நேர்காணல்கள் 

“நான் இந்து இல்ல, நான் இப்ப பள்ளனும் இல்ல; சாதிய ஒழிச்சுக்கட்டிய முகம்மது பிலால்!”

Loading

முகம்மது பிலால் (எ) மேலக்கால் வீரபத்திரன் (87), மதுரை மாவட்டம் சோழவந்தான் நாகர்மலைக் கணவாய் அருகேயுள்ள மேலக்கால் கிராமத்தைச் சேர்ந்தவர். பொருளாதாரம், வரலாற்று ஆகியவற்றில் பட்டங்கள் பெற்றவர். புரட்சியாளர் அம்பேத்கர் தொடங்கிவைத்த ‘செட்யூல்டு இனப் பேரவை’யின் (Scheduled Caste Federation) தென் மண்டலப் பொறுப்பாளர். இந்தியன் சிவில் பணி (ICS) பயின்று, இரண்டாம் உலகப் போரின்போது இந்திய ராணுவத்தில் பணியாற்றியவர்.

புரட்சியாளர் அம்பேத்கர் மதுரை வந்திருந்தபோது, அவரை வரவேற்பதற்கான வரவேற்புக் குழுவில் இடம்பெற்றவர். 1952இல் நடந்த பொதுத் தேர்தலில் ‘செட்யூல்டு இனப் பேரவை’ சார்பில் காங்கிரசை எதிர்த்து, நிலக்கோட்டை தனித் தொகுதியில் போட்டியிட்டவர். அம்பேத்கர் மக்கள் இயக்கத்தின் மாநில இணைப் பொதுச் செயலாளராக சிலகாலம் பணியாற்றியவர். 1992 டிசம்பர் 6இல் பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது, இஸ்லாத்தைத் தழுவியவர்.

டாக்டர் அம்பேத்கருடன் நெருங்கிய நட்புறவு கொண்ட போராளியாக வாழ்ந்த அனுபவம் கொண்டவர். அம்பேத்கருக்கு முன்பும், அம்பேத்கருக்குப் பின்பும், அம்பேத்கரின் நூற்றாண்டுக்குப் பின்பும்—மூன்று தலைமுறைகளின் போராட்ட வரலாற்றின் முன்னோடியாக வாழ்ந்து வருபவர்.

“நான் இந்து இல்ல; நான் இப்ப பள்ளனும் இல்ல! சாதிய ஒழிச்சுக்கட்டிய முகம்மது பிலால்” என கட்டைக் குரலில் கண் சிவக்கும் அய்யா முகம்மது பிலால் அவர்களுடன் ஒரு சந்திப்பு.

தீண்டாமைக் கொடுமைகள் உக்கிரமாக இருந்த காலத்தில், கல்லூரிக்குச் சென்று பட்டம் பயின்ற முதல் தலித்தாக எப்படி வர முடிந்தது?

எனக்கு வயசு 86 முடியப் போகுது. எங்க ஊர்ல முதல் காரை வீடு எங்களதுதான். அப்பா, அம்மா விவசாயக் கூலி வேலை செய்றவங்க. எங்க ஊரு சட்டை போடாத ஊரு. செருப்புப் போடாத ஊரு. தோள்ல துண்டு போடாத ஊரு. தாழ்த்தப்பட்ட மக்களோட நிலை அன்றைக்கு இதுதான். 1939இல் எஸ்.எஸ்.எல்.சி. வரைக்கும் படித்தவன் நான் மட்டும்தான். இந்த ஜில்லாவுல அன்னைக்கு யாரும் அதிகம் படிக்கல. நானும் படிக்காம போயிருந்தா, மாடு மேய்ச்சுக்கிட்டு அடிமையா இருந்திருப்பேன். பள்ளிக்கூடத்துல படிக்கும்போது, விளையாட்டுல ரொம்பவும் ஆர்வமா இருப்பேன். நான் ஒரு விளையாட்டு வீரனாக இருந்ததினால் எனக்கு மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பி.ஏ. வணிகவியல் படிக்க இடம் கிடைத்தது. அமெரிக்கன் கல்லூரியில 1200 மாணவர்கள். நாங்க 6 பேர் மட்டும்தான் தலித் மாணவர்கள். பெண்கள் ஒரு 2 பேர் அவ்வளவுதான். கல்லூரியில் படிக்கும்போது என்னைப் பார்க்க எங்க அப்பா அம்மா வந்தாங்க. வந்தவங்க கோரிப்பாளையம் முக்கிலே நின்று கொண்டிருந்தாங்க. மிகப் பெரிய கட்டடத்தைப் பார்த்து, மலைத்துப்போய் உள்ளேவர பயந்துக்கிட்டு நின்னுட்டாங்க. அன்னைக்கி நாங்க படிச்ச படிப்பைப் புரிஞ்சுக்கணும்னா, நாங்க படிக்கிற கல்லூரியின் கட்டடத்தைப் பார்த்துதான் ‘இது பெரிய காலேஜ்; இது சின்ன காலேஜ், பெரிய காலேஜின்னா அது பெரிய படிப்பு, சின்ன காலேஜின்னா அது சின்ன படிப்பு’ என்கிற புரிந்து கொள்ளுதல்தான் அன்றைக்கு இருந்தது.

அமெரிக்கன் கல்லூரியில படிக்கும்போது, 1939இல் நான் கால்ல ‘ஷூ’ போட்டுக்கொண்டு எங்க ஊருக்கு வர்றேன். அதை ‘ஷூ’ன்னு கூட சொல்ல மாட்டாங்க. நான் கால்ல போட்டு இருக்கிறது என்னன்னு சொல்லத் தெரியல. சாதி இந்துக்களாக இருக்கிற ஒரு நாலு பேர் என்னைத் தடுத்து நிறுத்தி, அந்த பூடிசைக் கழட்டுடான்னு சொல்றானுங்க. நான் கழட்ட முடியாதுன்னு பிடிவாதமா நின்னுட்டேன். ஊர் கூடி நிக்குது. முரட்டுத்தனமா நானும் நிக்கிறேன். எங்க அப்பாவுக்கு தகவல் கிடைச்சதும் அவரும் வந்துட்டாரு. நடந்ததை விசாரிச்சுட்டு, எங்கப்பா என்னை பூடிசை கழட்டுடான்னு சொன்னாரு. நான் ஆடிப் போயிட்டேன். எங்கப்பா எனக்கு உத்வேகமா இருப்பார்னு எதிர்பார்த்தேன், நடக்கல. நானும் கழட்டி நடுரோட்டிலேயே வச்சிட்டேன். கூட்டம் கலையப் போகும்போது எங்கப்பா, அந்த சாதிக்காரப் பயலுகளப் பார்த்து, “எம்மவன பூடிசைக் கழட்டச் சொன்னீங்கள். அவனும் கழட்டிட்டான். இப்ப யாரு இத எங்க வீட்டுக்குக் கொண்டு போகப் போறதுங்கிறத முடிவு பண்ணிட்டு, இந்த இடத்தை விட்டு நகருங்க”ன்னு ஒரே பாய்ச்சலா பாய்ஞ்சுட்டார்.

அது நடக்காது, இது நடக்காது, நாங்க யாரு தெரியுமான்னு குதிச்சிப் பார்த்தானுங்க. அன்னைக்கு ஊரு ஜல்லிக்கட்டு. நாங்க மாடு திறந்துவிட்டாத்தான் மத்தவங்க மாடு திறந்துவிட முடியும். இந்த பூடிசு எங்க வூட்டுக்கு வரலேன்னா, இன்னைக்கி மாடு திறந்துவிட முடியாதுன்னு சொல்லிட்டு எங்கப்பா வந்துட்டாரு. அதன் பிறகு அந்த சாதிக்காரப் பயலுக ஒன்னு கூடி, நம்ம சமூகத்திலே ரொம்பவும் கொடுமைக்கு ஆளாகிட்டிருக்கிற அருந்ததியர் சமூகத்துல இருந்து ஒரு ஆள கூப்பிட்டு, இந்த பூடிசைக் கொண்டுபோய் காரை வூட்டு கரும்பன் கிட்ட சேர்த்துடுன்னு சொல்லி விட்டானுங்க. இதுதான் எனக்கு நேர்ந்த முதல் தீண்டாமை அனுபவம். நேரடியாக என்னைப் பாதிச்சது இதுதான். அதன் பிறகு நான் ராணுவத்துக்குப் போய்விட்டு வந்ததும் என்னோட முதல் வேலையே நம்ம இளைஞர்களுக்கு செருப்பு வாங்கிக் கொடுப்பதுதான். இன்னைய வரைக்கும் தூங்கும்போதுகூட ‘ஷூ’ போட்டுக்கிட்டுதான் தூங்குறேன். ஒரு பய கீச்சு மூச்சின்ன முடியாது.

ராணுவத்திற்கு எப்படிப் போனீர்கள்? அதற்கான தேவை என்ன உங்களுக்கு?

நான் ராணுவத்துக்குப் போனது எதிர்பார்க்காத ஒன்றுதான். 1942இல் நான் பி.ஏ. முடிக்கும்போது இரண்டாம் உலகப் போர் ரொம்ப சூடு பிடித்து நடந்து கொண்டிருந்தது. அன்றைக்கு பிரிட்டிஷ் ராணுவத்துக்கு ஆள் வேண்டும். எங்கெல்லாம் வெள்ளைக்காரனுங்க இருக்கிறாங்களோ, எங்கெல்லாம் கிரிஸ்தவங்க இருக்கிறாங்களோ அங்கெல்லாம் ஒரு ‘ஆர்டரு’ வந்திருச்சு. என்னன்னா ‘மிலிட்டிரி’க்கு ஆள் தேவைன்னு. அமெரிக்கன் கல்லூரியில படிக்கும்போது, விளையாட்டுல நான் மாநில அளவில் பங்குபெற்றவன். எங்க கல்லூரி முதல்வர் எட்கார் பிளின்ட். என்னுடைய விளையாட்டு ஆசிரியர் சந்தியாகு ரெண்டு பெரும் என்னைக் கூப்பிட்டு, ராணுவத்திற்குப் போகச் சொன்னாங்க. என்ன ஏதுன்னு கேட்காமல் ராணுவத்துல போய்ச் சேர்ந்தேன். அப்படிப் போய்ச் சேருவதற்கு ஒரு காரணம் இருந்தது. 1942இல் காந்தி பிரிட்டிஷ் படையை ஆதரிக்கல. ‘வெள்ளையனே வெளியேறு’ன்னு  போராட்டம் நடத்திக் கொண்டிருந்தார்.

இந்தப் போராட்டத்திற்கு ஆதரவாக எங்க கல்லூரியில என். சங்கரய்யா (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர்) தலைமையேற்றுப் போராட்டத்தில் ஈடுபடுகிறார். அவர் தலைமையில் என்னையும் அழைத்துச் சென்றார்கள். ஜெகநாதன்ஜி, கிருஷ்ணம்மாள், வீரமலை என ஒரு கூட்டமே அன்றைக்குப் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். சங்கரய்யாவைக் கைது செய்து நகக்கண்ணில் ஊசியேற்றினார்கள். ஆனால், எனக்கு சில சங்கடம் இருந்தது. பாபாசாகேப் அம்பேத்கர் அவர்கள், அப்போது காந்தியின் போராட்டத்தை ஆதரிக்கவில்லை. அது ஒரு வகையில் சாதகமாக இருந்தது. இரண்டாம் உலகப் போர் முடிந்ததும் பிரிட்டிஷ் ராணுவத்தை சில இடங்களில் கலைத்துவிட்டு, மறுபடியும் எங்கள ஊருக்கு அனுப்பி வைத்தார்கள். அப்படி அனுப்பும்போது, எங்களுக்கு வேலைக்கான உத்தரவாதம் கொடுத்து அனுப்பினார்கள். நான் அய்.சி.எஸ். படித்திருந்ததால், சென்னை மாகாணத்தில் துணை ஆட்சியராகப் (Deputy Collector) பதவி கொடுத்து அனுப்பினார்கள்.

ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவனாக நான் துணை ஆட்சியர் பதவி ஏற்பதை, அன்றைக்கு சென்னையில் யாரும் ஏற்கவில்லை. என்னுடைய நடவடிக்கைகளைக் கண்டு பிரிட்டிஷ் ஆளுநர் இதை நியமித்தார். முக்கியமாக எத்திராஜுலு, நான் துணை ஆட்சியராக வருவதை ஏற்க முடியாது என்று அறிவித்துவிட்டார். அன்றைக்கு ஆந்திரா தனி மாநிலமாக இல்லை. ஆந்திர நாயுடுகள் ஒன்று கூடி, என்னை அங்கிருந்து மாற்றி மதுரைக்கு அனுப்புகிறார்கள். பிரு நான் மதுரை மகாலில் பதிவாளராக பணியமர்த்தப்பட்டேன். இந்தக் கொடூரங்களை தந்தை சிவராஜிடம் சொன்னேன், முறையிட்டேன். பிரிட்டிஷார் ஆட்சிக் காலத்திலேயே சாதிக்காரர்கள் அயோக்கியத் தனத்தைத் தொடங்கி விட்டார்கள். இன்று வரைக்கும் அந்த அட்டூழியங்களுக்கு அளவே இல்லாமல் போய்விட்டது.

டாக்டர் அம்பேத்கர் மதுரை வந்திருந்தபோது உங்களின் செயல்பாடு, பொறுப்பு என்ன?

நான் 1946இல் ராணுவத்தில் இருந்து பதவி உயர்வு பெற்று, சென்னை மாகாணத்தின் துணை ஆட்சியராகப் பொறுப்பேற்பதற்கான வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது மராட்டிய சிங்கம், நடமாடும் நூலகம், எரிமலையைக் கக்குகின்ற கொடூரக் கண்கள், மிடுக்கான உடை, சரளமான ஆங்கிலம் என்கிற எல்லா குணாம்சமும் கொண்ட ஒப்பற்ற தலைவர் பாபாசாகேப் அம்பேத்கர் மதுரை வருகிறார் என்ற உடனே நான் மதுரை வந்துவிட்டேன். 1946 டிசம்பர் 29 மதுரை எட்வர்ட் அரங்கில் அந்தக் கூட்டம். 2 நாள் சுற்றுப்பயணமாக பாபாசாகேப் வருகிறார். வடக்கே இருந்ததைப்போல், ஒரு மாபெரும் வரவேற்பு இல்லை என்றாலும்கூட, சட்ட அமைச்சராக வருவதால் அரசுத் தரப்பில் பலத்த ஏற்பாடுகள் நடந்தன. சட்டசபையின் எம்.எல்.சி.யாக இருந்த டபிள்யூ.பி. சவுந்திர பாண்டியனார், ஸ்தல ஸ்தாபனமந்திரியாக (Local Administrative Minister) இருந்த சர் பி.டி. ராசன் போன்றோர் விழாவுக்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருக்கிறார்கள். பாபாசாகேப் அம்பேத்கருக்கு வரவேற்புக் கொடுக்க வேண்டும் எனக் கமிட்டியில் முடிவெடுக்கிறார்கள். இந்த வரவேற்பை ஒரு தாழ்த்தப்பட்டவர் செய்வதுதான் பொருத்தமாக இருக்கும் என்று அந்தக் கமிட்டி முடிவு செய்கிறது. அதன் அடிப்படையில் டபிள்யூ.பி. சவுந்திர பாண்டியனார், என்னைப் பார்க்க நேரடியாக என் வீட்டுக்கு மேலக்கால் வருகிறார். எல்லோருக்கும் ஒரே அதிர்ச்சி. எப்படி சவுந்திர பாண்டியன் மேலக்கால் சேரிக்குள் வந்தார். அவர் பெரிய ஆளாயிற்றே என்றெல்லாம் அவர் சாதிக்காரனுங்களே முனுமுனுக்கிறார்கள். அவர் என்னை நோக்கி வரவேண்டிய சூழலை பாபாசாகேப்தான் உருவாக்கினார். இல்லையென்றால், அவர்கள் எல்லாம் சேரிக்குள் வரவேண்டிய அவசியம் என்ன இருக்கிறது?

அவர் எங்கள் வீட்டுக்குள் வந்ததும் என் பெற்றோர்கள் அவர் காலில் விழுந்தார்கள். எனக்கு அவமானமாக இருந்தது. நான் ராணுவத்தில் இருந்து வந்த மிடுக்கில் இருந்து கொண்டிருந்தேன். வந்தவருக்கு தண்ணீர் கொடுக்க வேண்டும். நான் தண்ணீரைக் கொண்டுவரச் சொல்லி கொடுத்தேன். அவரும் வாங்கிக் குடித்தார். நிலக்கோட்டை மிராசுதாரர், நீங்கள் என்னைப் பார்க்க வந்த நோக்கம் என்ன என்று கேட்டேன். அப்போது அவர் சொன்னார்: “இந்த மாதிரி உங்க தலைவர் (நல்லா கவனிக்கணும்) வர்றாரு. அவருக்கு ஒரு பாராட்டுப் பத்திரம் வாசிக்கணும். அதை ‘அரிஜன’ சமூகத்தவங்களே வாசிச்சா பொருத்தமா இருக்கும்னு நினைக்கிறோம். ஆகவே, நீங்க அதை வாசிக்கணும்னு கேட்டுக்கிறோம்” என்றார். எனக்கு ஒன்னும் பிரச்சினை இல்லை. ஆனா, என்னை விடப் பெரியவர், எங்க சமூகத்துல படிச்சவர் போடி மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த ஏ.டி. ராஜ் —அக்கினிக் குடும்ப மருமகன் பி. செல்வராஜ் இருக்கிறார். மதுரை ஜில்லாஅலுவலகத்தில் அவர் எழுத்தர். அவருக்கு மரியாதை செய்து இதப் படிச்சா பொருத்தமா இருக்கும் என்று கூறினேன்.

1946 டிசம்பர் 28ஆம் தேதியே பாபாசாகேப் வந்துவிடுகிறார். கொடைரோடு விருந்தினர் மாளிகையில் அவருக்கு வரவேற்பு கொடுத்து ஓய்வெடுத்தார். தெரிந்த வரைக்கும் மக்கள் தெற்கே இருந்து சோத்து மூட்டையைக் கட்டிக் கொண்டு வந்துவிட்டார்கள். நான் அவரைப் பார்க்கப் போயிருந்தேன். கிட்டே செல்ல முடியவில்லை. ராணுவப் பாதுகாப்பு அவருக்கு. திருச்சியிலிருந்து சிறப்பு ராணுவம் வந்தது. பிரிட்டிஷ் ஆட்சியில அமைச்சராச்சே. அடுத்த நாள் பெரியார் பேருந்து நிலையத்துக்கிட்ட ரயில்வே ரோட்டை ஒட்டி பெரிய குடிசைப் பகுதி இருந்தது. அதைப் பார்த்துவிட்டு, பாபாசாகேப் சர் பி.டி. ராசன் வீட்டுக்குப் போனார். அணுதான் நானும் செல்வராசும் பாபாசாகேப்பை நேரில் சந்திக்கிறோம். பி.டி. ராசன், பாபாசாகேப் அவர்களிடம், இவர்கள் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்று அறிமுகப்படுத்துகிறார். உடனே பாபாசாகேப், இவர்கள் ஒடுக்கப்பட்ட சமூகத்தில் இருந்து வந்தாலும் படித்தவரல் என்று சொல்லுங்கள் என்கிறார். 1946 டிசம்பர் 29 மதுரை எட்வர்ட் அரங்கில் பாபாசாகேப் அம்பேத்கர் உரையாற்றுவதைக் காண கூட்டம் நிரம்பி நிற்கிறது. மேடையில் பாபாசாகேப், டபிள்யூ.பி. சவுந்திர பாண்டியன், சர் பி.டி. ராசன், தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் கருமுத்து தியாகராசன் (செட்டியார்), தேக்கம்பட்டி பாலசுந்தரராசு, சுலைமான், வழக்கறிஞர் பி. செல்வராஜ் என ஒரு கூட்டமே மேடையில் அமர்ந்திருக்கிறது. காந்த சக்தி கொண்ட கண், மிடுக்கான உடையணிந்து அமர்ந்திருக்கிறார் பாபாசாகேப்.

அவர் உரையாற்றும்போது, “இந்தியாவில் பிரிட்டிஷாரின் ஆட்சியும், இந்திய சுதந்திரப் போராட்ட இயக்கங்களின் நோக்கமும் ஒடுக்கப்பட்ட அட்டவணை இனத்தவருக்கும் அவர்களின் விடுதலைக்கும் என்ன நற்செயல்களை செய்துவிட்டன என்பதைக் கணக்கில் கொண்டுதான் தாழ்த்தப்பட்ட-அட்டவணை இனத்தவர்களின் அரசியல் நடவடிக்கை தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் எதிர்நோக்கி இருக்கும் இந்திய சுதந்திரத்தின் பாதையில், தாழ்த்தப்பட்ட அட்டவணை இனத்தவர்களின் இடம், சூழல், பொறுப்பு என்ன என்பதை தாழ்த்தப்பட்ட அட்டவணை இனத்தவர்கள்தான் முடிவுசெய்ய வேண்டியுள்ளது. வேடிக்கை என்னவென்றால், இவர்கள் எந்த இடத்தையும் வரையறை செய்ய வேண்டிய சூழலில் இல்லை; பின்னுக்குத் தள்ளப்பட்டு இருக்கிறார்கள்… அவர்களை விடுதலைக்கான பாதை நோக்கி அணிதிரட்ட வேண்டியிருக்கிறது. தமிழ்நாடு அதற்கான களம்தான்…” என்று என்னென்னவோ பேசினார். சாதாரண ஆங்கிலத்தில் பேச எவ்வளவோ முயற்சிக்கிறார், முடியவில்லை. வந்து விழுகிற ஒவ்வொரு வார்த்தைக்கும் Encyclopedia (கலைக் களஞ்சியம்) வைத்துதான் அலசிப் பார்க்க வேண்டும். அந்த அளவுக்கு நுட்பமான ஆங்கில வார்த்தைகளை அடுக்கிப் பேசிக்கொண்டே இருந்தார்.

கூட்டம் முடிந்த பிறகு நாங்கள் அவரைச் சந்தித்தோம். எங்களிடம் கொஞ்ச நேரம் பேசினார். “வடக்கே இடஒதுக்கீட்டை எதிர்த்து சாதி இந்துக்கள் போராட்டங்களைத் தொடங்கி இருக்கிறார்கள். பிற்படுத்தப்பட்டவர்களாவது இடஒதுக்கீட்டின் அவசியத்தை உணருவார்கள் என நினைத்தோம். அவர்களும் ‘மகர்’களுக்கு எதிராகப் போராடுகிறார்கள். ‘மகர்’களைக் கொல்வார்கள் போல் தெரிகிறது. அதனால்தான் ‘செட்யூல்டு இனப் பேரவை’யை நாடு முழுக்கக் கட்டிவருகிறோம். எல்லா மாநிலங்களிலும் இருக்கிற தாழ்த்தப்பட்ட அட்டவணை இனத்தவர்கள் ஒன்றுகூடி, இடஒதுக்கீட்டை முழுமையாக ரத்துசெய்யத் துடிக்கிற சாதி இந்துக்களுக்கு எதிராகப் போராட வேண்டியுள்ளது.

தமிழகத்தில் நீங்கள் எல்லாம் துடிப்பாக இருக்கிறீர்கள். ‘செட்யூல்டு இனப் பேரவை’யை நீங்கள் நினைத்தால் அதிதீவிரமாக முன்னெடுத்துச் செல்ல முடியும். இப்பேரவையின் தேசியத் தலைவர் என். சிவராஜ் இங்குதான் இருக்கிறார். அவரோடு தொடர்பு வைத்துக்கொண்டு ‘செட்யூல்டு இனப் பேரவை’யை மக்களிடம் எடுத்துச் செல்லுங்கள். உங்களால் அது முடியும். பூனாவில் நடக்கிற மாநாட்டுக்கு வாருங்கள் சந்திப்போம்” என்று கூறிவிட்டுச் சென்றார். அதிலிருந்து நாங்கள் ‘செட்யூல்டு இனப் பேரவை’யைக் கட்ட வேண்டும் என்பதில் ஆர்வம் செலுத்தினோம்.

செட்யூல்டு இனப் பேரவையின் (SCF) வளர்ச்சி, செயல் திட்டங்கள் எப்படி இருந்தன? இப்பேரவை, வட தமிழகத்தில் வீச்சாக இருந்ததுபோல் தென்தமிழகத்தில் எழுச்சி அடையவில்லையே, ஏன்?

பாபாசாகேப் அவர்களை வட மாவட்டத்தில் உள்ள நம் மக்கள் புரிந்து கொண்டதைப் போல அல்லது அவர்களுக்கு பாபாசாகேப் அறிமுகமானதைப் போல, தென் மாவட்டங்களில் பாபாசாகேப் அவர்களைப் பற்றிய கருத்து, சிந்தனை பரவலாகவில்லை. ஆனாலும், அம்பேத்கர் மீது ஒரு நாட்டம், ஈடுபாடு இருந்தது. அதனால்தான் பத்து வருசத்துக்கு முன்பே ராமநாதபுரத்துலயிருந்து ‘பூவைசிய இந்திரகுல வேளாளர் சங்க’த்தின் சார்பில் பாபாசாகேப்பை மதுரைக்கு அழைக்கிற சில முயற்சிகள் நடந்தது. அப்புறம் ஏனோ அது நின்னு போயிடுச்சு.

எனக்கு 20.4.1944 அன்று திருமணம் ஆனது. இருந்தாலும் வீட்டை நினைக்காமல் வடக்கே இருக்கிற தலைவர்களோடு ஒரு உறவை வச்சுக்கிட்டேன். நான் பட்டாளத்துக்காரனா வளர்ந்ததால, எனக்கு உட்சாதி வேறுபாடு பார்க்கத் தெரியாது. அதில எனக்கு விருப்பமும் இல்லை. சென்னைக்குப் போய் தந்தை சிவராஜ், அன்னை மீனாம்பாள் இருவரையும் சந்தித்தேன். இங்கே நான் ஒரு விசயத்தைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். சிவராஜ் அவர்களை தந்தை என்றும், மீனாம்பாள் அவர்களை அன்னை என்றும்தான் அடைமொழியில் அழைக்கணும். இருவரும் நம் சமூகத்துப் பெற்றோர்கள்.

பாபாசாகேப் ஏதாவது செய்தி அனுப்பியிருந்தால் போதும். உடனே Meet Madras ‘சென்னை சந்திப்பு’ என்று தந்தி வரும். வடக்கே மகர்களுக்கும் இந்துக்களுக்கும் கலவரம் நடந்து கொண்டிருக்கிறது. நம்ம பேரவையின் முக்கியத் தலைவர் ஒருத்தர் (டாங்கே என்று வரும்) சுட்டுக் கொல்லப்பட்டார். தேர்தலில் காங்கிரசை எதிர்த்து பேரவை நிற்கிறது. சில இடங்களில் பேரவைக்கு கடுமையான தோல்வி கிடைத்தது. தோல்வி என்று சொன்னால் அதிக வாக்கு வித்தியாசத்தில் தோல்வி இல்லை. வெறும் ஆயிரம், பத்தாயிரம் ஓட்டுகள்தான் வித்தியாசம். அப்படிப் பார்த்தா நமக்கு நல்ல வெற்றி. வடக்கே நடக்கிற கலவரங்களுக்கு எதிராக தாழ்த்தப்பட்டவர்கள் சிறைநிரப்பும் போராட்டத்தைத் தொடங்கி நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்தச் செய்தியை எல்லாம் தந்தை சிவராஜ் விளக்கமாகச் சொல்லுவார்.

1952இல் பொதுத் தேர்தல் வந்தது. தமிழ்நாட்டில் பேரவையின் சார்பில் 13 போட்டியிட்டோம். 5 பேர் மட்டும்தான் வெற்றி பெற்றோம். நிலக்கோட்டை தனித் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் அய்யனாரை எதிர்த்து நான் போட்டியிட்டேன். வெறும் பத்தாயிரம் ஓட்டில் தோல்வியைச் சந்தித்தேன். ‘அரிஜன சேவா சங்கம்’ என்னை எதிர்த்து காங்கிரசுக்கு ஆதரவா வேலை செய்த கொடுமை அப்ப நடந்தது. சீர்காழியில் கே.பி.எஸ். மணி, காட்பாடியில் ஆதிமூலம், வேலூரில் தசரதன் என மிகப் பெரிய கூட்டம் போட்டியிட்டோம். சீர்காழி கே.பி.எஸ். மணி மாதிரி இன்னும் ரெண்டு பேர் இருந்திருந்தா போதும். துணிச்சலா நிறைய வேலைகள் செய்திருக்க முடியும். அவரும் பட்டாளத்தில் இருந்தவர். எப்பவும் துப்பாக்கி வச்சிருப்பார்.

1954 குடியாத்தம் இடைத் தேர்தலில் காமராசரை எதிர்த்து பள்ளிகொண்டா கிருஷ்ணசாமி, பேரவையின் ஆதரவோடு நிற்கிறார். அதன் பிறகு பேரவைக்கு தமிழ்நாட்டில் நேர்ந்த ஆபத்து என்னவென்றால், மீண்டும் காங்கிரசையே ஆதரிக்க வேண்டியிருந்தது. என் போன்றவர்களுக்கு அது ஒரு அதிருப்தி. சுய கவுரமா இருக்கணும்னு முடிவு பண்ணித்தான் வெளியே வர்றோம். திருப்பியும் நம்மள ஒடுக்கிறவங்ககூட எப்படி கூட்டு வச்சுக்க முடியும்? நான் பதிவாளராக இருந்து சமூக நலத்துறை அதிகாரியாகப் பதவி உயர்வு பெற்று வரும்போது, தேர்தலுக்காக அந்தப் பதவியையும் ராஜினாமா பண்ணிட்டேன். தேர்தலில் தோல்வி அடைந்ததால் நிலக்கோட்டையில் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்காக ‘சாந்தி’ என்கிற ஆதிதிராவிடர் மாணவர் இல்லத்தைத் தொடங்கி நடத்தினேன். அதன் பிறகு பெரிய அளவில் சொல்லும்படியாக எதுவும் செய்யவில்லை.

நீங்கள் ராணுவத்தில் வேலை செய்ததால், தங்களுக்கு உட்சாதிப் பார்வை இல்லை என்று குறிப்பிட்டீர்கள். சாதி ஒழிப்பு என்கிற தளத்தில் உட்சாதி ஒழிப்புக்கான பணிகள் ஏதாவது செய்திருக்கிறீர்களா?

சாதி ஒழிப்பு என்கிற வேலையே நம்முடைய உட்சாதியை ஒழிப்பதில்தான் இருக்கிறது. என்னுடைய நோக்கம் அதுதான். குறிப்பாக அருந்ததியர் விடுதலைக்காக உழைப்பது. நம்ம சமூகத்தைச் சேர்ந்தவர்களே அவர்களை ஒடுக்குகிறார்கள். ஒரு சம்பவத்தை உங்களுக்குச் சொல்லணும். 1946இல் பட்டிவீரன்பட்டியில் உள்ள மாளிகையைத் திறப்பதற்கு கவர்னர் லெனின்கோ வருகிறார். பாபாசாகேப் வந்தபோது இது நடந்தது. அப்போ கவர்னர் மிகப்பெரிய விருந்துக்கு ஏற்பாடு செய்யச் சொல்கிறார். சவுந்திர பாண்டியனார் நிகழ்ச்சிப் பொறுப்பை ஏற்கிறார். அந்த விருந்தில் 50 மாடுகளை அடித்து மாட்டுக்கறி பிரியாணி செய்யச் சொல்லி கவர்னர் சொல்கிறார். இங்கே இருக்கிற பள்ளர்களோ, நாடார்களோ மாடு பிடித்து பிரியாணி செய்வதில் கைதேர்ந்தவர்கள் அல்ல. அந்த வேலையை அருந்ததியர்களும் இசுலாமியர்களும்தான் செய்தார்கள். இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்ச்சி. 12 கிராமத்து தலித்துகள் ஒன்றுகூடி இந்த விருந்தில் பங்கேற்கிறார்கள். இது ஒரு ஒருங்கிணைப்பான செயல்பாடாக இருந்தது. பிறகு 1949இல் ‘ஓட்டல் பிரவேசம்’ செய்தோம். அருந்ததியர்களை அழைத்துக்கொண்டு செய்தோம், வெறும் பள்ளர்களை மட்டுமல்ல. அதே ஆண்டில் கோயில் நுழைவுப் போராட்டத்தையும் தொடங்கினோம். சோழவந்தான் ஜகைமாரியம்மன், திரவுபதியம்மன், தென்கரை அகிலாண்டேஸ்வரி, முள்ளிப்பள்ளம் எலங்காளியம்மன் —இந்தக் கோயில்களில் எல்லாம் அருந்ததியர்களோடு உள்ளே நுழைந்தோம்.

1975இல் மிகப்பெரிய சாதிக் கலவரம் சோழவந்தான் பகுதியில் உருவானது. அந்தக் கலவரத்திற்கு அங்கு இருக்கிற சைவ வெள்ளாளர்களும் ஒரு காரணம். அவர்களுடைய தூண்டுதலால் கள்ளர்கள் நம்மள தாக்குகிறார்கள். அப்பத்தான் எனக்கு கொலைமிரட்டல் வருது. ‘என்னைக் கொலை செய்றவங்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் பணம், 50 சென்ட் நிலம்’ என்று பஞ்சாயத்தில் அறிவிக்கிறார்கள். ஆனால், என்னைக் கொள்வதில் அவர்களுக்குச் சிக்கல் இருந்தது. நான் பட்டாளத்தில் இருந்து வந்தவன். எப்பவும் ஜெர்மன் துப்பாக்கி இடுப்பிலே இருக்கும். 10 லோடு ரவுண்ட் பண்ணி வச்சிருப்பேன். இந்த விசயத்தை திசை திருப்பணும்னு முடிவு பண்ணி, தாழ்த்தப்பட்டவர்கள் அனைவரும் ஒன்றுகூடி இரண்டு குழுவாகப் பிரிந்து பொதுக் குழாயில் தண்ணீர் பிடித்தல், பொதுக் கிணற்றில் நீர் எடுத்தல் நிகச்சியை கையில் எடுக்கிறோம். அரசு ஆதரவுடன் இந்த நிகழ்ச்சியை செய்தோம்.

1982 இல் மேலக்கால்ல இருக்கிற எல்லா தாழ்த்தப்பட்ட மக்களையும் மந்தைக்கு முன்னாடி கூட்டி, முதன்முறையா ஆண், பெண், குழந்தைகள் எல்லாருமா சேர்ந்து செருப்பு போட்டு எல்லா வீதிகள்லயும் நடந்தோம். பிறகு மீண்டும் கலவரம் நடக்கும்போதுதான் என்னுடைய வீடு சூறையாடப்பட்டது. தீவைப்பு நடந்தது. அம்பேத்கர் எனக்கு எழுதிய கடிதங்கள், அம்பேத்கரோடு எடுத்துக் கொண்ட புகைப்படங்கள், என்னுடைய கல்விச் சான்றிதழ், நிலப்பத்திரம், 8 தோட்டா ஜாக்கட், சிவராஜ் எழுதிய கடிதங்கள் எல்லாம் எரிந்து போனது. 11 வழக்குகள் என் மீது போடப்பட்டன. 6 மாதம் சிறையில் இருந்தேன். 10 வருசம் இந்த வழக்குகளைச் சந்திப்பதில் என் காலம் போனது. பிறகு தலித் ஞானசேகரன் தம்பி, ‘ஒருங்கிணைந்த தலித் விடுதலை இயக்கம்’ (IDLM) தொடங்கிய பிறகு அவரோடு அப்பப்ப சில வேலைகள் தொடர்வது உண்டு.

புரட்சியாளர் அம்பேத்கரின் பாசறையில் வளர்ந்த நீங்கள், அம்பேத்கர் முன்னெடுத்த பவுத்தத்தைத் தழுவாமல் ஏன் இஸ்லாத்தைத் தழுவினீர்கள்?

பாபாசாகேப் பவுத்தத்தை ஏற்பதற்கு எந்த மாதிரியான மனப்போராட்டங்கள் அவருக்கு இருந்ததோ, அதேபோல இஸ்லாத்தை நான் ஏற்பதற்கு எனக்குள் சில மனப் போராட்டங்கள் நீண்ட காலமாக ஓடிக் கொண்டிருந்தது. 1956இல் பாபாசாகேப் காட்மாண்டுவில் இருந்து தீட்சை பெற்று நாக்பூர் வருகிறார். அவருடைய வரவேற்புக்காக கோலாரில் இருந்தும், சென்னையில் இருந்தும் பல தலைவர்களுடைய தலைமையில் நாக்பூர் சென்றோம். அப்போது ஒரு கருத்தரங்கு நடந்தது. அந்தக் கருத்தரங்கை பாபாசாகேப் தலைமை ஏற்று நடத்திக் கொண்டிருகிறார். நாம் ஏன் பவுத்தத்தைத் தழுவுகிறோம் என்பதற்கு பாபாசாகேப் பல விளக்கங்களை அளிக்கிறார். கேள்வி நேரத்தில் சில கேள்விகளை எழுப்பினேன். பவுத்தம் ஒரு கிடப்புச் சமயம் (Dead Religion) என்று சொல்கிறார்களே, அதை நாம் ஏற்றால் நம்முடைய ‘பிறவி இழிவு’ நீங்குமா? என்று கேட்டேன்.

அப்பத்தான் அவர் சாதியமைப்பு இருக்கிற நாட்டில் பவுத்தம் என்பதை நாம் எப்படிப் பார்க்க வேண்டும் என்று இந்து மதத்தின் கட்டமைப்பை உடைத்துப் பேசுகிறார். பிறகு அக்டோபர் 14இல் பவுத்த ஏற்பு விழாவை பாபாசாகேப் லட்சக்கணக்கான மக்களுடன் நடத்தினார். பவுத்த ஏற்பில் மட்டும் எனக்கு உடன்பாடில்லை.

நான் 6.12.1992இல் பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாளன்று, அம்பேத்கர் நினைவு நாளில் சென்னை அசோக் நகர் பள்ளிவாசலில் 1000 பேருடன் இசுலாம் தழுவினேன். அதில் 300 பேர் தாழ்த்தப்பட்டவர்கள். இதற்கு முன்பே 1981இல் தென் மாவட்டங்களில் கொடிக்கால் ஷேக் அப்துல்லா போன்றோரின் தலைமையில் மிகப்பெரிய மதமாற்றம் மீனாட்சிபுரத்தில் நடந்தது என்பது பலருக்குத் தெரியும். குறிப்பாக பள்ளர்கள் அதிகமாக இசுலாம் தழுவினார்கள். பொதுவா தங்களுக்கு நடக்கிற பிரச்சனைகளுக்கு எதிராகப் போராடுகிற, எதிர்க்கிற, எதிர்த்துத் தாக்குகிற குணம் பள்ளர்களுக்கு உண்டு. வேடிக்கை பாத்துக்கிட்டு இருக்க மாட்டாங்க. இயல்பாகவே, அப்படி ஒரு குணம். அந்த குணங்களுக்கு ஏற்றதாக்கூட இஸ்லாத்தைத் தழுவியிருக்கலாம்.

மதமாற்றத்தில் ஈடுபடுகிற பலருக்கும் பல நோக்கங்கள் இருக்கும். ஒருத்தர் நான் இந்து இல்லைன்னு சொல்லி மதம் மாறுவார். இன்னொருத்தர் சாதிக் கொடுமைகள் இருக்கு, அதனால மதம் மாறுகிறோம்னு சொல்லுவார். இன்னும் சிலர் சலுகைக்காக மதம் மாறுகிறோம்னு சொல்லுவாங்க. ஆனா மதமாற்றத்தில் நான் முன்வைத்த கருத்து, ‘பிறவி இழிவு நீங்க வேண்டும்’. பொறக்கும்போது பள்ளனா பொறந்திட்டேன். என் பிள்ளைகளும் பள்ளர்களா பிறக்கணும்னு என்ன அவசியம் வேண்டியிருக்கு. இத யார் தீர்மானிக்கிறது? நான் பள்ளனா பொறந்திட்டேன். என்னுடைய அடுத்த தலைமுறை பள்ளனா பொறக்கக் கூடாது. அதுக்கு உடனடித் தீர்வு இசுலாம். இப்ப என் பேரனுங்கள பள்ளன்னு கூப்பாடு போட்டு சொன்னாலும் யாரும் நம்பப் போறதில்ல. அவன் யாருன்னு ஜமாத்துக்கும் தெரியும். மக்களுக்கும் தெரியும். ஒரு தலைமுறை மாறிடுச்சு. பையன கொடுத்தோம். பெண் எடுத்தோம். இந்த மாதிரியான மாற்றம் நம்முடைய பிறவியிலேயே ஏற்படணும்னா, அதுக்கு ஒரே தீர்வு இஸ்லாம்தான்.

மதம் மாறுவது என்கிற நிலையில் நீங்க பவுத்தரா, கிறித்தவரா மாறுவது ரொம்ப சுலபம். அது யாரையும் இந்த சமூகத்துல பாதிக்காது. மதம் மாறுகிறவர்கிட்டேயும் மாற்றத்த கண்டுபிடிக்க முடியாது. வேணும்னா கூட்டம் போட்டு சொல்லிக்கலாம். ஆனா, நீங்க இஸ்லாம் மாறுவது என்பது மத மாற்றம் மட்டுமல்ல. உன்னுடைய சமூகத்துல உன்ன அடிமைப்படுத்துகிற கலாச்சாரத்திலிருந்தும் மாறுகிறோம். இந்தத் தலைமுறைக்கு அது போதும். மறந்தும் இந்து மதத்தோட எந்தத் தன்மையும் உன்னை பாதிக்காது. இத பவுத்தத்தில இருந்து உன்னால சொல்ல முடியாது; கிறித்துவரா இருந்தும் சொல்ல முடியாது. இரண்டிலும் இந்து மதம் நம்மள இழி பிறவியா நடத்துற எல்லா விசயமும் அதுக்குள்ள இருக்குது. அதுக்காக இசுலாம் மதம் மிகச் சிறந்தது அப்படின்னு புகழாரம் கொடுக்கல. அதுக்குள்ளேயும் ஏற்ற இறக்கம் இருக்கு.

வட மாவட்டத்தில் இருக்கிற பறையர்கள் கிறித்தவத்தையும் பவுத்தத்தையும் அதிகமாகத் தழுவினார்கள். தென் மாவட்டத்தில் இருக்கிற பள்ளர்கள் இஸ்லாத்தைத் தழுவிகிரார்கள். இதற்கு குறிப்பிட்ட காரணங்கள் உண்டா?

என்னால் அந்த அளவுக்கு யோசித்துப் பார்க்க முடியல (அப்படி இருக்குதான்னு உங்கள மாதிரி ஆளுகதான் பார்த்துச் சொல்லணும்). ஆனால், பள்ளர்கள் எப்பவோ இஸ்லாம் மதத்தைத் தழுவிட்டாங்கன்னு சொல்ல முடியும். எனக்குத் தெரிஞ்ச வரைக்கும் சொல்றேன். 12ஆம் நூற்றாண்டில் தென் மாவட்டத்தில் ஒருத்தர்கூட தலித் இஸ்லாமியர் இல்லை. இந்தக் காலகட்டத்தில்தான் நாகர்மலை, சமணர்மலை, யானைமலை போன்ற பகுதிகளை சைவர்கள் கைப்பற்றுகிறார்கள். மிகப்பெரிய சைவப் போராட்டம் நடக்கிறது. சைவம் எப்படி சமணத்தை வீழ்த்தியதோ, அதைப் போலவே சைவத்தை வீழ்த்த வேண்டும்; சைவத்தை வீழ்த்த வேண்டுமானால் அதை எதிர்க்கிற, வீழ்த்துகிற சக்தியுடைய ஒன்றோடு கூட்டுச்சேர வேண்டும். சமணத்தையோ பவுத்தத்தையோ கூட்டுச் சேர்க்க முடியாது. அதுதான் வீழ்ந்து கிடக்குதே. அப்ப அதை எதிர்க்கிற மதமாக இருந்தது இஸ்லாம்தான். இந்த மோதலில் செத்துக் கொண்டிருந்தவர்கள் நம்முடைய முன்னோர்கள்தான். அதனால் அவர்கள் இஸ்லாம் மாறி இருக்கலாம். அப்ப கிறித்தவம் இந்த அளவுக்கு இருந்திச்சான்னு தெரியாது. நான் இருக்கிற சோழவந்தான் பகுதி முழுவதும் சைவ மதம் அட்டூழியம் பண்ணிய இடம். இன்னைக்கும் அந்தப் பாதிப்பு இருக்குது. அது யாருக்கும் தெரியல.

எனக்கு பள்ளர்-பறையர்னு பிரிச்சுப் பார்க்கத் தெரியல. என்னுடைய அதிக காலம் வடக்கேதான் கழிஞ்சது. தந்தை சிவராஜ்தான் தலைவர். பிரச்சனைகள் வடக்கே ஒரு மாதிரியா இருக்கலாம், தெற்கே ஒரு மாதிரியா இருக்கலாம். பவுத்தத்தில, கிறித்தவத்தில சில நல்லதுக இருக்கலாம். சலுகைகள் கிடைக்கலாம். அது, அவரவர் தேவையைப் பொறுத்தது. நான் இஸ்லாமியரா இருக்கிறேன். ஏற்கனவே என் பாட்டன், பாட்டிய பேசின இழிந்த நிலையை இப்ப எங்கிட்ட பேச முடியாது. அதுதான் எனக்குக் கிடைச்ச விடுதலையா பார்க்கிறேன்.

நீங்க எதிர்பார்த்தது போன்று இஸ்லாம் உங்களுக்கு அல்லது தலித் மக்களுக்கு விடுதலை கொடுக்கக் கூடியதாக இருக்கிறதா?

நிறைய பேர் படிச்சிருக்கிறாங்க. வெளிநாடுகளுக்கு வேலைக்குப் போய் இருக்கிறாங்க. நமக்குன்னு இருக்கிற பிரச்சனையை ஜமாத் வரைக்கும் கொண்டு போய் பேச முடியும். எல்லா இஸ்லாமியர்களும் நம் மீது கவனம் செலுத்துறாங்கன்னு சொல்ல முடியாது. நம் மீது அக்கறை கொண்டவர்கள் சிலவற்றைச் செய்யணும்னு முயற்சிக்கிறாங்க. இஸ்லாத்துக்கு மாறினாலும், என் வீடு இன்னும் சேரியிலதான் இருக்கு. அது ஒண்ணுதான் இன்னும் நான் பள்ளன்னு சொல்ல வைக்குது. அதனாலதான் மேலக்கால் சேரியில மசூதியைக் கட்டினோம். வேற இடத்துக்கு தொழுகைக்குப் போறத விட, நம்ம இடத்திலேயே அது நல்லதா இருக்கு. அதுக்காக நம்ம சேரியையே மாத்த முடியாது. அதே சமயத்துல நம்ம பெரியப்பன், சித்தப்பன், மாமன் மச்சான் எல்லாம் நம்மளோட இருக்கிறாங்க. திரவுபதி அம்மனுக்கு திருவிழா வரும்போது, நாங்களும் அதுல பங்கெடுக்கிறோம். எங்க வீட்டுக்காரங்க ஊர்ல எலங்காளி அம்மனுக்கு திருவிழா எடுக்கும்போது, அவங்கள நான் தடுக்க முடியாது. போய்விடுவாங்க. இந்தத் தலைமுறைக்கு இந்த மாற்றம் போதும்னு நினைக்கிறேன். இதுல பெரிய அளவில் ஏதாவது செய்யணும்னா, உங்கள மாதிரி இருக்கிற இளவட்டங்கதான் செய்யணும்.

நேர்காணல்: அன்பு செல்வம்

(நன்றி: தலித் முரசு, ஏப்ரல் & மே, 2005)

Related posts

Leave a Comment