நடிக்க முடியாத துயரம்!
![]()
(ஷர்ஜீல் இமாமின் ஏழு ஆண்டுகால சிறைவாசம் அவர் குடும்பத்தில் ஏற்படுத்தியுள்ள அமைதியான, சாதாரணமான துன்பங்களையும் அத்துடன் முரண்படும் பொது மக்களின் எதிர்பார்ப்புகளையும் இக்கட்டுரை பிரதிபலிக்கிறது. மேலும் அவரை ஒரு தியாகியாக அல்லாமல், உயிருள்ள அரசியல் சிந்தனையாளராக நினைவுகூருவதற்கும் அழைப்பு விடுக்கிறது. “ஷர்ஜீலை ஒரு பாதிக்கப்பட்டவராகப் பார்க்க விரும்புவீர்களா அல்லது அவருடன் ஒரு அரசியல் குரலாக ஒலிக்க விரும்புகிறீர்களா?” என்று அவரின் சகோதரரும் சமூக செயலபாட்டாளருமான முஸம்மில் இமாம் கேள்வி எழுப்புகிறார்).
“முஸ்ஸம்மில், சகோதரர் ஷர்ஜீல் இமாம் குறித்தும் சிறையில் அவர் அனுபவிக்கும் துன்பத்தை குறித்தும் சில பதிவுகளை நீங்கள் ஏன் பகிரக் கூடாது?” பல்வேறு சமூக ஊடகங்களில் என்னிடம் கேட்கப்படும் எண்ணற்ற கேள்விகளில் இதுவும் ஒன்று.
இதற்கு அம்மா, ஷர்ஜில், மற்றும் எனது தரப்பில் இருந்து நாங்கள் அளிக்கும் பதில் இதுதான்.
மிகைப்படுத்தலை எதிர்க்கிறோம்
ஏறத்தாழ ஏழு ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததை மக்களுக்கு தொடர்ந்து நினைவூட்டிக் கொண்டிருக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இத்தகைய கோரிக்கைகள் வைக்கப்படுகின்றன என்பதை நாங்கள் உணர்கிறோம். ஆயினும், இந்த வழக்கை பற்றி மக்களுக்கு தெரியாத எதுவும் இருக்க முடியுமா என வியக்கிறேன்.
ஷர்ஜிலின் உரைகள், எழுத்துக்கள், நேர்காணல்கள் என அனைத்துமே பொதுவெளியில் கொட்டிக் கிடக்கின்றன. வழக்கின் கால வரிசையும் நீதிமன்ற தீர்ப்புகளும் கூட பொதுவெளியில் வெளிப்படையாகவே உள்ளன. சில நேரங்களில் எங்கள் குடும்பத்திற்குரிய தனிப்பட்ட வாழ்க்கை என்று ஏதேனும் ஒன்று இருக்கிறதா என்று எண்ணத் தோன்றுகிறது. மக்களின் நினைவில் இந்த தீப்பொறியை அணையாமல் வைத்திருக்க சிறைவாசிகளின் குடும்பங்கள், இன்னும் எந்த அளவிற்கு காட்சிப் பொருளாக வேண்டும் என்று வியக்கிறேன்.
மக்களின் நினைவில் நிற்பதற்காக, நம்முடைய துயரத்தைப் பொதுவெளியில் அரங்கேற்றித்தான் ஆக வேண்டுமா? பொது துயரத்திற்கும், தனிப்பட்ட துயரத்திற்கும் இடையே வேறுபாடு ஏதுமில்லையா?
அரசியல் கைதிகளிடமிருந்தும் அவர்களின் குடும்பங்களிடமிருந்தும் ஒரு பரிதாபகரமான துணிச்சல் வெளிப்பட வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள். அநீதியாகச் சிறைப்படுத்தப்பட்டவர்களின் குடும்பங்களாக, தொடர்ச்சியாகத் துணிவையும் நம்பிக்கையையும் வெளிப்படுத்த வேண்டிய பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது என்பதை நாங்கள் முழுமையாக உணர்ந்துள்ளோம். அதில் துளியும் பாசாங்கு இல்லை.
எனது திருமணத்திற்காக வெறும் 10 நாள் பிணையில் வந்தபோதுகூட ஷர்ஜீல் மக்கள் மத்தியில் சிரித்த முகத்துடன், உறுதியாக, எவ்விதச் சலனமும் இல்லாமல் பொது வெளியில் காட்சியளித்தார். அவரைப் பார்த்த எவரும், இந்த மனிதர் கடந்த ஏழு ஆண்டுகளாக வெளி உலகத்தையே பார்க்காதவர் என்பதை யூகிக்கக்கூட மாட்டார்கள்.

இதுதான் பொதுவெளியில் நாங்கள் பகிர்ந்துகொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படும் துயரம். நீதிமன்றத் தீர்ப்புகள், பிணை விசாரணைகளும் அவற்றின் நிராகரிப்புகளும், எப்போதாவது வரும் ஒரு செய்தியறிக்கை என இந்தத் தருணங்கள் மிக அரிதாகவே நிகழ்பவை. ஆனால், எங்களின் தனிப்பட்ட துயரமோ இத்தகைய மிகைப்படுத்தல்களுக்கு (Romanticism) அப்பாற்பட்டது. மாறாக, அது மிகைப்படுத்தலையே முற்றிலுமாக ஒதுக்கித் தள்ளுகிறது.
பொதுவெளியில் தோன்றும் இத்தகைய ஒருசில தருணங்களுக்கு இடையில் கடக்கவே முடியாத பல்லாயிரக்கணக்கான நாட்களும் பல்லாயிரக்கணக்கான மணிநேரங்களும் புதைந்து கிடக்கின்றன. இவற்றை எங்களால் கவிதையாகவோ, முழக்கமாகவோ, மக்களின் நினைவிற்கான அல்லது நம்பிக்கைக்கான ஒரு காட்சியாகவோ மாற்ற முடியாது. ஏனெனில், எழுதுவதற்கோ, விவரிப்பதற்கோ, நடித்துக் காட்டுவதற்கோ எதுவுமே நிகழாமல் அமைதியாகக் கரையும் தருணங்கள்தான் எல்லாவற்றையும் விட மிகக் கொடூரமானவை.
இந்த ஏழு ஆண்டுகளில் ஆகக் கடினமான தருணங்களை நீதிமன்ற அறைகளிலோ, காவல்துறையினரின் அல்லது ஊடகங்களின் முன்னிலையிலோ நாங்கள் சந்திக்கவில்லை. அவை வெறிச்சோடிய உணவருந்தும் மேசைகளிலும், அமைதியான இரவுகளிலும், வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கும் அம்மாவின் முகத்தையே பார்த்துக் கிடப்பதிலும், எங்களது குழந்தைப் பருவத்துப் புகைப்பட ஆல்பங்களைப் புரட்டுவதிலும், கண்கள் சந்தித்துக் கொள்ளும்போது ஒரு புன்னகையை வலுக்கட்டாயமாக வரவழைத்துக் கொள்வதிலுமே கழிந்தன.
பொதுவெளித் துயரத்திற்கும் தனிப்பட்ட துயரத்திற்கும் இடையே உள்ள ஒரு பொதுவான அம்சம் என்னவென்றால் இரண்டிலுமே ஒருவித பாசாங்கு இருக்கிறது. ஷர்ஜீலுடனான வீடியோ அழைப்புகளின் போது நாங்கள் ஒருவரையொருவர் பார்த்துப் புன்னகைத்துக் கொள்வோம்; “எல்லாம் நன்றாக இருக்கிறது, கவலைப்படாதே” என்று ஒருவருக்கொருவர் நம்பிக்கை அளிக்காத வகையில் நம்ப வைப்போம்.
“அல்ஹம்துலில்லாஹ் (அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும்), வீட்டில் எல்லாமே நன்றாக இருக்கிறது.” என நாங்களும் “அல்ஹம்துலில்லாஹ், திஹார் சிறையிலும் எல்லாமே நன்றாக இருக்கிறது,” என்று அவரும் கூறுவார்.
எனது சகோதரனைப் பற்றிய நினைவை மக்களின் மத்தியில் எங்களால் ஏன் உயிர்ப்புடன் தக்கவைக்க முடியாமல் போயிருக்கலாம் என்பதற்கான எங்கள் பதில் இதுதான்.
கடந்த ஏழு ஆண்டுகளில் பெரும்பாலான காலம் மெளனத்திலும், நாட்களையும் சில சமயம் மணிநேரங்களையும் எண்ணிக்கொண்டும், சில சமயம் நேரத்தையே கவனிக்காமலும் மறந்தும் கழிந்துவிட்டது. எனவே என்னிடம் நாங்கள் எப்படி இருக்கிறோம் என்பதை விவரிக்குமாறு கேட்கப்படும்போது, ஒரு வெறிச்சோடிய வீட்டை நீங்கள் கற்பனை செய்து பாருங்கள் என்றுதான் நான் கூறுவேன். தொடர்ந்து 2400 நாட்களுக்கும் மேலாக நாளுக்கு நாள் இவ்வாறே நீடிக்கும் ஒரு வெறிச்சோடிய நிலையை கற்பனை செய்து பாருங்கள். வழக்கின் நடைமுறையே இங்கு தண்டனையாகிவிட்டது. இடைவிடாத காத்திருப்பே இங்கு பெரும் ஒடுக்குமுறையாகிவிட்டது.
காட்சிப்படுத்தலுக்கு எதிராக
இந்த வழக்கு விசாரணையின் அப்பட்டமான வெறுமைக்கும் சலிப்பிற்கும் அப்பால், எங்களது தனிப்பட்ட துயரத்தைப் பிறர் வேடிக்கை பார்க்கும் ஒரு காட்சியாக மாற்றிவிடக் கூடாது என்பதில் ஒரு திட்டவட்டமான முடிவை எடுத்துள்ளோம் என்பதை நான் மறுக்கவில்லை.
இந்த வழக்கு விசாரணை (நீதித்துறை மற்றும் ஊடக விசாரணை ஆகிய இரண்டுமே) மக்களின் ஆய்வுக்குரியதாகத் திறந்தே உள்ளது. கருத்துகள், நேர்காணல்கள், கேள்விகளுக்குப் பதிலளிக்க நாங்கள் எப்போதும் தயாராகவே இருக்கிறோம்.
இருப்பினும், எங்களின் இருப்பை நாங்கள் நம்பும் அரசியலோடு இணைத்துக்கொள்ளவே நாங்கள் முடிவு செய்துள்ளோம். அது துணிவு, சுய உறுதிப்பாடு மற்றும் கண்ணியம் ஆகியவற்றால் கட்டமைக்கப்பட்ட ஓர் அரசியல், அதே பண்புகளுடன் முறையாகப் பிரதிபலிக்கப்பட வேண்டும். விசாரணைக் கைதிகளின் குடும்பங்கள் அழுது உடைந்துபோகும் காட்சிகளை வைத்து தங்களின் பார்வையாளர்களை பெருக்கிக்கொள்ளத் துடிக்கும் சில ஊடக நிறுவனங்களின் சுயநலமிக்க சந்தர்ப்பவாத குணத்தை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
ஊடகங்கள் எங்கள் துன்பத்தை நாடகமாக்குவதையும் துயரத்தை நடித்துக் காட்டுவதையுமே விரும்புகிறார்கள். அப்போதுதான் அதை பதிவு செய்து, பார்வையாளர்களுக்கு வழங்க முடியும். கையில் காஃப்பி நொறுக்குத் தீனியுடன் அதைப் பார்க்கும் பார்வையாளர்கள், அடுத்த செய்திக்கு தாவி விடுவார்கள்.
இத்தகைய காட்சிப்படுத்தலுக்கு எதிராக நாங்கள் நிற்கிறோம். ஷர்ஜீல் இமாமை ஒரு தலைவர் என்ற பொது நினைவில் இருந்து, வெறும் பரிதாபத்திற்குரியவராக மாற்றுவதை நாங்கள் உறுதியுடன் எதிர்க்கிறோம்.
மக்களின் நினைவுகள் என்பது எதிர்ப்பின் மீள்நினைவுகளில்தான் நிலைத்து நிற்க வேண்டுமே அல்லாமல், துன்பங்களின் மீது அல்ல.
இறுதியாக, விசாரணைக் கைதிகளின் அரசியலில் மிக ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு எளிய உண்மை இருக்கிறது. உயிருடன் இருப்பவர்கள் மரணித்தவர்கள் அல்லர். உயிருடன் இருந்து எதிர்த்து நின்று, களத்தில் போராடிக்கொண்டிருப்பவர்களை, உயிர்நீத்த தியாகிகளைப் போன்று பேசும் போக்கை நாம் உறுதியாக எதிர்க்க வேண்டும். இந்தப் போராட்டம் முடிந்துவிடவில்லை. இதை ஒரு கடந்த கால நிகழ்வாகப் பார்க்கவோ அல்லது கவிதையாக மாற்றிவிடவோ முடியாது. இது இப்போதும் நிகழ்காலத்தில் நிகழ்ந்துகொண்டிருக்கிறது.
உயிருடன் இருக்கும் ஓர் அரசியல் கைதியைத் தியாகியாக்குவது என்பது, அவரை நினைவில் வைத்துக்கொள்வதை எளிதாக்கிவிடும்; ஆனால் அவரது குரலைக் கேட்பதைக் கடினமாக்கிவிடும். தியாகி என்ற பட்டம் ஒரு மனிதனை ஒரு பிம்பத்திற்குள் சுருக்கி விடுகிறது. கம்பீரமான, சோகமான, அதேநேரம் நிகழ்காலத்திலிருந்து பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்பட்ட ஒரு பிம்பமாக அது அவரை மாற்றிவிடுகிறது. அது அவரது அரசியலை, அவரது துன்பத்தைக் கொண்டும் அவரது தர்க்கபூர்வ வாதங்களை நமது அஞ்சலிகளைக் கொண்டும் மாற்றி விடுகிறது.
இதன் மூலம் அந்த சிறைவாசி, அவருடன் தொடர்ந்து சிந்திப்பதற்கும், முரண்படுவதற்கும், ஒழுங்கமைவதற்கும், போராடுவதற்கும் உரிய ஒரு மனிதராக இருப்பதற்குப் பதிலாக வெறும் துக்கம் அனுசரிப்பதற்கான ஒருவராக மட்டுமே மாறிவிடுகிறார்.
ஷர்ஜீலை வெறும் நினைவுகூரப்படுபவராக மாற்ற வேண்டிய தேவையில்லை. உயிருள்ள ஓர் அரசியல் ஆளுமையாக அவர் வாசிக்கப்பட வேண்டும், கேட்கப்பட வேண்டும், அவருடன் கருத்துப் பரிமாற்றங்கள் செய்யப்பட வேண்டும். அவரது சிறைவாசம் அவரது நடமாட்டத்தை மட்டுமே கட்டுப்படுத்தி இருக்கிறது; மாறாக, அது அவரது செயலாற்றலை முடக்கிவிடவில்லை, சிந்தனைகளை அழித்துவிடவில்லை, அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடவும் இல்லை. வெறுமனே அனுதாபப்படுவது அவரது அரசியலையே பின்னுக்குத் தள்ளிவிடும்.
மக்களின் நினைவிலிருந்து அவர் மறைந்துவிடுவாரோ என்ற அச்சம் கூட தேவையற்றது என்பதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். ஏனென்றால் ஷர்ஜீல் மற்றும் உமரின் நினைவுகள் மக்களிடையே உயிர்ப்புடன் செழித்தோங்கி இருக்கின்றன என்பதை அரசு எந்திரமே தொடர்ந்து நிரூபித்துக் கொண்டிருக்கிறது.
ஷர்ஜீலுக்கும் உமருக்கும் ஆதரவாகப் பதாகைகளை ஏந்தியதற்காக மட்டுமே நாடு முழுவதும் மாணவர்கள் சமீபத்தில் காவலில் வைக்கப்பட்டதும் கைது செய்யப்பட்டதும் அரசு எந்திரம் அவர்களை வெறும் நினைவில் மட்டும் வைத்திருக்கவில்லை, மாறாக மக்கள் மத்தியில் அவர்களுக்கு இருக்கும் அங்கீகாரத்தை அடக்குவதற்குத் தீவிரமாக முயன்று கொண்டிருக்கிறது என்பதற்கான அசைக்க முடியாத சான்றாக இருக்கிறது.
ஏழாண்டுகால சிறைவாசத்தை ஒரு முழுக் கதையாக நாங்கள் விவரிக்கப் போவதில்லை; ஏனென்றால், கதைகள் ஒரு முடிவைக் கோருகின்றன. இங்கு இன்னும் எதுவும் முடிந்துவிடவில்லை. இங்கு தொடர்ந்து நடக்கும் ஒரு விசாரணை இருக்கிறது, தொடர்ந்து இழைக்கப்படும் ஓர் அநீதி இருக்கிறது, தனது வீட்டிற்கும் தனது அரசியலுக்கும் திரும்பி வரக் காத்திருக்கும் உயிருள்ள ஒரு மனிதர் இருக்கிறார்.
தன் முனைப்பும் சுய ஞானமும் எனக்குள் மலர்ந்தபோது,
எனது துயரங்கள் என் ஆன்மாவிற்கான ஆறுதலாக மாறின;
காதலின் தனிப்பட்ட வேதனை,
மனிதகுலத்திற்கான உலகளாவிய பரிவாக உருமாறியது.

