கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

பந்துக்கு பின்னே நகரும் அரசியல்: ஃபிஃபாவின் இரட்டை நிலைகளும் மேற்கத்திய அரசியலும்!

Loading

கால்பந்து என்பது வெறும் 90 நிமிட விளையாட்டு மட்டுமல்ல; எல்லைகள், மதங்கள், மொழிகள் மற்றும் தேசியங்களைக் கடந்து உலக மக்களை ஒரே உணர்வில் பிணைக்கும் ஒரு மாபெரும் உலகளாவியத் திருவிழா. ஃபிஃபாவின் (FIFA) தாரக மந்திரம் ‘ஆட்டத்திற்காக, உலகத்திற்காக’ (For the Game, For the World) என்பதாகும்.

ஆனால், ஆஸ்திரேலிய தேசிய கால்பந்து அணியின் முன்னாள் வீரர் கிரெய்க் ஃபாஸ்டர் கூறியது போல், “இது உலகத்தில் உள்ள அனைவருக்கும் உரியது அல்ல என்பது தெளிவு.”

உலகக்கோப்பை போட்டிகள் எப்போதுமே வெறும் விளையாட்டையும் தாண்டிய அர்த்தங்களை சுமந்து நின்றுள்ளன.  உலக ஒழுங்கு, வரலாறு, நம்மை ஒன்றிணைக்கும் மற்றும் பிளவுபடுத்தும் காரணிகள் ஆகிய அனைத்தையும் நினைவூட்டுபவை அவை. நாட்டுப்பற்றும் மைதானத்தின் திறமைக்கு அப்பால் வீரர்களின் அறநெறி நிலைப்பாடுகள், புலம்பெயர்ந்தோருக்கு வாழ்வளித்த நாட்டின் மீதான பற்று, காலனித்துவ எதிர்ப்பு உணர்வுகள் ஆகியவை எல்லாமே அணிகளுக்கு ஆதரவளிக்கும் காரணிகளாகும்.

2026 ஃபிஃபா உலகக்கோப்பை மைதானங்களில் பந்து உருண்டபோது, அதன் பின்னணியில் வீசிய அரசியல் காற்றும், காஸாவின் கண்ணீரும், மேற்கத்திய நாடுகளின் போலித்தனமும், ஃபிஃபாவின் இரட்டை நிலைகளும் விளையாட்டின் அழகைக் காயப்படுத்தின. உலகக்கோப்பைகளுக்கு எப்போதுமே முற்றிலும் வெளிப்படையான வரலாறு இருந்ததில்லை என்றாலும், இம்முறை ஏகாதிபத்தியத்தின் தலைமையகத்திலேயே இந்த அநீதிகள் அரங்கேறியது, மேற்கத்திய நாடுகள் தங்களுக்குள் உரிமை கோரும் நன்னெறி மேலாதிக்கத்தின் போலித்தனத்தை அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

ஃபலஸ்தீன் காஸாவும் மாறிய உலகப் பார்வையும்: ஸ்பெயினின் துணிச்சலான மனிதநேயம்

பொதுவாக, நம் நாடு விளையாடாத சூழலில் இரண்டு வெளிநாடுகள் மோதும்போது, அழகாகப் பந்துதட்டும் அணிக்கோ, பிடித்த நட்சத்திர வீரருக்கோ அல்லது சீருடையின் நிறத்தைப் பார்த்தோ ஆதரவு தெரிவிப்போம். ஆனால், காஸாவில் நடந்த நிகழ்வுகள் உலகப் பார்வையையே மாற்றியமைத்தன.

அதிகார அமைப்புகளும் பிரபலங்களும் ஒரு சமூகத்தின் அழிவைக் கண்டு மௌனம் காத்தபோது, மனிதநேயத்தின் பக்கம் நின்றவர்கள் மக்களின் இதயங்களில் இடம்பெற்றனர்.

மேற்கத்திய அரசியல் உலகம் காஸா விஷயத்தில் நியாயப்படுத்துதல்களில் உழன்றபோது, தனித்து நின்றது ஸ்பெயின்தான். ஃபலஸ்தீனத்தை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்தது, காஸாவில் நடப்பது இனப்படுகொலை என்று பகிரங்கமாகக் கூறியது, சியோனிச இஸ்ரேலுக்கு எதிரான ஆயுதத் தடையை வலுப்படுத்தியது — இவையெல்லாம் விலை கொடுக்கவேண்டிய தருணங்களில் எடுக்கப்பட்ட நிலைப்பாடுகள். கொண்டாட்டங்களின் நடுவே பாலஸ்தீனக் கொடியை இளம் நட்சத்திரம் லாமின் யமால் (Lamine Yamal) ஏந்தி நின்ற காட்சி முதலானவை மனசாட்சியுள்ள மனிதர்களுக்கு ஸ்பெயினின் வெற்றி வெறும் கால்பந்து வெற்றியையும் தாண்டி, நீதிக்காக உயர்த்தப்பட்ட குரலின் அடையாளமாக மாறியது.

உலகக் கோப்பை வெற்றி ஊர்வலத்தின் போது ஃபலஸ்தீனக் கொடியுடன் ஸ்பெயின் வீரர் லாமின் யமால்
உலகக் கோப்பை வெற்றி ஊர்வலத்தின் போது ஃபலஸ்தீனக் கொடியுடன் ஸ்பெயின் வீரர் லாமின் யமால்

மறுபுறம், அர்ஜென்டினா அணியைச் சுற்றி வேறொரு நிழல் படிந்திருந்தது. ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெரூஸலேமின் மேலைச் சுவருக்கு முன்னால் நிற்கும் மெஸ்ஸியீன பழைய புகைப்படம் மீண்டும் பரப்பப்பட்டது. சியோனிச இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பகிரங்கமாக அர்ஜென்டினாவை ஆதரித்தார். அர்ஜென்டினா அதிபர் மிலே தன்னை உலகின் மிகப்பெரிய சியோனிச அதிபர் என்று பிரகடனப்படுத்தினார். வீரர்களுக்கு அரசியலுக்குப் பொறுப்பில்லை என்றபோதும், அந்த அரசியலை நாம் பார்க்கும் உணர்வுகளிலிருந்து முற்றிலும் அழிக்கவும் முடியவில்லை.

இந்த முரண்பாட்டிற்கு ஒரு புள்ளிவிவரமும் சாட்சி: மார்ச் மாதம், அடிமை வர்த்தக அநீதிக்கு இழப்பீட்டு நீதி கோரும் ஐ.நா தீர்மானத்தை 123 நாடுகள் ஆதரிக்க, 52 நாடுகள் ஒதுங்கி நிற்க, அமெரிக்கா, இஸ்ரேல், அர்ஜென்டினா ஆகிய மூன்றே மூன்று நாடுகள் மட்டும் எதிர்த்தன. வரலாற்றுப் பூர்வமான அநீதிக்கு நீதி கோரப்படும் ஒவ்வொரு தருணத்திலும், இந்த அரசாங்கங்கள் ஏதேனும் ஒரு காரணத்தைக் கண்டு எதிர்ப்பக்கத்தில் நிற்பது தற்செயலானதல்ல.

எந்தவொரு உலகக்கோப்பையாலும் ஃபலஸ்தீனத்திற்கு நீதி கிடைத்துவிடாது. ஸ்பெயினின் வெற்றி காஸாவில் பசியோடிருக்கும் குழந்தைக்கு உணவளிக்காது, இறந்தவர்களை மீட்டுத் தராது. குறியீட்டுத் தன்மையை நாம் ஒருபோதும் நீதியோடு குழப்பிக்கொள்ளக் கூடாது. ஆனால் மனிதர்கள் வாழ்வது பகுதியளவு இதுபோன்ற குறியீடுகள் வழியாகவும்தான்.

‘டிரம்ப்பிசமும்’ குடியேறிகளின் பங்களிப்பும்: வர்க்க-இன பாகுபாடு

உலகக்கோப்பையை நடத்திய அமெரிக்காவில் டிரம்ப் நிர்வாகம் முன்வைத்த தீவிர தேசியவாதமும், “அமெரிக்கா ஃபர்ஸ்ட்” (America First) கொள்கையும் விளையாட்டின் ஆன்மாவைச் சிதைத்தன.

நியூயார்க் மேயர் சொஹ்ரான் மம்தானி சுட்டிக்காட்டியது போல, “குடியேறிகள் இல்லாமல் ஏது கால்பந்து?” அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து எனப் பல நாடுகளின் வெற்றிப் பாதையில் ஆப்பிரிக்க-அரபு நாடுகளிலிருந்து குடிபெயர்ந்தவர்களின் உழைப்பும் ரத்தமும் கலந்திருக்கிறது. இருப்பினும், பிரான்ஸ் நட்சத்திர வீரர் கிலியன் எம்பாப்பே (Kylian Mbappé) போன்ற முன்னணி வீரர்கள் கூடத் தங்களின் கறுப்பின அடையாளத்திற்காக மீண்டும் மீண்டும் இனவெறித் தாக்குதல்களுக்கும், சமூக வலைதள வெறுப்புப் பிரச்சாரங்களுக்கும் ஆளாக்கப்பட்டனர். போட்டியில் வெற்றி பெற்றால் ‘பிரெஞ்சு வீரன்’, தோல்வியடைந்தால் ‘குடியேறி’ என்று முத்திரை குத்தும் மேலைநாட்டு மனப்பான்மையும், டிரம்ப் நிர்வாகத்தின் தீவிரக் குடியேற்ற எதிர்ப்புக் கொள்கைகளும் தொடர்ந்தன.

கத்தார் 2022 vs அமெரிக்கா 2026: மேற்கத்தியர்களின் போலித்தனம்

2022-இல் கத்தார் உலகக்கோப்பையை நடத்திய போது, அந்த நாடு எதிர்கொண்ட குற்றச்சாட்டுகள் உண்மையான கவலைகளை விட மேற்கத்தியர்களின் “ஓரியண்டலிஸ்ட்” (கீழைத்தேச எதிர்ப்பு) மனப்பான்மையிலிருந்தே உருவானவை. கத்தாரில் மனித உரிமை மீறல்கள், LGBTQ தடைகள், மதுக் கட்டுப்பாடுகள் மற்றும் கலாச்சாரக் கட்டுப்பாடுகளைச் சுட்டிக்காட்டி மேற்கத்திய ஊடகங்கள் விமர்சித்தன. 1970-இல் மெக்சிகோ உலகக்கோப்பையில் பீலே ‘சோம்ப்ரெரோ’ தொப்பி அணிந்ததைக் கொண்டாடியவர்கள், கத்தார் அமீர், மெஸ்ஸியின் தோளில் பாரம்பரிய ‘பிஷ்த்’ பொன்னாடையை அணிவித்ததை “தருணத்தைப் பாழாக்கிவிட்டார்” எனக் கண்டித்தனர்.

முந்தைய உலகக்கோப்பையை மனித உரிமை மீறல்களைச் சுட்டிக்காட்டி நிராகரித்த மேற்கத்திய நாடுகள், இம்முறை தங்களின் மனித உரிமை மீறல்களையும் இனவாதக் கெடுபிடிகளையும் எவ்வித கூச்சமுமின்றி காட்சிப்படுத்தின.

வெள்ளையர் அல்லாத, ஆப்பிரிக்க மற்றும் முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளை இலக்கு வைத்து கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அமெரிக்காவிற்கு பயணத்தடை விதிக்கப்பட்ட 39 நாடுகளில் 4 நாடுகள் போட்டிக்குத் தகுதி பெற்றிருந்தன. உலகக் கோப்பையை முன்னிட்டு இந்தக் கொள்கை பின்னர் விலக்கப்பட்டாலும் அது பலன் அளிக்கவில்லை. விசாவுக்கு விண்ணப்பிக்க 15,000 டாலர் வரை வைப்புத்தொகையாகக் கோரப்பட்டது. பல அதிகாரிகள், ரசிகர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்குச் சரியான காரணங்களின்றி விசா மறுக்கப்பட்டது. வீரர்கள் உட்பட அனுமதி கிடைத்த பலரும் கடுமையான சோதனைகளை விமான நிலையங்களில் எதிர்கொண்டனர்.

நுழைவுச் சீட்டு (Ticket) விலைகளை அளவுக்கு அதிகமாக உயர்த்தியது, யார் போட்டியைப் பார்க்கலாம் என்பதை தீர்மானிக்கும் ஒரு புதிய-தாராளமய (Neo-liberal) நகர்வாக அமைந்தது. இது இந்தப் போட்டியை ஃபிஃபா அமைப்பாளர்களுக்கு பெருலாபம் ஈட்டித் தரும் ஒரு மேடையாக மாற்றி அமைக்கிறது.

கத்தாரில் இலவச மெட்ரோ வசதிகளும், சுலபமான ‘ஹய்யா கார்டு’ (Hayya Card) நுழைவு உரிமைகளும் வழங்கப்பட்ட நிலையில், அமெரிக்காவிலோ மைதானங்கள் முழுவதும் குடியேற்றத் தடுப்பு (ICE) அதிகாரிகள் நிறுத்தப்பட்டு, சோதனைகளும், பிடியாணையற்ற கைதுகளும் அரங்கேற்றப்பட்டன.

 ஆசிய-ஆப்பிரிக்க நாடுகளுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள்

‘கால்பந்து உலகை ஒன்றிணைக்கிறது’ என்ற முழக்கத்திற்கு மாறாக, ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளின் வீரர்கள், அதிகாரிகள் மீது கடுமையான கெடுபிடிகள் திணிக்கப்பட்டன.

2025-ஆம் ஆண்டின் ஆப்பிரிக்காவின் சிறந்த நடுவரான சோமாலியாவை சேர்ந்த உமர் அப்துல் காதர் (Omar Artan), உலகக்கோப்பையில் ஆட்டங்களை நிர்வகிக்கத் தேர்வான முதல் சோமாலிய நடுவர் ஆவார். விசா மற்றும் தூதரக பாஸ்போர்ட் இருந்தபோதிலும், டிரம்ப் நிர்வாகத்தின் குடியேற்றத் தடையைக் காரணம் காட்டி மியாமி விமான நிலையத்தில் 11 மணி நேரம் விசாரணை செய்யப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டார்.

போட்டியில் பங்கேற்கும் ஒரு நாட்டுடன் போட்டியை நடத்தும் நாடு போரில் ஈடுபட்டுள்ளது என்ற சூழலில், ஈரான் அணிக்கு அமெரிக்காவில் பயிற்சி முகாம் அமைக்க அனுமதி மறுக்கப்பட்டு, மெக்சிகோவின் எல்லை நகரமான திஜுவானாவில் (Tijuana) தங்கும் முகாம் அமைக்கக் கட்டாயப்படுத்தப்பட்டது. போட்டிகளுக்காக விமானத்தில் பறந்து சென்று விளையாடிய ஈரான் வீரர்கள், போட்டி முடிந்த சில மணிநேரங்களிலேயே வெளியேற்றப்பட்டனர். அவர்களின் பயிற்சிக் குழுவினர் மற்றும் மருத்துவக் குழுவினருக்கு “ராணுவத் தொடர்பு இருப்பதாகச் சந்தேகிக்கப்படுவதாகக் கூறி” விசாவும் மறுக்கப்பட்டது.

ஈராக் அணித் தலைவர் அய்மன் ஹுசைன் சிகாகோ விமான நிலையத்தில் 7 மணி நேரம் தடுத்து வைக்கப்பட்டார். அணிப் புகைப்படக் கலைஞர் தலால் ஸ்வாலஹ் திருப்பி அனுப்பப்பட்டார். செனகல் மற்றும் உஸ்பெகிஸ்தான் அதிகாரப்பூர்வப் பிரதிநிதிகளிடம் அமெரிக்க காவல்துறையினர்  மோசமாக நடந்துகொண்டனர்.

ஈரான் அணி எதிர்கொண்ட கெடுபிடிகளையும், சோமாலிய நடுவருக்கு நேர்ந்த அநீதியையும் தடுத்து நிறுத்தாமல் “இது அமெரிக்காவின் உள்நாட்டு விவகாரம்” என்று கூறியதுடன், சர்ச்சைகளைப் பற்றிக் கேட்டபோது மக்களிடம் “சில், ரிலாக்ஸ்” (Cool ஆக இருங்கள்) என்று கூறி ஃபிஃபா கைவிரித்தது.

மைதானத்திலும் அரசியலிலும் நடந்த ஒருதலைப்பட்சமான அநீதிகள்

களத்திலும் களத்திற்கு வெளியிலும் நடுநிலைமை முற்றிலும் புறக்கணிக்கப்பட்டது. அர்ஜென்டினாவிற்கும் எகிப்திற்கும் இடையிலான போட்டி, உள்ளிட்ட போட்டிகளில் நடுவர்களின் நடுநிலைத்தன்மை கேள்விக்கு உட்படுத்தப்பட்டது. போஸ்னியாவுக்கு எதிரான போட்டியில் அமெரிக்க வீரர் ஃபோலரின் பாலோகன் (Folarin Balogun) ரெட் கார்டு பெற்றுத் தடை செய்யப்பட்டிருந்தார். ஆனால், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேரடியாகத் தலையிட்டதால், ஃபிஃபா விதிமுறைகளை வளைத்து அவரது தடையை ஒத்திவைத்தது. மைதானத்தில் பெல்ஜியம் 4-1 என அமெரிக்காவை வீழ்த்தி, “Overturn this” (“இதையும் மாற்றிப் பாருங்கள்”) என்று பதிவிட்டுப் பதிலடி கொடுத்தது.

காஸாவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பலியாகிக் கொண்டிருந்த தருணத்தில், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பகிரங்கமாக அர்ஜென்டினா அணியை ஆதரித்தார். தன்னை “உலகின் மிகப்பெரிய சியோனிச அதிபர்” என்று பிரகடனப்படுத்திய அர்ஜென்டின அதிபர் ஹாவியர் மிலே, டிரம்ப்புடன் கைகோர்த்தார்.

உக்ரைன் ஆக்கிரமிப்பிற்காக ரஷ்யாவை விலக்கி வைத்த ஃபிஃபா, காஸாவில் சர்வதேச நீதிமன்றக் கண்டிப்புகளுக்கு பிறகும், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் கைது பிடியாணைக்கு பிறகும் இஸ்ரேலைத் தங்குதடையின்றிப் போட்டிகளில் பங்கேற்க அனுமதித்தது.

வரலாறும் மைதானத்தைத் தாண்டிய போராட்டமும்

வரலாறு நெடுகிலும் விளையாட்டுகள் அரசியல் அதிகாரங்களால் பயன்படுத்தப்பட்டும் எதிர்ப்புகளுக்கான மேடையாகவும் இருந்துள்ளன. 1934, 1938 உலகக்கோப்பைகள் இத்தாலியில் முசோலினியின் பாசிச அரசால் பிரச்சார கருவியாகப் பயன்படுத்தப்பட்டன. 1978 அர்ஜென்டீனா உலகக்கோப்பை, ஆயிரக்கணக்கான அரசியல் எதிரிகளை இல்லாமல் ஆக்கிய இராணுவச் சர்வாதிகார ஆட்சியின் கீழ், நடத்தப்பட்டது. அதேவேளையில், இனவெறி ஆட்சி நடைமுறையில் இருந்த தென்னாப்பிரிக்கா 1970களில் FIFA-விலிருந்து நீண்டகாலம் தடை செய்யப்பட்டிருந்தது.

லூமும்பா வியா போட்டியில் கையை உயர்த்தி நின்றது முதல், ஈரானிய ஆட்டக்காரர்கள் தேசிய கீதத்தின் போது எதிர்ப்பைப் பதிவு செய்தது வரை, விளையாட்டு மைதானங்கள் அநீதிக்கு எதிரான போராட்ட மேடைகளாகவும் மாறியுள்ளன.

ஜார்ஜ் ஆர்வெல் கூறியது போல், விளையாட்டு என்பது ‘துப்பாக்கிச் சூடு இல்லாத போர்’. “விளையாட்டில் அரசியலைக் கலக்கக் கூடாது” என்று வாதிடுபவர்கள், அந்த மேடையே அரசியல் ரீதியாகத்தான் கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதையோ, அல்லது அந்த வாதமே இனவெறியைச் சுட்டிக்காட்டுபவர்களுக்கு எதிராகத் திரும்பக்கூடும் என்பதையோ உணர்வதில்லை.

போர்களும், மனித உரிமை நெருக்கடிகளும் உலகைப் பிளவுபடுத்தும் இந்தக் காலகட்டத்தில், மனிதர்களை ஒன்றுபடுத்தும் அபூர்வ மொழியாக விளையாட்டு மட்டுமே எஞ்சியிருக்கிறது. மைதானங்கள் அரசியல் மோதல்களின் களமாக மாறாமல், மனிதநேயத்தின் மேடையாகத் தொடர வேண்டுமானால், ஃபிஃபா போன்ற சர்வதேச அமைப்புகள் அரசியல் வல்லரசுகளின் சுயலாபங்களுக்கு அப்பால் நின்று நடுநிலையோடு செயல்பட வேண்டும். அத்துடன், அனைத்து நாடுகளுக்கும், அனைத்து வீரர்களுக்கும் ஒரே மாதிரியான நீதியையும், சமத்துவத்தையும், பரஸ்பர மரியாதையையும் நிபந்தனையின்றி வழங்க வேண்டும்.

மக்களின் மனங்களில் சிறந்த ஆட்டங்களும் வீரர்களின் திறமைகளும் என்றும் நிலைத்திருக்கும். அதேவேளையில், ஆட்டத்தின் அழகைக் கெடுத்த அமைப்புகளின் அநீதிகளையும், ஏகாதிபத்தியத்தின் போலித்தனங்களையும் உலகம் ஒருபோதும் மறக்காது!

Related posts

Leave a Comment