wajhullah novel tamil mustafa mastoorநூல் அறிமுகம் முக்கியப் பதிவுகள் 

கடவுளை எப்படி உணர்வது?

ஈரானியப் பல்கலைக்கழகங்களில் இயற்பியல் துறைப் பேராசிரியராகப் பணிபுரிந்துவந்த முனைவர் முஹ்சின் பாஷா, 1993ல் ஒரு வர்த்தகக் கட்டிடத்தின் எட்டாவது மாடியின் அறையொன்றுக்குச் சென்று, ஒரு ஜன்னலூடாகக் கீழே குதித்து இறந்துபோகிறார்.

34 வயதான பாஷா திருமணம் முடிக்காதவர். இயற்பியலிலும் கணிதத்திலும் தீவிர ஈடுபாடு கொண்டவர். உலகின் அனைத்து விஷயங்களையும் அறிவியல்பூர்வமாகப் புரிந்துகொண்டுவிட முடியும் என்றும், மனித உணர்வுகளையும் எண்ணங்களையும்கூட அறிவியலால் அளவிட்டுவிட முடியும் என்றும் நம்புபவர். அது தொடர்பான ஆய்வில் ஈடுபட்டுவருபவர். அவர் ஏன் திடீரென்று தற்கொலை செய்துகொண்டார்?

ஈரானிய எழுத்தாளர் முஸ்தஃபா மஸ்தூரின் ‘திருமுகம்’ நாவலின், முதன்மைக் கதாபாத்திரமான யூனுஸ், தனது முனைவர் பட்ட ஆய்வுக்கு எடுத்துக்கொண்டிருக்கும் கேள்வி இது. கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பது யூனுஸை அலைக்கழிக்கச் செய்கிறது. பாஷாவைப் போலவே அனைத்தையும் தர்க்கத்துக்கு உட்படுத்தி விடை காண வேண்டும் என்ற எண்ணத்தைக் கொண்டிருப்பவராக வெளிப்படுகிறார் யூனுஸ். கடவுள் இல்லையென்றால் இந்த உலகம் என்ன ஆகும்? ஆனால், உண்மையில் கடவுள் இருந்தால் ஏன் இத்தனை துயரங்கள், வலிகள், போர்கள், நோய்கள்…? இக்கேள்விகள் யூனுஸை அலைக்கழிக்கின்றன.

யூனுஸின் காதலி சாயாஹ், கடவுள் நம்பிக்கை கொண்டவர். கடவுளை நம்புதலே வாழ்க்கைக்கான அர்த்தமாகப் பார்ப்பவர். யூனுஸின் நண்பர்களான மஹர்தாதும் அலீ றிளாவும் கடவுள் குறித்தும் உலகின் அர்த்தம் குறித்தும் குழப்பமற்றவர்கள். அதிலும் அலீ றிளா தத்துவார்த்தப் பார்வையுடன் கடவுளையும் உலகையும் புரிந்துகொண்டவர். இவர்கள் ஊடான யூனுஸின் நாட்களாக இந்நாவல் விரிகிறது. இந்நாவலின் போக்கை இந்த வசனங்களின் வழியே புரிந்துகொள்ள முடியும்.

யூனுஸின் எண்ண ஓட்டம்: “கடை வியாபாரிகள், நடமாடும் வியாபாரிகள், துப்புரவுத் தொழிலாளர்கள், தையல்காரர்கள், சமையல்காரர்கள், இனிப்பு வியாபாரிகள், ஓட்டுநர்கள், மாணவர்கள், தத்துவவியலாளர்கள் இன்னும் எத்தனையோ மனிதர்கள் இந்தப் பிரபஞ்சத்தை எப்படிப் புரிந்துகொள்கிறார்கள். அவர்களின் தலைக்குள் என்ன ஓடிக்கொண்டிருக்கிறது… இறைவனின் இருப்பை ஏற்பதா மறுப்பதா என்பதற்குத் திருப்தியான சான்றெதுவும் கிடைக்காமல் கடிகாரத்தின் பெண்டுலம்போல் நான் ஐயங்களால் மிகக் கடுமையாக அலைக்கழிந்துகொண்டிருந்தேன்.”

யூனுஸைப் பார்த்து அலீ றிளா கூறுவது: “நீ சட்டென்று உன்னிடமே தோற்றுவிடுவாய் என்று பயப்படுகிறேன். நீ பார்க்கக்கூடியவற்றையெல்லாம் பார்க்க முடியாமல் மறைக்கும் அளவுக்கு அவற்றை நீ கடுமையாக நெருங்கியிருப்பது எனக்கு அச்சமளிக்கிறது… திறப்புகள் கதவுகளை எப்படி இலகுவாகத் திறக்கின்றனவோ அப்படியே பூட்டவும் செய்கின்றன. தத்துவம் கதவை முற்றாகவே பூட்டிவிட்டது போலும்!”

வாழ்க்கைக்கான அர்த்தம் என்ன, மரணத்துக்கான அர்த்தம் என்ன, இறைமை என்பது என்ன, கடவுளின் இருப்பை எப்படி உணர்வது, வறியவர்கள், நோயாளிகள், போரைச் சந்தித்தவர்கள், உறவுகளை இழந்தவர்கள் உலகை எப்படிப் பார்க்கிறார்கள், அவர்களின் வாழ்க்கைத் தத்துவம் என்ன, பின்நவீன உலகில் மனிதர்கள் தங்கள் வாழ்க்கையின் பிடிமானமாக எதைப் பற்றிக்கொள்வது என்ற கேள்விகளாக இந்நாவல் அமைந்திருக்கிறது.

யூனுஸின் பார்வையின் வழியே நாவல் நகர்கிறது. யூனுஸின் சிந்தனையோட்டமும் நினைவுகளும் பிறருடனான யூனுஸின் உரையாடலும் நாவலைத் தத்துவார்த்தத் தளத்துக்கு இட்டுச்செல்கின்றன. உலகின் ஒத்திசைவை எது சாத்தியப்படுத்துகிறது என்பதைப் புரிந்துகொள்ள முடியாமல் யூனுஸ் திணறுகிறார். பாஷாவும் இது போன்ற ஒரு குழப்பத்தின் காரணத்துக்காகவே தற்கொலை செய்துகொள்கிறார். யூனுஸின் குழப்பம் கடவுளின் இருப்பு குறித்தது என்றால், பாஷாவின் குழப்பம் காதலின் சாரம் குறித்தது. பாஷா தன்னுடைய மாணவி மீது காதல் வயப்படுகிறார். அவரால் காதல் என்ற உணர்வைப் புரிந்துகொள்ள முடியவில்லை. திணறிப்போகிறார். அவரது இயற்பியல் கோட்பாடுகளால் அதை வகைப்படுத்த முடியவில்லை. அந்த முயற்சி அவரை மீள முடியாத சுழலுக்குள் தள்ளுகிறது. இறைவனின் இருப்பு குறித்த கேள்வி யூனுஸை பாஷா சிக்கிய அதே சுழலுக்குள் இழக்கச் செய்கிறது. ஆனால், யூனுஸ் அந்தச் சுழலிலிருந்து தப்பிக்கிறார். எப்படி என்பதை இந்நாவல் பேசுகிறது.

இருத்தலியல் கேள்விகளை மையப்படுத்திய அமெரிக்க, ஐரோப்பிய நாவல்களுக்கும் இந்நாவலுக்கும் இடையே முக்கியமான ஒரு வேறுபாட்டை உணர முடிகிறது. மேற்கத்திய நாவல்களில் இருத்தலியல் என்பது தனிமனித வாதத்தை மையப்படுத்தி எழும் குரலாக இருப்பது உண்டு. ஒருவித இருண்மை அவற்றில் வெளிப்படுவது உண்டு. ஆனால், இருத்தலியல் தொடர்பான கேள்வியை முன்வைத்து நகரும் இந்நாவலின் ஆன்மா, இஸ்லாமியக் கலாச்சாரத்தின் சாரத்தை உட்பொதிந்ததாக இருக்கிறது. யூனுஸின் தத்தளிப்பு, அவநம்பிக்கை, தேட்டம் ஆகியவை தம்மளவில் இருண்மைத் தன்மை கொண்டவை எனினும், சாயாஹ், மஹ்ரதாது, அலீ றிளா ஆகியோரின் (இறை நம்பிக்கையாளர்கள்) இருப்பின் வழியே அது மெய்யியல் தன்மை கொண்டதாக வெளிப்படுகிறது.

முஸ்தஃபா மஸ்தூர் ஈரானின் மிக முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவராகக் கருதப்படுபவர். அவருடைய நாவல்கள் இருத்தலியல் தொடர்பான விசாரணையை மேற்கொள்பவை. 2001ல் வெளியான ‘திருமுகம்’ அவருடைய நாவல்களில் பெரும் வரவேற்பைப் பெற்றது. மொழிபெயர்ப்பில் 140 பக்கங்களைக் கொண்ட இந்தச் சிறிய நாவல், இறைமையைப் புரிந்துகொள்வதற்கான திறப்பை வழங்குகிறது.

பாரசீக மொழியில் எழுதப்பட்ட இந்த நாவலை அரபி வழியாக பீ.எம்.எம். இர்பான் மொழிபெயர்த்திருக்கிறார். இரண்டு மொழிகளைத் தாண்டி வந்திருந்தாலும் தமிழில் இந்த நாவல் சிறந்த வாசிப்பனுபவத்தைத் தருகிறது என்றால், அதற்கு மொழிபெயர்ப்பாளரும் ஒரு காரணம். இஸ்லாமிய உலகின் முக்கியமான இலக்கியப் படைப்புகளைத் தமிழுக்குக் கொண்டுவரும் பணியைத் தொடங்கியிருக்கும் சீர்மை பதிப்பகத்துக்கு இந்நாவல் பெருமை சேர்க்கும். இந்நாவல் இன்னும் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்கப்படவில்லை. அதற்கு முன்பாகவே தமிழுக்கு வந்துள்ளது.

இந்நாவலின் தமிழ் மொழிபெயர்ப்புப் பற்றிக் கூடுதலாக சில வார்த்தைகள் சொல்ல விரும்புகிறேன். ஃபார்சி மொழியில் எழுதப்பட்ட இந்நாவல் அறபு வழியாக தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. இலங்கையைச் சேர்ந்த பீ.எம்.எம். இர்ஃபான் மொழிபெயர்த்திருக்கிறார். இதுவரையில் தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்ட நாவல்களில், அவற்றின் மொழிபெயர்ப்புக்காகவே படிக்கப்பட வேண்டிய நாவல்கள் என்று சிலவற்றைப் பட்டியலிட்டால், அதில் இந்நாவல் முதல் வரிசையில் அமரும் என்று சொல்லத்தக்க வகையில் இர்ஃபானின் மொழிப் பயன்பாடு இந்நாவலை தனித்துவமாக்கிறது. என்றும் நினைவில் நிற்கும் ஒரு மொழிபெயர்ப்பு.

இந்நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பை சம்மில் செம்மையாக்கம் செய்திருக்கிறார்.தமிழில் வெளியாகும் மொழிபெயர்ப்பு நூல்களைப் பற்றி ஒரு புகார் உண்டு. ஒரு நூலை மொழிபெயர்ப்பாளர் மொழிபெயர்த்ததும், அதை செம்மையாக்கம் செய்யாமல் அப்படியே அச்சுக்கு அனுப்பிவிடுகிறார்கள் என்று. ஆனால், இந்த நூல் மிகுந்த கவனம் எடுத்து செம்மையாக்கம் செய்யப்பட்டிருக்கிறது என்பதை அதன் ஒவ்வொரு வரியையும் வாசிக்கையில் உணர முடிகிறது.

நன்றி: இந்து தமிழ் திசை

🛒 ஆன்லைனில் ஆர்டர் செய்ய: https://www.commonfolks.in/books/d/thirumugam-iraniya-novel
📞 வாட்ஸ்அப்-ல் ஆர்டர் செய்ய: +91-7550174762 

Related posts

Leave a Comment