‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’: இந்திய சினிமாவின் ‘புதிய பாய்ச்சல்’!
விவேக் அக்னிஹோத்ரி இயக்கியுள்ள ‘
தி காஷ்மீர் ஃபைல்ஸ்
திரைப்படம் நாடு முழுவதும் பேசுபொருளாகி வருகிறது. 90களின் இறுதியில் காஷ்மீரிலிருந்து பண்டிட்கள் வெளியேற்றப்பட்டது குறித்துப் பேசும் இந்தத் திரைப்படத்தின் மூலம், நீண்ட காலமாக மறைக்கப்பட்ட உண்மைகள் வெளிக்கொணரப்பட்டிருக்கிறது என்று கூறி இதற்கு விளம்பரத் தூதராகியிருக்கின்றனர் பிரதமர் மோடி, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் போன்றோர்.’
காஷ்மீர் ஃபைல்ஸ் திரையிடப்பட்ட திரையரங்குகளின் வாசல்களில் இஸ்லாமிய வெறுப்பு முழக்கங்கள் எழுப்பப்படுகின்றன; “துரோகிகளை அழிக்க வேண்டும், பழிதீர்க்க வேண்டும்” போன்ற முழக்கங்கள் வெகு இயல்பாக எழுப்பப்படுவது இந்தியாவில் இன்று பரவியிருக்கும் வெறுப்புச் சூழலை நமக்கு உணர்த்துகின்றன. அதே 90களின் இறுதியில் தேசியத் தொலைக்காட்சியான
தூர்தர்ஷன் சேனலில் பொது நிதியைக் கொண்டு ராமாயணம் தொடர் ஒளிபரப்பப்பட்டது. இது இந்தியாவில் ராமர் அரசியல் வலுவாகக் காலூன்ற வழிவகுத்தது. பாபர் மசூதிக்கு எதிரான கரசேவைக்கு ஆள் சேர்க்கவும் இது பயன்பட்டது. அதுபோல, இன்று காஷ்மீர் ஃபைல்ஸ் படம் இந்துத் தேசியவாத நிகழ்ச்சி நிரலுக்கு மிக முக்கியப் பங்காற்றி வருகிறது
.
இந்தத் திரைப்படத்தில் இடம்பெறும் உண்மைக்குப் புறம்பான அம்சங்கள் பலராலும் சுட்டிக்காட்டப்பட்டு வருகின்றன. வெளியேற்றப்பட்ட பண்டிட்களின் எண்ணிக்கை, கொல்லப்பட்டோர் எண்ணிக்கை, அன்று பாஜக ஆதரவு ஒன்றிய அரசின் ஆட்சி இருந்தது முதலான பல்வேறு அம்சங்கள் இப்படத்தில் பிழையாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இப்படியான தகவல் பிழைகளையெல்லாம் தாண்டி, இஸ்லாமிய வெறுப்பை உற்பத்தி செய்யும் தனது நோக்கத்தை கச்சிதமாக நிறைவேற்றியிருக்கிறது இந்தப் படம்.
“உண்மையான தகவல்கள் யாருக்கு வேண்டும்? நாம் சொல்லும் தகவல்கள் எத்தனை பேருக்குப் பிடித்திருக்கிறது என்பதைப் பாருங்கள். அதனால் என்ன மாற்றம் நிகழ்கிறது என்பது போதும்
பத்திரிகையாளர் ஒருவரின் கதையாகத் தொடங்குகிறது விவேக் அக்னிஹோத்ரியின் ”
என்று பேசும் பெண் ‘தி டாஷ்கெண்ட் ஃபைல்ஸ்’ படம். இது
காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்திற்கு முன்பாக வெளியானது. இதே ட்ரைலாஜி வரிசையில் ‘
தி டெல்லி ஃபைல்ஸ்’
என்ற திரைப்படத்தையும் இயக்கவுள்ளதாக அறிவித்திருக்கிறார் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி.
அடிப்படையில் முழு வலதுசாரியான இவர், அர்பன் நக்சல் என்ற சொல்லைப் பொதுவில் அறிமுகப்படுத்தி பிரபலமானவர். மசாலா தன்மையும், சற்றுக் கூடுதலான கவர்ச்சியும் கொண்ட பி கிரேட் திரைப்படங்களை இயக்கியவராகவே இவர் பார்க்கப்படுகிறார். எந்நேரமும் போலிச் செய்திகளைப் பகிர்வது, பெண் பிரபலங்களை அவமானப்படுத்துவது,
மீ டூ குற்றச்சாட்டு ஆகியவை இவரின் தகுதிகள். மேற்குறிப்பிட்ட இவரின் இரு திரைப்படங்களும் வெறும் உரையாடல்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கின்றன. காட்சி மொழி குறித்த புரிதலோ, படத்தை சுவாரஸ்யமாக மாற்றும் உழைப்போ விவேக் அக்னிஹோத்ரியிடம் இல்லை. திரைப்படக் கலை என்றளவில் அவர் இயக்கிய இந்த இரண்டு ‘
ஃபைல்ஸ்’
திரைப்படங்களும் குப்பை என்றே கூற முடியும்.
திரைமொழியில் தேர்ச்சியடைந்திராத நிலையிலும் இவ்விரு திரைப்படங்களும் பெரும் வசூலை ஈட்டியவை. டாஷ்கெண்ட் ஃபைல்ஸ் திரைப்படம் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான 1965ம் ஆண்டின் போருக்குப் பிறகு, உஸ்பெகிஸ்தான் நாட்டின் டாஷ்கெண்டில் நடந்த பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளச் சென்ற முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் மரணத்தில் சந்தேகம் கொண்டிருப்பதாகவும், அதனை விசாரிக்க அரசு ஆணையம் அமைக்கப்பட்டு, அதற்குள் நிகழும் உரையாடல்களாகவும் உருவாக்கப்பட்டிருந்தது. சாஸ்திரி மரணத்தில் இருந்த மர்மத்தை காங்கிரஸ் கட்சியின் காந்தி குடும்பம் மறைத்ததாகவும், சோவியத் அரசுக்கு இதில் பங்கிருந்ததோடு, அதனால்தான் இந்திய அரசமைப்பின் முகவுரையில்
‘
சோசியலிசம்’
என்ற சொல் சேர்க்கப்பட்டதாகவும், இணையத்தில் சாஸ்திரி மரணம் குறித்து உலவும் வதந்திகளைப் பற்றிய வலதுசாரிகளின் உணர்ச்சியூட்டப்பட்ட கலந்துரையாடல் வீடியோவாக இந்தப் படம் வெளியானது.
காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தில் விவேக் அக்னிஹோத்ரி தனது முதன்மை எதிரியாக முஸ்லிம்களையும், அடுத்த இடத்தில் பல்கலைக்கழகங்களில் இந்துத்துவத்திற்கு எதிராகப் போராடும் மாணவர்கள், பேராசிரியர்கள் ஆகியோரையும் குறிவைத்துள்ளார். தனது வரலாற்றை மறந்த காஷ்மீரி பண்டிட் இளைஞன் ஒருவன் தன்
இடதுசாரி பேராசிரியரால் காஷ்மீருக்கு ஆதரவாக வழிகாட்டப்படுகிறான். மறுபக்கம் தன் தாத்தாவின் இறுதி ஆசையை நிறைவேற்ற அவரின் நண்பர்களுடன் காஷ்மீர் செல்லும் அதே இளைஞன், பண்டிட்களின் துயரங்களை அறிந்துகொள்கிறான். இறுதியாக, சுமார் 25 நிமிடங்களுக்கு காஷ்மீர் ஏன் வலதுசாரிகளுக்குத் தேவை எனக் கதாகாலட்சேபம் நிகழ்த்துகிறான். நடுவில் கடந்த காலங்களைக் குறிக்கும் காட்சிகள் அனைத்திலும், பண்டிட்களின் துயரங்களும் காஷ்மீரி முஸ்லிம்களின்
‘
கொடூரங்களும்’
பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஒட்டுமொத்த உரையாடல்களுமே பண்டிட்களை, குறிப்பாக பண்டிட் பெண்களைத் துன்புறுத்துவதாகவும், அவர்கள் வலியோடு இறைஞ்சுவதாகவும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், இதில் காட்டப்படும் அனைத்து இஸ்லாமியர்களும் தீவிர மதப்பற்று கொண்டோராக, எந்நேரமும் மத அடிப்படையிலான மொழி, கலாச்சாரக் கூறுகள் ஆகியவற்றை வெளிப்படுத்திக் கொண்டே இருப்போராக, கொடூரமானவர்களாகச் சித்தரிக்கப்பட்டிருக்கின்றனர்.
பாலிவுட் திரைப்படங்களில் இதுவரை இஸ்லாமியர்களை வில்லன்களாகச் சித்தரித்த திரைப்படங்களில், இந்தியத் தேசிய/ இந்துத் தேசிய அடையாளங்களை ஏற்றுக்கொண்டு ஹீரோவுக்கு நண்பனாகவோ, ஹீரோவின் குழுவின் படையைச் சேர்ந்தவனாகவோ வருவதோடு, இறுதிக் காட்சியில் எனக்கு என் மதத்தைவிட நாடுதான் முக்கியம்’ எனக் கூறும்
‘
குட் முஸ்லிம்’
வகைகள் அதிகம் இடம்பெறுவார்கள். இதைச் சமீபத்தில் வெளிவந்த எஃப்.ஐ.ஆர்,
விஸ்வரூபம் போன்ற திரைப்படங்களிலும் பார்க்க முடிந்தது. ஆனால் இந்தத் திரைப்படம் புதிய பாய்ச்சலாக, குட் முஸ்லிம் கதாபாத்திரத்தை முழுமையாக அழித்திருப்பதோடு, தனது திரைக்கதையின் வழியாக எல்லா முஸ்லிம்களும் கெட்டவர்கள்தான் என்ற எண்ணத்தை உருவாக்கியிருக்கிறது. இக்கட்டுரையின் தலைப்பில்
காஷ்மீரி ஃபைல்ஸ் திரைப்படத்தை இந்திய சினிமாவில் ஒரு பாய்ச்சல் எனக் குறிப்பிட்டதன் காரணம் இதுதான்.
இஸ்லாமியச் சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகள் கிரிக்கெட் விளையாட்டிலும் வகுப்பறையிலும் மதவெறியுடன் நடந்துகொள்வது, இஸ்லாமியப் பெண்கள் இந்துக்களுக்கான ரேஷன் பொருள்களைக் கொட்டுவது, இஸ்லாமிய ஆண்கள் பயங்கரவாதிகளாகவும் பெண் பித்தர்களாகவும் இருப்பதான சித்தரிப்பு முதலானவற்றுடன், பண்டிட் பெண்கள் கதறி அழும் காட்சிகள், ஊருக்கு நடுவில் நிற்க வைக்கப்பட்டு துகிலுறிக்கப்பட்ட பண்டிட் பெண்ணின் அரை நிர்வாண உடல், பண்டிட்களை ஏற்றிச் செல்லும் லாரியில் சிறுநீர் கழிக்க முடியாமல் அவதிப்படும் பண்டிட் இளம்பெண், இறுதிக் காட்சியில் நெற்றிப் பொட்டில் வைத்து சுட்டுக் கொல்லப்படும் பண்டிட் சிறுவன் என அனைத்துக் காட்சிகளும் ஒன்றுசேரும்போது அவை இயல்பாகவே இஸ்லாமியர்கள் மீதான வெறுப்பையும், பழிவாங்கும் உணர்ச்சியையும் தூண்டுவதாக அமைகின்றன.
பண்டிட்களின் துயரங்களைப் படமாக மாற்றுவதாகக் கூறும் இந்தத் திரைப்படம், நேரடியாக பாஜகவின் கொள்கையான சட்டப்பிரிவு 370-ஐ நீக்குதல் என்ற இடத்திற்குத் தனது கதாபாத்திரங்களைத் திடீரென தள்ளுவதோடு, காஷ்மீர் விவகாரத்தில் சர்வதேச அளவில் மோடி அரசுக்கு ஏற்பட்டிருக்கும் தலைக்குனிவை சரிசெய்ய முயற்சிக்கிறது. மேலும், காஷ்மீரில் பண்டிட்கள் வெளியேற்றத்தை இனப்படுகொலை என்று வரையறுக்கிறது. ஐநா சபை உள்பட எந்த சர்வதேச அமைப்பும் காஷ்மீரில் பண்டிட்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதாகக் கூறுவதை அங்கீகரிக்காத நிலையில், சர்வதேச காஷ்மீர் பண்டிட் அமைப்புகள் இதனைக் கோரிக்கையாக முன்னெடுத்துள்ளனர். நடைபெறாத இனப்படுகொலையின் பழியையும் இந்திய முஸ்லிம்கள் சுமந்து திரியும் காலம் கூடிய விரைவில் ஏற்படலாம்!
முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பை ஒருபக்கம் உற்பத்தி செய்துகொண்டே, மறுபக்கம் இடதுசாரி அரசியல் பேசும் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், மாணவர் சங்கங்கள் முதலானவற்றையும் எதிரிகளாகக் குற்றப்படுத்துகிறது காஷ்மீர் ஃபைல்ஸ். 2016ம் ஆண்டு டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் அப்சல் குருவுக்கு நினைவேந்தல் நடத்துவதற்காகக் கூடிய மாணவர்கள், பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கமிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு, தேச துரோக வழக்கில் சிறையிலடைக்கப்பட்டனர். இந்தக் குற்றச்சாட்டைத் திட்டமிட்டு உருவாக்கிய ஜீ நியூஸ் தொலைக்காட்சி, பல்கலைக்கழகத்தில் எடுக்கப்பட்ட வீடியோக்களில் திருத்தம் செய்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த விவகாரத்தைப் பேசும் இந்தத் திரைப்படத்தில் வரும் பல்கலைக்கழக மாணவர்கள் பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும், இந்தியப் பிரிவினையைக் கோரியும் முழக்கம் எழுப்பும் காட்சிகள் உண்டு. இதன் மூலம், ஜேஎன்யூ விவகாரத்திலும் தங்கள் இந்துத்துவக் கதையாடலே மக்களிடம் விதைக்கப்படுகிறது. இந்தத் திரைப்பட தயாரிப்பிலும் ஜீ ஸ்டூடியோஸ் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது.
திரைப்படங்களை நாஜிக்களைப் போல் மக்களை அணிதிரட்ட பயன்படுத்திய அரசுகள் குறைவு. இந்திய சினிமாவிலும் நாஜி சினிமாக்களின் பண்புகள் கடந்த பத்தாண்டுகளாகத் தென்பட்டு வருகின்றன. அரசு ஆதரவு, வரி விலக்கு முதலான சலுகைகளை காஷ்மீர் ஃபைல்ஸ் பெற்றதைப் போலவே, பல்வேறு நாஜி சினிமாக்களுக்கும் கோயபல்ஸ் தலைமையிலான பிரச்சார அமைச்சகம் சலுகைகள் வழங்கியது. யூதர்கள், இடதுசாரிகள், அறிவுஜீவிகளை நாஜி சினிமாக்கள் தேசத்தின் எதிரிகளாகச் சித்தரித்ததைப் போலவே விவேக் அக்னிஹோத்ரியின் வெறுப்புப் பிரச்சாரத் திரைப்படங்கள் எதிரிகளைக் கட்டமைக்கின்றன. நாஜி சினிமாக்களில் தென்படும் தேசப்பற்று, போர், போரில் தியாகம், மண்ணுக்கும் ரத்தத்திற்குமான உறவு, தேசியப் பெருமை முதலான அனைத்துக் கூறுகளும் சமீபத்திய பாலிவுட் திரைப்படங்களில் வெளிப்பட்டு வரும் நிலையில்,
காஷ்மீர் ஃபைல்ஸ் நேரடியாக நாஜி பாணியிலான சினிமாவாகவே வெளிவந்திருக்கிறது.
விவேக் அக்னிஹோத்ரி தனது திரைப்படங்களின் மூலமாக மக்களிடையே நிலவி வரும் கதையாடல்களை மாற்றப் போவதாக அறிவித்திருக்கிறார். அதன் அடிப்படையில், அவரது இந்த ட்ரைலாஜி உருவாக்கப்பட்டு வருகிறது. அடுத்ததாக அவர் உருவாக்கும் தி டெல்லி ஃபைல்ஸ் திரைப்படம், 1984ம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிராக காங்கிரஸ் செய்த படுகொலைகளைப் பற்றியதாக உருவாக்கப்படுகிறது. இதில் காங்கிரஸ் கட்சி எதிரியாகச் சித்தரிக்கப்படுவது உறுதி என்றபோதும், அந்தப் படுகொலைகள்
இந்துக்களின் இயல்பான கோப வெளிப்பாட்டால் நடந்ததாகக் கூறிய மூத்த ஆர்எஸ்எஸ் தலைவர் நானா தேஷ்முக்கின் கருத்துகள் தவிர்க்கப்பட்டு, புதிய கதையாடல்கள் உருவாக்கப்படும் என்று எதிர்பார்க்கலாம்.
காஷ்மீரின் வரலாறு குறித்த அவதூறான வலதுசாரி கதையாடலை உற்பத்தி செய்திருப்பதுடன், நாம் யார்
, எதிரிகள் யார் என்பதை மீண்டும் அழுத்தமாகப் பதிவு செய்யும் இந்து தேசியவாதப் பிரச்சாரத் திரைப்படமே ‘
தி காஷ்மீர் ஃபைல்ஸ்
.’