sufi bakli tombநூல் அறிமுகம் முக்கியப் பதிவுகள் 

ரகசியங்களின் திரைநீக்கம்: ஒரு ஸூஃபியின் டைரி (நூல் விமர்சனம்)

பேராசிரியர் ரமீஸ் பிலாலி மொழிபெயர்த்த ஸூஃபி ஞானி ரூஸ்பிஹான் பக்லியின் ‘ரகசியங்களின் திரைநீக்கம்: ஒரு ஸூஃபியின் டைரி’ நூல் குறித்து உரையாற்றுமாறு தோழர் கொள்ளு நதீம் கேட்டுக் கொண்டார். ஸூஃபித்துவக் கோட்பாடுகள், உருவகங்கள், தொல் மரபியல் கூறுகள், மறைகுறிப்பு (allusion) போன்றவை இடம்பெறும் நூல் என்பதால் முதலில் சிறிது தயக்கம் இருந்தது. ஆனால் நூலை வாசிக்கத் தொடங்கியதும் இதுகுறித்துப் பேச வேண்டுமென்ற விருப்பம் சேர்ந்துகொண்டது.

ரகசியங்களின் திரைநீக்கம் (கஸ்ஃபுல் அஸ்றார்) என்ற இந்த நூல் நாட்குறிப்பு வகைமையைச் சார்ந்தது. உலகில் நாட்குறிப்பு வகையிலான இலக்கியங்கள் புதிதல்ல. சீனர்கள் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அன்றாட அரச நிகழ்வுகளையும் அலுவல்களையும் குறித்து வைத்ததன் மூலமாகத் தங்களது வரலாற்றைத் தக்க வைத்துக் கொண்டனர் என்பார் க.ப.அறவாணன் (பார்க்க: தமிழர் அடிமையானது ஏன்? எவ்வாறு?).

ரோமப் பேரரசனான மார்கஸ் ஆண்டோனியஸ் அரேலியஸ் எழுதிய ’தியானங்கள்’ (Meditations) நூலும் நாட்குறிப்பு வகைமைச் சார்ந்த தத்துவார்த்த நூலே ஆகும். தனிமனித ஒழுக்கம், அறவிழுமியங்கள், தனிமனிதனுக்கும் பிரபஞ்சத்துக்குமான தொடர்பு, இயற்கையின் இயல்புகள் போன்ற விஷயங்களின் மீது அப்புத்தகம் புத்தொளிப் பாய்ச்சுவதால் ஸ்தோயிக் மரபினர் என்றில்லாமல் அனைவரும் வாசிக்கக்கூடிய பொது பனுவலாக அது திகழ்கிறது.

’தியானங்கள்’ மனித வாழ்விற்கான நெறிமுறைகளை முதன்மையாகப் பேசுகின்றதென்றால் ’ரகசியங்களின் திரைநீக்கம்’ பரம்பொருளுக்கும் படைப்பினத்திற்குமான உறவை, காதலை, பக்திப் பரவசத்தைப் பேசுகிறது. ரூஸ்பிஹானின் நூல் முதன்மையாக இறைக் காதலையும் ஒன்றிணைவையும் பேசுவதால் இஸ்லாமிய மெய்யியல் நூல் என்ற தளத்தையும் தாண்டி அனைத்து மரபைச் சேர்ந்த ஆன்மிகச் சாதகர்களுக்குமான பொது நூலாகவுள்ளது.

மௌலானா ரூமியின் வாழ்விலும், ரூஸ்பிஹான் வாழ்விலும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. இருவரும் வெவ்வேறு காலக்கட்டத்தில் வாழ்ந்த ஞானிகள் என்றாலும் வேதத்தை (திருக்குர்ஆன்) ஆழமாகக் கற்றவர்களாக உள்ளனர். வாரம் இருமுறை பள்ளிவாசலில் உரையாற்றி வந்துள்ளனர். ரூஸ்பிஹான் மெய்யியல் பள்ளியொன்றை நிறுவி ஐம்பதாண்டுகள் தனது சீடர்களை வழிநடத்தியுள்ளார். ரூமி அவர்களும் இறுதிவரை சீடர்களை வழிநடத்தியவர்தான். இருவரும் இறைக் காதலில் ஊறித் திளைத்து அதைக் கவிதைகளாகக் கொட்டியுள்ளார்கள்.

ஆனால் ரூமியின் கவிதைகள் அடைந்த புகழை ரூஸ்பிஹானின் கவித் தரிசனங்கள் அடையவில்லை. காரணம், அப்படியொரு பனுவல் இருப்பதே சமீபகாலமாகத்தான் உலகிற்குத் தெரியவந்துள்ளது. அந்த வகையில் தமிழில் வெளிவந்திருக்கும் ரூஸ்பிஹானின் நூல் விசேஷமானதாகும்.

வெளியரங்கமான ரகசியங்கள்

ரகசியங்களின் திரைநீக்கம் என்ற பெயரே இந்நூல் ரகசியங்களை வெளிப்படுத்தும் நூல் என்ற தகவலைச் சொல்லிவிடுகிறது.

”இறைவன் தன்னை ஒளியாலான எழுபதாயிரம் திரைகளால் திரையிட்டுக் கொண்டான்” என்கிறார்கள் முஹம்மது நபிகள். ஒளி என்றாலே திறப்புதான். எத்தனை ஒளியோ அத்தனை வெளியரங்கம். ஆக இறைவன் வெளியரங்கமாகவே உள்ளான். ஆனால் கண்ணிருந்தும் காணாதவர்களுக்கே அவ்வொளி திரையாய் உள்ளதென தூதரின் வார்த்தைகளின் மூலம் புரிந்துகொள்ளலாம்.

விவிலியத்தின் இறுதி நூலையும் ‘வெளிப்படுத்தின விஷேசம்’ (Revelation) என்றே அழைப்பார்கள். விவிலியத்தில் அந்தவொரு புத்தகம் மட்டுமே ரகசியங்களை வெளிப்படையாக அறிவிப்பவை என்பார்கள் மறை அறிஞர்கள். ஆனால், அதைப் புரிந்துகொள்வது மெய்யியல் தளத்தில் இயங்குபவர்களுக்கே சிக்கலாகத்தான் உள்ளது. அதற்குக் காரணம், அதில் பயன்படுத்தப்படும் உருவகங்களும் குறியீடுகளும். அச்சொற்களுக்கான அர்த்தங்கள் விளங்கிவிட்டால் ரகசியங்களின் திரை நீங்கிவிடும். இந்நூலும் அது போலொரு திரைநீக்க வாசிப்பையே கோருகிறது. என் வாசிப்பிலிருந்து இந்நூலை நான்காகப் பகுக்கிறேன்.

1. சுயவிருப்பமும் முன்விதிக்கப்பட்டதும் (Free will X Pre-destined)

ரூஸ்பிஹானின் கவித்துவச் சொற்கள் இறைவனை மனிதவுருவேற்றம் (Anthropomorphism) செய்துள்ளன. பல பெயரிட்டு அழைத்தாலும் பல பண்பாடுகளுக்கு ஏற்றவாறு அவனை வணங்கும் முறை வேறுபட்டாலும் மூல வடிவான பரம்பொருள் ஒன்றே. ரூஸ்பிஹான் இறைக்கு உருவம் கொடுத்துப் பேசியுள்ள பக்கங்கள் காதலின் வெளிப்பாடே ஆகும். பரவச நிலையில் ஆழ்மனம் இறையை எவ்வாறாகச் சிந்தித்து வைத்துள்ளதோ அவ்வாறாகவே இறைவன் அவருக்குக் காட்சித் தந்துள்ளான். ஆகவே ஓர் ஞானப்பனுவலை வாசிக்கும்போது மனிதவுருவேற்றம் நிகழ்ந்துள்ளது என்பதாலே ஒதுக்குவதும் இணைவைப்பு (Blasphemy) என்று புரிந்துகொள்வதும் தவறான பார்வையாகும்.

இந்நூலை வாசிப்பவர்களுக்கு இக்காரியங்களில் குழப்பம் ஏற்படக்கூடாது என்பதால் தெளிவுப்படுத்த வேண்டிய தேவையுள்ளது.

ரூஸ்பிஹான் பக்லிக்குச் சிறுவயது முதலே இறைக் காதலும் ஞானத்தேடலும் இருந்துள்ளது. தனது ஏழு வயதிலேயே ஞானிகளையும் குருமாரையும் சந்திக்க அவர் ஆவல் கொண்டிருந்ததாகவும், அனுதினமும் திக்ரு செய்து வந்ததாகவும் குறிப்பிடப்படுகிறது. அப்பெரும் ஏக்கமும் காதலுமே அவரது பதினைந்தாம் வயதில் வாழ்வின் முதல் திரைநீக்கம் நிகழ அடித்தளமாக அமைந்துள்ளது.

அந்த முதல் திரைநீக்கத்தில் முஹம்மது நபிகளார் அபூபக்கர், உமர், உஸ்மான், அலி போன்றோருடன் சேர்ந்துவரக் காண்கிறார். அதன் பிறகு தன் வாழ்நாளில் மறைவுலகின் திரைநீக்கம் நிகழாத நாளே இல்லையெனக் குறிப்பிடுகிறார். அன்றாடம் இறை தரிசனத்தையும் திரைநீக்கத்தையும் ஸூஃபி ரூஸ்பிஹான் காண அடிப்படையாக அமைந்திருப்பது அவருடைய சுயவிருப்பத் தேடலே ஆகும்.

தமிழில் அந்தணனுக்குரிய அறுகுணங்களில் தலையாயது வேட்டலாகும். வேட்டல் என்றால் விருப்பங்கொள்ளுதல் என்று பொருள். விருப்பமே காரியத்தை மெய்ப்பிக்கும். விருப்பத்தை ரூஸ்பிஹான் கொண்டிருந்ததாலே இறைவன் அவரை திரைநீக்கத் தரிசனங்களுக்குத் தேர்ந்துள்ளான் என்ற கருதுகோளுக்கு வர எண்ணினேன். ஆனால் வேதத்தில், நான் ஒவ்வொருத்தரையும் முன்குறித்தேன்; உன்னைத் தாயின் கருவறையிலிருந்து அறிவேன் என்று பரம்பொருள் சொல்வதாகப் பதிவுச் செய்துள்ளமையால் இது முன்குறிக்கப்பட்டதா அல்லது சுயவிருப்பத்தின் பலனா என்ற கேள்வி உண்டானது.

”என்னை அடிபணியாது போகும் நிலையை விட்டும் அவரைக் (ரூஸ்பிஹானை) காத்தேன்” என்று இறைவன் அறிவிப்பதாக குறிப்பு 48ல் உள்ளது. அதாவது அடியானைத் தேடி இறைவன்தான் இறங்கி வருகிறான்.
“அவனருளாலே அவன் தாள் வணங்கி” என்பார் மணிவாசகர். அந்தத் தொடரோடு மேற்கண்ட குறிப்பினைத் தொடர்புப்படுத்திப் பார்க்க முடிகிறது. ஆனால், திருவாசகத் தொடரைவிட பக்லியின் குறிப்பு பலமாகவுள்ளது. ஏனென்றால், அவனை வணங்குவதற்கு அவன்தான் காரணம் என்கிறார் மாணிக்கவாசகர். இங்கேயோ அவனை விலகவிடாமல் நான்தான் காத்தேன் என்று இறைவனே குறிப்பிடுகிறார். கற்றாவைப் போல் கசிந்துருகும் இறையுள்ளம்.

இவ்விடம் துல்லியமாகச் சொல்கிறது இறைவன் ரூஸ்பிஹானின் வாழ்வை முன்குறித்துவிட்டான் என்று. சுயவிருப்பத்திற்கும் முன்குறித்தலுக்குமான முரண் இங்கிருந்துதான் விரிவடைகிறது. இந்த இரண்டுக்குமான வேறுபாட்டினை பேராசிரியர் ரமீஸ் பிலாலி அவர்களிடம் முன்பு ஓர் உரையாடல் சமயத்தில் வினவியபோது, “அந்தச் சூட்சுமம் விளங்கியவன் ஞானி” என்று சொல்லிச் சிரித்தார்கள். என்றைக்குத்தான் நமக்கும் அந்த பெட்ராமேக்ஸ் லைட் கிடைக்குமோ! அருளல், மறைத்தல் ஆகிய பண்புகளைக் கொண்ட இறைவன் தகுந்த நேரத்தில் தேடுதல் உள்ளோர்க்கு வெளிப்படுத்துவான் என நம்புகிறேன்.

2. திரைநீக்கமும் மறைஞானமும்

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வேறூன்றிய எகிப்திய, சாமானிஷ, பேகனிஸ, ஹெர்மெட்டிஸிஸ ஞானக்கூறுகளையும் உருவகங்களையும் உள்ளடக்கியவையே ஆபிறகாமியச் சமயங்களின் வேதங்கள்.
யூதம், கிறிஸ்தவம், இஸ்லாம் ஆகிய சமயங்கள் நிறுவனப்படுவதற்கு முன்பே இறைஞானிகளும் இறைநேசர்களும் வாழ்ந்துதான் உள்ளனர். அவர்களது ஞானத்திறவுகள் மேற்சொன்னவைப் போன்ற ஆதி மெய்யியல் மரபுகளில் பரவியுள்ளன. அவற்றின் ஞானம் விடுபடாமல் உள்கிரகித்துக் கொண்டவை பின்னால் வந்துள்ள வேதங்கள். உலகெங்கும் இப்போக்கை நம்மால் காண முடியும். முந்துநூல் கண்ட முனைவனின் நூலைக் உட்செறிக்காமல் பிறந்த நூல்கள் கிடையாது.

இந்தத் தகவல்களைக் குறிப்பிடுவதற்கான காரணம், ரூஸ்பிஹானின் சில சொற்களுக்கும் உருவகங்களுக்கும் நேரடியாகப் பொருளில்லை, அர்த்தமில்லை என்று தோன்றினாலும் மறைஞானப் (Esoterism) பின்னணியில் அதற்கு ஆழமான அர்த்தங்கள் உண்டு என்பதை விளக்கத்தான்.

புனிதத்துவத்தின் கோட்டை எனும் தரிசனக் குறிப்பு அப்படிப்பட்டதே ஆகும். மறைஞான மொழியில் அக்குறிப்பில் இடம்பெற்றுள்ள ஏழு திரை, ஏழு வானம், ஏழு கடல் என்பதெல்லாம் உடலின் ஏழு சக்கரங்களையும் யோகப் படிநிலைகளையும் குறிப்பதாகும். அதே குறிப்பில் இடம்பெறும் கடலும் தீவும் மூளை மற்றும் பீனியல் சுரப்பியைக் குறிப்பிடும் உருவகம் போலுள்ளது.

ஃகிள்ருவின் ஆப்பிள் (குறிப்பு.16) எனும் பத்தியில் அகமிய அனுபவக் காட்சியாக ரூஸ்பிஹான் ஃகிள்ரு (Al-khidr) எனும் ஞானியைக் காண்கிறார். இறைஞானியாகிய அவர் மரணிப்பதில்லை என்றும், இறைத்தூதர் மூசாவுடன் தொடர்புகொண்டவர் என்றும் சொல்லப்படுகிறது.

உலகின் ஆதிகாவியமாகிய கில்காமெஷ் என்ற நூலிலும் அவர் இடம்பெறுகிறார். அவர் ஒருவரைப் பின் தொடர்ந்து அறிந்துகொள்ளவே தொல் கதைகளின் பரிச்சயம் தேவையாகவுள்ளது. அவர் ரூஸ்பிஹானுக்கு ஓர் ஆப்பிளை வழங்கி முழுமையாக உண்ணச் சொல்கிறார். ரூஸ்பிஹான் முழுமையாக உண்ட பிறகு, விதானம் முதல் பூமிவரை இறை ஒரே பெருங்கடலாக இருப்பதைப் போல் திரைநீக்கம் பெறுகிறார். இக்குறிப்பை மேலும் உணர்ந்துகொள்ள ஒருவர் ஆதாமும் ஏவாளும் பழத்தையுண்ட முதல் கதையின் மறைகுறிப்பை (Allusion) அறிந்திருக்க வேண்டிய தேவை எழுகிறது.

ஆபிறகாமியச் சமயங்களின் பின்னணியில் ஆப்பிள் என்பது அறிவுத் திறப்பின் குறியீடு. அதையுண்ட பிறகே ஆதாமுக்கும் ஏவாளுக்கும் நன்மை எது, தீமை எது எனப் பகுத்தறியும் திறப்பு உண்டானது. ஆக, ஒவ்வொரு சொல்லும், தனிநபர் சார்ந்த குறிப்புகளும் முழுமையாக வெளிப்படுவதற்கு ஆழமான வாசிப்பும் தேடலும் அவசியமாகிறது. ஆபிறகாமிய மதங்களின் பின்னணியை அறியாதவர்களுக்கு இந்நூல் தன்னை அத்தனை எளிதாகத் திறந்து கொடுப்பதில்லை.

விண்ணின் சாளரங்கள் என்ற 20ம் குறிப்பில், தான் அழிந்து, காலமும் அழிந்தபின் அழிந்த காலத்தை உணரும் பிரக்ஞை மட்டும் இருக்கும் என்ற நிலையைக் குறிப்பிடுகிறார் ரூஸ்பிஹான். இப்பகுதியிலுள்ள பிரக்ஞைசார் புரிதல் ஜென் புத்த மரபுடன் ஒத்திசைவதை உணர முடிகிறது.

தெய்வீகச் சிரிப்பின் படித்தரத்தில் (குறிப்பு 65) எனும் திரைநீக்கத்தில், முந்தைய நாள் இசை நிகழ்ச்சியில் நான் திரைநீக்கத்தைக் காணவில்லை. நீ ஏன் என்னுடன் இடைபடவில்லை என ரூஸ்பிஹான் இறைவனிடம் கேட்கிறார். அதற்குப் பரம்பொருள்: நான் உன்னுடன், உன்மேல், உனதருகே, உன்பின்னே, உன் இடமும் வலமும் இருந்தேனெனச் சொல்கிறார். இறையும் இறைமகனும் பிரிவதேயில்லை (There is no separation between them). ஒருமையுள்ளது (oneness) ஆனால் இணை வைத்தல் இல்லை. ஒரே Entity-தான் ஆனால் வெவ்வேறு. இவ்விடம் வெவ்வேறு என்று சொல்லவும் தயக்கமாகவுள்ளது. அப்படிச் சொன்னால் பிரிவு (separation) வந்துவிடுகிறது. இதை வைதீக வேதம் சொல்லும் பரம்பொருளான பிரகஸ்பதியின் கதையுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் புரிதலுக்குப் பயன்படும்.

பிரகஸ்பதி முழுமையும் யாவுமாக உள்ளான். தனிமையிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளவும் தன்னைப் பற்றி அறிந்துகொள்ளவும் படைக்கும் தொழிலில் ஈடுபடுகிறான். அண்டசராசரங்களும் காலமும் பொழுதும் தோன்றியபின் அதை நிர்வகிக்கவும் ஆளுகைச் செய்யவும் வானவர்களைப் படைக்கிறான். அவர்களில் தலைவன் தோன்றுகிறான். பிறகு, மனிதர்களும் அசுரர்களும் படைக்கப்படுகின்றனர். தன்னிலிருந்து அத்தனையும் கிளைத்தன என்றாலும் பிரகஸ்பதி தன் படைப்பிற்குள்ளும் இருக்கிறான். படைப்பினமும் அவனுடைய நகலாக உள்ளது. ஆனால் ஓர் வேறுபாடுள்ளது. தன் படைப்பினம் தன்னை அறிந்துகொள்வதன் வழி பிரகஸ்பதி தன்னையே மேலும் அறிகிறான்.

ஏனென்றால், அவன் அறிதலுக்கு அத்தனை மகத்தானவனாக உள்ளான். படைப்பினமாகிய நம் மனத்தினுடைய வியாபத்தையே நம்மால் சொல்லிவிட முடியாதபோது, படைத்தவனின் விரிவை யார் சொல்லிவிட முடியும்? பிரகஸ்பதிக்குத் தன் படைப்பினங்களில் வழி தன் வியாபத்தைக் காண முடிவதைப் போல் படைப்பினத்தால் பிரகஸ்பதியைக் காண முடியாது. இப்புரிதலின் பின்னணியில் அவனும் நாமும் ஒன்று. ஆனால் இன்னும் எனக்கு இஸ்லாமிய அத்வைதம் புரிதலுக்குச் சிரமமான ஒன்றாகவுள்ளது. இப்னு அறபி அவர்களின் நூல்களை வாசித்தபின் புரிதல் கூடும் என நம்புகிறேன்.

இந்நூலின் சில உருவகச் சொற்களுக்கான பொருள் முற்றிலும் அறிதலுக்கு அப்பாலுள்ளது. பசு நீல மரம், கரடிக்குட்டியின் தைலம் போன்றவை அப்படிப்பட்டவை. இச்சொற்களுக்கென பிரத்யேக ஸூஃபித்துவ அர்த்தங்கள் இருக்குமெனத் தோன்றுகிறது. தன்னைத் திரைநீக்கித் தரும் நூலில் மறையாகி நிற்கும் பக்கங்களும் நிறைய உள்ளன.

3. காதலும் மஸ்த்தும்

செங்குருதி சாக்கடை (கு.28) எனும் திரைநீக்கத்தில் மதுபோதையுடன் ஸூஃபித்துவ நடனமாடுகிறார் ரூஸ்பிஹான். ஸூஃபித்துவக் குறியீட்டில் மது, போதை என்பன இறைக் காதலின் பரவச நிலையைக் குறிப்பதாகும். அக்குறியீட்டினை அறியாதவர்கள் தவறாக எடுத்துக்கொள்ள நேருமென்பதால் விளக்க வேண்டிய தேவையுள்ளது. மௌலானா ரூமியின் கவிதைகளிலும் ’மஸ்த்’ அடிக்கடி இடம்பெறும் குறியீடுதான்.

ரூஸ்பிஹானுக்கு முஹம்மது நபிகள் மீது அளவுகடந்த நேசமுள்ளது. இறை நேசத்திற்கு இணையான நேசத்தை அவர்மீதும் பொழிவதை பல குறிப்புகளில் காண முடிகிறது. குறிப்பு.48ல் ஒரு காட்சியை விவரிக்கிறார் ரூஸ்பிஹான். அதில் இறைத்தூதர் நபிகள் நடு நாயகமாக நின்றிருக்க, ஏனைய இறைத்தூதர்கள் அவரைச் சுற்றிலும் நிற்கிறார்கள். இறைவன் அவர்கள் மீது பரிசுகளைப் பொழிகிறான். இக்குறிப்பில் பரிசு என்பது இறைவன் அவர்களைத் தன்னை அறியும் ஞானத்தால் நிறைத்துள்ளான் என்பதைக் குறிப்பதாகப் புரிந்துகொள்கிறேன்.

இதயத்தின் விரிவு (கு.61) எவ்விதச் சொற்களாலும் காட்சியாலும் விவரித்துச் சொல்ல முடியாத அனுபவத்தைக் கடத்துகின்றது. இக்குறிப்பை ஒவ்வொருவரும் தன் அகநிலைக்கேற்ப வாசித்துதான் அனுபவிக்க வேண்டும். இதுபோல் எண்ணற்ற குறிப்புகள், வாசகரின் அகநிலைக்கேற்ப விரிவடையும் ஆழத்தைக் கொண்டுள்ளன.

4. புறனடை

ரூஸ்பிஹான் வாழ்வின் அனைத்து காரியங்களையும் இறைவன் முன் ஒப்படைப்பவராக இருக்கிறார். தன் மகனுக்கு உடல்நிலை குன்றியபோது இறைவனிடம் அவனது நலனுக்காக வேண்டுகிறார். தன் மனைவி இறந்தபோது ஆறுதல் படுத்துமாறு தவிக்கும் பிள்ளையின் மொழியில் புலம்புகிறார். அனைத்திற்கும் பதிலளித்துத் தேற்றுபவனாக இறைவன் உள்ளான். அவரது வேண்டுதல்களை நிறைவேற்றுகிறான். அதற்கான நன்றியை அடுத்த குறிப்பில் பக்லி செலுத்தத் தவறுவதில்லை.

இறையுடன் பக்லி நடனம் புரிவதாகச் சில குறிப்புகள் (100,119) இடம்பெற்றுள்ளன. இறை மீதான தாபத்திலும் ஏக்கத்திலும் வெளிப்பட்டுள்ள உணர்ச்சிப் பிரளயமாக அந்நடனத்தைப் பார்க்கிறேன்.

ஒரு குறிப்பில், இறைவா நீ முன்னூழியில் (காலத் தோற்றத்திற்கு முன்) எப்படி இருந்தாய் என்பதை எனக்குக் காட்டு என்கிறார் ரூஸ்பிஹான். ஆனால் அந்த ரகசியம் வெளிப்படவில்லை.

இன்னொரு குறிப்பில் முரண்பட்ட இடம் வருகிறது. ரூஸ்பிஹானின் நண்பரது மரணத்திற்கு இறைவனே முன்நின்று தொழுகை நடத்தியதாக எழுதியுள்ளார் ஸூஃபி. இறைவன் தொழுகை நடத்தினால் யாரை நோக்கி நடத்தினான் என்ற கேள்வி எழுகிறது. பரவசப் பேச்சின் முனைவர் என்று ரூஸ்பிஹான் அதனால்தான் அழைக்கப்படுகிறார். இதைச் சொல்லுக்குச் சொல் பொருள் கொண்டால் இறை நிந்தனையாக அர்த்தம் கொள்ளப்படும். இதனால்தான் ஸூஃபித்துவக் கவிதைகள் பொதுத் தளத்திலிருப்பவர்களுக்கும், வாக்கியவாதிகளுக்கும் புரிதல் சிக்கலை ஏற்படுத்துவதாக உள்ளன.

என் அறிவுக்கு எட்டியவரை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஸூஃபியின் பிரதியைப் புரிந்துகொண்டேன் என்று பெருமைப்பட்ட கணமே, “பூமியையும், அதில் உள்ளவற்றையும் நான் மாற்றுவேன். தற்காலிகமானது எதுவும் என்னைப் பாதிக்காது. சமயச் சழக்கரின் கற்பனைகளையும் குறியீட்டாளர்களின் சங்கேதங்களையும் கடந்தவன் நான்” என்ற இறைவனின் கூற்றைப் பிரதியில் கண்டடைந்தேன். அவன் அறிவின் முன் என் ஊன அறிவை ஒப்படைத்துவிட்டு நிற்கிறேன்.

இறுதியாக, பேராசிரியரின் மொழிபெயர்ப்பு குறித்துப் பேசியாக வேண்டும். ஒரு செவ்வியல் பிரதியை செவ்வியல் மொழியில்தான் தமிழாக்கம் செய்ய வேண்டுமென்கிற புரிதலோடு இம்மொழிபெயர்ப்புப் பணியை பேராசிரியர் ரமீஸ் பிலாலி செய்திருக்கிறார். அகமிய, ஒளித்திரை, தெளிஞர், மணிமிடைப்பவளம் போன்ற செவ்வையான சொற்களைப் பயன்படுத்தியிருக்கிறார்.

இந்நூலைத் தமிழுக்குக் கொண்டு வந்திருக்கும் சீர்மைப் பதிப்பகம் மிக முக்கியமான பணியைச் செய்துள்ளது. பொறுமையாய் உரைதனைக் கேட்ட அனைவருக்கும் நன்றி.

(கடந்த மார்ச் 12ம் தேதி சீர்மை நூல்வெளி நடத்திய மெய்நிகர் புத்தக விமர்சன நிகழ்வில் ஆற்றிய உரை.)

சீர்மை: மெய்நிகர் நூல் விமர்சன நிகழ்வு – 2

Related posts

Leave a Comment