குறும்பதிவுகள் 

பலவீனர்கள் அல்ல உதவியாளர்கள்

“உங்களிலுள்ள பலவீனர்களின் காரணமாகவே உங்களுக்கு வாழ்வாதாரம் வழங்கப்படுகிறது; நீங்கள் உதவி செய்யப்படுகிறீர்கள்.”

தம் திறமையின் காரணமாகத்தான் தமக்கு எல்லாம் கிடைக்கிறது என்று எண்ணிய ஒருவருவருக்கு நபியவர்கள் கூறிய அறிவுரை இது. உங்கள் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டுள்ள பலவீனர்கள் உங்களுக்குச் சுமைகள் அல்ல. மாறாக அவர்களின் காரணமாக உங்களின் வாழ்வாதாரத்தில் விசாலம் வழங்கப்படும். அவர்களின் காரணமாக நீங்கள் எதிர்பாராத புறத்திலிருந்தும் உதவி செய்யப்படுவீர்கள். ஆகவே நீங்கள் அவர்களை எண்ணி கவலை கொள்ள வேண்டாம் என்பதுதான் நபியவர்கள் கூறிய அறிவுரையின் சாரம்சம்.

வாழ்பவனுபவங்கள் நபியவர்களின் இந்த முன்னறிவிப்பை உண்மைப்படுத்துகின்றன. தனியாக இருக்கும் ஒருவன் தன் குறைவான வருமானத்திற்குப் பயந்து திருமணம் முடிக்காமல் இருந்தால் அவன் இறுதிவரை திருமணம் முடிக்காமல்தான் இருக்க வேண்டும். ஆனால் துணிந்து திருமணம் முடிப்பவனும் வாழத்தான் செய்கிறான். எங்கிருந்தோ அவனுக்குப் பரக்கத்தும் வந்துவிடுகிறது. இப்படித்தான் குழந்தைகளும் அவனுக்குப் பரக்கத்தை கொண்டு வருகின்றன. அவன் பொறுப்பில் ஒப்படைக்கப்படும் அல்லது அவன் பொறுப்பெடுத்துக் கொள்ளும் பலவீனர்களும் அவனுக்குப் பரக்கத்துகளைக் கொண்டு வருகிறார்கள். தம் வறுமையைக் குறித்து முறையிட்ட ஒரு தோழருக்கு ‘நீங்கள் திருமணம் முடியுங்கள்’ என்று நபியவர்கள் ஆலோசனை வழங்கியது இதனால்தான் என்று கருதுகிறேன்.

வறுமைக்குப் பயந்து தங்களின் குழந்தைகளைக் கொலை செய்து கொண்டிருந்த அந்தக் கால அரபுக்களைப் பார்த்து திருக்குர்ஆன் கூறியது, “உங்களின் குழந்தைகளைக் கொலை செய்யாதீர்கள். அவர்களுக்கும் உங்களுக்கும் நாமே உணவளிக்கின்றோம். அவர்களைக் கொலைசெய்வது பெரும் பாவமாகும்.” திருக்குர்ஆன் அவர்களின் மனநிலையை மாற்றியது. அவர்களுக்கு மட்டுமல்ல, அவர்களின் காரணமாக உங்களுக்கும் அல்லாஹ் உணவளிப்பான் என்று அவர்களுக்கு நற்செய்தி கூறி அது அவர்களின் அச்சத்தைப் போக்கியது. கிட்டத்தட்ட இதே போன்ற மனநிலை அல்லது இதற்கு இணையான மனநிலை நம் காலகட்டத்திலும் பல்வேறு வடிவங்களில் பெரும்பாலோரிடம் காணப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது.

பெண் குழந்தை பொன்னையும் கொண்டு வரும் என்று நம்மிடையே வழக்கத்தில் இருக்கும் சொல்லும் நம் வாழ்பனுபவம் கற்றுத்தந்த பாடங்களில் ஒன்றுதானே. எல்லாம் தன் முயற்சியின், தன் திறமையின், தன் உழைப்பின் விளைவுதான் என்ற எண்ணம் மிக விரைவில் ஒருவனை நிராசையில் ஆழ்த்திவிடலாம். கர்வம் தனக்கு எதிரான நிராசையையும் கொண்டு வரும்.

Related posts

Leave a Comment