கசபத்: ஆழ்மனத்தின் ஆறாத காயம் – முஹம்மது சேக் அன்சாரி
‘கசபத்’ காயல்பட்டினத் தமிழில் எழுதப்பட்ட அழகிய சுயசரிதை நாவல். காயல்பட்டினத் தமிழ் புதிதாக கேட்பவர்களுக்கு புதுமையாகவும் இனிமையாகவும் இருக்கும். அது இந்த நாவல் முழுக்க விரவிக் கிடக்கிறது. நாவலைப் படித்து முடிக்கும்போது நம் நாவும் அந்த வட்டார மொழியை உச்சரிக்கத் தவறாது.
நாவலாசிரியர் சாளை பஷீரின் ஊர் காயல்பட்டினம். அவரைச் சுற்றி நடந்த சுமார் நான்கு வருட நிகழ்வுகளை அற்புதமாக விவரித்திருக்கிறார் என்பதை விட காட்சிப்படுத்தி இருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.
பிறரின் கதையைக் கேட்பது அவ்வளவு எளிதானதல்ல. அதற்கு நிறைய பொறுமை வேண்டும். கொட்டாவி விடாமல் இருக்க முயற்சிக்க வேண்டும்! ஆனால், இந்த அலுப்புகள் எதுவும் இன்றி நாவலை முடிக்கும்வரை சலிப்புத் தட்டாமல் நகர்த்தியிருக்கும் ஆசிரியருக்கு வாழ்த்துகள்.