யப்படாமல் இல்லை” என்பது திருமறையில் வரும் ஓர் உருவகம் – Metaphor (அல்குர்ஆன் 27:75). இந்த ‘லவ்ஹுல் மஹ்பூள்’ என்பதை நாமறிந்த புத்தகம் போன்று விளங்க முயலக்கூடாது. நாம் உலக வாழ்வில் உணரும் அனைத்து நிகழ்வும் லவ்ஹுல் மஹ்ஃபூளில் இருந்துதான் நம் உணர்வுலகத்திற்கு வருகின்றன. மறைவுலகம் – ஆலமுல் கைஃப் எனவும் இது அழைக்கப்படுகிறது. ஆரம்பம் முதல் இறுதி வரையுள்ள அனைத்தும் பதியப்பட்ட லவ்ஹுல் மஹ்ஃபூள் எனும் தெளிவான பதிவேட்டோடு நம் இதயத்துக்கு தொடர்புள்ளது என ஞானிகள் கூறுகின்றனர்.

அந்த “மறைவான உலகத்துக்குப் பறந்து செல்வதற்கு மனிதனுக்குள்ள சிறகுகள் எந்த மிருகத்துக்கும் இல்லை” என இமாம் கஸ்ஸாலி (றஹ்) குறிப்பிடுகின்றார்கள். ஆக, நம் அகச்சிறகுகளை விரித்துப் பறக்க அழைக்கிறது ‘உன்னில் நூலைக் கண்டுபிடி’ என்ற இந்த அற்புத வரி.

2. நபிகளாரின் பிறந்த நாளை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகக் கொண்டாடுகிறார்கள். மௌலிதுப் பாக்களை மனமுருகிப் பாடிக் கொண்டாடுதல், நபியின் வாழ்க்கை நிகழ்வுகளை நினைத்துக் கொண்டாடுதல், நபியின் போதனைகள் விளக்கப்படும் சொற்பொழிவுகளைக் கேட்டுக் கொண்டாடுதல், இன்னும் பிற.

“நபியின் பிறந்த நாளை எப்படிக் கொண்டாடுவது சிறப்பு?” என்று கேட்டோம்.

“முஹம்மதின் பிறப்பு உன்னில் நிகழட்டும்” என்றார் ஸூஃபி.

நபியின் சொல்லையும் செயலையும் பின்பற்றினால் அவர்களின் வெளித்தோற்றம் நம் உடலில் பிரதிபலிக்கும். நபியை நம் அகத்தில் பிரதிபலிக்கச் செய்யும் இஹ்சான் எனும் அகப்பார்வை நிலையை அடையும் வழியை நோக்கி அழைக்கிறது ‘முஹம்மதின் பிறப்பு உன்னில் நிகழட்டும்’ என்ற ஸுஃபியின் வரி.

இன்னொரு இனிய உரையாடல் நூலில் இடம்பெறுகிறது. சிறியவர்களிடம் அன்பு காட்டாதவரும், பெரியவர்களிடம் மரியாதை காட்டாதவரும் நம்மைச் சார்ந்தவர் அல்லர் என்பது நபிகளாரின் அருள்மொழி. “அன்பே சிறியவர்களுக்கான மரியாதை; மரியாதையே பெரியவர்களுக்கான அன்பு என்றும் இதனை விளங்கலாம். மேலும், சிறியவர்களில் இருக்கும் பெரியவர்களிடம் மரியாதை காட்டுவதும், பெரியவர்களில் இருக்கும் சிறியவர்களிடம் அன்பு காட்டுவதும் இதில் அடக்கம்” என்றார் ஸூஃபி.

ஆழ்மன வாசிப்பால் உரையாடல்கள் முன்வைக்கும் புதிர்களைக் கட்டவிழ்க்கக் கோரும் அற்புதமான நூலை நமக்குத் தந்த ரமீஸ் பிலாலிக்கும் வெளியிட்ட சீர்மை பதிப்பகத்துக்கும் நன்றியும், வாழ்த்துகளும்! ரமீஸ் பிலாலியின் அகத்தில் ஒளிரும் ஸுஃபியிடமிருந்து இன்னும் பல அரிய நூல்களை ஆவலுடன் எதிர்பார்க்கின்றோம்.

Related posts

Leave a Comment