கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

புரட்சியாளர் ஃபைஸ் அஹ்மது ஃபைஸை இஸ்லாம் நீக்கம் செய்தல்

Loading

இந்தியத் துணைக் கண்டத்திலுள்ள பல முற்போக்கு வட்டாரங்களில் ஃபைஸை ஒரு கம்யூனிசக் கவிஞராகவே பார்க்கின்றனர். இந்தியாவிலுள்ள கம்யூனிசக் கட்சிகள் ஃபைஸின் கவிதைகளைக் கொண்டாடுவதுடன், தம் கொள்கைப் பிரச்சாரங்களுக்குத் தேவையான கவர்ச்சியான பல முழக்கங்களைக்கூட அவரின் கவிதைகளிலிருந்து வடித்தெடுத்துக்கொள்கின்றன. முதன்மையான இடதுசாரிக் கட்சிகள் தம் அரசியல் தேவைக்காக அவரின் கவிதைகளைத் தொடர்ச்சியாகப் பயன்படுத்தி வருகின்றன.

ஃபைஸின் புரட்சிகரக் கவிதைகளுக்கும், அவரின் சமயமான இஸ்லாத்துக்கும் துளியும் சம்பந்தமில்லை என்று சிலர் கருது​கின்றனர்; வேறு சிலரோ கவிதைகளிலிருக்கும் இஸ்லாத்தின் செல்வாக்கைத் தற்செயலான ஒரு விபத்தாகக் காண்கின்றனர்.

பல முற்போக்கு சமூக ஆர்வலர்கள் தங்களுடன் பொருத்திப் பார்க்க முடிந்த ஒரு முக்கிய ஆளுமை ஃபைஸ். சமூகநீதி சார்ந்த கவிதைகளில் அவரின் புரட்சிகரச் சிந்தனை வெளிப்பாட்டைப் பார்க்கலாம். ‘போல் கே லப் ஆசாத் ஹைன் தேரே’, ‘ஹம் தேக்ஹேன்கே’, ‘ஏஹ் தாக்ஹ் தாக்ஹ் உஜாலா’ போன்ற அவரின் கவிதைகள் எழுச்சிமிகு கருத்துகளைப் பரப்புவதற்கு இந்தத் துணைக்கண்டம் முழுக்கப் பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றன.

முத்திரை பதித்த, மிகப் பிரபலமான ‘ஹம் தேக்ஹேன்கே’ கவிதையைப் பகுப்பாய்வு செய்வோம்:

ஹம் தேக்ஹேன்கே
லாஸிம் ஹை கே ஹம் பி தேக்ஹேன்கே
வோ தின் கே ஜிஸ்கா வாதா ஹை
ஜோ லவ்-ஏ-அசல் மெய்ன் லிக்ஹா ஹை
ஹம் தேக்ஹேன்கே

நாம் பார்ப்போம்
நிச்சயமாக நாமும் பார்ப்போம்
வாக்களிப்பட்ட அந்நாளில்
அந்த நிலையான பலகையில் எழுதப்பட்டுள்ளதை
நாம் பார்ப்போம்

குர்ஆன்குறித்து குறைந்தபட்சம் அறிந்தவருக்குக்கூட தெரியும், ‘லவ்-ஏ-அசல்’ (நிலையான பலகை) எனும் பதம் எதைக் குறிக்கிறது என்று. பிரபஞ்சத்தின் தொடக்கம்முதல் முடிவுவரை நிகழக்கூடிய அனைத்தும் லவ்ஹுல் மஹ்ஃபூழ் எனும் பலகையில் பதிவு செய்யப்பட்டிருப்பதாய் குர்ஆன் கூறுகிறது. இந்தக் கவிதையின் தொடக்கத்தில், அந்தப் பலகையில் வாக்களிக்கப்பட்டிருக்கும் நாளை நாம் அனைவரும் காண்போம் என்று பிரகடனப்படுத்து​கிறார் ஃபைஸ். சிலர் “யார் வாக்களித்தது, எங்கே வாக்களிக்கப்பட்டது?” என்று வினவக்கூடும். அடுத்துவரும் கவிதை வரிகள், இறைவன் வாக்களித்திருப்பதாகவும், குர்ஆனில் வாக்களிக்கப்பட்டு இருப்ப​தாகவும் தெளிவுபடுத்துகிறது.

ஜப் ஸுல்ம்-ஓ-சிதம் கே கோஹ்-ஏ-கரன்
றுய் கி தரஹ் உர் ஜாயேன்கே
ஹம் மெஹ்கூமோன் கே பாவோன் தலே
யே தஹ்ர்த்தி தஹ்ர் தஹ்ர் தஹ்ர்கேகி
அவ்ர் அஹ்ல்-ஏ-ஹகம் கே சர் ஊபர்
ஜப் பிஜிலி கர் கர் கர்கேகி

பிரம்மாண்டமான மலைபோன்ற கொடுங்கோல் ஆட்சி
பஞ்சுபோலப் பறந்து சிதறும் அவ்வேளையில்
ஒடுக்கப்பட்ட நம் பாதங்களுக்கடியில்
பெருஞ்சத்தத்துடன் பூமி அதிரும் அவ்வேளையில்
நம் ஆட்சியாளர்களின் தலை மீது
மின்னல் தாக்கும் அவ்வேளையில்

மலைகள் பஞ்சுபோலப் பறப்பது, மனிதர்களின் பாதங்களுக்கடியில் பூமி அதிர்வது, தலைமீது மின்னல் தாக்குவது ஆகிய இம்மூன்றும் இறுதித் தீர்ப்பு நாளுக்கு முந்தைய உலக அழிவைக் காட்சிப்​படுத்தும் மிக முக்கியமான குர்ஆனிய வாக்கியங்களாகும்.

உதாரணங்கள்:

“அந்நாளில் சிதறடிக்கப்பட்ட ஈசல்களைப் போன்று மனிதர்கள் ஆகிவிடுவார்கள். மேலும், மலைகள் கொட்டப்பட்ட பஞ்சைப் போன்று ஆகிவிடும்.” (குர்ஆன் 101: 4-5)

“பூமி, முழுபலத்துடன் உலுக்கப்படும்போது, மேலும் பூமி தன்னுள்ளிருக்கும் சுமைகள் அனைத்தையும் வெளிக்கொணர்ந்து விடும்போது, மேலும், ‘அதற்கு என்ன நேர்ந்துவிட்டது?’ என்று மனிதன் கேட்கும்போது…” (குர்ஆன் 99: 1-3)

ஜப் அர்சே க்ஹுதா கே காபே சே
சப் புத் உட்வே ஜாயேங்கே
ஹம் அஹ்ல்-ஏ-சஃபா மர்தூத்-ஏ-ஹரம்
மஸ்நத் பே பேடே ஜாயேங்கே
சப் தாஜ் உசாலே ஜாயேங்கே
சப் தஹ்த் கிராயே ஜாயேங்கே

இறையில்லம் கஅபாவிலிருந்து
சிலைகளனைத்தையும் அகற்றும் வேளையில்
அப்புனிதத்தலத்திலிருந்து வெளியேற்றப்பட்ட
நம்பிக்கையாளர்களாகிய நாம்
மெத்தைகளில் அமர்ந்திடுவோம்
அப்போது மகுடங்களனைத்தும் வீசியெறியப்படும்
அரியணைகளனைத்தும் வீழ்த்தப்படும்

நபிகள் நாயகம்  தன் தூதுத்துவ வாழ்வின் இறுதிப் பகுதியில் கஅபாவை வெற்றிகொண்டு நூற்றுக்கணக்கான சிலைகளை அகற்றி வெற்றி வாகைசூடிய காட்சியை ஃபைஸ் இந்த வரிகளில் பயன்படுத்தியுள்ளார். ‘மர்தூத்-ஏ-ஹரம்’ என்பதற்குப் பொருள் ‘புனிதத்தலத்திலிருந்து வெளியேற்றப்பட்ட’ என்பதாகும். இஸ்லாம் சிலை வழிப்பாட்டை மறுக்கின்றது என்ற காரணத்தால் எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் முஹம்மது நபியும்  அவரின் தோழர்களும் மக்காவை விட்டுத் துரத்தப்பட்டனர். இவ்வாறு வெளியேற்றப்பட்ட அவர்கள் மக்கத்து சிலை வணங்கிகளை வீழ்த்தி, மீண்டும் கஅபாவுக்கு வந்து அவ்விடத்தை சிலைகளைவிட்டும் தூய்மைப்​படுத்தினர்.

இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையான “லா இலாஹா இல்லல்லாஹ்” (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை) என்பதற்கும், ஃபைஸின் ‘சிலையில்லா உலகுக்கும்’ என்ற வரிக்கும் தெளிவான தொடர்பிருக்கிறது. அங்கே உலகின் பொய்யான கடவுளர்களாகிய மகுடங்கள், அரியணைகள் போன்றவற்றால் ஒடுக்கப்பட்ட மக்கள், இறுதியாக விடுதலை அடைவார்கள் என்ற முழக்கம் வைக்கப்படுகிறது.

‘வணங்கும் சிலை’ எனும் உருவகம் புரட்சிகரமான உருதுக் கவிதைகள் அனைத்திலும் இவ்வாறே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. உதாரணத்துக்கு, புதிய வணக்கச் சிலைகளான தேசியவாதம், முதலாளித்துவம் ஆகியவற்றை உடைத்தெறியும்படி இக்பால் கோருகிறார்.

இன் தாசா குதாவோன் மெய்ன் பரா சப் சே வதன் ஹை
ஜோ பைரஹான் இஸ் கா ஹை, வோ மசப் கா கஃப்ன் ஹை

இந்தப் புதிய கடவுள்களில் மிகவும் பெரியது “தேசம்”
அது போர்த்தியிருக்கும் சவப் போர்வை மதம்

ஹம் தேக்ஹேன்கே கவிதைக்கு மீண்டும் வருவோம். அதன் இறுதிப் பகுதியைப் பாருங்கள்.

பஸ் நாம் ரஹேகா அல்லாஹ் கா
ஜோ கயப் பி ஹை ஹாசிர் பி
ஜோ மன்சர் பி ஹை நாசிர் பி
உட்ஹேகா அனல்-ஹக் கா நாரா
ஜோ மை பி ஹூன், தும் பி ஹோ
அவ்ர் ராஜ் கரேகி க்ஹல்க்-ஏ-க்ஹுதா
ஜோ மை பி ஹூன் அவ்ர் தும் பி ஹோ

இறுதியில் அல்லாஹ் மட்டுமே எஞ்சியிருப்பான்
மறைவானவனும் இருப்பவனும் அவனே
காட்சியும் அனைத்துக்குமான சாட்சியும் அவனே
நானே சத்தியம் என்ற முழக்கம் எழும்
அது நானும் நீங்களும்
இறைவனின் படைப்புகள் ஆட்சி செய்யும்
அது நானும் நீங்களும்

மனிதர்களின், மனிதச் சமூகத்தின் முடிவுறும் தன்மையைப் பற்றிக் குறிப்பிட்டு, இறைவனைத் தவிர மற்றனைத்தும் அழிந்துவிடும் என்பதை ஃபைஸ் நினைவுபடுத்துகிறார். இஸ்லாமியச் சிந்தனைப் பாரம்பரியத்தைப் பின்பற்றி, அல்லாஹ்வை இப்படி முரண்களால் வருணிக்கிறார், “மறைவானவனும் இருப்பவனும் அவனே, காட்சியும் அனைத்துக்குமான சாட்சியும் அவனே”. இறுதி நான்கு வரிகளில், ஃபைஸ் இஸ்லாமிய வரலாற்றில் அதீதப் புகழ்பெற்ற ஸூஃபி வாசகமான “அனல் ஹக்” (நானே சத்தியம்) என்பதைப் பற்றிப் பேசுகிறார். இறைவனுக்கும் மனிதனுக்கும் மத்தியில் குரு அல்லது திருச்சபை போன்ற இடைத்தரகர்கள் இல்லை என்று குர்ஆன் வெளிப்படையாகத் தெளிவுபடுத்துகிறது. எனவே, மனிதர்கள் யாவரும் மதக் கல்வியையும் அறிவொளியையும் பெறுவதற்கும், அவற்றை அடுத்த தலைமுறைக்குக் கடத்துவதற்கும் தகுதியுடையவர்கள் என்பது ஃபைஸின் இஸ்லாமியப் புரிதலாகும்.

பல்வேறு மொழிகளைச் சார்ந்த இஸ்லாமியக் கவிஞர்களின் நீண்ட பட்டியலை ஆராய்ந்தால் நாம் ஒன்றைப் பொதுவாகக் காணலாம். அனைவரும் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையான தவ்ஹீதை (ஓரிறைவாதத்தை) தங்களின் மையக் கருத்தாகக் கொண்டிருப்பார்கள். அதேபோல், மனித வரலாற்றின் மாபெரும் புரட்சியாளராய் நபிகள் நாயகத்தையும், மாபெரும் உயிர்த் தியாகியாய் இமாம் ஹுசைனையும் போற்றியிருப்பார்கள். தவ்ஹீது மீதான நம்பிக்கை மற்றனைத்து போலிக் கடவுளர்களையும் கொள்கைகளையும் மூடநம்பிக்கைகளையும் மறுதலிக்கிறது. ஆகவே, போலிக் கடவுளர்களான இனம், வர்க்கம், அந்தஸ்து ஆகியவற்றை அழிப்பது நம்பிக்கையாளர்களின் கடமையாக உள்ளது. எளிமையாகச் சொன்னால், மற்றனைத்தையும் மறுத்தலிப்​பதன் (negation) மூலம் லட்சியத்தை வரையறை செய்கிறது தவ்ஹீது. 1917க்குப் பிந்தைய உலகம் மார்க்சியச் சித்தாந்தங்களை எதிர்கொண்டபோது, வர்க்கப் போராட்டம் போன்ற இடதுசாரி கருத்தாக்கங்களைத் தம் சிந்தனைகளிலும் கவிதைகளிலும் இந்தக் கவிஞர்கள் சேர்த்திருக்கின்றனர்.

கவிஞர் ஃபைஸ் தன் காலத்தின் இறுதி இஸ்லாமியச் சிந்தனை​யாளராய் இக்பாலைக் கருதுகிறார். இக்பால் போன்ற சிலர் மார்க்சியச் சிந்தனையாளர்களுடன் கருத்தியல் தளத்தில் உரையாடி, அடுத்த தலைமுறையினர் பின்பற்றுவதற்கான அடித்தளத்தை உருவாக்கித் தந்தனர். ஃபைஸ், ஹஸ்றத் மோஹானி (இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனர்களில் ஒருவர்) போன்ற வேறு சிலரோ மார்க்சியர்களுடன் நெருக்கமாக ஒத்துழைத்தனர். கம்யூனிஸ்ட் கட்சிகளின் துடிப்பான உறுப்பினர்களாக அவர்கள் இருந்தனர். ஒருமுறை ஃபைஸிடம், “நீங்கள் ஏன் ரஷ்யா, சீனா போன்றவற்றால் ஊக்கம் பெற்ற பாகிஸ்தானின் கம்யூனிச இயக்கங்களை ஆதரிக்கிறீர்கள்” என்று கேட்டபோது, “இஸ்லாமிய அமைப்பு கம்யூனிசத்தை விடவும் உயர்ந்தது. எனினும், எந்தவொரு முஸ்லிம் நாடும் ரஷ்யா, சீனா போல சிறந்த ஆட்சியைக் கொடுக்கவில்லை. இஸ்லாமிய அமைப்பை அதன் உண்மையான புரட்சிகர ஆன்மாவோடு நடைமுறைப்படுத்தினால் அல்லது ஏற்கனவே உள்ள இஸ்லாமிய அமைப்பை சீர்செய்தால் கம்யூனிச அரசுகளைவிடச் சிறந்த விளைவுகளை நம்மால் ஏற்படுத்த முடியும்” என்றார்.

ஃபைஸ் தன்னை ஒரு முஸ்லிம் கவிஞராகவே அடையாளப்படுத்திக்​கொண்டார். முஸ்லிம் குடும்பத்தில் வளர்க்கப்பட்ட அவர், தன் வாழ்நாளின் தொடக்கத்திலேயே இஸ்லாமியச் சிந்தனைகளில் பயிற்சிபெற்றார். குர்ஆனையும் மனனம் செய்யத் தொடங்கி​யிருந்தார்; ஆனால், உடல்நலம் குன்றியதால் பாதியிலேயே அதைக் கைவிட வேண்டியதாயிற்று. அதற்காகத் தன் வாழ்நாள் முழுவதும் அதை எண்ணி வருந்தினார். புகழ்பெற்ற இஸ்லாமிய அறிஞரும், கவிஞருமான மௌலானா ரூமியைத் தனது முர்ஷிதாக (ஆன்மிக வழிகாட்டியாக) அறிவித்தார். இந்தப் பின்னணியில்தான் அவரின் கவிதைகளில் இஸ்லாமியக் கருத்துகளும் இலக்குகளும் உவமைகளும் உருவகங்களும் நிறைந்துள்ளன.

ஒரு நேர்காணலில் ஃபைஸிடம் பிரபலக் கவிஞர் கதீல் ஷிஃபாயி இதுகுறித்துக் கேட்டார்.

கதீல்: இஸ்லாமி அதப் கி தெஹ்ரீக் கே சில்சிலே மே குச் ஃபர்மாயியே. (இஸ்லாமிய இலக்கியப் போக்குகள் பற்றி ஏதேனும் கூறுங்களேன்).

ஃபைஸ்: ஹமாரே கயால் மெய்ன் முஸ்லிம் மமாலிக் மெய்ன் முசல்மான் லிக்ஹ்னே வாலோன் கி அதபி தெஹ்ரீக் இஸ்லாம் ஹீ கா ஹிஸ்ஸா ஹை. (என்னைப் பொறுத்தவரை, முஸ்லிம் நாடுகளிலுள்ள முஸ்லிம் எழுத்தாளர்களின் இலக்கிய அணுகுமுறைகள் யாவும் இஸ்லாத்தின் பங்களிப்புகள்தாம்).

ருதாத்-ஏ-கஃபஸ்’ என்ற நூலில் ஃபைஸின் தோழர் மேஜர் இஸ்ஹாக் ஃபைஸுடன் ஹைதராபாத் சிறையிலிருந்தபோது, மற்ற சிறைவாசி​களுக்கு குர்ஆனையும் நபிமொழிகளையும் ஃபைஸ் கற்பித்ததாகச் சொல்கிறார். நாத்திகராக இருந்துகொண்டு ஏன் குர்ஆனைக் கற்பிக்கிறீர்கள் என்று தன்னிடம் வெளிப்படையாகவே ஒரு கர்னல் கேட்டதாக ஃபைஸும் குறிப்பிட்டிருக்கிறார். தானொரு முஸ்லிம் என்று கர்னலுக்குப் பதிலளித்ததாகவும், கர்னலும் அவரின் குர்ஆன் வகுப்புகளுக்கு ஊக்கமளித்ததாகவும் ஃபைஸ் கூறியிருக்கிறார்.

ஜா அல் ஹக், வ ஸஹகல் பாதில்’ (சத்தியம் வந்துவிட்டது, அசத்தியம் அழிந்துவிட்டது) என்ற குர்ஆன் வசனத்தைக் கொண்டு ஃபைஸ் பாலஸ்தீன விடுதலைக்கான ஆதரவைத் தெரிவித்தது; இஸ்லாமியப் புரட்சிக்காக ரத்தம் சிந்திக்கொண்டிருந்த இரானிய மாணவர்களைப் பாராட்டியது; நபிகள் நாயகத்தைப் புகழ்பாடிய அவரது ஃபாரசீகக் கவிதை; இமாம் ஹுசைனுக்காக எழுதிய பிரம்மாண்டமான மெய்ஞானக் கவிதை என அனைத்தும் ஃபைஸின் புரட்சிகர உணர்வுக்கும் கவிதைகளுக்கும் மையமாக இஸ்லாம் இருந்ததையே காட்டுகிறது.

“இஸ்லாத்துக்கும் ஃபைஸுக்கும் தொடர்பில்லை, அவர் நாத்திகக் கவிஞர்” எனும் மாயை கடந்த சில காலங்களாக உருவாக்கப்பட்டிருக்கிறது. முஸ்லிம்கள் மத்தியில் அவருக்கான அங்கீகாரத்தை ஒழிக்கும் நோக்கில் பழமைவாத முஸ்லிம்களால் இது நிகழ்ந்தேறியிருக்கிறது. பழமைவாத, வாக்கியவாத முஸ்லிம்கள் முஸ்லிமல்லாத புரட்சிகரச் சிந்தனையாளர்களைக் கண்டு என்றைக்கும் அஞ்சியதில்லை; அவர்கள் எப்போதும் அஞ்சுவது இஸ்லாத்துக்குள்ளேயே இருக்கும் சிந்தனையாளர்களைக் கண்டுதான். எனவேதான், ஃபைஸை ‘காஃபிர்’ என்றும், நாத்திகர் என்றும் கூறுகின்றனர். அவர்களின் பிரச்சாரம் இந்தியத் துணைக்​கண்டத்திலுள்ள பல முஸ்லிம்கள் மத்தியிலும், முற்போக்கு – லிபரல் வட்டாரங்களிலும் ஃபைஸை ஒரு நாத்திகர் என்றோ, குறைந்தபட்சம் அவரின் சிந்தனைகளுக்கும் இஸ்லாத்துக்கும் சம்பந்தமில்லை என்றோ நம்பவைத்துள்ளது. இந்தத் திரிபை சரிசெய்ய வேண்டியது காலத்தின் கட்டாயம்.

(ஸாகிப் சலீமுடன் இணைந்து TwoCircles.netக்கு ஷர்ஜீல் இமாம் எழுதிய கட்டுரை)

தமிழில்: ஷான் நவாஸ்

Related posts

Leave a Comment