salai basheer novel kasabathநூல் அறிமுகம் முக்கியப் பதிவுகள் 

கசபத்: நூல் மதிப்புரை – பேரா. ஆர்.முஹம்மது ஹசன்

எழுத்தாளர் சாளை பஷீர் அவர்களின் முதல் நாவலான ‘கசபத்’தை சமீபத்தில் படித்தேன். தென் தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்ட கடற்கரை ஊரான காயல்பட்டினம் தான் கதையின் நிகழ்விடம். காயல்பட்டினத்தை மையமாகக் கொண்டு அதன் வட்டார மொழியில் பண்பாட்டுப் பின்னணியில் வரும் முதல் நாவல் என நினைக்கிறேன்.

காயல்பட்டினம் மிகப் பழைமையான வரலாற்று எச்சங்களையும், பல ஸூஃபி அறிஞர்களின் தடங்களுடன் தமிழ்ச் செறிவும் கொண்ட இஸ்லாமியர்கள் கணிசமாக வாழும் ஓர் ஊர். இந்நாவலின் ஆசிரியர் சாளை பஷீரின் சொந்த ஊரும்கூட. தான் கண்ட வாழ்வியல் முறைகளை, எளிய மனிதர்களை சிலாகித்த இடங்களை மிகையில்லாமல் பதிவு செய்திருக்கிறார் சாளை பஷீர். காயல்பட்டின ஊரார், குறிப்பாக இஸ்லாமியர்கள் என்றாலே சிவப்புத் தோல் உடையவர்கள், பெரும் செல்வந்தர்கள் எனப் பொதுப்புத்தியில் கட்டமைக்கப்பட்ட பிம்பத்தை உடைத்தெறிந்து இருக்கிறார்.

இந்நாவலில் வரும் மாந்தர்கள் பெரும்பாலும் எளிமையானவர்கள், மனிதர்களுக்கே உரிய நிறைகுறைகளுடன் இருப்பவர்கள். அபூ எனும் இளைஞனைப் பற்றிய கதைதான் இந்நாவல். கதையை நாயகனே எடுத்துரைக்கும்படி எழுதப்பட்டு இருக்கிறது. அபூ 1960களின் பிற்பகுதியில் பிறந்தவன். கதையின் பெரும்பகுதி 1980-90களில் பயணிக்கிறது.

உலகமயமாக்கல், பொருளாதார தாராளமயவாதம், இந்துத்துவ அரசியலின் எழுச்சி என நாடு பல தளங்களில் மாற்றங்களைக் கண்ட நேரம். இந்நாவலின் பேசுபொருள் இவை இல்லை என்றாலும், நாயகன் அபூவின் வாழ்வில் இவை பல அதிர்வுகளை ஏற்படுத்துகின்றன. 1980களின் இறுதிப் பகுதியில் அபூ பதின்ம வயதைக் கடக்கிறான். அவன் வயதையொத்த அனைவரும் எதிர்கொள்ளும் கேள்வியையே அவனும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

“என்ன வேலை (தொழில் பார்க்க போகிறாய்?)” என்ற இக்கேள்வியை கதையின் தொடக்கத்தில் ஊர் பெரியவரிடம் முதன்முதலில் எதிர்கொள்கிறான். பின் வாழ்வெங்கும் மிக நீண்ட காலத்துக்கு அக்கேள்வி அவனை விடாமல் துரத்துகிறது. முதலில் கேள்வியை எதிர்கொள்ள அஞ்சுகிறான், எரிச்சலடைகிறான். பின் அக்கேள்வியைக் கொண்டே அவனுள் ஓர் உரையாடலைத் தொடங்குகிறான். வயதும் அனுபவமும் அத்துடன் தன்னுள் எழுந்த கேள்வி, அதன் தொடர்ச்சியாக நிகழ்ந்த ‘தன் உரையாடல்’ (செல்ஃப் கன்வர்சேசன்) அபூவை எவ்வாறு முழுமையாக்குகின்றது என்பதே இந்நாவல்.

பொருளாதார வளர்ச்சி வாழ்வின் ஓர் அங்கமா? அல்லது, பொருளாதார வளர்ச்சி மட்டுமே வெற்றியின் அளவீடா? என்ற கேள்வி அவன் முன் பூதாகரமாய் நிற்கின்றது. காலமாற்றத்தால் அனேகர் பொருளாதார வளர்ச்சியின் பின்னால் ஓடிக் கொண்டிருக்கையில், அபூ இக்கேள்வியை எதிர்கொள்கிறான். பொருளாதார ஓட்டத்தில் சுயத்தை மட்டும் இழந்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறான். பொருளாதாரத்துடன் போராடிக் கொண்டிருக்கையில் இந்துத்துவ அரசியலும் அவனைத் துரத்துகிறது. தான் இந்தச் சமூகத்தில் ‘மற்றமை’யாக்கப்பட்டதை உணர்கிறான். அதற்கு எதிர்வினையாற்ற முயல்கிறான். பொருளாதாரக் கேள்வியுடன் சேர்த்து இதுவும் அவனை மேலும் சிக்கலுக்குள்ளாக்குகிறது.

கல்லெறிந்த குளம் சலம்பித் தெளிவதுபோல் காலம் அவனை முழுமைப்படுத்துகிறது. எந்தக் கேள்வியைக் கண்டு ஓடினானோ அதே கேள்வியை நிதானமாக எதிர்கொள்ளும் நிலையை அடைகிறான்.

கதை ஒரே சீராகப் பயணிக்கிறது. எளிமையான உள்ளூர் வட்டார மொழியை நேர்த்தியாகக் கையாண்டிருக்கிறார். காயல்பட்டினத்தில் பிரதான அடையாளமாக உள்ள பள்ளிவாசல்களையும், கடற்கரையையும், நூலகத்தையும் அழகாக யதார்த்தத்துடன் விவரிக்கிறார். இவை நாயகன் அபூவின் மனத்திற்கு நெருக்கமான இடங்கள். அவன் அவனிடம் உரையாடுவதற்கு இவை துணை புரிகின்றன. இன்னும் சொல்லப்போனால் இவை அவனையும் செதுக்குகின்றன.

இந்நாவலின் மூலம், அபூவினுடைய வாழ்வின் ஊடாக எளிய மக்களின் வாழ்வியலை, கலாச்சாரக் கூறுகளை, அவர்கள் பெற்றதும் இழந்ததும் என மிகையில்லாமல் கூறுவதால் இப்புதினம் சிறந்ததொரு ஆவணமாகிறது. வாழ்த்துகள் சாளை பஷீர்.

– பேரா. ஆர்.முஹம்மது ஹசன்
வரலாற்றுத்துறை
அப்துல் ஹக்கீம் கல்லூரி, மேல் விசாரம்.
(தொடர்புக்கு: rmohamedhasan82@gmail.com)

Related posts

Leave a Comment