salai basheer novel kasabathநூல் அறிமுகம் முக்கியப் பதிவுகள் 

கசபத் – நுகர்வியத்திற்கு எதிரான குரல்

Loading

“பாடல்கள் முடிந்து விடும்
ஆனால் வாழ்க்கை தொடர்ந்து வரும்…“
– நாகா நாட்டுப்புற பாடல் வரி

இந்த வாழ்க்கை ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு சித்திரத்தைக் கொடுக்கிறது. அல்லது, ஒவ்வொருவரும் வாழ்க்கைக்கு ஒவ்வொரு சித்திரத்தைக் கொடுக்கின்றனர். வாழ்க்கை பற்றிய புரிதலும் வாழ்வில் முதன்மைப்படுத்தல்களும் ஆளுக்காள் வேறுபடுகிறது.

நவீன உலகின் இயந்திரத்தனமான வாழ்க்கையில் நுகர்வு எல்லோர் கண்களையும் குருடாக்கிவிட்டது. தனக்கான வாழ்வையும் பொருளையும் முதன்மைப்படுத்தும் மனிதன் ஏனைய எல்லாவற்றையும் ஒதுக்கித் தள்ளுகிறான். வாழ்க்கையின் இனிமையை ஆடம்பரத்திலும் மாடிக் கட்டடங்களிலும் அவன் தேடிக் கொண்டிருக்கிறான்.

அறபி மொழியில் கசபத் என்றால் சம்பாதித்தல் என்று பொருள். சம்பாத்தியத்தை மையமாக வைத்து அபூ என்பவன் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் மன உளைச்சலும், அதிலிருந்து வெளிவருவதற்குமான எத்தனமே நாவலின் மையச் சரடு. நண்பர் சாளை பஷீரின் முதல் நாவலான கசபத் நூலைப் படிக்க ஆரம்பித்ததும் அவரது முதல் நாவல் என்ற எண்ணம் எனக்கு ஏற்படவே இல்லை. ஒரு தேர்ந்த கதைசொல்லியின் இறுமாப்புடன் அவர் என் முன் அமர்ந்து கொண்டார்.

சாளை பஷீர்

முஸ்லிம் வாழ்வியலை எழுதுபவர்கள் வைக்கம் பஷீர், தோப்பில் மீரானின் தாக்கத்திலிருந்து விடுபட முடியாது. அந்த இருவரின் பாதிப்பு அந்த அளவுக்கு இருக்கிறது என்பதை நாம் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். வைக்கம் பஷீரும் மீரானும் முஸ்லிம் வாழ்வியலைப் பேசும் கதைசொல்லிகளுக்கு முன்னோடிகளாகத் திகழ்கிறார்கள்.

சாளை பஷீரும் அந்த இருவரின் பாதிப்பிலிருந்து தனது கதைசொல்லியைத் தட்டிவிடுகிறார். கட்டுரைகள் வழி வந்து சிறுகதைகள் எழுதி, நாவல் இலக்கியத்தில் கால் பதிக்கிறார் சாளை பஷீர். வாழ்க்கைப் போராட்டத்தில் சாளை பஷீர் அடைந்திருக்கும் இந்த இடம் முக்கியமானது. இன்னொருவகையில் சொன்னால் கசபத் நாவல் விரியும் கதைக்களம் சாளை பஷீரின் வாழ்க்கைப் பயணம்தான்.

ஓர் எழுத்தாளனின் வாழ்க்கையின் திசைவழிகள் பொதுப்புத்திக்குப் புலப்படாதவை. நுகர்வு மைய உலகில் எழுத்தாளன் தன்னைக் கூவிக் கூவி விற்க வேண்டிய, முன்வைக்க வேண்டிய இடத்தில் இருப்பது எவ்வளவு வேதனையானது. அந்த வேதனை கசபத் நாவல் முழுக்க இழையோடுகிறது.

சாளை பஷீர் தன் வரலாற்றிலிருந்தே காயல்பட்டினத்தின் கடந்த கால வரலாற்றை, தன்னைச் சூழ உள்ள மனிதர்களை, தன் சுயத்தின் நீட்சியை முகிழ்க்கச் செய்கிறார்.

அவரது கதை மாந்தர்களில் வெள்ளந்தி மனிதர்கள், எளியவர்கள், புத்தகப் பிரியர்கள், அடுத்தவரைச் சுரண்டி வாழ்பவர்கள், அடுத்தவர்களுக்கு உதவுபவர்கள், சம்பாத்தியமே வாழ்க்கை என அலைபவர்கள் எனப் பல்வேறு மனிதர்கள் வந்து போகிறார்கள். அவர் பாத்திர வடிவமைப்பை மிகக் கச்சிதமாக அமைத்திருப்பது அவரின் அனுபவத்தின் துணை கொண்டே. நாவலில் வரும் முதல் கதாபாத்திரமான தாவூதப்பா முதல் இறுதிக் கதாபாத்திரமான குட்டை ஷாஃபி வரை எந்தக் கதாபாத்திரமும் புனைவில் உருவாக்கப்படவில்லை என்பது மிகத் தெளிவு. மிகவும் தத்ரூபமாக அவர்களை எங்கள் மனக்கண் முன்பு நிறுத்துகிறார் சாளை பஷீர்.

நாவலில் வரும் உரையாடல்கள் தனிச் சிறப்பு வாய்ந்தவை. காயல்பட்டினத்தின் பேச்சு வழக்கில் மிக இயல்பாக அருமையாகப் பொருத்தியிருக்கிறார் சாளை பஷீர். அந்த உரையாடல்கள் கதைக் களத்திற்கு யதார்த்தமாய் நம்மைக் கொண்டு வந்து நிறுத்துகிறது. முஸ்லிம் வாழ்வியலின் சித்திரத்தைத் தீட்டுவதில் இந்த உரையாடல்களுக்கு முக்கியப் பங்கிருக்கிறது. முஸ்லிம்களின் வாழ்வில் கலந்துபோயிருக்கும் அறபிச் சொற்கள் எண்ணிலடங்காதவை. அந்த உரையாடல்களில் அவற்றை நாம் கடந்து செல்கிறோம். மொத்தமாகப் பார்க்கிறபோது நம்மை அறியாமலேயே அநேக அறபிச் சொற்களை தமிழ்ச் சொல் போலப் பயன்படுத்துகிறோம்.

நாவலில் பல இடங்களில் சாளை பஷீரின் மொழி தனிச் சிறப்புடன் மிளிர்கின்றது. தேர்ந்த நாவலாசிரியராக முதல் நாவலில் தன்னை நிறுத்துமிடங்களாக நான் அவற்றைக் காண்கிறேன். உதாரணத்திற்குப் பின்வரும் வரிகளைக் கவனியுங்கள்.

“ஓமப்பொடியைப் பரத்தியது போலிருந்தது வாப்பாவின் மைப்பேனா குறிப்புகள். பெருவிரலிலிருந்து விசிறிபோல டைரியின் பக்கங்கள் மெல்ல விடுபட்டன. மூக்கின் மேல் அட்டைத்துண்டொன்று வந்து விழுந்தது. கொழும்பு புறக்கோட்டை சம்மாங்கோட்டுப் பள்ளிவாசலுக்கு முன் நின்று மேல் துண்டு போட்டவாறே வாப்பா எடுத்துக்கொண்ட கறுப்பு வெள்ளைப்படம். Plate Ltd என வலது ஓரத்தில் அச்சிடப்பட்டிருந்தது. வாப்பாவின் முகத்தில் பெரிய காக்காவும் தம்பியும் கலந்து கிடந்தனர்.“

“மித வெளிச்சமும் குளிர்மையும் கொண்ட வாசிப்பாலயம். முத்து காமிக்ஸின் மாயாவிக்கும் ரஷ்யக் கதைகளின் வன போஜனக் குழந்தைகளுக்கும் பேசும் விலங்குகளுக்கும் நூலக அறையின் குறை வெளிச்ச மூலைகளுக்குள் நிரந்தர வாசம். எல்லாவற்றிற்கும் மேலாக நாசிக்குள் மணக்கும் சங்கரன் பிள்ளையின் தூளும் பழைய புத்தக நெடியும் விரவிய கலவையானது மூளைக்கு வாசிப்புக் கிளர்வை அளிக்கும். அதுவும் இந்தக் கலவை நெடியில் மழையின் ஈரமும் சேர்ந்துகொண்டால் நடப்பு சூழ் உலகங்களைக் கலைத்தழித்து அது உண்டாக்கி அளிக்கும் உலகம் அலாதியானது.“

“கண்ணாடி வில்லைகள் ஒட்டப்பட்டிருந்த நீல நிறப் பல்லக்கில் தலைக்கு வெள்ளை வலை சூடிப் பவுடரிட்டிருந்த இரண்டு சிறுமியர் மிரட்சியுடன் அமர்ந்திருந்தனர். நெற்றிப்பட்டம் சூடிய யானை இருளுக்குள் இருளாய் நின்றிருந்தது. தடி மஸ்தான் ஒருவரின் தலையில் உருண்டு பருத்த தேங்காயை யாரோ கொண்டு வைக்க அவர் முழந்தாளிட்டு தரையைத் தொட்டு முத்தமிட்டு அமர்ந்தார். வெட்டுக்கத்தியுடன் வந்த இன்னொரு மஸ்தான் முழு வட்டமடித்து சுழன்று திரும்பி வெட்டுக்கத்தியை ஓங்கினார். கறுப்பு நூலாகி இறங்கியது வெட்டு கத்தி. ‘சட்’ என்ற ஒலி. மேற்கும் கிழக்குமாக இரு மூடிகளும் தெறித்து விழுந்தன. உட்கார்ந்திருந்த தடி மஸ்தானின் முகத்தில் தேங்காய் நீர் வழிந்தது. தேங்காய் மூடிகளை எடுக்கப் பாய்ந்தனர் சிறுவர்கள். இரண்டு தடி மஸ்தான்களும் சிலம்பாடத் தொடங்கினர். அதில் ஒருவரின் கால் மழைச்சேற்றில் சறுகி உடல் முழுக்கப் பச்சை சேறு அப்பிக் கிடந்தது.“

சாளை பஷீர் தன் வரலாற்றையும், சமுதாயத்தின் நிலையையும், சமுதாயத்தில் இலட்சியவாதியின் இடத்தையும் மூன்று முனைகளில் சந்திக்கச் செய்கிறார். அந்த மும்முனைகளிலும் இருக்கும் ஏற்ற இறக்கங்களையும், இருள் சூழ்ந்த பகுதிகளையும் நமக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார்.

ஒரு சமூகத்திற்கு அல்லது ஓர் இனத்திற்கு இழைக்கப்படும் அநீதிகளை, பன்மைத்துவத்திற்கு விடுக்கப்படும் அச்சுறுத்தலை, சக மனிதனின் பசியை, தாகத்தை, துக்கத்தை, வாதையைப் பொதுவெளிக்குக் கொண்டு வருவதற்காகவும், அதற்கு நியாயக் குரல் எழுப்புவதற்காகவும் உண்மையான எழுத்தாளர்களும் செயற்பாட்டாளர்களுமே தம் உயிரைப் பணயம் வைத்துப் போராடுகிறார்கள். ஆனால், சமூகம் அவர்களது பெறுமதியை உணர்ந்து கொள்வதில்லை; அவர்களை மதிப்பதுமில்லை. பணத்தின் பெறுமதியுடனே எல்லாவற்றையும் உரசிப் பார்க்கிறது சமூகம். பணம் இல்லாதவன் பிழைக்கத் தெரியாதவன் எனும் இலக்கணத்தை அது உருவாக்கியிருக்கிறது. அந்த இலக்கணத்தைக் கலைத்துப் போடும் விதியை எழுத்தாளர்கள், செயற்பாட்டாளர்கள் உருவாக்க வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கிறது. அதற்கான திசைவழியைத் தேடியே “கசபத்“ பயணிக்கிறது.

நாவலின் முடிவில் தன் ஆற்றாமையை அபூவைப் போலவே எல்லோரும் கடந்து போக முயற்சிக்கிறார்கள். ஆனால், இன்னும் வலுவாக அதற்கான குரல் ஒலிக்க வேண்டும் என்றே நம்புகிறேன். ஓர் எழுத்தாளன் சமூகத்தில் தன்னை முன்நிறுத்துவதற்கு எவ்வளவு துன்பப்பட வேண்டியிருக்கிறது. எழுதுவதும் வாசிப்பதும் களப்பணியாற்றுவதும் ஒரு கௌரவமான செயல் என்பதை நிலைநிறுத்துவதுதான் அதற்கான பதில். அப்படியில்லாதபோது அபூ போல் தன் ஆற்றாமையைக் கடக்க வேறுவேறு பதில்களில் நாம் குடிகொள்ள வேண்டியிருக்கும்.

– இன்ஸாப் ஸலாஹுதீன்

Related posts

One Thought to “கசபத் – நுகர்வியத்திற்கு எதிரான குரல்”

  1. Haeefa Thoufeek

    கசபத்தை நானும் படித்தேன். மூடிக்கிடந்த சில திரைகள் மெல்லத்திறந்து கொண்டது. ஒரு எழுத்தாளனாய் பார்வைகள் அருமை. எனக்கும் அதை ஒற்றுமைப்படுத்திக் கொள்ள ஏதுவானது.

Leave a Comment