why muslim girls wearing hijabகட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

ஹிஜாப்: முஸ்லிம் பெண்களைத் துரத்தும் கேள்விகளும், அதற்கான பதில்களும்!

 1. ஏன் ஹிஜாப் அணிகிறீர்கள்?

முஸ்லிம் பெண்களை எந்நேரமும் துரத்தும் கேள்விதான் இது. முஸ்லிமல்லாத பெண்களின் ஆடைக் கலாச்சாரத்தைக் காட்டிலும் முஸ்லிம் பெண்களின் ஆடைகள் எப்போதும் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது.

உங்கள் கேள்விக்கு என் பதில்: ஹிஜாப் இஸ்லாமியக் கடமைகளுள் ஒன்று என்பதால் அணிகிறேன்.

 1. ஆனால் ஹிஜாப் இஸ்லாத்தில் கட்டாயமில்லை என்று கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதே..?

இங்கே ஆதிக்கம் செலுத்தும் பண்பாட்டை முஸ்லிம்கள் மீது திணிக்க சங் பரிவார்கள் முயற்சிக்கிறார்கள். இந்தப் பின்னணியில்தான் ஹிஜாப் சர்ச்சையாக்கப்படுகிறது. அதற்குத் துணைபோகும் வகையிலான தீர்ப்பையே நீதிமன்றம் வழங்கியிருக்கிறது. நீதிபதிகளுக்கு இஸ்லாமியச் சட்டவியல் பற்றியெல்லாம் அரிச்சுவடிகூட தெரியாமல் எப்படி அதில் இவ்வளவு பெரிய குறுக்கீட்டைச் செய்தார்கள் என்று தெரியவில்லை. அது அவர்களின் வேலையும் அல்ல.

பல நூற்றாண்டுகளாக, உலகம் முழுக்க முஸ்லிம்கள் ஹிஜாபைக் கடைப்பிடித்து வருகிறார்கள். “நபியே! உங்கள் மனைவிகள், புதல்விகள் மற்றும் நம்பிக்கையாளர்களின் மனைவியர் ஆகியோரிடம் கூறும்: அவர்கள் தங்கள் தலை முந்தானைகளைத் தாழ்த்திக் கொள்ளட்டும்! ” என்கிறது திருக்குர்ஆன் (33:59).

அரசியல் அமைப்புச் சட்டப்படி பார்த்தாலும் நீதிபதிகள் எங்கள் சமய உரிமையைத்தான் நிலைநாட்டியிருக்க வேண்டும். ஆனால் அதை அவர்கள் செய்யத் தவறிவிட்டார்கள்.

 1. ஹிஜாப் உங்கள் சுயதேர்வா அல்லது வீட்டிலுள்ளர்களின் அழுத்தத்தால் கடைப்பிடிக்கப்படுவதா?

இது எங்கள் மீது திணிக்கப்பட்டிருப்பதாக முஸ்லிமல்லாதோர் பலர் நினைக்கிறார்கள். அந்த அடிப்படையிலிருந்துதான் இந்தக் கேள்வி வருகிறது. நாங்கள் மூளை சலவை செய்யப்பட்டிருப்பதாகக்கூட ஒருசிலர் வெறுப்பைக் கக்குகிறார்கள். எங்களுக்கு சுயசிந்தனை இல்லை என்பதுபோல் அவர்கள் சித்தரிக்க முயற்சிக்கிறார்கள். ஒருவகையில் இதுவெல்லாம் முஸ்லிம் பெண்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறை.

சுயதேர்வு பற்றி ஒன்றைச் சொல்லியாக வேண்டும். ஒருவரின் சுயதேர்வு 100 சதவீதம் எந்தப் புற அழுத்தமும் இல்லாமல் மேற்கொள்ளப்படுவதாகச் சொல்ல முடியுமா? நம் சமூகத்தில் பெண்கள் முடியை நீளமாக விடுவதும், ஆண்கள் தன் முடியைக் கத்தரித்துக்கொள்வதும் அவரவர் விருப்பங்களின்படிதான் நடக்கிறதா? அவ்வாறு நடந்தால் மக்கள் எல்லோரும் எப்படி ஒன்றுபோல் இருக்க முடிகிறது?

அதனால் ஹிஜாபை திணிப்பு, அடிமைத்தனம் என்றெல்லாம் வெளியிலுள்ளோர் சொல்லக் கூடாது. அது எங்களை அவமதிக்கும் செயல். அப்படிச் சொல்வோரை சட்டப்படி தண்டிக்க வழிவகைகள் தேவை என்று நினைக்கிறேன். ஹிஜாப் குறித்து கருத்துச் சொல்லும் உரிமை மற்றவர்களைவிட எங்களுக்குத்தான் இருக்கிறது.

 1. கடந்த 20 வருடங்களாகவே தமிழகத்தில் ஹிஜாப் வழக்கம் இருப்பதாகச் சொல்கிறார்களே?

இது தவறான கருத்து. தலைத்துணி அணிவதோ, முழு நீள உடை அணிவதோ புது வழக்கமல்ல; முஸ்லிம்கள் மட்டுமே கடைப்பிடிக்கும் வழக்கமும் அல்ல. உலகம் முழுவதும் பல்வேறு பண்பாடுகளில் அந்த வழக்கம் இருந்து வந்திருக்கிறது. இப்போதும் பல சமூகத்துப் பெண்கள் முக்காடு அணியும் வழக்கமுடையோராக உள்ளார்கள்.

தமிழகத்தில் கறுப்பு நிற புர்கா வருவதற்கு முன், துப்பட்டி போன்ற பிற உடைகள் வழக்கத்தில் இருந்தன. தற்கால பெண்களுக்கு புர்கா அளவுக்கு அதுவெல்லாம் சவுகரியமாக இருக்காது என்று நினைக்கிறேன். உலகமயத்துக்குப் பிறகு புர்கா பரவலாகிவிட்டது. வேறு மாற்றங்களும் எதிர்காலத்தில் வரலாம். ஆனால் ஹிஜாப் தொடர்ச்சியாகக் கடைப்பிடிக்கப்பட்டே வரும்.

 1. பொது இடங்களில் முஸ்லிம் பெண்கள் மட்டும் தனித்து தெரிவது மற்றவர்களிடமிருந்து அந்நியப்படுவது போலுள்ளதே?

அப்படியென்றால் மற்ற பெண்களும் ஹிஜாப் அணிந்து அந்தப் பிரச்னையைத் தீர்க்கலாமே? ஏன் முஸ்லிம் பெண்கள் தங்களின் பண்பாட்டு அடையாளங்களை விட்டுக்கொடுக்க வேண்டும்?

 1. கல்விக் கூடங்களில் வேறுபாடுகளைக் களைவதற்குத்தானே சீருடை பின்பற்றப்படுகிறது. அதை ஏன் நீங்கள் பின்பற்ற மறுக்கிறீர்கள்?

சங் பரிவார்கள் இப்படி கதை கட்டுகிறார்கள். இந்தியாவிலுள்ள எந்தப் பள்ளிக்கூடத்திலும் சீருடையை முஸ்லிம் மாணவிகள் கடைப்பிடிக்க மாட்டேன் என்று சொல்லவில்லை. தற்போதைய பிரச்னையில் சீருடையுடன் தலைத்துணியையும் அணிவதாக அவர்கள் சொல்வதுதான் பிரச்னையாக்கப்படுகிறது.

பள்ளிகள் போன்ற பொது வெளிகளில் பிற மதக் குறியீடுகள் இயல்பானவையாகவும், முஸ்லிம் பண்பாடு சார்ந்த குறியீடுகள் ஒருமைப்பாட்டுக்கும், பொது ஒழுங்குக்கும் எதிரானவையாகவும் சித்தரிக்கப்படுவதுதான் இங்குள்ள சிக்கல். இப்போது நாங்கள் ஹிஜாபுக்குப் போராடுவதன் வழியாக எங்களின் அடையாளங்களையும், பண்பாடுகளையும், இருப்பையும் காத்துக்கொள்ளவே போராடுகிறோம்.

 1. ஹிஜாப் அணிவது பெண் முன்னேற்றத்துக்கு எதிரானதில்லையா?

கேள்வியே வேடிக்கையாக உள்ளது. கழுத்தில் chain அணிவது பெண் முன்னேற்றத்தை பாதிக்காதா என்று நான் கேட்டால் எப்படியிருக்கும்? அப்படித்தான் இருக்கிறது இதுவும். பெண்கள் முன்னேற்றத்துக்கு ஹிஜாப் தடையாக இருப்பதாகச் சொல்வது சிலரின் முன்முடிவாக இருக்கலாம். ஆனால் உண்மை அதுவல்ல.

ஹிஜாபுடன் எங்களை கல்வி கற்கவோ பணிபுரியவோ அனுமதிக்க வேண்டும் என்றே நாங்கள் கேட்கிறோம். அதற்கு அனுமதிக்க மறுப்போர் எங்கள் முன்னேற்றம் பற்றி நீலிக்கண்ணீர் வடிக்கக் கூடாது. ஹிஜாப் எங்களுக்கு மறுக்கப்பட்டால்தான் பெண்களின் முன்னேற்றம் பாதிக்கப்படும். இப்படிச் சொன்னால் உடனே சிலர் ஹிஜாபும், அதைக் கடைப்பிடிக்கச் சொல்லும் உங்கள் குடும்பமும்தானே முஸ்லிம் பெண்களின் முன்னேற்றத்துக்கு எதிராக இருக்கின்றன என்று சொல்லி எங்கள் மீதே பழியைத் திருப்பிவிடுவார்கள். அவர்கள் முஸ்லிம்களின் நிலையிலிருந்து ஹிஜாப் விவகாரத்தைப் பார்க்கத் தவறுகிறார்கள் என்றே சொல்ல தோன்றுகிறது.

எங்களை விட்டால் நாங்களே முன்னேறிவிடுவோம். மற்றவர்கள் எங்களின் தலைத்துணியை உருவ முயலும் பாசிஸ்டுகளை முறியடிக்கட்டும். அதுதான் இப்போதைய தேவையாக இருக்கிறது.

(தொகுப்பு: நதீரா)

Related posts

2 Thoughts to “ஹிஜாப்: முஸ்லிம் பெண்களைத் துரத்தும் கேள்விகளும், அதற்கான பதில்களும்!”

 1. Zaheer MN

  இவ்வாறான நடைமுறை சார் பிரச்சினைகள் முஸ்லிம்களை குறி வைத்து நடாத்தப்படுவது தங்கள் அரசியல் சுய இலாபங்களுக்காகவே அன்றி வேறில்லை. ஆயினும் அவற்றை நடைமுறையிலேயே அனுகி அவற்றிற்கு வழி சமைத்தும் இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள் அக்கா.. தொடரட்டும் உங்கள் பணி..

 2. அப்துல் ரஹ்மான் நசீர்

  அருமையான பதிவு….

Leave a Comment