seermai uvais ahamedநூல் அறிமுகம் முக்கியப் பதிவுகள் 

வஹ்ஹாபியம்: ஒரு விமர்சன ஆய்வு – அணிந்துரை

Loading

இங்கிலாந்தைப் பூர்வீகமாகக் கொண்ட பேராசிரியர் ஹமீது அல்கரின் ‘வஹ்ஹாபியம்: ஒரு விமர்சன ஆய்வு’ என்ற இந்நூல் வஹ்ஹாபியத்தை வரலாற்றுபூர்வமாகவும் கோட்பாடுரீதியிலும் கூராய்வு செய்யும் ஒரு முக்கிய ஆக்கம். இதை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு ஆற்றொழுக்கான நடையில் மொழிபெயர்த்திருக்கிறார் சகோதரர் உவைஸ் அஹ்மது. மொழிபெயர்ப்பாளருக்கு இந்தப் புத்தகத்தின் பேசுபொருளில் ஆழ்ந்த வாசிப்பு இருப்பதும், நூலாசிரியரின் பிற ஆக்கங்கள்மீது அவருக்கு அதிகப் பரிச்சயம் இருப்பதும் இந்நூலை மிக நேர்த்தியாக வெளிக்கொணர்ந்திருக்கிறது. அவரின் இமாம் அபூ ஹனீஃபா: வாழ்வும் பணிகளும், மக்கா படுகொலைகள் (1987) ஆகிய மொழியாக்கங்களைத் தொடர்ந்து இது வெளியாவது குறிப்பிடத்தக்கது.

ஹமீது அல்கரின் இந்தப் புத்தகம் வஹ்ஹாபியத்தின் தந்தையான முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாபின் பூகோளப் பின்னணி, அறிவுத் தகைமை போன்ற அடிப்படையான அம்சங்கள் தொட்டு பலவற்றை விவாதிக்கின்றது. சுன்னீ இஸ்லாமிய மரபிலிருந்து வஹ்ஹாபியம் எவ்வாறு விலகி நிற்கிறது, நவீன கால வரலாற்றில் தோன்றிய பிற சீர்திருத்த இயக்கங்களிலிருந்து அது வேறுபடும் புள்ளிகள் என்னென்ன, பிறவற்றோடு வஹ்ஹாபிய இயக்கத்தை ஒப்பிடுவது ஏன் தவறு உள்ளிட்ட பல கேள்விகளுக்கு இது விடையளிக்கிறது. குறிப்பாக சஊதி அறபியாவின் உருவாக்கத்தில் வஹ்ஹாபியத்தின் செல்வாக்கு, அது ஏகாதிபத்திய சக்திகளுடன் கொண்ட உறவு, பண்பாட்டு வெளியில் அதன் பாதிப்புகள், முஸ்லிம்களிடையே அது கூர்தீட்டியிருக்கும் குறுங்குழுவாதம் ஆகியவையும் இப்புத்தகத்தில் விவரிக்கப்படுகின்றன.

வஹ்ஹாபியத்தின் வேர் முதல் நுனி வரை அலசும் இந்நூலின் ஒவ்வொரு பகுதியையும் தனித்தனியே எடுத்துக்கொண்டு விரிவாக ஆராய முடியும். அந்த அளவுக்குச் செறிவான உள்ளடக்கங்களைக் கொண்டிருக்கிறது இவ்வாக்கம். தாங்கள் மட்டுமே ஓரிறைவாதத்தை முறையாகக் கடைப்பிடித்து ஒழுகுபவர்கள் என்றும், தாங்களே நூதன வழக்கங்களைத் தவிர்த்து தூய இஸ்லாத்தைப் பின்பற்றுபவர்கள் என்றும் ஏகபோக உரிமை கோரும் வஹ்ஹாபிகளின் அடித்தளத்தை இப்புத்தகம் கேள்விக்குட்படுத்துகிறது.

பெரும்பாலும் நம்மிடையே வஹ்ஹாபியம், வஹ்ஹாபி ஆகியன வசைச்சொற்களாக மட்டுமே பாவிக்கப்படுகின்றன. வஹ்ஹாபியம் எனும் பதம் அந்த இயக்கத்துக்குள் தோன்றவில்லை என்பதையும், வெளியிலுள்ளவர்களால் அநேகச் சந்தர்ப்பங்களில் இழிவுபடுத்தும் உள்நோக்கத்துடன் அது பிரயோகிக்கப்படுவதாகவும் நூலாசிரியர் தொடக்கத்திலேயே குறிப்பிட்டுக்காட்டுகிறார். மரபார்ந்த முஸ்லிம் தரப்பு தர்காவை தரிசிப்பதில் உடன்பாடில்லாத அனைவரையும் இச்சொல்லைக் கொண்டு அடையாளப்படுத்தி வந்திருக்கிறது. இன்னொரு பக்கம் காலனித்துவ சக்திகள், வலதுசாரிகள், லிபரல்கள், இடதுசாரிகள் போன்றோரும் இதையொரு எதிர்மறை முத்திரை வார்த்தையாகக் கையாள்வதை நாம் அவதானிக்க முடியும்.

ஹமீது அல்கரின் இந்தப் புத்தகம் வஹ்ஹாபியம் குறித்த கோட்பாட்டு ரீதியான விமர்சனத்தை முன்வைப்பதுடன், ஒரு பரந்துபட்ட பார்வையையும் தெளிவையும் வழங்குகிறது. ஆனால், இந்தியச் சூழலில் வலதுசாரிகள், லிபரல்கள் முதலானோர் வஹ்ஹாபியம் எனும் சொல்லாடலை எப்படித் தங்களின் அரசியல் காய்நகர்த்தலுக்குத் தகுந்தார்போல் பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்ற புரிதலையும் நாம் பெற்றிருப்பது அவசியம் என்று கருதுகிறேன்.

வலதுசாரி ஆதரவாளர்களும் லிபரல்களும் தங்களிடமிருக்கும் இஸ்லாமிய வெறுப்பை வஹ்ஹாபியத்தின் பெயரால் வெளிப்படுத்தும் போக்கு சமீப காலமாக அதிகரித்திருக்கிறது. நேரடியாக முஸ்லிம்களை எதிரிகள் என்று சொல்வதற்குப் பதிலாக, முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் பாணியில் ‘நல்ல முஸ்லிம் X கெட்ட முஸ்லிம்’ எனும் இருமை எதிர்வுகளை அவர்கள் ஏற்படுத்துகிறார்கள். இதையே ‘ஸூஃபித்துவம் X வஹ்ஹாபியம்’ என்று வேறு விதத்தில் கட்டமைக்கிறார்கள்.

பொதுவாக, இவர்கள் இந்துப் பண்பாட்டையும் இந்துக்களையும் தாராளத்தன்மை, மென்மை, ஒழுக்கம் போன்ற நேர்மறை அம்சங்களுடனும், இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் வன்முறை, சகிப்பின்மை, காட்டுமிராண்டித்தனம் போன்ற எதிர்மறை அம்சங்களுடனும் சாரம்சப்படுத்தும் மனஅமைப்பு கொண்டவர்கள். இவர்களைப் பொறுத்தவரை, எந்த அளவுக்கு ஒரு முஸ்லிமிடம் இஸ்லாமும், அதன் அடையாளங்களும் வெளிப்படுகின்றதோ அந்த அளவுக்கு அவர் இந்தியப் (இந்துப்) பண்பாட்டுக்கு அச்சுறுத்தலானவர், இந்நாட்டின் ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்துக்கும் எதிரானவர். இந்தப் பின்னணியில்தான் இஸ்லாமியப் பண்பாட்டு வெளிப்பாடுகள் அனைத்தும் இவர்களால் வஹ்ஹாபியம் என்று முத்திரை குத்தப்படுகின்றன. பொதுநீரோட்டத்துக்குக் குந்தகம் விளைவிப்பதாகவும் சித்தரிக்கப்படுகின்றன.

இரண்டாண்டுகளுக்கு முன்பு சமூக வலைத்தளங்களில் ஒரு சர்ச்சை எழுந்தது. ரம்ஜான் என்று சொல்லிவந்த முஸ்லிம்கள் இன்றைக்கு அதை றமளான் என்று அறபி உச்சரிப்புக்கு நெருக்கமாகப் பிரயோகிப்பது வஹ்ஹாபியத்தின் செல்வாக்கைக் குறிப்பால் உணர்த்துவதாக லிபரல் வட்டாரங்கள் கூக்குரலிட்டன. இந்நாட்டை அறபுமயமாக்கும் சதித் திட்டத்தின் ஒரு பகுதியாகவும் இதை அவர்கள் முன்வைத்தார்கள். அவர்கள் இப்படிச் சொல்வது தவறானது மட்டுமல்ல, முஸ்லிம்களை அந்நியப்படுத்தும் அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றே கருத முடிகிறது.

ரம்ஜானா, றமளானா என்ற இந்த விவாதம் பிரச்னைக்குரிய ஒன்று. உலகமயம், அபரிமிதமான தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி, தொலைதூரப் பயணம் இலகுவாகியிருப்பது முதலான காரணங்களால் முன்பைக் காட்டிலும் மிக எளிதாக இப்போது பிற பண்பாடுகளுடனும் மொழிகளுடனும் ஊடாட்டம் சாத்தியப்பட்டிருக்கிறது. இதன் எதிரொலியை எல்லாச் சமூகங்களிடமும் காண முடியும். அந்த வகையில், அறபு நாடுகளில் பணிபுரியும் முஸ்லிம்களிடம் அறபி மொழி, அறபுக் கலாச்சார தாக்கம் இருப்பது இயல்பு. அது இங்கு ஏற்படுத்தும் பண்பாட்டுக் கலப்பையும் மொழி சார்ந்த தாக்கத்தையும் கண்டு பதறுவதற்கு ஒன்றுமில்லை. இன்னும் சொல்லப்போனால், பன்னெடுங்காலமாக இப்படியான பண்பாட்டுப் பரிவர்த்தனைகள் நிகழ்ந்துகொண்டுதானே இருக்கின்றன? அதை ஏன் ஓர் அபாயமாகப் பார்க்க வேண்டும்? அமெரிக்கா சென்று திரும்பும் இந்தியர்களின் ஆங்கிலத்திலும் நடைமுறையிலும் ஏற்படும் மாற்றத்தைக் கண்டு நம்மில் யாரும் இந்த அளவுக்குப் பதறுவதில்லையே ஏன்?

இது ஒருபுறமிருக்க, என் தனிப்பட்ட அனுபவம் ஒன்றையும் இங்கு சுட்டிக்காட்டல் தகும். ஒருமுறை ஓர் இந்து நாத்திகர் என்னிடம் ஐவேளை தொழுவீர்களா, மாமிசம் உண்ணும்போது ஹலால் பார்ப்பீர்களா, பெண்கள் பர்தா அணியவேண்டுமா போன்ற சில கேள்விகளை ஒவ்வொன்றாகக் கேட்டார். ஆரம்பத்தில் எனக்குச் சற்றுக் குழப்பமாக இருந்தாலும் பிறகு புரிந்துகொண்டேன், நான் வஹ்ஹாபியா, இல்லையா என்பதைச் சோதனை செய்யவே அவர் இப்படியெல்லாம் கேட்கிறார் என்று. நேரடியாக அவரிடமே இதுகுறித்துக் கேட்டபோது, இப்படியான வழக்கங்களெல்லாம் கடந்த 20 ஆண்டுகளாகவே இருப்பதாகவும், பாஜக இங்கே வளர்வதற்கு இதுவொரு முக்கியக் காரணம் என்றும் பதிலளித்தார். அவர் தொடர்ந்து பேசும்போது, முஸ்லிம்களிடையே வலுப்பெறும் வஹ்ஹாபியம் (இதை வேறு வார்த்தையில் சொன்னால் அடிப்படைவாதம்/ கடுங்கோட்பாட்டுவாதம்/ பழமைவாதம்/ தீவிரவாதம்) அப்பாவி இந்துப் பொதுஜனத்தையும் மாசுபடுத்துகிறது என்கிற ரீதியில் அவரின் வாதங்கள் அமைந்தன. அவரின் சிறுபிள்ளைத்தனமான கருத்துகள் (விஷமக் கருத்துகள் என்று சொன்னாலும் தவறில்லை) எனக்கு ஆச்சரியமளிக்கவில்லை.

ஏனெனில், தமிழ்ச் சிறுபத்திரிகைகளில் சில ஆள்காட்டிகள் (Native Informers) இப்படியான கதையாடலை பல்லாண்டுகளாகக் கட்டமைத்து வந்திருப்பது தெரிந்த விஷயம்தான். அதன் விளைவாகவே இப்படியான தப்பெண்ணங்கள் பல தரப்பினரிடமும் உருப்பெற்றிருக்கின்றன. தமிழ்ச் சூழலில் ஸூஃபி X வஹ்ஹாபி என்று இருமை எதிர்வுகளைக் கட்டமைத்ததிலும் இந்த ஆள்காட்டிகளுக்குப் பெரும் பங்கிருக்கிறது. தங்களின் முஸ்லிம் பின்புலம் தரும் மைலேஜைக் கொண்டே பொதுவெளியில் இஸ்லாமியப் பண்பாட்டின் மீது இவர்கள் வெறுப்பைப் பரப்பினார்கள். பொதுப்புத்தியில் மண்டிக்கிடக்கும் இஸ்லாமோ ஃபோபியாவை மேலும் வலுப்படுத்தும் இவர்களுக்கு வாசகர்கள் பெரும்பாலும் முஸ்லிமல்லாதோராக இருப்பது தற்செயலான ஒன்றல்ல. இங்கு மட்டுமின்றி உலகெங்கிலும் இப்படியான ஆள்காட்டிகள், தொழில்முறை வஹ்ஹாபி எதிர்ப்பாளர்கள் அதிகார வர்க்கத்தின் துணையுடன் செயல்பட்டு வருவது சுட்டிக்காட்டத்தக்கது.

பேராசிரியர் ஹமீது அல்கரின் இந்தக் காத்திரமான விமர்சன ஆய்வு வஹ்ஹாபியத்தை அதற்கே உரிய வரலாற்றுச் சூழமைவில் வைத்து விசாரணை செய்யும். அதை நெறிபிறழ்வு அல்லது குறைந்தபட்சம் ஒழுங்குமீறல் என்றே அடையாளப்படுத்தும் நூலாசிரியர், இந்தப் புத்தகத்தை எழுதியதற்கு பிரிவினைவாத நோக்கம் ஏதும் இல்லை என்பதைத் தெளிவுபடுத்துகிறார். வஹ்ஹாபியம் பற்றி மேம்போக்காக மட்டுமே விவாதிக்கப்படும் தமிழ்ச் சூழலில் இந்நூல் ஒரு குறிப்பிடத்தக்க பாய்ச்சலை ஏற்படுத்தக்கூடும்.

Related posts

Leave a Comment