நேர்காணல்கள் முக்கியப் பதிவுகள் 

மதமாற்றத்தின் அரசியல்!

Loading

“இஸ்லாம் எனக்கு சுயமரியாதையைக் கொடுத்தது” என்கிறார் டெல்லியை மையமாகக் கொண்டு இயங்கும் வழக்கறிஞர், சமூக ஆர்வலர், அரசியல் செயல்பாட்டாளர் ராஷித் சலீம் ஆதில். தலித்தாக இருந்து இஸ்லாத்துக்கு மாறிய இவர் தலித்கள், சமூக விடுதலை, இஸ்லாம் ஆகியவை தொடர்பாக யோகிந்தர் சிக்கந்துடன் மேற்கொண்ட உரையாடல் இங்கே:

கே: எது உங்களை இஸ்லாத்துக்கு மாறச் செய்தது?

ப. சாதி அமைப்பிலிருந்து விடுதலை பெறுவதற்கான எனது நீண்ட தேடலாலும், எனது சுயமரியாதை வேட்கைக்கான விடையாகவும்தான் நான் இஸ்லாத்தைக் கண்டடைந்தாகக் கருதுகிறேன். நான் ஒரு ஏழை சமார் (தலித்) குடும்பத்தில் பிறந்தவன். டெல்லிக்கு அருகிலுள்ள ஒரு சிறிய கிராமத்தில் எனது குடும்பத்தினர் பரம்பரை பரம்பரையாக தோல் தொழிலில் ஈடுபடுபவர்களாக இருந்தார்கள். உயர்சாதியினரால் நாங்கள் தீண்டத்தகாதோராகக் கருதப்பட்டோம். படிப்பறிவில்லாத என் தந்தை தலித்களுக்கென ஒரு சிறிய கடை வைத்திருந்தார். பெரும் சிரமத்தில் இருந்த நிலையிலும் அவர் என்னை பள்ளிக்கு அனுப்பினார். உயர்நிலைப் பள்ளித் தேர்வில் தோல்வியடைந்த நான் டெல்லிக்கு பிழைப்புத் தேடி வந்தேன். முற்றிலும் வித்தியாசமான சிந்தனைகளின் உலகம் எனக்கு டெல்லியில்தான் பரிச்சயமானது. தொடக்கத்தில் நாத்திகனாக இருந்த நான் பிற்காலத்தில் மதத்தின் பக்கம் திரும்பினேன்.

ஆரிய சமாஜத்தின் சமூக சமத்துவக் கோஷங்களில் கவரப்பட்ட நான், முதலில் அதில் சேர்ந்தேன். அவர்கள் தங்களை புரட்சியாளர்களாகக் காட்டிக்கொள்வார்கள். ஆனால், அவர்களின் எழுத்துகளை நெருக்கமாக ஆய்ந்து பார்த்தாலும், இன்னும் ஒருபடி மேலே போய், அவர்களின் நடத்தையைக் கண்ணுற்றாலும் சாதி விஷயத்தில் அவர்களுக்கும் பிற இந்துக்களுக்கும் இடையே பெரிய வித்தியாசம் இல்லை என்பதைக் கண்டுகொள்ளலாம். விரைவில் நான் ஆரிய சமாஜத்தின் உறுப்பினர் அந்தஸ்தைத் துறந்து பௌத்தன் ஆனேன்.

மிகவும் உணர்வுபூர்வமான பௌத்தனாக மாறிய நான், அம்பேத்கரின் அனைத்து நூல்களையும் படித்ததோடு, பௌத்த கற்கைகளில் எம்.ஃபில். செய்தேன். அதன் பிறகு சட்டத்துறையில் பட்டம் பெற்றேன். பிறகு, டெல்லி மேம்பாட்டு ஆணையத்தில் சட்ட அலுவலராகப் பணிபுரிந்த சமயத்தில் தலித்களிடையே செயல்படும் பௌத்த இயக்கங்களில் தீவிரமாகப் பங்காற்றினேன். சேரிகளில் பல்வேறு பௌத்த விகாரைகளை (கோவில்களை) எழுப்புவதற்குத் துணைநின்றேன்.

1981ல் தமிழகத்தின் மீனாட்சிபுரம் கிராமத்தில் பலநூறு தலித் குடும்பங்கள் இஸ்லாத்துக்கு மாறிய அந்த நிகழ்வு, இந்தியாவின் சமூக எதார்த்த நிலைகளைக் குறித்த என் கண்ணோட்டத்தை ஒட்டுமொத்தமாகப் புரட்டிப்போட்டது.

ஒருநாள் நான் அலுவலகத்துக்குச் சென்று கொண்டிருந்தபோது, டெல்லி மேம்பாட்டு ஆணையத்தின் புல்டோசர்களைக் கொண்டு, அரசு நிலத்தில் சட்டவிரோதமாகக் கட்டப்பட்டிருந்த தலித் பௌத்த விகாரை ஒன்றை தரைமட்டமாக்கிக் கொண்டிருந்தனர். எனினும், அதேபோல் அதற்கருகில் நின்றிருந்த இந்துக் கோவிலை இடிக்காமல் அப்படியே விட்டுவைத்திருந்தனர். அதுவும் சட்டவிரோதமாகக் கட்டப்பட்டிருந்ததுதான். அவர்கள் விகாரையை உடைத்தது, நாங்கள் தலித் எனும் ஒரே காரணத்தினால்தான் என்பதை அந்நிகழ்வு பொட்டில் அறைந்தாற்போல் உணர்த்தியது. பௌத்தத்திற்கு மாறிய பிறகும் நாங்கள் தீண்டத் தகாதவர்களாகவே நடத்தப்படுகிறோம் என்பது புரிந்தது. நாங்கள் எங்களை வலிமைப்படுத்திக் கொள்ள வேண்டுமென்ற எங்களின் தேடலுக்கு பௌத்தம் உதவவில்லையென எனக்கு அப்போது உறைத்தது. அப்படி உதவியிருந்தால், இதுபோல் விகாரையைத் தகர்ப்பதற்கு அவர்களுக்கு துணிவு வந்திருக்குமா?

கே: உங்களையும் உங்களைச் சார்ந்த மக்களையும் வலிமைப்படுத்திக் கொள்ள வேண்டுமென்ற வேட்கைக்கு இஸ்லாம் உதவும் எனும் அபிப்பிராயத்துக்கு நீங்கள் வந்தடைந்தது எப்படி?

ப: மீனாட்சிபுரத்தில் தலித்கள் இஸ்லாத்துக்கு மாறிய போது, அந்தப் பகுதியில் உயர்சாதியினர் எனச் சொல்லப்படுவோர் அவர்களை அணுகியமுறையில் உடனடி மாற்றம் ஏற்பட்டது. தலித்களால் கிராமத்தின் டீக்கடையினுள் நுழைய முடிந்தது, காலில் ஷூ அணிய முடிந்தது. இதற்கு முன் அவர்களுக்கு இவையெல்லாம் சாத்தியமில்லை. இதற்குக் காரணம், இஸ்லாத்துக்கு மாறிய மக்களை நாம் முன்புபோலவே நடத்துவதை முஸ்லிம்கள் அனுமதிக்கமாட்டார்கள் என்பது இந்துக்களுக்குத் தெரிந்திருந்தது. அந்த வகையில், இஸ்லாம் இந்த தலித்களுக்கு புதியதொரு அடையாளத்தையும் பெருமித உணர்வையும் வழங்கியது.

மீனாட்சிபுர மதமாற்றச் செய்தி காட்டுத் தீ போல் பரவியதோடு, விரைவில் வடநாட்டு தலித்கள்கூட இஸ்லாம் பற்றி சிந்திக்க ஆரம்பித்தார்கள். உயர்சாதியினரிடத்தில், ஏன் இந்திய அரசிடமே கூட, அது தோற்றுவித்த பதற்றத்தை அடிப்படையாகக் கொண்டு மதிப்பிட்டபோது, இஸ்லாம் எந்த அளவுக்குச் சக்திவாய்ந்த ஓர் விடுதலைக் கருவி என்பதை நான் உணர்ந்துகொண்டேன். இத்தனை நூற்றாண்டுகளும் ஒடுக்கப்பட்ட மக்களை தன்பால் ஈர்த்துக் கொள்ளுமளவு இஸ்லாத்திடம் அப்படி என்ன இருக்கிறது என்பதை அறிய நானே அதைப் படிக்க ஆரம்பித்தேன். இஸ்லாம் நீதி மற்றும் சமத்துவத்தை வலியுறுத்துவதையும், அதிகாரம் முழுவதையும் இறைவனுக்கு மட்டுமே உரித்தாக்குவதையும் கண்டேன். மனிதன் உருவாக்கிக் கொண்ட எஜமானர்கள் —சாமியார்கள், பண்டிதர்கள், மௌலவிகள் என— எவருக்கும் இஸ்லாத்தில் அதிகாரமில்லை.

எனவே, இஸ்லாத்தைத் தீர ஆய்வுசெய்த பிறகு, நான் மதம் மாறுவதென முடிவெடுத்தேன். டாக்டர் அம்பேத்கரின் 25ம் ஆண்டு நினைவுதினமான டிசம்பர் 6, 1981ல் பழைய டெல்லியில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஜாமியா மஸ்ஜிதில் வைத்து கலிமா (நம்பிக்கைப் பிரகடனம்) சொல்லி, புதிய இஸ்லாமியப் பெயரை சூடிக்கொண்டேன்.

கே: உங்களைச் சேர்ந்தவர்கள் இந்த மதமாற்றத்தை எப்படி எடுத்துக்கொண்டார்கள்?

ப: அந்தச் சமயத்தில் நான் தலித் இயக்கங்களில் முனைப்பாகச் செயல்பட்டு வந்தேன். பல்வேறு தலித் செயல்பாட்டாளர்களும் என்னைத் தேடிவந்து எனது துணிச்சலான முடிவுக்காக வாழ்த்துரைத்தனர். நான் தேர்ந்துகொண்டதுதான் தலித்கள் விடுதலை அடைவதற்கான ஒரே வழி என்பதாக எனது தீவிர தலித் சகாக்கள் தனிப்பட்ட முறையில் என்னோடு உடன்பட்டார்கள். ஆனால், அவர்களில் பலரால் இதே போன்றதொரு தீர்மானத்துக்கு வருவதற்கான துணிவைத் திரட்டிக்கொள்ள முடியவில்லை. அவர்களில் சிலர், தமது உறவினர்கள் என்ன சொல்வார்கள்/செய்வார்கள் என்றோ, அல்லது உயர்சாதியினர் எப்படி எதிர்வினையாற்றுவார்கள் என்றோ அஞ்சினர். வேறு சிலருக்கோ முஸ்லிம் ஆகிவிட்டால் தமது வேலைகளை இழக்க நேரிடும் என்ற அச்சம். ஆனால், இஸ்லாத்துக்கு மாறுவதே தலித்களின் அவலநிலைக்கு ஒரே தீர்வு என்பதை அவர்கள் தங்கள் நெஞ்சங்களின் அடியாழத்தில் அறிந்தே இருந்தார்கள்.

கே: எனினும், நிச்சயமாக நீங்கள் முஸ்லிமாக மாறியதற்காக கடுமையான எதிர்வினைகளுக்கும் முகங்கொடுத்திருப்பீர்கள் தானே?

ப: ஆம். என் சக்திக்கு மீறி முகங்கொடுத்திருக்கிறேன்! என் மனைவியும் குழந்தைகளும் என்னோடு இஸ்லாத்தைத் தழுவினர். இந்த விஷயம் என் மனைவியின் பெற்றோருக்குத் தெரியவந்ததும், எனக்கெதிராக அவளைத் தூண்டிவிட்டனர். கடைசியில் எங்களின் திருமணம் விவாகரத்தில் சென்று முடிந்தது. அதேபோல், உயர்சாதியினரிடம் இருந்தும் எதிர்ப்பைச் சந்தித்தேன். இயல்பாகவே அவர்கள் எனது மதமாற்றத்தை இலகுவாக எடுத்துக்கொள்ளவில்லை.

ஆரிய சமாஜத்தைச் சேர்ந்த பரப்புரையாளர்களின் அணி ஒன்று என்னை வந்து சந்தித்தது. இஸ்லாத்தைக் கைவிட்டு ஆரிய சமாஜத்தில் இணையும்படி அவர்கள் என்னை அறிவுறுத்தினர். உண்மையான இந்து மதமான ஆரிய சமாஜம், சமூக சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் போதிப்பதாக வாதிட்டனர். ஒருகாலத்தில் நான் ஆரிய சமாஜத்தில் இருந்தேன் என்பது அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. எனவே, அவர்களின் வேதங்களில் இருந்து சாதியையும் இனப் பாரபட்சத்தையும் புனிதப்படுத்தும் சமஸ்கிருத வசனங்களை நான் மேற்கோள் காட்டியபோது, அவர்கள் அரண்டுபோனார்கள்.

கே: இன்றைக்கு தலித்கள் விடுதலைக்கான தமது போராட்டத்தில் பல்வேறு மாற்று வழிமுறைகளையும் பரிசீலித்து வருகிறார்கள். அதில் மதமாற்றமும் ஒரு தேர்வு, அவ்வளவுதான். எனினும், நீங்கள் ஏன் மதமாற்றத்தை தலித்களுக்கு அதிமுக்கியத்துவம் வாய்ந்த ஒன்று எனக் கருதுகிறீர்கள்?

ப: இக்கேள்விக்கு பதிலளிப்பதற்கு முன் நாம் தொடக்க கால இந்திய வரலாற்றின் பக்கம் திரும்பவேண்டும். தலித்கள்தான் இந்த நிலத்தின் பூர்வகுடிகள். ஏறக்குறைய மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வெள்ளைத் தோல் கொண்ட ஆரியர்கள் வடமேற்கிலிருந்து இந்தியாவின் மீது படையெடுத்துவந்து, அசல் பூர்வகுடிகளான திராவிடர்களை ஒடுக்கி, அவர்களை அடிமைகளாக மாற்றினர். அவர்களை அப்படியே கீழடக்கிக் வைத்துக் கொள்வதற்கு, பலவந்தத்தோடு சேர்த்து கருத்தியல் மற்றும் கலாச்சார சக்திகளையும் பயன்படுத்த வேண்டியிருந்தது. அந்த வகையில்தான் பார்ப்பனியமும் அதன் வேதங்கள், மூடநம்பிக்கைகள் யாவும் வளர்ச்சியடைந்திருக்கின்றன. சாதி அமைப்புமுறைதான் பார்ப்பனியத்தின் உண்மையான அஸ்திவாரம். உண்மையில் இந்துமதம் என்பதே அதுதான். பார்ப்பனர்களின் மேலாதிக்கம், தலித்களின் இழிவு ஆகியவற்றின் மீதமைந்த இந்துமதம் தலித்களை விலங்குகளை விடக் கீழாக நடத்துகிறது. இந்துமதத்தில் பசுக்களும், பாம்புகளும், குரங்குகளும் வணங்கப்படுகிற அதேவேளை, தலித்கள் புழு பூச்சிகளை விட மோசமாக நடத்தப்படுகிறார்கள்.

எனவே, தலித்கள் சாதி அமைப்பிலிருந்து விடுபட வேண்டுமென்றால், இந்து மதத்திலிருந்து தங்களை விடுவித்துக் கொள்ளவேண்டும். பார்ப்பனியம் தலித்களை நிரந்தரச் சிந்தனை அடிமைத்தனத்தில் ஆழ்த்தியிருகிறது என்பதை சிந்திக்கும் தலித்கள் அனைவரும் நன்கறிவர். எனவேதான் டாக்டர் அம்பேத்கர் 1935ல், ‘தலித் விடுதலைக்கு மதமாற்றம் அவசியம்’ என்று அறிவித்தார். அவருமேகூட, 1956ம் ஆண்டு ஒரு வெகுஜன விழாவில் வைத்து, தனது பின்பற்றாளர்களில் 4,00,000 பேருடன் கூட்டாக இந்து மதத்திலிருந்து வெளியேறினார்.

கே: ஆனால் அம்பேத்கர் மாறியது பௌத்தத்துக்கு தானே, இஸ்லாத்துக்கு இல்லையே?

ப: நான் இதை அம்பேத்கர் இழைத்த பெருந்தவறாகக் கருதுகிறேன். ஆனால், ஒரு விதத்தில் அவர் அம்முடிவை நோக்கி உந்தித்தள்ளப்பட்டார். தலித் விடுதலைக்கு மிகச் சிறந்த வழி இஸ்லாத்தைத் தழுவுவதே எனும் விழிப்புணர்வு அம்பேத்கரிடம் இருந்தது என நான் உறுதியாக நம்புகிறேன். இந்த விஷயத்தில் அவர் மகாத்மா ஜோதிபா ஃபுலேயின் மரபையே பின்பற்றி வந்தார். முஸ்லிமாக மாறுவதன் மூலம் உயர்சாதியினர் தங்கள் மீது சுமத்தியுள்ள தீண்டாமைக் களங்கத்தை தலித்கள் துடைத்தெறியலாம் என்று வாதிட்டவர் ஃபுலே.

1935ம் ஆண்டு ஒரு பொதுக் கூட்டத்தில் தனது சக மஹர் சாதி மக்கள் மத்தியில் பேசிய அம்பேத்கர், இந்து மதத்திலிருந்து வெளியேறி இன்னொரு மதத்துக்கு மாறுவதன் தேவை பற்றி முதன்முதலாகக் குறிப்பிட்டார். தலித்கள் சீக்கியத்தையோ கிறிஸ்தவத்தையோ இஸ்லாத்தையோ தேர்வு செய்யலாம் எனக் கூறிய அம்பேத்கர், இஸ்லாம்தான் தலித்களுக்குச் சிறந்த தெரிவாக  அமையும் என்பதையும் சேர்த்துக் குறிப்பிட்டார். முஸ்லிம்கள் எப்படி தங்களுக்குள் மிகவும் ஒன்றுபட்டுள்ளார்கள் என்பதையும், இஸ்லாமியச் சகோதரத்துவத்துக்கு ஒப்பான பிணைப்பு வேறெந்த மதத்திலோ மரபிலோ இல்லை என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார். அத்தருணத்தில் அவர் பௌத்தத்தைப் பற்றி எதுவுமே குறிப்பிடவில்லை என்பது கவனிக்கவேண்டிய ஒன்று.

கே: அப்படியென்றால், அவர் ஏன் இஸ்லாத்துக்கு மாறவில்லை?

ப: அவர் படிப்படியாக அத்திசை நோக்கியே நகர்ந்துவந்தார் என்று நினைக்கிறேன். பிறகு, 1947ல் நடந்த தேசப் பிரிவினை அவர் தனது திட்டங்களை மாற்றுவதற்குக் காரணமாகிவிட்டது. அரசியல் களத்தில் அவர் அதிகமதிகம் முஸ்லிம்களோடு இணைந்து செயல்பட்டு வந்தார் என்றே நான் பார்க்கிறேன். அம்பேத்கரின் கல்வித் திட்டங்களுக்காக ஹைதராபாத் நிஜாம் பெரும் தொகையொன்றை வழங்கினார். இந்துக்களின் கடுமையான எதிர்ப்பையும் மீறி அரசியல் சாசன நிர்ணய அவைக்கான தேர்தலில் வெற்றிபெற அம்பேத்கருக்கு உதவியது கிழக்கு வங்காள முஸ்லிம்கள்தான். தலித்களுக்கு நீதி பெற்றுத் தருவதற்கான அவருடைய போராட்டத்துக்கு, சாமானிய முஸ்லிம் கிராமவாசிகள் தம்மாலான எல்லா வழிகளிலும் உறுதுணையாக நின்றனர். கிராமத்தின் குளங்களை தலித்கள் பயன்படுத்துவதற்கு அனுமதிக்கவேண்டும் என்பதற்காக மேற்கொள்ளப்பட்ட பிரபலமான மஹர் போராட்டம், இதற்கோர் உதாரணம்.

அம்பேத்கர், உயர்சாதி மேலாதிக்கத்தை எதிர்ப்பதற்கு ஜின்னாவுடனும் முஸ்லிம் லீகுடனும் அதிகமதிகம் ஒத்துழைத்து வந்தார். தலித்கள் கூட்டாக இஸ்லாத்தைத் தழுவியிருந்தால், முஸ்லிம் சமூகம் இந்தியாவின் தனிப்பெரும் சமூகமாக மாறியிருக்கும் என்பதில் அம்பேத்கர் மிகவும் தெளிவாக இருந்தார் என்றே நினைக்கிறேன். அது எவ்வாறு தலித்களின் போராட்டத்தை பலப்படுத்தியிருக்கும் என்பது அவருக்குத் தெளிவாகத் தெரிந்தது.

எனவேதான் காங்கிரஸிலும் இந்து மகா சபையிலும் இருந்த உயர்சாதியினரில் சில பிரிவினர், ஒருங்கிணைந்த இந்தியாவில் முஸ்லிம்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கான எந்தவொரு நடவடிக்கையையும் பரிசீலிக்க மறுத்ததன் மூலம் ஜின்னாவை நெருக்குதலுக்கு உள்ளாக்கி, பாகிஸ்தான் கோரிக்கையை முன்வைக்கும் நிர்பந்தத்திற்கு அவரைத் தள்ளுவதற்கு சதிசெய்தனர். இதன் மூலம் அவர்கள் ஒரே கல்லில் இரு பறவைகளைக் கொன்றனர். உயர்சாதியினர் பாகிஸ்தானை உருவாக்கியதன் வாயிலாக ஒரு பெருந்தொகை முஸ்லிம் மக்களை வெளியேற்றி, மீதமுள்ள முஸ்லிம்களை ஒரு ஒடுக்கப்படும் சிறுபான்மையாகச் சுருக்கினர். கூடுதலாக, முஸ்லிம்களுக்கு எதிரான தப்பெண்ணங்களை கொழுந்துவிட்டு எரியச் செய்து, முஸ்லிம்களுக்கு எதிரான இனப்படுகொலைகளைக் கட்டவிழ்த்துவிடுவதன் வழியாக, இஸ்லாத்துக்கு மாற நினைத்தால் என்ன விதமான விபரீதங்களைச் சந்திக்க நேரிடும் என்பதை தலிகளுக்கு தெளிவாக உணர்த்தினர். இந்தச் சூழ்நிலையில், இயல்பாகவே, அம்பேத்கர் தனது உத்தியை மாற்றவேண்டியதாயிற்று. அந்நிலையில் இஸ்லாத்திற்கு மதம் மாறுவதென்பது, ஒவ்வொரு கிராமத்திலும் நகரத்திலும் தலித்கள் மீதான கூட்டுப் படுகொலைகளுக்கே வழிவகுக்கும் என்பதால் அது கைவிடப்பட்டது. அடுத்த சிறந்த மாற்று என்ற வகையில் அம்பேத்கர் புத்த மதத்தைத் தேர்ந்தெடுத்தார்.

கே: இன்றைய பௌத்த மதமாற்ற இயக்கத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?

ப: மிகவும் சொற்ப எண்ணிக்கையிலான தலித்கள், குறிப்பாக மகாராஷ்டிரத்தின் மஹர்களும் மேற்கு உ.பி.யின் சமார்களில் ஒரு பகுதியினரும், மட்டுமே உண்மையில் பௌத்தத்துக்கு மாறினர். அந்த வகையில், அது இந்தியாவின் தலித்கள் அனைவரையும் ஒரே குடையின் கீழ் கொண்டுவந்து விடவில்லை. பௌத்தத்திற்கு மாறுவதிலுள்ள பெரிய பிரச்னை என்னவென்றால், தலித்கள் ஒன்றிணைந்து வாழ்வதற்கும் தங்களின் தலித்-தன்மையிலிருந்து (Dalitness) விடுபடுவதற்கும் ஏதுவாக ஏற்கனவே நிலைபெற்ற பௌத்த சமூகம் ஒன்று இங்கு இல்லை. எனவே, பௌத்தத்துக்கு மாறினாலும்கூட அவர்கள் தலித்களாகவே அடையாளப்படுத்தப்படுவார்கள். அந்த வகையில், தலித்கள் மீதான தலித் அடையாளத்தை இல்லாமலாக்க பௌத்த மதமாற்றத்தால் முடியவில்லை.

அவர்கள் தலித்களாக அடையாளப்படுத்தப்படும் காலம் வரை, சாதியமைப்பின் கிடுக்குப்பிடியிலிருந்து அவர்களால் தப்ப முடியாது. அதுபோக, புத்த மதத்துக்கு மாறிய பெரும்பாலான தலித்களுக்கு அது சில சடங்குகளில் மேற்போக்கான ஒரு மாற்றத்தை மட்டுமே கொண்டுவந்திருப்பது தெரிகிறது. மொத்தத்தில் பெரும்பாலான பௌத்தர்கள், மதமாற்றத்துக்கு முந்தைய தமது இந்து வழக்காறுகளையும் நம்பிக்கைகளையுமே தொடர்கிறார்கள். எனவேதான், தலித்கள் இஸ்லாத்துக்கு மாறுவதை மூர்க்கமாக எதிர்க்கும் இந்துவெறிக் குழுக்கள், தலித்கள் விரும்பினால் பௌத்தர்களாக மாறிக் கொள்ளலாம் என வாதிடுகின்றன. ஏனெனில், அவர்களின் பார்வையில் பௌத்தம் என்பது இந்து மதத்தின் ஒரு கிளைதான்.

கே: தலித்களை வலிமையூட்டுவதில் பௌத்த மதமாற்றம் வெற்றிபெறவில்லை எனும்போது, இஸ்லாம் மட்டும் தீர்வாக அமையுமென எப்படி நம்புகிறீர்கள்?

ப: இஸ்லாமும் பார்ப்பனியமும் இரு எதிரெதிர்ச் சித்தாந்தங்கள். சமூக விவகாரம் பற்றிய இவற்றின் கண்ணோட்டங்களை ஒப்பிட்டுப் பார்த்தால் இது தூலமாக விளங்கும். பார்ப்பனியம் என்பது மிகவும் கறாரான ஒரு படிநிலை அமைப்பையும், சாதி முறையையும், புரோகிதச் சாதியின் மேலாதிக்கத்தையும், தலித்களை அடிமைப்படுத்துவதையும் அடிப்படையாகக் கொண்டது. இந்து மேலாதிக்கவாதிகள் தமது தலைமைக் கடவுள் என்று கூறும் ராமன், சொர்க்கத்திற்கு இட்டுச்செல்லும் ஆன்மிகத் தவத்தில் ஈடுபட்டான் என்பதற்காக ஒரு சூத்திரனின் தலையைக் கொய்தவன். இதனை இஸ்லாத்துடன் ஒப்பிட்டுப் பாருங்கள். இஸ்லாம் சமூக சமத்துவத்தையும், ஆதாம்-ஏவாளின் பிள்ளைகள் என்ற வகையில் நம் அனைவரது, முழு மனிதகுலத்தினது ஒருமைப்பாட்டையும் தனது அஸ்திவாரமாகக் கொண்டிருக்கிறது.

நீதிக்கும் சமூக சமத்துவத்துக்கும் இஸ்லாம் தரும் முக்கியத்துவத்தைப் போல், வேறெந்த மதமும் தருவதில்லை. இந்த வகையில், இஸ்லாம் தலித்களுக்கு சாதி ஒடுக்குமுறையை எதிர்ப்பதற்கான வலிமையானதொரு வழிமுறையை வழங்குவதோடு, புதியதொரு சமூக ஒழுங்கையும் சுயமரியாதை உணர்வையும் கொடுத்து, முழு மனிதனாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு மனநிறைவையும் தருவதாக நான் கருதுகிறேன். நிச்சயமாக இந்துமதத்தால் இதைத் தர முடியாது.

அது மட்டுமின்றி, இந்தியாவில் பெரியதொரு முஸ்லிம் மக்கள்தொகை இருக்கிறது. பெரியதொரு சமூகத்துடன் இணைந்து வலிமைபெறும் நோக்கில் தலித்கள் இஸ்லாத்துக்கு மாறினால், எளிதில் அவர்கள் முஸ்லிம் சமூகத்தில் ஒன்றுகலந்து, தமது தலித்-தன்மையைக் களைந்துவிட முடியும்.

கே: ஆனால், இந்திய முஸ்லிம் சமூகத்திலும் சாதிப் பிரச்னை இருக்கிறதே?

ப: ஆம், இந்திய முஸ்லிம் சமூகத்திடமும் சாதியை ஒத்த சில பண்புகள் நிலவுகின்றன. ஆனால், இது பெருமளவு இந்துமயப்பட்டவொரு சூழலில் வாழ்வதால் வந்த விளைவுதான். இஸ்லாம் தீவிரமாக சாதிக்கு எதிரானது என்பதால், சீர்திருத்த இஸ்லாமிய இயக்கங்கள் வலுப்பெறும்போது இந்தப் பாகுபாடுகள் படிப்படியாக அகன்றுவிடும். என் சொந்த அனுபவத்தையே உதாரணத்துக்கு எடுத்துக்கொள்வோம். எனக்கு விவாகரத்து நடந்தபின் ஒரு சையது குடும்பத்துப் பெண்ணை என்னால் திருமணம் செய்துகொள்ள முடிந்திருக்கிறது. எனது பிள்ளைகள் திருமணம் செய்ததுகூட உயர்சாதி எனச் சொல்லப்படும் குடும்பங்களில்தான். எனவே, அதுவொரு பிரச்னையே அல்ல.

கே: ஒரு முஸ்லிம் என்ற வகையில், தலித் விடுதலைச் செயல்திட்டத்தில் உங்கள் பாத்திரம் என எதைப் பார்க்கிறீர்கள்? தலித்கள் இஸ்லாத்துக்கு மாறுவது தவிர, தலித்-முஸ்லிம் உரையாடலுக்கென்று ஏதேனும் பங்கிருப்பதாகப் பார்க்கிறீர்களா?

ப: பல்வேறு தலித் அமைப்புகளுடன் நெருக்கமாகச் செயல்பட்டு வருகிறேன். நாங்கள் ஒரு பதிப்பகத்தை நிறுவி, தலித்களின் மீட்சிக்கும், சாதி அடிமைத்தளையிலிருந்து அவர்களை விடுவிக்கவும் இஸ்லாம் என்ன வழிகாட்டுதல்களை வழங்குகிறது என்பது சார்ந்த இலக்கியங்களை வெளிக்கொண்டு வருகிறோம். மேலும், சப்ஜன் கட்சி (அனைத்து மக்களின் கட்சி) என்றொரு அரசியல் கட்சியை நிறுவியிருக்கிறோம். அது ஆரம்பநிலையில் உள்ளது. இந்தக் கட்சியின் வாயிலாக அனைத்து ஒடுக்கப்பட்ட சமூகங்களையும் பொதுவான ஒரு தளத்தில் ஒன்றிணைக்க நாங்கள் முயற்சித்து வருகிறோம்.

மூலம்: Politics Of Conversion

(தமிழில்: நாகூர் ரிஸ்வான்)

Related posts

Leave a Comment