islamophobia in tamil naduநூல் அறிமுகம் முக்கியப் பதிவுகள் 

மையநீரோட்டத்தில் இஸ்லாமோ ஃபோபியா – அ. மார்க்ஸ் அணிந்துரை

Loading

அஹ்மது ரிஸ்வானை அவர் கல்லூரி மாணவராக இருந்த காலத்திலிருந்து அறிவேன். இஸ்லாமும் முஸ்லிம்களும் உலகளவில் சந்திக்கும் பிரச்சினைகள்குறித்த கூர்மையான பார்வையும் புரிதலும் உடையவர். பட்டப்படிப்பு முடித்தவுடன் மேற்படிப்பிற்கு அவர் இதழியலைத் தேர்வு செய்தது என்பதேகூட இன்றைய சூழலில் வெளிப்படும் வெறுப்பு அரசியலுக்கு எதிராக மக்கள் மத்தியில் உண்மைகளைப் பேசும் நோக்கில்தான். அதை அவர் செவ்வனே செய்துவருகிறார். அந்த வகையில், அவர் meipporul.in இணையதளத்திற்கு எழுதிய முக்கியமான இருபது கட்டுரைகளின் தொகுப்பு இது. நூலாக வெளிவரும் அவரது முதல் தொகுப்பு. இன்னும் அவர் இதுபோன்ற பல நூல்களை எழுத என் மனமார்ந்த வாழ்த்துகள்!

இந்நூலிலுள்ள மிக முக்கியமானதும், மிகப் பெரியதுமான கட்டுரை இத்தொகுப்பில் முதலாவதாக அமைந்துள்ள ‘இந்து ஓரியண்டலிசத்தின் பன்முகங்கள்’ என்பதுதான். இத்தலைப்பில் மானுடவியலாளர் இர்ஃபான் அஹ்மது ஆற்றிய விரிவான உரை ஒன்றின் அடிப்படையில் ரிஸ்வான் இதைத் தமிழில் தந்துள்ளார். ‘இந்து ஓரியண்டலிசம்’ எனும் கருத்தாக்கத்தை முதன்முதலில் தெளிவாகத் தமிழுக்கு அறிமுகப்படுத்தும் வகையில் எழுதியிருக்கிறார். விரிவான முதல் கட்டுரையைத் தவிர இதர கட்டுரைகள் பலவும் இன்று முஸ்லிம்கள் சந்திக்கும் பல்வேறு பிரச்சினைகளை மிக நுணுக்கமாகப் பேசுகின்றன.

காந்தி ஒருமுறை இப்படிச் சொன்னார்: “எண்ணிக்கையிலும், பிற அம்சங்களிலும் பலவீனமான தன் குடிமக்களை ஒரு தேசம் எவ்வாறு நடத்துகிறது என்பதை வைத்தே அந்த அரசின் பெருமையை நாம் மதிப்பிட வேண்டும்.” இந்தியாவில் முஸ்லிம்கள் சிறுபான்மையினராக இருந்தாலும், எண்ணிக்கையில் அப்படி ஒன்றும் குறைந்தவர்கள் அல்லர். உலகில் அதிக முஸ்லிம்கள் வசிக்கும் இரண்டாவது நாடு நம்முடையது. எனினும், குடிமக்களின் வளர்ச்சியைக் கணிப்பதற்கு அடிப்படையாக உள்ள விஞ்ஞானபூர்வ அணுகுமுறைகளின் வழியாக அவர்களின் நிலையைப் பார்த்தோமானால், எல்லா மட்டங்களிலும் அவர்கள் ஆகப்பின்தங்கியே உள்ளனர். சச்சார் ஆணையம் முதலான இந்திய அரசால் அமைக்கப்பட்ட ஆணையங்கள் விரிவான தரவுகளுடன் இதை உறுதியாக நிறுவியிருக்கின்றன.

அதேபோல், கடந்த சில ஆண்டுகளில் அவர்கள் மீதான வன்முறைகள் பெரியளவில் அதிகரித்திருப்பதை நாம் அறிவோம். வன்முறையாளர்களின் மனநிலை மட்டுமின்றி, வன்முறைக்கு ஆட்படுபவர்களின் மனநிலையும் மாறியிருக்கிறது. முஸ்லிம்கள் இன்று வன்முறையாளர்களின் ‘பாதுகாப்பான எதிரிகளாக’ ஆகியுள்ளனர் என்கிறார் அஜய் குடாவர்த்தி எனும் ஆய்வாளர். முஸ்லிம்களை யார் வேண்டுமானாலும் கொல்லலாம், வன்முறைக்கு ஆளாக்கலாம்; அதற்குக் காரணமான வன்முறையாளர்களுக்குப் பாதுகாப்பு உண்டு!

இதுபோக, ரயிலில் பயணம் செய்யும் ஒரு முஸ்லிம் மாட்டுக்கறி உண்பதாகச் சொல்லி ஒரு கும்பல் தாக்கினால் சக பயணிகள் அதைத் தட்டிக்கேட்கும் நிலைகூட இன்று இல்லை. சக குடிமக்களும் புதிய சூழலுக்குத் தகவமைக்கப்பட்டுவிட்டனர். அரசும் காவல்துறையும் தங்களுக்கானதல்ல என்ற எண்ணம் சிறுபான்மையினரிடமும், அரசும் காவல்துறையும் நம்மை ஒன்றும் செய்யாது எனும் எண்ணம் வன்முறையாளர்களிடமும் இன்று வெற்றிகரமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. முஸ்லிம்களைத் தாக்குவதும் கொல்வதும் இன்று சர்வ சாதாரணமான செய்திகளாகிவிட்டன.

“சிறுபான்மை மக்களைப் பணயமாக்கி, இந்துப் பெரும்பான்மையை பாஜக வருடிக்கொடுக்கும் நிலை அரசு நிறுவனங்களுக்குள்கூட பரவிவிட்டது. சட்டத்தின் கீழ் குடிமக்கள் எல்லோரும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்பதெல்லாம் காலாவதி ஆகிவிட்டது… முஸ்லிம்களையும் இதர சிறுபான்மையினரையும் வன்முறையாளர்களின் தாக்குதலிலிருந்து காப்பாற்ற (இந்திய) அரசு தவறிவிட்டது. அதற்கு மாறாக, வன்முறையாளர்களுக்கு ஆதரவையும் பாதுகாப்பையும் அளிக்கிறது” எனப் புகழ்பெற்ற Human Rights Watch அமைப்பின் தெற்கு ஆசியாவிற்கான தலைவர் மீனாட்சி கங்குலி கூறியுள்ளது இங்கே குறிப்பிடத்தக்கது.

இந்தியாவிலும் சர்வதேச அளவிலும் முஸ்லிம்களுக்கு எதிரான இன்றைய சூழலை விளக்கும் முக்கியமான கட்டுரைகளையும் நேர்காணல்களையும் உள்ளடக்கியுள்ளது ரிஸ்வானின் இந்த நூல். சோவியத் மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் வீழ்ச்சிக்குப் பின் உருவான ஒருதுருவ உலகில் உருவாகியிருக்கும் இஸ்லாமிய வெறுப்பு குறித்த கருத்தாழமிக்க ஆக்கங்களுடன் வெளிவரும் இத்தொகுப்பு, கடந்த சில ஆண்டுகளில் நடந்த முக்கிய நிகழ்வுகள் தொடர்பான ஓர் முக்கியமான ஆவணம் என்றும் சொல்லலாம். ஜனநாயகத்திலும் மதச்சார்பின்மையிலும் அக்கறையுள்ள நாம் இத்தகைய நூல்களை மக்கள் மத்தியில் கொண்டுசெல்வதற்கு முன்கை எடுக்க வேண்டியது அவசியம். ரிஸ்வானுக்கு என் அன்பும் வாழ்த்துகளும்.

அ.மார்க்ஸ்,
குடந்தை, நவம்பர் 15, 2021

Related posts

Leave a Comment