ஃபாத்திமா ஷேக்: கல்வி மறுக்கப்பட்டவர்களுக்காகத் தன் இல்லத்தைப் பள்ளிக்கூடமாக்கியவர்
இந்தியாவின் முதல் முஸ்லிம் பெண் ஆசிரியை என்று அறியப்படும் கல்வியாளர் ஃபாத்திமா ஷேக் அவர்களின் 191வது பிறந்தநாளான இன்று, அவரை கூகுளின் டூடுல் சிறப்பித்துள்ளது. இதையொட்டி முனைவர் எம்.எச். ஜவாஹிருல்லா எம்எல்ஏ தன் முகநூல் பக்கத்தில் ஃபாத்திமா ஷேக் குறித்து பகிர்ந்துள்ள பதிவின் சுருக்கம்:
1848ம் ஆண்டு சமூகப் புரட்சியாளர்களான மகாத்மா ஜோதிராவ் பூலே, சாவித்ரிபாய் பூலே ஆகியோருடன் இணைந்து இந்தியாவில் பெண்களுக்கான முதல் பள்ளிக்கூடத்தை நிறுவியவர் ஃபாத்திமா ஷேக். அவர் 1831ம் ஆண்டு இதே தேதியில் புனே நகரில் பிறந்தார். அவர் தனது சகோதரர் உஸ்மானுடன் வசித்து வந்தார். தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் கல்வி வழங்கி வந்த ஜோதிராவ், சாவித்ரிபாய் பூலே தம்பதியினர் ஆதிக்க சாதியினர் கொடுத்த அழுத்தத்தால் தம் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டனர். அவர்கள் தம் கல்விப் பணிகளைத் தொடர தங்கள் வீட்டையே அளித்தனர் ஃபாத்திமாவும் உஸ்மானும்.
அந்த வீட்டிலேயே ஒரு பள்ளிக்கூடம் திறக்கப்பட்டது. அங்கு சாவித்ரிபாய் பூலேவும் ஃபாத்திமா ஷேக்கும் வகுப்பு, மதம் அல்லது பாலினத்தின் அடிப்படையில் கல்வி மறுக்கப்பட்ட தலித், முஸ்லிம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்குக் கல்வி புகட்டினர். சமத்துவத்திற்கான இந்த இயக்கத்திற்காகத் தனது வாழ்நாளையே அர்ப்பணித்தார் ஃபாத்திமா ஷேக்.
கல்வி மறுக்கப்பட்டவர்கள் பள்ளிக்கூடத்தில் கற்கவும், சாதிய கொடுங்கோன்மையிலிருந்து தப்பிக்கவும் சாவித்ரி பூலேவுடன் வீடுவீடாகச் சென்று பரப்புரை செய்தார் ஃபாத்திமா ஷேக். ஒடுக்கப்பட்டோருக்குக் கல்வி வழங்கும் இயக்கத்தில் ஈடுபட்டவர்களை அவமானப்படுத்த முயன்ற ஆதிக்க வர்க்கத்தினரிடமிருந்து பெரும் எதிர்ப்பையும் அவர் சந்தித்தார். ஆனால் பூலே தம்பதியினருடன் இணைந்து ஃபாத்திமா தன் பணிகளைத் தொடர்ந்தார்.
இந்திய அரசு 2014ல் ஃபாத்திமா ஷேக்கின் சாதனைகளை உருதுப் பாடப் புத்தகங்களில் மற்ற கல்வியாளர்களுடன் சேர்த்து அவரது வரலாற்றுக்கு வெளிச்சத்தைப் பாய்ச்சியது. உருது மொழி மட்டுமின்றி அனைத்து இந்திய மொழிகளிலும் அவரது வரலாறு பதியப்படவேண்டியது அவசியமாகும். ஃபாத்திமா ஷேக் குறித்து ஆந்திராவைச் சேர்ந்த எனது நண்பர் சையத் நஜீர் அஹ்மது ஆங்கிலத்தில் ஒரு நூல் எழுதியுள்ளார்.