கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

இந்தியாவில் மதரசாக்கள் – நிழலும் நிஜமும்

Loading

(இரண்டு பகுதிகளாக அமைந்த கட்டுரையின் இரண்டாவது பகுதி இது. முந்தைய பகுதியை இங்கு வாசிக்கலாம்)

மதரசாக்களின் மீதான காழ்ப்புக்கு முக்கியக் காரணியாக ஆஃப்கனின் தாலிபான் இயக்கம் குறியீடாக இருக்கிறது. தாலிப் என்றால் மாணாக்கன் என்று பொருள். மதரசாவில் பயிலும் மாணவன் என்பது இந்த இடத்தில் சாலப் பொருத்தமான பொருளைத் தரும். தாலிபான்களின் ஒற்றைக் கலாச்சார சமய கடுங்கோட்பாட்டுவாதம் நவீன உலகில் எதிர்மறையான விளைவுகளைத்தான் ஏற்படுத்தும் என்றாலும், ஏறத்தாழ 40 ஆண்டுகளுக்கும் மேலாக உலக வல்லரசுகளின் ஆதிக்கப் போட்டிக்கு இடையில் சிக்கிச் சீரழிந்த ஒரு தேசத்தில் உரிமைகளை மீட்டெடுக்க தீவிரக் குழுக்கள் எழுவது இயற்கையான எதிர்வினையே.

எனினும், தாலிபான்களை சர்வதேச சமூகத்திற்கு முன் கோரமாகக் காட்டுவதை அமெரிக்கா தனது பயங்கரவாதத்திற்கு எதிரான போருக்கான உத்தியாகவே கையாண்டது. தாலிபான்கள் மீது உலக மக்கள் வெறுப்புகொள்ளும் விதத்தில் 2001ம் ஆண்டிலிருந்து தினம் ஒரு கட்டுக்கதையை அவிழ்த்துவிட ஏகப்பட்ட இணையதளங்கள் உருவாக்கப்பட்டிருந்தன. விளைவு, தாலிபான் – மதரசா என்பனவற்றை பயங்கரவாதத்தோடு தொடர்புபடுத்தி கச்சிதமாகக் காய்நகர்த்த முடிந்தது.

தாலிபான் இயக்கத்தைத் தவிர்த்துப் பார்த்தாலும், இன உரிமைப் போர்களில் மதரசா மாணவர்கள் உலகெங்கும் ஈடுபட்டிருப்பதை வரலாற்று நெடுகிலும் நாம் காண முடியும். இத்தாலி ஆக்கிரமிப்பை எதிர்கொண்ட உமர் முக்தார், ஆங்கிலேய ஏகாதிபத்தியத்துக்கு எதிராக களமிறங்கிய தேவ்பந்த் இயக்கம் என இந்தப் பட்டியல் நீளும். இவர்கள் அனைவரையும் அந்தந்த காலத்திய ஆதிக்க சக்திகள் தீவிரவாதிகளாகத்தான் வரையறுத்தன. ஆனால், ஒரு லிபிய குடிமகனோ இந்திய பிரஜையோ இந்த மதரசா ஆசிரியர் – மாணவர்களை அவ்வாறு சொல்லிவிட முடியுமா? இந்த மதரசா மாணவர்களை எது அநீதிக்கும் அக்கிரமத்திற்கும் எதிராக அணிதிரள வைத்தது? சத்தியத்தை – தர்மத்தை எப்பாடுபட்டாவது நிலைநாட்டவேண்டும் என்று அவர்களுக்குப் புகட்டப்பட்ட கல்வியின் தீரமல்லவா?

”எமது நாடு அடிமைப்பட்டுக் கிடக்கிறது. விடுதலைக்காகப் போராடுவதும் இந்த அடிமைத்தனத்திற்கு முடிவுகட்டுவதும் எமது கடமை” என்கிற ஷா அப்துல் அஜீஸ் அவர்களின் 19ம் நூற்றாண்டு பிரகடனத்துடன் இந்திய ஆலிம்களின் (மார்க்க அறிஞர்களின்) வீர வரலாறு தொடங்குகிறது. 1857 முதல் சுதந்திரப் போர் வரை காலனி ஆட்சியை எதிர்த்த மாபெரும் கலகக்காரர்களாக ஆலிம்களே முக்கியப் பங்காற்றினர். 1857 சிப்பாய்ப் போராட்டத்தில் கொல்லப்பட்ட இரண்டு லட்சம் போராளிகளில் 51,200 பேர் ஆலிம்கள். அதில் திருப்தியடையாத பிரிட்டிஷார், சண்டை முடிந்த பிறகும் அவர்களைத் தேடித்தேடிக் கண்டுபிடித்துத் தூக்கிலிட்டனர். டெல்லியில் மட்டும் 500 ஆலிம்கள் தெருவோர மரங்களில் தூக்கிலிடப்பட்டுக் கொல்லப்பட்டதாக எட்வர்ட் டைமஸ் இந்த அராஜகத்தை ஒப்புக்கொண்டுள்ளார். அன்றைய காலத்தில் மௌலவி, போராளி ஆகிய இரண்டும் வெவ்வேறல்ல. இவற்றினால் கொஞ்சங்கூட அசராத அந்த ஆலிம்கள் தொடர்ந்து தங்களின் போராட்ட வடிவங்களை முன்னெடுத்தனர்.

ஜம்மியத்துல் உலமா ஹிந்த் அமைப்பின் ஸ்தாபகரும், தேவ்பந்த் அறபிக் கலாசாலையின் முதல் பட்டதாரியுமான மௌலானா மஹ்மூதுல் ஹசன் 1877ல் ஆங்கிலேயருக்கு எதிரான ஆயுதம் தாங்கிய போராட்டத்திற்காக சக ஆலிம்கள், மாணவர்களை உள்ளடக்கிய ‘சம்ரதுத்தர்பியத்’ (பயிற்சியின் விளைவு) என்ற இயக்கத்தைத் தோற்றுவித்தார். 30 ஆண்டுகளுக்கு மேலாக இந்த இயக்கம் பிரிட்டிஷாருக்கு எதிராகக் களமாடியது. முதல் உலகப் போருக்கான முஸ்தீபுகள் தொடங்கிய காலத்தில், துருக்கி கிலாஃபத்தை வலுவிழக்கச் செய்யும் ஆங்கிலேய ஏகாதிபத்திய சதியை உணர்ந்துகொண்ட மௌலானா, அந்நிய நாடுகளின் உதவியோடு இந்திய விடுதலைக்கான முயற்சியில் இறங்கினார். தனது நம்பிக்கைக்குரிய மௌலானா உபைதுல்லா சிந்தியை காபூலுக்கு அனுப்பி வைத்தார். உபைதுல்லா தான் முதன்முதலில் நாடு கடந்த இந்திய சுதந்திர அரசு ஒன்றை நிர்மாணித்தார். மகாராஜா பிரதாப் சிங் தலைவராகவும் மௌலானா பரக்கத்துல்லா, உபைதுல்லா உள்ளிட்டோர் மந்திரிகளாகவும் பதவியேற்ற இந்த அரசின் தகவல், பட்டுத்துணியில் கடிதமாக வரையப்பட்டு நேச நாடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இந்த அரசின் போர்ப் படையாக லஷ்கர் இ நஜாத்தி ஹிந்த் (விடுதலைப் படை) அமைக்கப்பட்டு, அதன் தளபதியாக மஹ்மூதுல் ஹசன் நியமிக்கப்பட்டார்.

ஆங்கிலேய அரசுக்கு எதிராக படை நடத்த ஆதரவு கேட்டு இன்றைய சவூதி அறேபியாவுக்கு மஹ்மூதுல் ஹசன் பயணப்பட, அவருக்கு தஹ்ரீக் இ ரேஷ்மி இருமால் (பட்டுத்துணி கடிதம்) ஒன்றை உபைதுல்லா அனுப்பிவைத்தார். இந்தச் சதி ஆங்கிலேய அரசால் 1916 ஆகஸ்ட் மாதம் கண்டுபிடிக்கப்பட்டு, மொத்தம் 222 ஆலிம்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களுள் மௌலானாக்கள் மஹ்மூதுல் ஹசன், ஹூசைன் அஹமது மதனீ, உபைதுல்லா சிந்தி, அபுல் கலாம் ஆசாத், கான் அப்துல் கஃப்பார் கான் ஆகியோர் அடங்குவர். இதன் பிறகுதான் 1919ல் ஜம்மியத் உலமா ஹிந்த் தொடங்கப்பட்டு முப்தி கிபாயத்துல்லா தலைமையேற்றார்.

முதல் உலகப் போருக்குப் பின் பெரும்பாலான இந்தியக் குழுக்கள் ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டு அகிம்சை வழிக்குத் திரும்பின. மௌலானா பஜ்லுல் ஹக் தலைமையில் நடந்த கிலாஃபத் இயக்கம் மூலமாக காங்கிரஸுடன் உலமா ஒருங்கிணைந்து செயல்படத் தொடங்கினர். “கிலாஃபத் பிரச்னையை காங்கிரஸ் கையிலெடுக்கத் தொடங்கியதன் தாக்கம் வியக்கத்தக்க அளவில் இருந்தது. காங்கிரஸை ஆற்றல்மிக்க, வலிமைமிக்க இயக்கமாக மாற்றியது இந்துக்கள் அல்ல முஸ்லிம்களே” என்று சொன்னவர் டாக்டர் அம்பேத்கர் அவர்கள். தொடர்ந்து நடந்த ஒவ்வொரு போராட்டத்திலும் ஆலிம்கள் ரத்தம் சிந்தினர். ஒத்துழையாமை இயக்கம் வேகம் பெற்றபோது, அந்நியப் பொருட்கள் பகிஷ்கரிப்பை வலியுறுத்தி தீவிரப் பரப்புரையில் ஆலிம்கள் ஈடுபட்டனர். கிலாஃபத் இயக்கம் ஒத்துழையாமையை வலியுறுத்தி ஃபத்வா வழங்கியது. இதனை தேச விரோதச் செயலாக கருதிய பிரிட்டிஷ் அரசு, 1921 நவம்பர் 18 – 20ல் ஏறத்தாழ 30,000 பேரைக் கைது செய்து கொட்டடியில் அடைத்தது.

1924ல் பூரண சுதந்திர கோஷத்தை முன்னெடுத்தது ஜம்மியத். 1927ல் சைமன் கமிஷனை பகிஷ்கரித்து முதலாவதாக அறைகூவல் விடுத்தது. அப்போது தலைவராக இருந்த மௌலானா அன்வர்ஷா கஷ்மீரி “சுதந்திரம் வெற்றிலைப் பாக்குவைத்து வழங்கப்படுவதில்லை.. நாம்தான் பறித்துக் கொள்ள வேண்டும்” என்று முழங்கினார். 1928ம் ஆண்டு லக்னோவில் நடந்தேறிய சர்வ கட்சி மாநாட்டில், ஜம்மியத் முக்கிய அங்கம் வகித்தது. இதில் பிரிட்டிஷ் பேரரசுக்குக் கீழ் தன்னாட்சி உரிமை கோரி தாக்கல் செய்யப்பட்ட மோதிலால் நேரு அறிக்கையைக் கடுமையாக விமர்சனம் செய்தார்கள் ஆலிம்கள். முழுச் சுதந்திரமே அவர்களின் ஒற்றைக் கோரிக்கையாக இருந்தது. இந்த அறிக்கையைக் கைவிடும் வரை காங்கிரஸுக்கான ஆதரவை விலக்கிக் கொள்வதாக அறிவித்தது ஜம்மியத். சரியாக ஐந்தாண்டுகளுக்குப் பிறகே பூரண சுதந்திர கோரிக்கையை ஏற்றது காங்கிரஸ்.

அதேபோல், 1942 ஆகஸ்ட் 5ம் தேதி வெள்ளையனே வெளியேறு முழக்கத்தை வைத்தது ஜம்மியத். அதன் பிறகே பம்பாயில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் ஆகஸ்ட் 9ம் தேதி இந்தப் பிரபல முழக்கம் தீர்மானமாக நிறைவேறியது. அரசியல் குறிக்கோளாக முஸ்லிம் லீக் கையிலெடுத்த இரு தேசக் கொள்கையை ஜம்மியத் தீவிரமாக எதிர்த்தது. அதன் தலைவர் மௌலானா ஹுசைன் அஹ்மது மதனீ, ஆசாத் உள்ளிட்டோர் முஸ்லிம் லீகர்களால் கடுந்தாக்குதலுக்கு ஆளாகும் அளவிற்கு எதிர்ப்பு தீவிரமாக இருந்தது. அவர்கள் காங்கிரஸ் ஏஜென்ட்கள் என்று முத்திரை குத்தப்பட்டனர். அந்நிய ஆட்சிக்கு முடிவுகட்டுவதற்காக தம் உயிரையும் துச்சமாக மதித்து தியாகம் செய்த ஆலிம்கள் பயின்ற – வளர்த்தெடுத்த கல்விக்கூடங்கள் இன்றைக்கு பயங்கரவாதப் பாசறைகளாகச் சித்தரிக்கப்படுகின்றன. அது வெவ்வேறு குரல்களில் – தொனிகளில் உச்சரிக்கப்படுவதுதான் கொடுமையிலும் கொடுமை.

700 ஆண்டு இஸ்லாமிய ஆட்சியில் லட்சக்கணக்கான கலைச் செல்வங்களை அறபியில் மொழிபெயர்த்து செம்மாந்திருந்த ஸ்பெயினை பெர்டினன்ட் – இசபெல்லா தம்பதியினர் கைப்பற்றியபோது கல்விநிலையங்கள், கலாச்சார மையங்கள் என ஒன்றுவிடாமல் தீக்கிரையாக்கினர். உலகெங்கிலும் ஆய்வாளர்கள் அறிவுப் பொக்கிஷங்களைத் தேடி ஸ்பெயினுக்கு வந்த நிலைமாறி, இசபெல்லா ஆட்சியில் வெறும் 200 நூல்கள் மட்டுமே எஞ்சியிருந்தன. இதே பாணியில் வளைகுடாப் போரில் அமெரிக்கா ஈராக்கின் பண்டைய பண்பாட்டு அடையாளங்களை அழித்தொழிப்பதில் முனைப்புடன் செயல்பட்டது. குறிப்பாக, பக்தாது தேசிய நூலகத்தையும் ஆவணக் காப்பகத்தையும் தீக்கிரையாக்கியதன் மூலம் கூட்டுப்படைகள் மனிதகுல வரலாற்றையே நாசப்படுத்தின என்கிறார் பத்திரிகையாளர் ராபர்ட் ஃபிஸ்க்.

”ஒரு சமூகத்தின் சின்னங்களை அழிக்க முயற்சிப்பது அந்தச் சமூகத்தையே அழித்தொழிப்பதற்கு ஒப்பானதாகும்” என்கிற பேரா.இம்தியாஸ் அஹ்மதின் கூற்று இவ்விடம் கூர்ந்து கவனிக்கத்தக்கதாகும். இந்த அடிப்படையில்தான் இன்றைக்கு இஸ்லாமிய மதரசாக்கள் பலரின் கண்களை உறுத்துகிறது. அவர்களில் இந்துத்துவக் கருத்தியலுக்கு அப்பாற்பட்டவர்களும் மதரசாக்களின் மீது வெறுப்பை உமிழ்வதும், அதைப் பலரும் போட்டி போட்டுக்கொண்டு சரிகாண ஆரம்பித்திருப்பதும் மதப் பெரும்பான்மைவாதத்தின் புதிய பாணியாக மாறியிருக்கிறது.

மதரசாக்களில் ”ஐவேளைத் தொழச் சொல்கிறார்கள்.. இப்படி உடை உடுத்த வேண்டும் என்கிறார்கள்.. இன்ன உணவை உண்ண வேண்டும் என்கிறார்கள்” என்பதெல்லாம் இப்போது பயங்கரவாதமாகத் தெரிய ஆரம்பித்திருக்கிறது. இந்த அரைகுறை புரிதலை வைத்துக்கொண்டே, கறுப்பாக இருப்பதையெல்லாம் பார்த்து பேய் என்று அலறும் குழந்தைமையுடன் பதறுகிறார்கள். பொது உளவியலில் வரையப்படும் சித்திரம் மனிதர்களின் ஆழ்மனங்களில் இயல்பாகப் பதிந்துபோய்விடுகிறது. அந்த நூலாம் படைகளுக்குள் சிக்கிக்கிடக்கும் சிலந்தி மனச்சான்றுடன் எப்படி திறந்த ஆக்கப்பூர்வ உரையாடல்களை நடத்த முடியும்?

இந்தியா முழுவதிலும் உள்ள ஆயிரக்கணக்கான மதரசாக்களில் பெரும் எண்ணிக்கையில் ஆண்டுதோறும் மார்க்கக் கல்வி கற்றவர்கள் வெளியாகி வருகின்றனர். உண்மையில் இவர்கள் எல்லோரும் பயங்கரவாதப் பயிற்சியோடு வெளிவருகிறார்கள் என்றால் அது எப்பேர்பட்ட விபரீத விளைவுகளை இந்நேரம் உருவாக்கியிருக்கும்.

இப்படியான சர்ச்சைகளையெல்லாம் தாண்டி, மதரசாக் கல்வியை மேம்படுத்தும் திட்டங்கள், அதைச் சீர்திருத்த வேண்டிய அவசியம் போன்றவை தனியாகப் பேசப்பட வேண்டிய விஷயங்களாகும். செல்வாக்கிழந்துவிட்ட கிரேக்கத் தத்துவங்கள், பயனற்ற தர்க்கவியல் பாடங்கள், நவீன அறிவியலுக்கு முரண்படும் வானவியல், சுற்றிவளைத்து மூக்கைத் தொடும் கணிதம், இலக்கணம், இலக்கியத்தைக்கூட நேரடியாக சொல்லித் தராத நூல்கள் எனப் பலவும் மதரசாப் பாடத் திட்டத்திலிருந்து மாற்றப்பட வேண்டும் என்கிறார் தமிழகத்தின் சிறந்த மார்க்க அறிஞர்களில் ஒருவரான முஹம்மது கான் பாகவி. மார்க்க மேதையும் பெரும் புலவருமான ஷிப்லி நூஃமானி, மதரசாப் பாடத் திட்டம் நூற்றாண்டுகளுக்கு மேலாக மாற்றப்படாமல் இருப்பது குறித்து தனது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்தும் நூறாண்டு கடந்துவிட்டது.

மேலும், இந்து சமய சமூக வரலாறுகளையும் மதரசா மாணவர்கள் கற்றுத் தேர்ச்சி பெற வேண்டும் என்கிறார் இந்தியாவின் தலைசிறந்த மார்க்க அறிஞர்களில் ஒருவரான ரபி ஹஸ்னி நத்வீ. அன்றாட அரசியலை காய்தல் உவத்தலின்றி கற்பிக்க வேண்டிய கட்டாயத்தை மதரசாக்களுக்கு சமகால சூழல் ஏற்படுத்தியுள்ளது. பெரும் நிதி நெருக்கடியில் தத்தளிக்கும் அறபிக் கல்வி நிறுவனங்களுக்கு இதெல்லாம் குதிரை கொம்பாக இருக்கிறது. இருந்தபோதும், இன்றைக்கு தமிழகத்தின் பல்வேறு மதரசாக்கள் இளங்கலைப் பட்டப்படிப்பு, தொழிற்கல்வி, யுனானி மருத்துவப் படிப்பு ஆகியவற்றை இறையியல் கல்வியோடு இணைத்து அளித்து சேவை செய்து வருகின்றன.

முஸ்லிம்கள் சிறுபான்மையினராக இருந்தபோதும் கல்வியில் அவர்களின் பங்களிப்பு நான்கு மடங்கு அதிகமாக உள்ளது என்கிற நெ.து. சுந்தரவடிவேலு அவர்களின் கூற்றுக்கிணங்க இச்சமூகம் கல்விப்புலத்தில் தனது ஆற்றல்களை அதிகமாகச் செலவிட்டே வந்திருக்கிறது. சரியான பலன்களை எட்டியிருக்கிறதா என்பது மீளாய்வு செய்யப்பட வேண்டிய சங்கதிதான். நவீனச் சிந்தனைகளும் திட்டங்களும் பரவலாகத் தேவைப்படுகின்றன என்பதை யாரும் மறுக்கவில்லை. அந்தளவில் உத்திரப் பிரதேசத்தில் அமைந்துள்ள நத்வதுல் உலமா கலாசாலையில் ஊடக ஆய்வு மையத்தை மார்க்க மேதை அலி மியான் ஏற்படுத்தினார். அது மதரசா மாணவர்கள் பலர் ஊடகத்திற்குள் நுழைய வித்திட்டது. தனது அந்திம நாட்களில், 27.12.1999 அன்று அவர் சொல்லிச் சென்ற கடைசி வார்த்தைகள் “இஸ்கோ ஜாரி ரக்கியே” (இதைத் தொடருங்கள்) என்பதாகும்.

இந்த மதரசாக்கள் மற்றும் அதன் நிறுவனங்கள் மீது இப்போது படியும் வன்மப் பார்வையைப் பார்க்கையில் உண்மையில் முஸ்லிம்கள் பதபதைத்துப்போகிறார்கள். ஏனெனில், இவையனைத்தும் அவர்கள் சொந்த முயற்சியில் – பொருட் செலவில் சமுதாய நன்மை கருதி ஏற்படுத்தி வைத்திருக்கும் அமைப்புகள். அதன் தேவையையும் அவசியத்தையும் தள்ளி நின்று தூற்றுபவர்கள் அறிய வாய்ப்பில்லை.

மதரசாக்களின் அவசியம்

மதச்சார்பற்ற நாட்டில் பொதுக் கல்விமுறை இருக்கும்போது சமயக் கல்விக்கான அவசியம் என்ன என்பது முற்போக்காளர்களின் கேள்வியாக இருக்கிறது. சமய சுதந்திரத்தை இந்நாட்டின் அரசியல் சாசனச் சட்டம் எல்லோருக்கும் வழங்கியிருக்கிறது. அதன்படி ஒவ்வொரு மதத்தவரும் தனது கலாச்சாரத்தை – பண்பாட்டை நிலைநிறுத்திக்கொள்ள சமயக் கல்வியைப் பயில்வதும் பயிற்றவிப்பதும் இன்றியமையாத் தேவையாக இருக்கிறது. எல்லாச் சமயங்களும் தத்தம் இறையியல் கல்விக்கான நிறுவனங்களை நடத்துகின்றன. சமுதாயத்தில் ஒரு சிறு பிரிவினராவது இதில் பாண்டித்தியம் பெற்றவர்களாக இருக்க வேண்டும். பல்வேறு துறைசார்ந்த கல்வி இருக்கும்போது இறையியல் கல்வியும் ஒரு துறைதான். முஸ்லிம்களைப் பொருத்தவரை இத்துறை சார்ந்த அறிஞர் பெருமக்களால் மட்டுமே இஸ்லாமியக் கொள்கை, கோட்பாடுகளை – அறவியலை உயிர்ப்போடு வைத்து, சக மனிதர்களுக்கு அதன் அடிப்படைகளை ஓரளவுக்காவது கற்றுத்தர முடியும்.

இரண்டாவதாக, அடிப்படைக் கல்வியை அனைவருக்கும் உத்திரவாதப்படுத்த வழியில்லாத இந்தியா போன்ற நாட்டில் பல்வேறு கல்விமுறைகள் தமக்குரிய பங்களிப்பைச் செய்து வருவதை யாரும் மறுத்துவிட முடியாது. 6-14 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்குத் தடையற்ற கல்வி வழங்குவதை 2019ம் ஆண்டின் கல்வி உரிமைச் சட்டம் அடிப்படை உரிமையாக, அரசின் கடமையாக வரையறுத்துள்ளது. இருப்பினும், 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இன்னும் 8.5 கோடி குழந்தைகள் பள்ளியையே எட்டிப் பார்க்காத நிலையில், குறைந்தபட்சம் 3-10 வயது பிரிவினருக்காவது ஏதாவது ஒரு பயிற்றுமுறை தேவையாக இருக்கிறது.

இச்சூழலில், மதரசாக்கள் தன்னளவில் அறிவொளியைப் பரப்பியே வருகின்றன. அதிலும் மதரசாக்களில் பயில்பவர்கள் சமூகத்தின் அடித்தட்டு மக்களாகவும் பெண்களாகவும் இருக்கிறார்கள். அவர்களுக்கான உணவு, உறையுள் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளோடு அவர்களுக்கான கல்வியும் வழங்கப்படுகிறது. இந்த வாய்ப்பு இல்லையென்றால் அவர்களில் பெரும்பாலானவர்கள் படிக்காத தற்குறிகளாகத்தான் ஆவார்கள். நவீனச் சிந்தனை என்ற போர்வையில் மதரசாவை மட்டும் குறிவைத்துத் தாக்குபவர்கள் சிறுபான்மைச் சமுதாயத்திற்கு எதைக் கையளிக்கப்போகிறார்கள்?

(இக்கட்டுரையின் முந்தைய பகுதியை இங்கு வாசிக்கலாம்.)

Related posts

Leave a Comment