பெரியாரிஸ்டுகள் முஸ்லிம்களிடமிருந்து விலக வேண்டுமா? – ஓர் உரையாடல் குறிப்பு
தோழர் ஃபாரூக் ஐந்தாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில் ‘இஸ்லாமும் பெண்களும்’ என்ற தலைப்பில் பீர் முகமது ஆற்றிய உரையைக் கேட்டேன். அதில் பீர் முகமது என்கிறவர் குரான், ஹதீஸ், இஸ்லாத்தில் பெண்கள் நிலை குறித்து ஏதேதோ கூறுகிறார். அதுபற்றி விவாதிக்கும் அளவுக்கு நான் அறிவுடையன் அல்லன். ஆனால் இந்த ஒட்டுமொத்த பேச்சின் வாதமுறை பற்றி சில எண்ணங்கள் தோன்றின.
“பெண் விடுதலை என்பது நவீன கருத்து. இஸ்லாம் மத்திய கால மதம். ஆகவே, அதில் பெண் விடுதலை, உரிமை இருக்க வாய்ப்பே இல்லை. அதில் இருப்பதெல்லாம் பெண் அடிமைத்தனம் மட்டுமே. அவர்களிடம் [இஸ்லாம் மத நம்பிக்கையாளர்களிடம்] நாங்கள் [இஸ்லாம் மதச் சமூகத்திலிருந்து வந்த திராவிட இயக்கத்தவர்?] எழுப்பும் கேள்விகளுக்குப் பதில் ஒன்றுமில்லை. எங்கள் குரலுக்கு [இஸ்லாம் மதக் குழுமத்திலிருந்து இஸ்லாமை விமர்சனம் செய்யும் எங்கள் குரலுக்கு], நீங்கள் [திராவிட இயக்கத்தவர்] ஆதரவாக இருக்க வேண்டும். இந்துத்துவச் சூழலில் நீங்கள் ரொம்பவும் இஸ்லாம் சமூக ஆதரவு நிலைப்பாடு எடுத்துவிடக் கூடாது. ‘இந்து மத’த்திலிருந்து எவ்வளவு தூரம் விலகி நிற்கின்றீர்களோ, அவ்வளவு தூரம் இஸ்லாம் மதத்திலிருந்தும் விலகி நிற்க வேண்டும். விமர்சனம் செய்ய வேண்டும்” என்று பீர் முகமது வாதிடுகின்றார். இந்த எளிய தருக்கமுறை சரியானதாகவும் கவர்ச்சியானதாகவும் தோன்றுகின்றது.
ஆனால் பீர் முகமதுவின் சொல்லாடல், பல விசயங்களை மேம்போக்காகக் கடந்துசெல்கிறது; பல உண்மைகளைப் புறக்கணிக்கிறது. குறிப்பாக இஸ்லாம் மதச் சமூகம் இந்திய / இந்து தேச அரசு நிறுவன ஒடுக்குமுறைக்கு ஆளாகி நிற்கும், அவ்வொடுக்குமுறைக்கு எதிர்த்துப் போராடி வரும் பார்ப்பனரல்லாத வகுப்புச் சமூகங்களில் ஒன்று என்ற உண்மையை முக்கியமாகப் புறக்கணிக்கிறது. இதன் விளைவாக, பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடுவதில் கூட்டாளியாகக் கருதப்பட வேண்டிய இஸ்லாம் மதக் குழுமத்தை, அப்போராட்டத்தின் இலக்குகளில் ஒன்றாகச் சித்தரிக்க முயலுகின்றார்.
இந்தச் சிக்கல் எங்கிருந்து தொடங்குகின்றது என்றால், தாம் யார் என அவர் புரிந்துகொள்ளாததிலிருந்து தொடங்குகிறது. அவர் இஸ்லாமிய மதக் குழுமத்திலிருந்து வந்த திராவிட இயக்கத்தவரா அல்லது கடவுள் நம்பிக்கையையும் கைவிட்டு வெளியேறிய நாத்திகரா என்பதைத் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும் என நினைக்கிறேன். இஸ்லாமியர் ஒருவர் தமது குழுமத்திற்குள் உள்ளிருந்தோ, அல்லது கடவுள் நம்பிக்கையை முழுமையாகக் கைவிட்டு மதக் குழுமத்திலிருந்து வெளியேறியோ இந்திய சமூக அமைப்பில் பார்ப்பன ஆதிக்கத்திற்கு எதிராக, சாதி ஒழிப்புக்காக, சுய சமூக சீர்த்திருத்தத்திற்காக, முன்னேற்றத்திற்காக, சமத்துவத்திற்காக போராடலாம் என்ற வாய்ப்பைத் திராவிட இயக்கம் வழங்குகிறது. அதுபோலவே, கடவுள் நம்பிக்கையுடன் பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பு, மூட நம்பிக்கை ஒழிப்பு, சுய சமூக சீர்திருத்தமும் முன்னேற்றமும், சமத்துவத்தும் ஆகியவற்றுக்காகத் திராவிட இயக்கத்தவராகப் போராட இஸ்லாமும் அனுமதித்துள்ளது; அனுமதிக்கிறது. இதற்கு திராவிட இயக்க வரலாறே உதாரணம்.
இரு தரப்பிலுமே இந்தப் புள்ளியை விளங்கிக்கொள்ள வேண்டும். ஃபாரூக் படுகொலை போன்ற அசம்பாவித நிகழ்வைச் சாக்கிட்டு, அரசு நிறுவன ஒடுக்குமுறையால் துயருறும் ஒட்டுமொத்த இஸ்லாமியச் சமூகத்தைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவதும், அரசு அதிகாரத்தைப் பெற்றுள்ள பார்ப்பன ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் இந்துப் பெரும்பான்மைவாதத்துடன் சமப்படுத்தி நோக்குவதும் பிழையானதாகவே அமையும்.
கடவுள் நம்பிக்கையாளர் என்பதற்காகவே இஸ்லாமியர் ஒருவர் தம் மீது ஒடுக்குமுறை செய்கின்றவரை – அமெரிக்க ஏகாதிபத்தியம் போன்று உலகம் முழுவதும் இஸ்லாமிய வெறுப்பை ஏற்றுமதி செய்பவரை – நண்பர் எனக் கருத இயலாது. பெரியார் சிந்தனை வழிக்காரர் ஒருவர் நவீனமானவர், கடவுள் நம்பிக்கையற்றவர் என்பதற்காக – பார்ப்பன ஆதிக்கவாதியை, சாதி ஒடுக்குமுறையாளராக விளங்குகிறவரை – சாவர்க்கர் போன்றவர்களை நண்பர் எனக் கருதுவதும் இயலாது; கூடாது.
இதையெல்லாம் கருத்தில் கொள்ளாது சிந்திப்பவராக உள்ளார் பீர் முகமது. நான் இஸ்லாமியன் என்பதால், இஸ்லாம் மீது நான் வைக்கும் மத விமர்சனம் மதிப்புமிக்கது என பீர் முகமது கருதினால், அது மிக மோசம்; அவர் இஸ்லாமியர், ஆகவே அவரது இஸ்லாம் குறித்த விமர்சனம் நமக்கு மதிப்பு மிக்கது என திராவிட இயக்கதவர் கருதினால், அது படுமோசம்.
பீர் முகமது, கம்யூனிசம் பற்றி எழுதும்போது கம்யூனிஸ்டாகவும், போஸ்ட் மார்டனிஸம் பற்றி எழுதும்போது போஸ்ட் மார்டனிஸ்ட்டாகவும் அவதாரம் எடுப்பவர். சுயபுகழ்ச்சி அறிவாளியாகப் பல அரிதாரங்கள் பூசிக் கொள்வது மிக எளிது. உணர்ச்சி பொங்க பேசுவது மிகமிக எளிது. ஆனால் இவற்றையெல்லாம் கடந்து நியாயமாகச் சிந்திப்பது கடினம்.
ஒடுக்கப்படும் தமது சமூகத்தை ஒற்றைக்கல் கட்டுமானமாகச் சித்தரிப்பதும், அதற்குள் பல போக்குகள் இருப்பதைக் காண மறுப்பதும், தம் சமூகத்தின் மீது அரசு நிறுவன ஒடுக்குமுறையை நியாயப்படுத்தும் அளவுக்கு அவரது பகுத்தறிவு உணர்ச்சி செல்வதும் சரியானதாகத் தோன்றவில்லை. எந்தச் சமூகத்திலிருந்து வந்தாரோ, அந்தச் சமூகம் படும் பாடுகளைப் பரிவுணர்ச்சியுடன் காண அவருக்குக் கண் இல்லை. அத்துடன், பார்ப்பன ஆதிக்கத்தின் கோர வடிவான இந்து / இந்திய தேச அரசின் ஒடுக்குமுறை எதிர்த்துப் போராடும் திராவிட இயக்க உணர்ச்சியும் அவரிடமில்லை என எனக்குத் தோன்றுகிறது.
இதுபோன்ற குரல்களை பகுத்தறிவுவாதம், மத விமர்சனம் என பொத்தாம் பொதுவான போக்கில் திராவிட இயக்க மேடைகளில் அனுமதிப்பதும் நியாயமானதில்லை.
– தமிழ் காமராசன்