கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

வீதிகளில் ஒரு இறைத்தூதர்?

Loading

என்ன நபி (ஸல்) தெருவிலா..? சிலர் கொந்தளிக்கலாம். நபிகள் நாயகத்தை வெறும் ஒரு புண்ணிய ஆத்மாவாக மட்டுமே பார்த்து, அவரை அசாதாரண பிறவியாகக் கண்டு புகழ்ந்து நடக்கும் மக்களுக்கு நபிகளார் தெருக்களின் நாயகனாக அறிமுகமாவது அலர்ஜியாகவே இருக்கும்.

ஆன்மீகத்தின் போர்வையில் ஆடம்பர வாழ்க்கையை சிலரும், அதற்கு கீழே பலரும் அனுபவித்து வரும் சூழலில் அண்ணலார் (ஸல்) தெருவில் நின்றார்கள் எனில் அவர்களது ஆன்மீக லௌகீக வாரிசுகளாக தங்களை பிரகடனப்படுத்துவோரும் வந்துதானே ஆக வேண்டும்.

அறைகளின் மூலைகளில் அமர்ந்து சமூக ஊடகங்களில் மட்டுமே சமூகத்தை வாசித்தும் அறிவுரை பொழிந்தும் தங்களை அறிவுஜீவிகளாக காட்டிக் கொள்ளும் சிலரும் தெருக்களை தன் களமாகக் கொண்ட நபிகளாரைக்  கண்டு மனம் புழங்கவே செய்வார்கள்.

“என்ன ஆனது இந்த நபிக்கு.? அவர் தெருவில் நடக்கிறார்.. சாதாரண மக்களுடன் இருந்து உணவு சாப்பிடுகிறார்.” நபிகளாரை குறித்து குற்றங்களாக குறைஷியர்கள் கூறிய வார்த்தைகள்தான் இவை. நபிகளார் தெருவில்தான் களமாடினார் என்பதை குறைஷிகளின் இந்தக் கேள்வி நம்மை உணர்த்துகின்றது. ஒரு மதத்தின் நாயகன், தூதர், அழைப்பாளர் இருக்க வேண்டிய இடம் ஆலயங்கள்தானே தவிர அங்காடிகள் அல்ல என்ற மத அறிஞர்களின் எண்ணம்தான் முற்போக்குவாதிகளுக்கும் இருக்கிறது. எல்லா முற்போக்கு தலைவர்களும், “தெருக்களில் உங்களுக்கு என்ன வேலை?” என்று தானே மதத்திடம் கேட்கிறார்கள்.

நபி(ஸல்) புரோகித மதத்தின் பிரதிநிதியல்ல. நவீன மதமில்லாத முற்போக்குவாதிகளுக்கும்  நபிகளாரிடமிருந்து எதுவும் கிடைக்காது. புரட்சியும் ஆன்மீக வெளிச்சமும் ஒன்றாக இணைந்த ஒரு வாழ்வியல் சித்தாந்தத்தின் அடையாளம்தான் நபி (ஸல்).

நபியாக ஆவதற்கு முன்பிருந்தே அவர் மக்களுக்கு இடையேதான் வாழ்ந்தார். சிறுவயதில் அவர் ஆடுகளை மேய்த்தார். கஃபாவை கட்டுவதற்கு தன் நண்பர்களுடன் இணைந்து கற்களை சுமந்தார். வீடுகள்தோறும் ஏறி இறங்கினார். மக்களுக்கு சிறிய சிறிய சேவைகளை புரிந்தார். “நபிகளார் காற்றைப் போல் கதவுகளை தட்டிச்சென்றார்” என்ற வலம்புரிஜானின் வார்த்தைகள்தான் எவ்வளவு அர்த்தம் பொதிந்தவை!

அவர் வளர்ந்தபின் மக்கள் மயமான வாழ்க்கையின் அங்கமாக மாறினார். பிரபல வியாபாரி என்ற புகழை பெற்றார். எல்லோராலும் மதிக்கப்பட்ட தீர்ப்பாளராக மாறினார். கஃபா ஆலயம் மறு சீரமைப்பு செய்யப்பட்டபின் ‘ஹஜருல் அஸ்வத்’ என்ற புனிதக்கல்லை வைப்பது தொடர்பான சர்ச்சையை மிக அழகிய முறையில் முடித்து வைத்ததற்காக முஹம்மது என்ற இளைஞர் எல்லோராலும் மதிக்கப்பட்டார். குலத்தலைவர்களுக்கு இடையே போர் மூண்டுவிடக் கூடிய சூழலில் நபி (ஸல்) ஒரு போர்வையை கொண்டு வரச்சொல்லி அதன் மத்தியில் ஹஜருல் அஸ்வத் கல்லை வைத்து போர்வையின் ஓரத்தை குலத்தலைவர்கள் அனைவரையும் பிடிக்கச் சொன்னார். எல்லோரும் ஒன்றாக தூக்கியபின் அதை வைக்க வேண்டிய இடத்தில் அவரே வைத்து பிரச்சனையை முடித்து வைத்தார். நவீன கால நடைமுறையில் சொல்ல வேண்டுமென்றால் ஜனநாயக முறைப்படி பிரச்சனையை அவர் தீர்த்து வைத்தார்.

அறபு மண்ணில் நிலவிய அநியாயங்களை கண்டு உள்ளம் உடைந்த  நபி (ஸல்), ஹிரா குகையில் அடைக்கலம் தேடினார். தனிமையில் விரதம் பூண்டார். அங்கே அவருக்கு ‘வஹி’ எனும் வழிகாட்டுதல்கள் கிடைத்தன. அவர் நபியாக மாறினார். அவ்வேளையில் பொறுப்பின் சுமை தாளாமல் பயத்தால் நடுங்கி, வீட்டை அடைந்த அவரை ஆறுதல்படுத்தி அவரது மனைவி சொன்ன வார்த்தைகள் மிக்க கவனத்திற்குரியவை. “உங்களை மக்கள் கைவிட மாட்டார்கள். நீங்கள் மக்களின் சுமைகளை சுமக்கிறீர்கள். மக்களுக்கிடையே இணக்கத்தை உருவாக்குகிறீர்கள். ஆபத்துகளில் சிக்குபவர்களுக்கு உதவுகிறீர்கள்.”

சுமைகளை நீக்கவும் மக்களை பிணைத்திருக்கும் சங்கிலிகளை உடைத்தெரியவும்தான் நபி வருவார் என தௌராத்தும் இன்ஜீலும் கூறுகின்றன. மக்களை பல்வேறு சுமைகள் அழுத்திக் கொண்டிருந்த போது நபி(ஸல்) ஆலயத்திற்குள் அடைக்கலம் தேடவில்லை. மக்களை அழுத்திக் கொண்டிருந்த சுமைகளை அகற்றுவதன் மூலமாகத்தான் அவர் ஆன்மீக இன்பத்தை அடைந்தார். “வறியவர்களுக்கும் அனாதைகளுக்கும் அடிமைப்படுத்தப்பட்டவர்களுக்கும் மன மகிழ்வுடன் யார் உணவளிக்கிராரோ அவரே உண்மையான இறையடியான்” என்ற இறைவழிகாட்டுதலை இறைத்தூதர் (ஸல்) எடுத்துரைத்தார்.

பசியின் பாரத்தை இல்லாமல் செய்த ஒரு நபியை அவர்கள் கண்டார்கள். அண்டை வீட்டுக்காரனின் பசியை அகற்றாமல் தான் மட்டுமே புசிப்பவன் என்னை பின்பற்றுபவன் அல்ல என உரக்கக் கூறினார். “ஒருமாத காலம் மஸ்ஜிதுன் நபவியில் இஃதிகாப் இருப்பதை விட எனக்கு பிடித்தமான செயல் ஒரு மனிதனின் பிரச்சனையை தீர்ப்பதற்காக அவனுடன் நடந்து செல்வதுதான்” என்றார். மக்களின் பசியை அகற்றுவதற்கு ஒன்றும் செய்யாமல் வழிபாடுகளில் மூழ்கிக் கிடக்கும் ஆன்மீகவாதிகளை ஒருவகையில் கேலி செய்தார். இப்படிப்பட்ட வழிபாடுகள் பொருளற்றவை என்று இதற்கு அர்த்தம் கொள்ளலாம்.

‘பசிப்பவனின் வயிற்றுக்கு தேவை மதமல்ல’ என்ற மார்க்சிச, கம்யூனிச ‘மதத்திற்கு’ நபி (ஸல்) தந்த பதில்தான் ‘ஏழைகளின் பசியை வேடிக்கை பார்ப்பவன் என்னைச் சார்ந்தவனல்ல’ என்ற கூற்று. ஆம்… பசி அகற்றும்  போராளிதான் நபிகளார்.

‘யார் போராளி?’ என்ற கேள்விக்கு நபி (ஸல்) அளித்த பதில் “ஏழைகளுக்கும் விதவைகளுக்கும் பாடுபடுபவனே போராளி” என்பதுதான்.  ஸகாத், பித்ர் ஸகாத், கஃபாரத், உளுஹ்ஹியத் (குர்பானி)….. போன்ற வழிபாடுகளின் ஊடான உலகியல் நன்மைகளாக வறுமை மற்றும் பசி ஒழிப்பைத்தான் நபி (ஸல்) முன்னிறுத்தினார்.

மக்களின் வறுமையை ஒழிப்பதை விட நபி (ஸல்) அவர்களின் புனிதப் புகழ் பாடுதல்களுக்கும், அவர் விட்டுச் சென்ற பொருள்களுக்கு – அவற்றில் பலதும் போலியானவை- பேராலயம் எழுப்புவதற்கும் நபிகளாரின் மதம் முன்னுரிமை அளிக்கவில்லை. மதத்தின் பெயரால் சில புரோகிதர்கள் சில பிம்பங்களை கட்டமைக்கிறார்கள். நபிக்கு முக்கியம் நபிகளாரின் புனிதப் பொருட்கள் அல்ல. அதனால்தான் நபியின் காலத்திலோ அவருக்குப் பின் வந்த கலீஃபாக்களின் காலத்திலோ அவர் விட்டுச் சென்ற பொருட்களுக்கான மியூசியங்கள் கட்டப்படவில்லை.

ஆனால், பசியுடன் யாரும் மதினாவில் அந்தி உறங்கக் கூடாது என்பதை உறுதிப்படுத்தினார் நபி (ஸல்). பசிப்பவர்கள் யாராவது பார்வையில் பட்டால் அவர்களது பசியை அகற்றும் பொறுப்பை தானே ஏற்றுக் கொண்டார். அவருக்கு பின் வந்த கலீஃபாக்களும் அப்பொறுப்பை செவ்வனே நிறைவேற்றினர்.

மதீனா பள்ளியுடன் சேர்ந்த மதீனாச் சந்தையும் நபிகளாரின் முக்கிய உருவாக்கமாகும். யூதச் சந்தையை தகர்த்தெறியும் விதமாக மக்கள் சந்தையை உருவாக்கினார். யூத சந்தை என்பது வட்டியின், சுரண்டலின் அடிப்படையில் செயல்பட்டது. மாற்றுச் சந்தையின் மூலமாக புதியதொரு விநியோக, வியாபார முறையை நபிகளார் அறிமுகப்படுத்தினார். வட்டி, கள்ளச் சந்தை, பதுக்கல், கற்பனை வியாபாரம் போன்றவற்றிலிருந்து விடுபட்டு நின்றது நபியின் மதீனாச் சந்தை.

பள்ளியில் இமாமத் முடிந்தவுடன் சந்தைக்குச் செல்வது நபி (ஸல்) வழமையாக இருந்தது. தேவையான ஆலோசனைகள் கொடுப்பது, ஆய்வுகள் செய்வது எல்லாம் அப்போது நடக்கும். வழக்கமான ஆய்வின் போது ஒருவரின்  கோதுமை மூட்டைக்குள் கையை விட்ட போது அடியில் ஈரம் தென்பட்டது. ‘ஈரமான கோதுமையையா விற்கிறீர்கள்?” என  நபி (ஸல்) கேட்டார். “இல்லை, நேற்று பெய்த மழையினால் ஈரமாகிவிட்டது” என கடை உரிமையாளர் பதில் அளித்தார். “மழை பெய்தால் மேல் பாகம்தானே நனையும். அடிபாகமா நனையும்?” என்ற நபிகளாரின் கேள்விக்கு முன்னால் ஆடிப்போனார் கடை உரிமையாளர். “ஏமாற்றுபவன் நம்மை சார்ந்தவனல்ல” என கோபத்துடன் கூறினார் நபி (ஸல்).

நபிகளாரை நாம் இன்றைக்கு சந்தைக்கு கொண்டு வர வேண்டும். சாம்ராஜ்யத்துவ, முதலாளித்துவ, வியாபாரக் கூட்டம் சந்தையை சீரழித்து விட்டது. நுகர்வுக் கலாச்சாரத்தால் சந்தையை மூடிவிட்டனர். தார்மீகங்களின் கல்லறைகளாக இன்றைக்கு சந்தைகள் மாறிவிட்டது. நவீன சந்தையை, வியாபார முறைமைகளை நபி (ஸல்) கற்றுத்தந்த அடிப்படைகளின் கீழ் கட்டமைக்க வேண்டும். அது நமது மார்க்க கடமையாகும். அது, நபி (ஸல்) உருவாக்கிய புரட்சியின் தொடர்ச்சி. பள்ளியில் வழிபாட்டிற்கு தலைமை ஏற்பவரே சந்தைக்கும் தலைவராக மாறும் ஒரு மார்க்கத்தைத்தான் அவர் நமக்கு கற்றுத் தந்தார்.

இன்று வங்கி – நிதித் துறைகளிலும் நபிகளாரின் இருப்பு தேவைப்படுகிறது. வங்கி – நிதித் துறைகள் இன்று சுரண்டல்களின் சைத்தானிய மையங்களாக மாறிவிட்டது. வட்டியில்லா வங்கியியல் முறைக்காக உலகம் ஏங்குகிறது. அவர்களின் மீட்பராக இறைத்தூதர் அங்கே தேவைப்படுகிறார். வங்கியியல் துறையில் ஒரு நபிவழி புரட்சி தேவைப்படுகிறது.

மனித உரிமை, நீதி மறுப்பிற்கு எதிராகப் போராட்டம் நடக்கும் இடங்களில் எல்லாம் நபியின் இருப்பு மிகவும் முக்கியமாக தேவைப்படுகிறது. அபூ லஹபின் வீட்டிற்குச் சென்று பாதிக்கப்பட்ட மனிதனின் உரிமைக்காக குரல் கொடுத்த ரசூலை நாம் கார்ப்பரேட்களின் சுரண்டலுக்கு ஆளாகும் ஆதிவாசிகளின் ஊர்களுக்கு, வளர்ச்சியின் பெயரால், எட்டு வழிச் சாலைகளின் பெயரால் நிலங்கள் அபகரிக்கப்படும் இடங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

கஃபதுல்லாஹ்வின் சுவற்றில் சாய்ந்து அமர்ந்திருந்த நபிகளாரிடம் முன்பின் அறிமுகமில்லாத ஒரு மனிதன் வந்து அபூ லஹப் எனக்கு தரவேண்டிய தொகையை தர மறுக்கிறான் என்று புகார் கூறிய உடனே அம்மனிதனை அழைத்துக் கொண்டு அபூ லஹபிடம் சென்றார் நபி (ஸல்). “இவருக்கு ஏதேனும் கொடுக்க வேண்டுமா?” என அபூ லஹபிடம் உரத்தக் குரலில் கேட்டார். “ஆம்” என்றான் அவன். “அவ்வாறானால் உடனே கொடு” என இடி முழக்கம் கேட்க, ஒரு பணிவான வேலைக்காரனைப் போல அத்தொகையை எடுத்துக் கொடுத்தான் அபூ லஹப்.

உரிமைகளை பறிக்கும் அரசின், ஆட்சியாளர்களின், அதிகார வர்க்கத்தின் முகத்தை நோக்கி, இதோ ஒடுக்கப்பட்ட, உரிமைகள் பறிக்கப்பட்ட மக்களுக்காக கர்ஜிக்கும் நபிகளார் வந்துவிட்டார் என நாம் இந்த மீலாதின் வேளையில் உலகிற்கு அறிவிக்க வேண்டும்.

நபிகளாரை முன்மாதிரியாகக் கொண்டு அநீதமான ஆட்சியாளர்களை நோக்கி கேள்வி கேட்டவர்களை நாடு கடத்தும், சிறைகளில் அடைக்கும், கொலைகள் செய்யும் முஸ்லிம் ஆட்சியாளர்கள் ஆளும் முஸ்லிம் நாடுகளில் மீலாதுகள் வாயிலாக புரட்சியின் கீதங்கள் ஒலிக்க வேண்டும். ஷிர்க்கின் ஆதிக்கத்தை ஏகத்துவத்தின் அடித்தளத்தில் நின்று கொண்டு அகற்றுவதற்கான வாய்ப்புகளாக ரபியுல் அவ்வல் மாற வேண்டும்.

நீர் மேலாண்மை சிக்கலை நோக்கி உலகம் பயணிக்கிறது. நபிக்கும் ஒரு நீர் கொள்கை இருந்தது. யூத கொள்கைக்கு நேர் எதிரான கொள்கை அது. நீர் ஆதாரங்கள் எல்லாம் மக்களுக்கு உரிமையானது என்ற இறைத் தூதரின் கொள்கை புரட்சிகரமானதாகும். யூதர்கள் நீர் உரிமையை தனியார்மயப்படுத்தினார்கள். யூதர்களின் தனியுடைமையில் இருந்த கிணறுகளை விலைக்கு வாங்கி பொதுவுடைமையாக்கினார் நபி (ஸல்).

ஒருமுறை யூதன் ஒருவன் முஸ்லிம்கள் கிணற்றை பயன்படுத்த தடை விதித்த போது 12,000 தீனார்கள் கொடுத்து அதை விலைக்கு வாங்கினார் உஸ்மான் (ரலி). நபி (ஸல்) அக்கிணற்றை பொதுக் கிணறாக அறிவித்தார். குடிநீருக்காவும் விவசாய நீருக்காகவும் போராடும் மக்களிடையே நபி (ஸல்) இருந்தார்கள். ‘நீர், நெருப்பு, உப்பு மூன்றும் மக்களின் அத்தியாவசிய உரிமைகள். யாரும் அதை மறுக்கக்கூடாது’ என்று நபி (ஸல்) சொன்னார்.

ஆனால் இன்றைக்கு நீரில் மக்களுக்கு உரிமையில்லை. அது விற்பனைக்கானது என்கிறது முதலாளித்துவம். மக்களின் நீராதார உரிமைகளை சூயஸ் போன்ற பன்னாட்டு நிறுவனங்களுக்கு விற்கிறது அரசு. மக்களுக்கான நீர் உரிமை மீட்பில் நபிகளார் வேண்டும். போரட்டக் களங்களை புறக்கணித்து பள்ளியில் பதுங்கியிருக்கும் ஒரு நபியை நமக்குத் தெரியாது.

நபி(ஸல்)  தூய்மையின் தூதராக இருந்தார். சாப்பிடும் முன் கைகளைக் கழுவ வேண்டும். உணவை நன்றாக மென்று சாப்பிட வேண்டும். வயிறு நிறைய சாப்பிடக்கூடாது என்றும் கற்பித்த நபி (ஸல்) ஆரோக்கியத்தின் தேவையை உணர்த்திய நபியுமாவார்.

சுற்றுச்சூழல் போராட்டத்தின் மேடைகளில் நபி (ஸல்) இருக்க வேண்டும். நபி (ஸல்) அவர்கள் மரங்களை நடவும், அவற்றை நீருற்றி வளர்க்கவும், போரின்போது கூட மரங்களை வெட்டக்கூடாது என்றும் நமக்குக் கற்றுக் கொடுத்தார்கள். இறுதி எக்காளத்தின் சத்தத்தைக் கேட்கும்போது கூட, கைகளால் செடிகளை நட்டு, தண்ணீர் ஊற்ற அறிவுறுத்தினார்கள். சுற்றுச்சூழல் மாசுபாட்டிற்கு எதிரான விழிப்புணர்வு குழுவில் நபி (ஸல்) உறுப்பினராக இருக்க வேண்டும்.

தேங்கி நிற்கும் நீர்நிலைகளை மாசுபடுத்தக்கூடாது என்றும், பழங்களைத் தாங்கும் மரங்கள் உள்ள பகுதிகளை கழிவுகளை அகற்றும் இடங்களாகப் பயன்படுத்தக்கூடாது என்றும், சின்னஞ்சிறு உயிர்கள் வசிக்கும் கூடுகள் மற்றும் பொந்துகளை மல, ஜல வெளியேற்றங்களுக்கு பயன்படுத்தக்கூடாது என்றும் போதித்தார். புகை போக்கிளையும் மாசு நீர் வடிகால் வெளியேற்றத்தையும் நபி (ஸல்) காணவில்லை.

ஜும்ஆவின் மேடைகளில் சிறுநீர் கழிப்பது போன்ற சிறிய விஷயங்களுக்கு பெரிய முக்கியத்துவம் அளித்து, தொழில்துறை கழிவுகள் வெளியேற்றம் போன்ற பெரிய தீங்குகளை  பொதுச்சமூகத்திற்கு விட்டுக் கொடுக்கும்  ‘பித்அத்’ ஆன மதம் நபிகளாரின் மதமல்ல. கழிவுகள் வெளியேற்றத்தை வளர்ச்சியின் அடையாளமாக பார்க்கும் போக்கு, முன்னேற்றம் என்ற கருத்து நபி (ஸல்) அவர்களுக்கு சொந்தமானது அல்ல. சுற்றுச்சூழல் பாதுகாப்புடனான வளர்ச்சி என்ற மையமான பாதையில் நபிகளார் இருந்தார்.

பெண்ணிய பாதுகாப்பிற்கான போராளியாக நபிகளார் இங்கு வேண்டும். ஒரு பெண் எவ்வித இடையூறுகளும் இன்றி தன்னந்தனியாக தைரியமாக சன்ஆவிலிருந்து ஹளரமவுத்திற்கு பயணப்படும் நாள்தான் நபிகளாரின் கனவு தேசம். கஷ்மீரில் குதிரை மேய்க்கும் ஆசிபாஃக்களுக்கும் உத்தர பிரதேசத்தில் தனியாகப் பயணம் செய்யும் மனிஷாக்களுக்கும் நபிகளாரின் பாதுகாப்பு வேண்டும். மண்ணில் உயிருடன் புதைக்கப்பட்ட குழந்தைக்காக சிந்திய நபிகளாரின் கண்ணீர், கிணற்றில் படுகொலை செய்து வீசப்பட்ட நந்தினிகளுக்காகவும் வேண்டும்.

நபி தின மகிழ்ச்சிக் கொண்டாட்டங்களில் சிலரும் எதிர்நிலையில் சிலரும் பயணிக்கும் வேளையில் நபிகளார் புகழ்வதற்கு மட்டுமான மனிதர் அல்ல என்பதையும் வழிபாடுகளின் அடையாளங்களை மட்டுமே கற்பித்தவர் அல்ல என்பதையும் சாம்பிராணிப் புகைகள் ஊடாக மஸ்ஜிதுகளின் அறைகளில் திக்ருகளிலும் பிரார்த்தனைகளிலும் மட்டுமே சுகம் கண்டவர் அல்ல என்பதையும் உணர்ந்து கொள்ள வேண்டிய தருணங்கள் இந்த நாட்கள். இரவின் இருளில் இறைவனோடும் பகலின் வெளிச்சங்களில் மக்களோடும் உரையாடியவர் அவர்.  

ஆம். நபிகளார் வீதிகளில்தான் இருந்தார். பள்ளிவாசலில் தொழுகையும், நள்ளிரவு பிரார்த்தனையும், வெள்ளிக்கிழமை ஜும்ஆவும் குடும்ப ஒழுக்க பயிற்சிகளும் முடிந்தால் நபிகளார் வீதிகளில்தான் இருந்தார். புரட்சியின், விடுதலையின், போராட்டத்தின் வீதிகளில்.

மௌலவி காலித் மூஸா நத்வி

தமிழில் – கே.எஸ். அப்துல் ரஹ்மான்

Related posts

Leave a Comment