நூல் அறிமுகம் முக்கியப் பதிவுகள் 

‘காதலின் நாற்பது விதிகள்’ நாவலின் வரலாற்றுப் பின்னணி

பதின்மூன்றாம் நூற்றாண்டு என்பது ‘அனடோலியா’வில் (துருக்கி சாம்ராஜ்யம்) மிகவும் கொந்தளிப்பான காலம். அரசியல் மோதல்களும் முடிவற்ற அதிகாரப் போட்டிகளும் மதச் சண்டைகளும் நிகழ்ந்திருந்த காலம் அது. மேற்கில், ஜெருசலேம் நோக்கிப் படையெடுத்த சிலுவைச் சேனை ‘கான்ஸ்டாண்டிநோபிள்’ என்னும் இஸ்தான்பூலைச் சூறையாடியது. அதன் விளைவாக பைஸாந்தியப் பேரரசு இரண்டாகப் பிளந்தது. கிழக்கில், செங்கிஸ் கானின் ராணுவ மேதைமையின் கீழ் கட்டுப்பாட்டுடன் முன்னேறிய மங்கோலியப் படை துரிதமாகப் பரவி வந்தது. இரண்டிற்கும் இடையில் பல்வேறு துருக்கி இனக்குழுக்கள் தமக்குள் சண்டையிட்டுக் கொண்டிருந்தன. பைஸாந்தியர்கள் தாம் இழந்த நிலம், செல்வம் மற்றும் அதிகாரத்தை மீட்கப் போராடினர். எப்போதும் இல்லாத குழப்பம் கோரத் தாண்டவம் ஆடியது. எப்பக்கம் திரும்பினாலும் அங்கே பகைமையும் வெறுப்பும் இருந்தன. மேலும், அடுத்து என்ன நிகழுமோ என்ற பேரச்சம் கண் முன் நின்றது.

இத்தனை குழப்பத்திற்கு நடுவே, பிரபலமான இஸ்லாமிய அறிஞர் ஒருவர் வாழ்ந்தார். அவர்தான் ஜலாலுத்தீன் ரூமி. பலராலும் ‘மவ்லானா’ (எங்கள் தலைவர்) என்று அழைக்கப்பட்ட அவருக்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இருந்து ஆயிரக்கணக்கான சீடர்களும் ரசிகர்களும் இருந்தனர். முஸ்லிம்கள் அனைவருக்குமான கலங்கரை விளக்காக அவர் கருதப்பட்டார்.

1244ல் ஷம்ஸ் என்பவரை ரூமி சந்தித்தார். ஷம்ஸ் ஒரு நாடோடி தர்வேஷ் (சமயத் துறவி). மரபற்ற செயல்களுக்கும், மத நிந்தனையான பேச்சுக்களுக்கும் சொந்தக்காரர். அவர்களின் சந்திப்பு இருவரின் வாழ்க்கைப் போக்கையுமே மாற்றி அமைத்தது. அதன் பின் தொடர்ந்து வந்த பல நூற்றாண்டுகளில் சூஃபிகள் ‘இரண்டு கடல்களின் சந்திப்பு’ என்று உவமித்துப் போற்றிய உறுதியான தனித்தன்மையான ஆன்மிக நட்பின் ஆரம்பமாக அவர்களின் சந்திப்பு அமைந்தது. தனித்தன்மையான இந்த ஆன்மிகத் தோழரை அடைந்ததும், முதனிலை மார்க்க அறிஞராக இருந்த ரூமி அர்ப்பணம் மிக்க ஓர் ஆன்மிகவாதியாகவும், காதலை போதிக்கின்ற பெருங் கவிஞராகவும், சுழல் நடனம் என்னும் தியான முறையை வடிவமைத்தவராகவும் மாற்றப்பட்டார்.

சகிப்பின்மையும் மோதல்களும் ஆழமாக வேரூன்றி இருந்த ஒரு காலத்தில் அவர் உலகளாவிய ஆன்மிகத்திற்காக நின்றார். எல்லாப் பின்னணி கொண்ட மக்களுக்கும் தனது கதவுகளைத் திறந்தார். மனிதன் தனது தன்முனைப்புடன் (ego, நஃப்ஸ்) போரிட்டு வெல்லுகின்ற அகவயப்பட்ட ஜிஹாத் என்னும் அறப்போரை அவர் போதித்தார்.

இந்தச் சிந்தனைகளுக்கு அனைவரின் ஆதரவும் கிடைத்துவிடவில்லை. ஏனெனில், அன்புக்கு எல்லாருமே தமது இதயங்களைத் திறந்து கொடுப்பதில்லை. ஷம்சுக்கும் ரூமிக்கும் இடையிலான வலிய ஆன்மிகப் பிணைப்பு அவதூறு, புரளி மற்றும் வதந்திகளுக்கான இலக்கானது. அவர்கள் தவறாகப் புரிந்துகொள்ளப் பட்டனர், பொறாமைக்கு ஆளாயினர், தூற்றப்பட்டனர், இறுதியில் தமக்கு மிக நெருக்கமான நபர்களாலேயே வஞ்சிக்கப்பட்டனர். அவர்கள் சந்தித்து மூன்றாண்டுகள் கழித்து அவர்கள் மிகப் பரிதாபமாகப் பிரிக்கப்பட்டனர்.

ஆனால், கதை அங்கே முடியவில்லை. உண்மையில், அதில் முடிவு என்பதே இல்லை. ஏறத்தாழ எட்டு நூற்றாண்டுகளுக்குப் பின்னர் ஷம்ஸ் மற்றும் ரூமியின் ஆன்மாக்கள் இப்போதும் உயிரோடு இருக்கின்றன, நம்முள் எங்கோ சுற்றிச் சுழன்றபடி.

இந்தப் பழங்கதையுடன் சமகாலத்து அமெரிக்க நவீன வாழ்க்கை ஒன்று இணைகிறது. எல்லா ரூபின்ஸ்டன் தனது கணவர் மற்றும் பதினபருவத்தினரான மூன்று பிள்ளைகள் ஆகியோருடன் வசதியான வீட்டில் வசிக்கிறாள். அவளுக்கு நம்பிக்கையும் மன நிறைவும் தரக்கூடிய எல்லாமே இருக்கிறது. எனினும், எல்லாவின் வாழ்க்கையின் இதயத்தில் ஒரு வெறுமை இருக்கிறது – முன்பு காதலால் நிரப்பப்பட்டிருந்த ஒரு வெறுமை.

அந்நிலையில், பதின்மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஸூஃபி கவிஞரான ரூமி மற்றும் அவரின் ஆன்மிக வழிகாட்டியான ஷம்ஸி தப்ரேஸ் ஆகியோரைப் பற்றியும், ஷம்ஸ் போதிக்கும் ‘காதலின் நாற்பது விதிகள்’ பற்றியும் நாவல் ஒன்றை அவள் வாசிக்க நேர்கிறது. அது அவளின் வாழ்க்கையைத் தலைகீழாகப் புரட்டிப் போடுகிறது. அந்த நாவலை எழுதிய மர்ம நபரை நேரில் காண்பதற்காக அவள் பயணிக்கிறாள்.

ஸூஃபி ஆன்மிகமும் கவிதையும் கலந்த அந்தத் தேடல் எல்லாவையும் நம்மையும் இதயம் உடைய உடைய நம்பிக்கையும் காதலும் கண்டடையப்படும் ஒரு புதிய உலகிற்குக் கடத்திச் செல்கிறது. அஸீஸ் ஸஹ்றா என்னும் விசித்திரமான நபரைத் தேடி அமெரிக்காவில் இருந்து ஆம்ஸ்டர்டாம் நோக்கி எல்லா ரூபின்ஸ்டன் மேற்கொள்ளும் அந்தப் பயணத்தின் முடிவு என்ன? ஆன்மிகக் காதலின் பழைய வரலாறு ஒன்று எப்படி நம் சமகாலத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடி ஆகிறது? ஓர் நவீன மனம் எப்படித் தன் முகத்தை ஸூஃபித்துவக் கண்ணாடியில் பார்த்து அரிதாரம் கலைக்கிறது?

அறிவதற்கு நாவலை வாசியுங்கள்.

🛒 ஆன்லைனில் ஆர்டர் செய்ய: https://www.commonfolks.in/books/d/thirumugam-iraniya-novel
📞 வாட்ஸ்அப்-ல் ஆர்டர் செய்ய: +91-7550174762 

Related posts

Leave a Comment