கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

றமளான்: நம்பிக்கையின் மாதம்!

றமளான் மாதம் முழுவதும் தராவீஹ் தொழுகும் முஸ்லிம்களுள் பலர் மற்ற நாட்களில் பள்ளிவாசல்களில் நுழைவதுகூட அரிதாகிப்போவது ஏன்? முஸ்லிம்கள் றமளான் முழுவதும் நோன்பிருக்கிறார்கள்; அவர்களில் எந்த ஒருவரும் ஏன் தனிமையில் இருக்கும்போதுகூட உணவருந்துவதோ தண்ணீர் பருகுவதோ இல்லை? மற்ற நாட்களில் குர்ஆனைத் திறந்தும் பார்க்காத பலரால் எப்படி றமளானில் தினமும் அதை ஓத முடிகிறது?

உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் றமளான் மாதத்தில் தங்களின் கடமைகளை நிறைவேற்றுவதிலும் வணக்க வழிபாடுகளை அதிகரிப்பதிலும் பிரார்த்தனைகளின் மூலம் தங்களின் இறைவனது நெருக்கத்தை அடைய முயற்சிப்பதிலும் மிக அதிகமாக ஈடுபடுவதை நாம் பார்க்கிறோம். அதேபோல், பாவச் செயல்களிலிருந்து விலகி தவ்பா செய்து இறைவனது பக்கம் மீள முயல்வதையும் நாம் கண்கிறோம். மற்ற நாட்களில் இல்லாத வகையில் முஸ்லிம்களிடையே றமளானில் நிகழும் இப்படியான மாற்றம் வியப்பூட்டக்கூடியது. அந்த மாற்றம் அற்புதமானதும் அழகானதும்கூட!

உண்மையில், றமளான் மாதம் ஹஜ்ஜையும் உம்ராவையும் போல ஓர் ஆன்மிக விழிப்பை ஏற்படுத்துகிறது. நம் மனத்திலும் இதயத்திலும் ஒரு சக்திவாய்ந்த மாற்றத்தை நிகழ்த்துகிறது. நல்லறம் புரியவேண்டும், பாவங்களிலிருந்து விலகியிருக்கவேண்டும் என்று நாம் மனது வைத்தால் நம்மால் அதைச் சாதித்திட முடியும் என்பதற்கு ஒரு காத்திரமான, தெளிவான நினைவூட்டலை றமளான் வழங்குகிறது.

றமளானிலும் மற்ற மாதங்களிலும் இறை நெருக்கத்தை அடைய விரும்பும் நாம், முதலில் அதை நம்மால் செய்ய முடியும் என்ற நிய்யத்தை உறுதியாக மனத்தில் நிறுத்திக்கொள்வதே அடிப்படையான விஷயமாகும். நன்மைச் செய்பவர்களுக்கு மட்டுமல்ல, அதைச் செய்ய முயல்பவர்களுக்கும் எண்ணிலடங்காத நற்கூலியை அல்லாஹ் வழங்குவான் என்பது மனங்கொள்ளத்தக்கது.

ஒரு பள்ளிவாசல் இமாமிடம் இளைஞர் ஒருவர் இப்படிக் கேட்டாராம், ”றமளான் மாதம் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. அது நன்மாற்றத்திற்கான வாய்ப்பைத் தருகிறது”. அதற்கு அந்த இமாம், “றமளானில் மாற்றங்கள் நிகழ்வது மிக எளிதுதான். ஆனால், றமளான் அல்லாத நாட்களில் இதேபோன்ற மாற்றம் சாத்தியம் என்று நினைக்கிறாயா?” என்றாராம். ”நான் முயன்றாலும் றமளான் அல்லாத காலத்தில் என்னை மாற்றிக்கொள்ள சிரமமாக உள்ளதே” என்று அந்த இளைஞர் கூறவே அதற்கான காரணத்தைக் கேட்டுள்ளார் இமாம். சிறிய மெளனத்துக்குப் பிறகு ”ஏனென்றால்… றமளான்தான் நம்பிக்கையின் மாதம்” என்றுள்ளார் அந்த இளைஞர்.

இந்த இளைஞரைப் போலவே முஸ்லிம்களில் அநேகர் எல்லா நேரங்களிலும் நன்மாற்றங்களுக்காக முயற்சி செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். ஏதோ ஒன்று அவர்களை மாற்றத்தின் பக்கம் உந்திக்கொண்டுதான் உள்ளது. நாம் விளங்கிக்கொள்ளவேண்டியது என்னவெனில், மாற்றங்களுக்கான தொடக்கம் நமக்குள்ளிருந்தே ஆரம்பிக்கிறது என்பதைத்தான். இதையே வேறு வார்த்தைகளில் சொல்வதானால், நன்மாற்றங்களுக்கும் உங்களுக்கும் இடையில் தடையாக இருப்பது நீங்களே.

”எவர்கள் நம்முடைய வழியில் முயற்சிக்கின்றார்களோ நிச்சயமாக அவர்களை நம்முடைய நேரான வழிகளில் நாம் செலுத்துவோம்; நிச்சயமாக அல்லாஹ் நன்மை செய்வோருடனேயே இருக்கின்றான்” (29:69) என்ற திருமறை வசனம் இங்கு நினைவுகூரத்தக்கது.

பின்வரும் மூன்று அம்சங்கள் நம் ஆன்ம பலத்தைப் பெருக்கிக்கொண்டு மாற்றத்தை நோக்கிச் செல்வதற்குத் தேவையான அடிப்படை சட்டகத்தை வழங்கக்கூடும்.

1. நம்மை மேம்படுத்திக்கொள்வதற்கான தொடர் முயற்சியும் இறைவனின் கருணை மீதான நம்பிக்கையும் அவசியம். இறைவனின் கருணையை, சுவனத்தின் உயரிய இடத்தை இறைவனிடம் வேண்டுவதை நாம் கைவிட்டால் அல்லாஹ்வின் அனைத்து வகையான உதவிகளையும் இழக்கும் அபாயம் நமக்கு ஏற்படலாம். இறை நெருக்கத்தை அடையும் முயற்சியையும் நற்செயல்கள் செய்வதையும் ஒருபோதும் நாம் கைவிட்டுவிடக்கூடாது.

அபூஹுரைரா (ரழீ) அறிவிக்கும் பின்வரும் ஹதீஸைப் பாருங்கள்: ஓர் அடியார் ஒரு பாவம் செய்துவிட்டார். பிறகு “இறைவா! (நான் ஒரு பாவம் செய்துவிட்டேன்.) என் பாவத்தை மன்னிப்பாயாக!” என்று கூறினார். உடனே வளமும் உயர்வும் உள்ள இறைவன், “என் அடியான் ஒரு பாவம் செய்துவிட்டுப் பிறகு தனக்கோர் இறைவன் இருக்கின்றான் என்றும், அவன் பாவங்களை மன்னிக்கவும் செய்வான்; பாவங்களுக்காகத் தண்டிக்கவும் செய்வான் என்றும் அறிந்துகொண்டான்” என்று சொல்கிறான். பிறகு அந்த அடியார் மீண்டும் ஒரு பாவத்தைச் செய்துவிட்டு, “என் இறைவா! என் பாவத்தை மன்னிப்பாயாக!” என்று பிரார்த்தித்தார்.

அப்போதும் வளமும் உயர்வும் உள்ள இறைவன், “(இம்முறையும்) என் அடியான் ஒரு பாவத்தைச் செய்துவிட்டுப் பிறகு, தனக்கோர் இறைவன் இருக்கின்றான் என்றும், அவன் பாவங்களை மன்னிக்கவும் செய்வான்; பாவங்களுக்காகத் தண்டிக்கவும் செய்வான் என்று அறிந்துகொண்டான்” என்று சொல்கிறான்.

பிறகு அந்த அடியார் மீண்டும் ஒரு பாவத்தைச் செய்துவிட்டு, “என் இறைவா! எனது பாவத்தை மன்னிப்பாயாக!” என்று பிரார்த்தித்தார். அப்போதும் வளமும் உயர்வும் உள்ள இறைவன், “என் அடியான் (இம்முறையும்) ஒரு பாவத்தைச் செய்துவிட்டுப் பிறகு தனக்கோர் இறைவன் இருக்கின்றான் என்றும், அவன் பாவங்களை மன்னிக்கவும் செய்வான்; பாவங்களுக்காகத் தண்டிக்கவும் செய்வான் என்றும் அறிந்துகொண்டான். நீ நாடியதைச் செய்; நான் உனது பாவத்தை மன்னித்துவிட்டேன்” என்று சொல்கிறான். (ஸஹீஹ் முஸ்லிம்: 5322)

இமாம் நவவி மேற்கூறிய ஹதீஸ் குறித்து கூறுகையில், ”ஒரு பாவம் நூறுமுறை செய்யப்பட்டாலும், ஆயிரம்முறை அல்லது அதற்கும் மேல் செய்யப்பட்டாலும், அடியான் மனம் வருந்தி பாவ மன்னிப்புக் கோரினால் அவனுடைய தவ்பா ஏற்றுக்கொள்ளப்பட்டு, அவன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும். அவன் வாழ்நாளில் செய்த எல்லாப் பாவங்களையும் எண்ணி மனம் வருந்தி ஒருமுறை பாவ மன்னிப்புத் தேடினாலும் அவனுடைய தவ்பாவை அல்லாஹ் தான் நாடியோருக்கு ஏற்றுக்கொள்கிறான்.

ஹதீஸின் முடிவில் ”நீங்கள் விரும்பியதைச் செய்யுங்கள்” என்று இறைவன் சொல்வதன் பொருள் என்னவெனில், மீண்டும்மீண்டும் பாவங்களைச் செய்தாலும், நீ உண்மையிலேயே மனந்திருந்தி பாவ மன்னிப்புத் தேடும் வரையில் நான் [அல்லாஹ்] உன்னை மன்னிப்பேன் என்பதுதான். இந்தக் கூற்று பாவம் செய்வதற்கு ஊக்குவிப்பதாக எடுத்துக்கொள்ளக் கூடாது. அதேபோல், பாவங்கள் செய்வதால் நேரும் அபாயகரமான பின்விளைவுகளையும் நாம் மறந்துவிடக்கூடாது. மாறாக, ஒவ்வொருமுறையும் நாம் பாவம் செய்த பிறகு அதற்காக உளமார வருந்தி அல்லாஹ்விடம் திரும்பும்போது, ​​அல்லாஹ் நம்மை மன்னித்து ஏற்றுக்கொள்வான் என்ற பாடத்தை கற்றுத் தருகிறது. மூஃமின்கள் ஒருபோதும் அல்லாஹ்வின் கருணையில் நம்பிக்கை இழக்கக்கூடாது என்பதை உணர்த்துகிறது.

ஒருமுறை ஹசன் அல்பாரி அவர்களிடம் இவ்வாறு கேட்கப்பட்டது:
”நம்மில் எவரும் தம்முடைய இறைவனுக்கு முன்பாக தனது பாவத்திற்காக மன்னிப்புக் கோர வெட்கப்படவில்லையா? பாவம் செய்கிறோம், பின்னர் பாவ மன்னிப்புக் கேட்கிறோம், பிறகு மீண்டும் அதே பாவத்திற்கே திரும்பிவிடுகிறோமே!” அதற்கு அவர்கள் இவ்வாறு பதிலளித்தார்கள், ”நீங்கள் பாவ மன்னிப்புக் கோருவதை எண்ணி வெட்கப்பட வேண்டும் என்றே ஷைத்தான் விரும்புகிறான். மன்னிப்புக் கோருவதை ஒருபோதும் கைவிடாதீர்கள்.”

சஈத் அல்ஜுரைரியிடம் இருந்து இமாம் அஹ்மத் அறிவிக்கிறார்: ”நான் அல்ஹசனிடம், ‘ஓ அபூ சஈத், ஒரு மனிதன் பாவம் செய்கிறான், தவ்பா செய்கிறான். மீண்டும் பாவங்கள் செய்துவிட்டு மனந்திருந்துகிறான், அதன் பின்னரும் பாவங்கள் செய்து பாவ மன்னிப்புக் கோருகிறானே.. எது வரையில் இப்படியே செய்துகொண்டிருப்பான்?’ என்றேன். அல்ஹசன் கூறினார், ’இது மூஃமின்களின் பண்புகளுள் ஒன்று என்பதைத் தவிர இதைப் பற்றி வேறெதுவும் எனக்குத் தெரியாது.”

அல்லாஹ்வின் அருளில் ஒருபோதும் நம்பிக்கை இழக்காதவர்களாக அல்லாஹ் நம்மை ஆக்குவானாக! ஆமீன்.

2. அகச்சூழலையும் புறச்சூழலையும் நன்மைகள் புரிய ஏதுவாக ஆக்கிக்கொள்ள வேண்டும். றமளானில் மட்டும் நற்செயல்களையும் இபாதத்களையும் நம்மால் அதிகமாக செய்ய முடிவதற்கான காரணம்தான் என்ன என்று யோசித்திருக்கிறீர்களா? பின்வரும் சில உள்ளார்ந்த விஷயங்கள் அதற்கான காரணங்களாக அமைகின்றன எனலாம்.

  1. றமளானில் அல்லாஹ்வின் கருணையின் மீதான நம்பிக்கை நம்மிடம் அதிகம் காணப்படுகிறது.
  2. இறைக் கட்டளைகளை நிறைவேற்றாமல் வருடம் முழுவதையும் வீணடித்துவிட்டோமே என்கிற குற்ற உணர்வு மேலோங்கியிருக்கிறது.
  3. சிறிய அமல்களுக்குக்கூட அல்லாஹ் தரும் எண்ணிலடங்கா வெகுமதிகளை நாம் பயன்படுத்திக்கொள்ள விரும்புகிறோம்.
  4. ஈடுசெய்ய முடியாத முக்கியத்துவமிக்க ஒன்றை இழக்க நேரிடும் என்று அஞ்சுகிறோம்.
  5. குடும்பம், சமூகம் உள்ளிட்ட சுற்றுப்புறச்சூழல் நற்செயல்கள் புரிய நமக்கு ஊக்கமளிக்கிறது.

இப்படி யோசித்துப் பார்க்க வேண்டும்; ஆரோக்கியமான மாற்றத்தை றமளானிலேயே நம்மால் அடைய முடியாவிட்டால், வேறு எப்போதுதான் அடைய முடியும்? உண்மையில், றமளான் அல்லாத பிற காலங்களிலும் அந்த மாற்றத்தை நம்மிடம் ஏற்படுத்த முடியும்தான் (அல்லாஹ் நாடினால்). ஆனால் இப்போது நமக்குக் கிடைத்திருப்பது ஒரு மிகச் சிறந்த வாய்ப்பு என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

3. இன்றிலிருந்தே தொடங்குவது அவசியம். “நம்பிக்கை கொண்டார்களே அவர்களுக்கு, அவர்களுடைய இதயங்கள் அல்லாஹ்வையும், இறக்கியுள்ள உண்மையான வேதத்தையும் நினைத்தால் அஞ்சி நடுங்கும் நேரம் வரவில்லையா? மேலும் அவர்கள் – முன்னர் வேதம் கொடுக்கப்பட்டவர்களைப்போல் ஆகிவிட வேண்டாம்; (ஏனெனில்) அவர்கள் மீது நீண்ட காலம் சென்ற பின், அவர்களுடைய இதயங்கள் கடினமாகிவிட்டன; அன்றியும் அவர்களில் பெரும்பாலோர் பாவிகளாக ஆகிவிட்டனர்” என்கிறது குர்ஆன் (57:16).

வருங்காலத்தில் ஒரு சிறந்த மனிதனாக வாழ வேண்டும் என்ற லட்சியம் பலரிடமும் உண்டு. அது நம் அன்றாட பழக்க வழக்கங்களில் பிரதிபலிக்கவில்லை என்றால் அதுவெல்லாம் அர்த்தமற்ற கற்பனையே. நம் வார்த்தைகளை விடவும் எண்ணங்களை விடவும் செயல்களே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

ஆகவே, சிறந்த எதிர்காலத்திற்கான நம்முடைய பயணத்தை இன்றே தொடங்குவோம். நாளை என்பது உத்தரவாதம் அளிக்கப்படாத ஒன்று. அல்லாஹ்வின் பக்கம் முதல் அடியை இந்த நிமிடமே எடுத்து வைப்போம். இது உண்மையிலேயே நீண்டதொரு பயணம். ஒவ்வொரு நாளும் பெரிய அளவுக்கு மாற்றம் ஏதும் நிகழவில்லையே என்றுகூட நமக்குத் தோன்றலாம். ஆனால், சிறிது காலம் கழித்து நீங்கள் திரும்பிப் பார்க்கும்போது, அல்லாஹ்வை நோக்கி ​கடந்து வந்த ​அழகிய பயணத் தடங்களைக் காண்பீர்கள்.

இப்போதிலிருந்தே ஏதாவது ஒரு புதிய நற்செயலைச் செய்யத் தொடங்குங்கள். வழக்கமாகச் செய்யாத, ஆனால் கடைப்பிடிக்க வேண்டும் என்று நினைக்கும் செயலைச் செய்யத் தொடங்கலாம். உதாரணத்துக்கு, நஃபில் தொழுதல், வழக்கமாக ஒதுவதைவிட குர்ஆனில் கூடுதலாக ஒரு பக்கத்தை ஓதுதல், தர்மம் செய்வதை அதிகரித்தல், முன்பைவிட அதிகமதிகம் துஆச் செய்தல் போன்ற அமல்களைக் கடைப்பிடிக்க ஆரம்பியுங்கள். நாம் செய்ய நினைக்கும் நற்செயல்கள் எவ்வளவு சிறியதானாலும், அவற்றைத் தொடர்ந்து கடைப்பிடிப்பதை ஒருபோதும் கைவிட்டுவிடக்கூடாது.

வல்ல இறைவன் நமக்குத் துணை நிற்பானாக!

Related posts

Leave a Comment