நீருக்குள் மூழ்கிய புத்தகம் - நிஷா மன்சூர்நூல் அறிமுகம் முக்கியப் பதிவுகள் 

ஒரு ரொட்டித் துண்டை உண்ணும் தவம்!

Loading

“கடவுள் ஒரு காணாத மலர்
அம்மலரின் நறுமணமான காதல்
எங்கும் தெரிகிறது”

மெளலானா ரூமி பற்றி அறிந்த எல்லோரும் பிரபலமான இச்சம்பவத்தையும் அறிந்திருப்பர். மெளலானா ரூமியின் ஆளுமையையும் ஆகிருதியையும் வளர்த்தெடுத்த சம்பவம் அது. கொன்யா நகரத்தில் தனது மார்க்கப் பள்ளியில் மாணவர்களுடன் நீர்த்தடாகத்தின் அருகே அமர்ந்து அரிய நூல்களைக் கையில் வைத்தபடி உரையாடிக் கொண்டிருக்கிறார். பரதேசிக் கோலத்தில் இடையில் வந்த ஷம்ஸுத் தப்ரேஸ் அந்த நூல்களை நீர்த்தடாகத்தில் எறிந்து விடுகிறார். அவை மூழ்கியும் விடுகின்றன.

அவற்றில்தான் மெளலானா ரூமியின் தந்தையார் பஹாவுத்தீன் வலதின் மிக முக்கியமான நாட்குறிப்புகளின் தொகுப்பும் இருந்தது. “ஏன் இப்படிச் செய்தீர்கள்?” என்று ரூமி பதறுகிறார், படபடத்துச் சினந்து முகம் சிவக்கிறார். ஆனால் அமைதியான குரலில் ஷம்ஸுத் தப்ரேஸ் பதிலளிக்கிறார்: “நீ இதுவரை படித்துக்கொண்டும் பேசிக்கொண்டும் இருந்ததை வாழவேண்டிய நேரம் வந்துவிட்டது. உனக்கு அந்தப் புத்தகங்கள் வேண்டுமெனில் அவற்றை மீட்டுத் தருகிறேன். அவை நனையாமல் உலர்ந்தபடிதான் இருக்கும், பார்க்கிறாயா?” என்றவாறு நீர்த்தடாகத்தில் கைகளைவிட்டு அந்த நூல்களை வெளியே எடுக்கிறார். அவை சிறிதும் நனையவே இல்லை. மெளலானா ரூமியின் தந்தையார் ஷைஃகு பஹாவுத்தீன் வலது அவர்களின் அந்த நாட்குறிப்புகளின் தொகுப்புதான் இந்த “நீருக்குள் மூழ்கிய புத்தகம்“.

தொள்ளாயிரத்துப் பதினான்கு பக்கங்கள் கொண்ட “அல்-மஆரிஃப்” என்கிற நூலிலிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில பகுதிகள் மட்டுமே இதில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. இவை அனைத்தும் மெளலானா ரூமி மிகவும் அதிகமாக நேசித்த பகுதிகள் ஆகும். தன் தந்தையின் ஆன்மிக அனுபவங்களாகப் பதியப்பட்ட இந்த நூலின் வாயிலாகவே அதுவரை ஞானப் பாதையில் நடந்துகொண்டிருந்த மெளலானா ரூமியை அதிலிருந்து விலக்கி மாபெரும் பிரபஞ்ச மூலத்துடன் இணைக்க வைத்த ரசவாதத்தை நிகழ்த்தினார் ஷம்ஸுத் தப்ரேஸ்.

ஆனால், ஷைஃகு பஹாவுத்தீன் வலதின் இந்த நூலானது அவரது தினசரி வாழ்வின் ஆன்மிக அனுபவங்களையும் ஞான தரிசனங்களையும் உடல், மனம், உணவு, பாலியல் உணர்வுகள் ஆகியவற்றின் மூலத்தைத் தேடிப் பயணிக்கும் பாதையையும் பதிவு செய்திருக்கிறது. கோல்மன் பார்க்ஸ், ஜான் மொய்ன் ஆகியோர் பாரசீகத்திலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த இந்நூலை ரமீஸ் பிலாலி தமிழில் மிக அழகாகவும் நுணுக்கமாகவும் மொழியாக்கம் செய்துள்ளார். முழு நூலை வாசிக்கும்போது எந்த இடத்திலும் மொழிபெயர்ப்பாளரின் இடையூறு வெளிப்படவே இல்லை. இடையில் வரும் ‘அக்கார அடிசில்’ என்கிற ஒற்றைச் சொல் மட்டுமே காவிரி நதிக்கரை மனிதர் ஒருவரின் தலையீடு இந்நூலுள் இருப்பதை நினைவூட்டியதே அன்றி மற்றபடி மூல நூலையே அதன் புராதனத் தன்மையுடன் வாசித்துக்கொண்டிருந்த அனுபவமே கிடைத்தது.

இறைமறையுடனும் இறைத்தூதர் வாக்குகளுடனும் ஆத்மார்த்தமான உறவாடலோடு வளர்ந்த ஒரு மனிதர் தனது ஒவ்வொரு சொல்லிலும் செயலிலும் அந்த ஒளியின் தீற்றல்களை வெளிப்படுத்திக்கொண்டே இருப்பார். உலகத்தின் அதீத பாவனைகளுடனான உபசரிப்புகளையும், நவநாகரிகச் சாயம் பூசிய போலித்தனங்களையும் ஒருபோதும் அவர் உடலாலும் மனதாலும் அனுசரித்துச் செல்வதில்லை. அதேசமயம், ஒளிவுமறைவற்ற பரிசுத்தமான வாழ்வையே தமது பங்களிப்பாக இந்த உலகுக்கு நல்கிச் செல்வார்.

வியப்புமிகு மர்மமான இறைவனின் உள்ளமையையும், செத்தையும் கசப்புமானதொரு குழப்பக் கலவையான மனிதனின் சுயத்தையும் உணர்ந்து தெளிவதற்கான அழகிய பயணமாக மிளிர்கிறது இந்த நூல். நம் தமிழ் மண்ணின் ஞான ஆசானான குணங்குடி மஸ்தான் சாகிபு அப்பா,

“முட்டை பொரிப்பேன் முழுக்கோழி யும்பொரிப்பேன்
றட்டைப் பீங்கானிற் றருவேன் மணோன்மணியே”

என்று தன்னையே உணவாக ரட்சகன் முன் சமர்ப்பிக்கும் தொனியைப் போலவே,

“கருவறை எனும் அடுப்பில் நீயொரு பச்சை மாவாக இருந்தாய்,
உலகின் நெடிய விருந்து மேசைக்கு இன்னும் வெந்து கொண்டிருப்பவனாக!”

என்று கடவுள் சுவைக்கும் வழிகளில் ஒன்றாக தானே ஆகிவரும் பேரின்ப சமர்ப்பணமாக ஷைஃகு பஹாவுத்தீன் வலது தனது உணர்வுகளை வெளிப்படுத்துகிறார்.

“நாம் புழுதியிலிருந்து எழுகிறோம், குறுகிய கஷ்டஜீவனம் செய்து வென்ற பின் மீண்டும் புழுதிக்குள் மறைகிறோம்” என்கிற குறிப்பின் மூலம் மனித வாழ்வின் நிலையின்மையைச் சுட்டினாலும், அந்த வாழ்வை அர்த்தமுள்ளதாக அமைத்து ரட்சகனின் திருப்பொருத்தத்தில் திளைக்கும் வழிகளையும் சொல்லிக் காட்டுகிறார்.

“முட்களும் விஷச் செடிகளும் காட்டுத்தனமாகச் செழிக்கின்ற, ஆனால் கனி மரங்களும் ரோஜாக்களும் காய்கறிகளும் வளர்வதற்குக் கவனிப்பு தேவைப்படுகின்ற உலகமொன்றில் இருக்கிறோம் நாம்.”

“உயிர்கள் இருக்கும் இடத்தில் கடவுள் இருக்கிறார், நாம் நடைபோடும் இப்பூமி மரணத்தின் வயல்”

என்கிறார் ஷைஃகு பஹாவுத்தீன்.

ஒரு ரொட்டித்துண்டு அல்லது ஒரு கவளம் சோறு நம் சாப்பாட்டு மேசைக்கு வர சூரியனும் சந்திரனும் அதனதன் பயணப்பாதையில் நேர்த்தியாகச் சுழலவேண்டி இருக்கிறது. காலநிலை மாற்றங்கள் முறையாக நிகழ்ந்து, நிலம் நீர் காற்று ஆகாயம் நெருப்பு ஆகிய ஐம்பூதங்களும் அவற்றின் பணியைத் துல்லியமாகச் செய்து முடித்து, மனிதனும் விலங்குகளும் தத்தம் கடமைகளைச் செவ்வனே நிறைவேற்றினாலே அன்றி இது சாத்தியமில்லை. இச்சுழற்சியின் இறுதியில் உணவைச் சுவைக்கும் மனிதனின் நாவு இறைவனைப் புகழ்கிறது. பிரபஞ்சத்தின் அணுக்களில் ஒன்றாக, அல்லது அணுக்களின் தொகுப்பாக இருக்கும் மனிதன் தன்னுள் பிரபஞ்சத்தை உணர்ந்துகொள்ளும் ஆன்மிகப் பயணத்தைச் சாத்தியமாக்கும் பாலமாக விளங்குகிறது இந்நூல்.

வெறுமனே செயல்களின்றிச் சும்மா இருப்பதை அல்ல, முழு வீச்சுடன் இறுதி மூச்சுவரை செயல்படத் தூண்டும் மனிதச் சுயத்தின் பங்களிப்பின் அவசியத்தையே திரும்பத்திரும்ப பேசுகிறார் ஷைஃகு பஹாவுத்தீன்.

“நீங்கள் கடலில் வீழ்வதாக வைத்துக் கொள்வோம். நீங்கள் கைவிட்டு மூழ்கிப் போகலாம்; அல்லது முயன்று நீந்திக் கரை சேரலாம். ஈடேற்றம் என்பது நீங்கள் முடிவு செய்வதே” என்பது போன்ற கறாரான முழக்கங்கள் நிறையவே இருக்கின்றன.

துயரம்தான் இதயத்தைத் திறக்கும் சாவி. வலியும் சிரமங்களும் மழைக்கால மின்முகில்கள். கண்ணுக்குத் தெரியும் இவ்வுலகம் உடலை வருத்தும் துயர்களின் வீடு. ஆனால் ஆன்மா இங்கே மேலும் உயிர்ப்படைகிறது.

“வாழ்வின் துயரங்கள் எத்தகையவை, அவற்றைச் சமநிலையுடன் அணுகுவது எவ்விதம்” என்கிற சூத்திரமே இந்நூலின் மையப்பொருளாகிறது.

இறைவன் யார்?
மனிதன் யார்?
இவ்வுலகம் எத்தகையது?
பிரார்த்தனை என்றால் என்ன?
இறைவழிபாடு என்பது என்ன?
உடலின் தேவைகளும் தீர்வுகளும் என்ன?
நஃப்ஸ் எனும் மனிதச் சுயத்தின் தாகமும் நீரும் யாவை?
மனிதர்களின் மீதான காதலின் வரையறைகளும் ஆகிருதியும் எவை?
இறைவன் மீதான பயமும் பக்தியும் நேசமும் வெளிப்படுவது எங்ஙனம்?
ஒவ்வொரு அணுவையும் இறைநேசத்தில் திளைக்கவைப்பது எப்படி?
ஒவ்வொரு செயலையும் இறைவணக்கமாக ஆக்கிக்கொள்ளும் வழிவகை யாது?

என்பன போன்ற ஆழமும் அகலமும் மிகுந்த கேள்விகளுக்குப் பரிவன்புடன் அருகில் அமரவைத்து விளக்கமளிக்கும் ஆசானின் உரையாடலாக “நீருக்குள் மூழ்கிய புத்தகம்” அமைந்துள்ளது.

ஒவ்வொரு மனிதனும் தன் உயிர்த்துடிப்பின் லயத்தால் வாசிக்க வேண்டிய புத்தகம் இது. அந்த லயத்தை ஒழுங்குபடுத்திச் செவ்வையாக்குவதுடன், ஆயிரத்தெட்டிதழ்களால் மலர்ந்து மணம் வீசும் பிரபஞ்சமெனும் மாயமலரின் இதழ்களில் ஒன்றாகக் கலந்து விடும் ரசவாதத்தை இந்தப் புத்தக வாசிப்பு நிகழ்த்தும் என்பதில் ஐயமில்லை.

(இந்து தமிழ் திசையில் வெளிவந்த நூல் மதிப்புரையின் சுருக்கப்படாத வடிவம்.)

Related posts

Leave a Comment