ஆதமின் சம்பவம் உணர்த்தும் அடிப்படையான உண்மைகளுள் ஒன்று, மனிதனைக் குறித்து, அவன் இந்த பூமியில் நிறைவேற்ற வேண்டிய பணிகள்குறித்து, இந்தப் பிரபஞ்சத்தில் அவனது இடம்குறித்து, அவனது மதிப்பீடுகள்குறித்து இஸ்லாமியக் கண்ணோட்டம் அவனுக்கு அளிக்கும் உயர்ந்த அந்தஸ்தாகும். பின்னர் அது அல்லாஹ்வின் வாக்குறுதியுடன் அவன் எவ்வாறு தொடர்பு கொண்டுள்ளான் என்பதையும் பிரதிநிதித்துவத்தின் அடிப்படையில் அமைந்த இந்த வாக்குறுதியின் எதார்த்தம் என்ன என்பதையும் தெளிவுபடுத்துகிறது.
குர்ஆனில் கூறப்பட்டுள்ள இறைத்தூதர்களின் சம்பவங்கள் ஈமானியக் கூட்டங்கள் தம் பாதையில் மேற்கொண்ட நீண்ட நெடிய பயணத்தை வெளிப்படுத்துகின்றன. அவை மனித சமூகம் தலைமுறை தலைமுறையாக அல்லாஹ்வின்பால் அழைப்பு விடுக்கப்பட்டதையும், அதற்கு அது பதிலளித்த விதத்தையும் எடுத்துரைக்கின்றன. அதேபோன்று மனித சமூகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த மனிதர்களின் உள்ளத்திலிருந்த நம்பிக்கையின் இயல்பையும் அவர்களுக்கும் இந்த பெரும் பாக்கியத்தை அவர்களுக்கு வழங்கிய இறைவனுக்கும் மத்தியிலுள்ள தொடர்பை விளக்கும் அவர்களின் கண்ணோட்டத்தின் இயல்பையும் எடுத்துரைக்கின்றன. கண்ணியமான இந்தக் கூட்டத்தை அதன் பிரகாசமான பாதையில் பின்தொடர்ந்து செல்வது உள்ளத்தில் பிரகாசத்தையும் திருப்தியையும் ஏற்படுத்துகிறது.
திருக்குர்ஆன் மனிதர்கள் எதிர்கொண்டே ஆகவேண்டிய, ஏற்றுக்கொண்டே ஆகவேண்டிய எதார்த்தத்தைக் கொண்டு அவர்களை அணுகுகிறது. அவர்களின் வாழ்க்கைப் பயணத்தை, அது அடைந்த நிலைகளை முன்வைக்கிறது. அவர்கள் ஒன்றும் இல்லாதவர்களாக, உயிரற்றவர்களாக இருந்தார்கள். அல்லாஹ்தான் அவர்களுக்கு உயிரளித்தான். உயிரற்ற நிலையிலிருந்து வாழ்வு என்னும் நிலைக்கு அவர்களைக் கொண்டு சென்றான். படைப்பாளனின் வல்லமையைக் கொண்டேதவிர இந்த உண்மைக்கு யாராலும் விளக்கமளிக்க முடியாது. அவர்கள் உயிருள்ளவர்களாக ஆனார்கள். அவர்களுக்கு வாழ்வு கிடைத்தது. அவர்களுக்கு இந்த வாழ்வை அளித்தவன் யார்? பூமியிலுள்ள உயிரற்ற பொருள்களில் இந்த புதிய வெளிப்படையான ஒன்றை உருவாக்கியவன் யார்? இந்த வாழ்வின் இயல்பும் ஜடப்பொருள்களைச் சூழ்ந்துள்ள மரணத்தின் இயல்பும் ஒன்றல்ல. இந்த உயிர் எங்கிருந்து வந்தது? மீண்டும் மீண்டும் உள்ளத்தில் தோன்றும் இந்தக் கேள்வியை எதிர்கொள்ளாமல் வெருண்டோடுவதால் எந்தப் பயனும் ஏற்பட்டுவிடப்போவதில்லை. படைப்பாளனின் வல்லமையைக் கொண்டு தவிர நாம் இவற்றிற்கு விடையளிக்க முடியாது. இந்த உயிர் எங்கிருந்து வந்தது? அது வந்தவுடன் உயிரற்ற அனைத்தையும் விட்டு தனித்தன்மை பெற்றதாகிவிட்டதே?! நிச்சயமாக அது அல்லாஹ்விடமிருந்து வந்தது. இதுதான் மிகவும் நெருக்கமான பதில். இதை ஏற்றுக் கொள்ள முடியாதவர் பதில் கூறட்டும், அது எங்கிருந்து வந்தது?
அல்லாஹ் சோதனைகளை, அவற்றின் பாதையில் கடந்து செல்லுமாறு அப்படியே விட்டுவிடுகிறான். அவனது அடியார்கள் அவற்றை எதிர்கொள்கிறார்கள். ஒவ்வொருவரும் தம் இயல்புக்கேற்ப, தாம் ஏற்றுக்கொண்ட வழிமுறைப்படி அவற்றை எதிர்கொள்கிறார்கள். சோதனை ஒன்றுதான். ஆனால் அது மனித மனங்களில் ஏற்படுத்தும் விளைவுகள் வெவ்வேறானவை. பல மனிதர்களுக்கும் துன்பம் வருகிறது. அல்லாஹ்வின்மீது உறுதியான நம்பிக்கைகொண்ட நம்பிக்கையாளனுக்கு வரக்கூடிய துன்பம் அவனை அல்லாஹ்வின் பக்கம் இன்னும் நெருக்கமாக்கி வைக்கிறது. ஆனால் பாவிக்கோ நயவஞ்சகனுக்கோ வரக்கூடிய துன்பம் அவனை அல்லாஹ்வைவிட்டுத் தூரமாக்கிவிடுகிறது. செல்வம் பலருக்கு வழங்கப்படுகிறது. இறைவனை அஞ்சும் நம்பிக்கையாளனுக்கு வழங்கப்படும் செல்வம் அவனை விழிப்படையச் செய்து நன்றி செலுத்தத் தூண்டுகிறது. ஆனால் நயவஞ்சகனுக்கோ பாவிக்கோ வழங்கப்படும் செல்வம் அவனைக் கர்வத்தில் ஆழ்த்தி வழிகெடுத்துவிடுகிறது. இவ்வாறுதான் அல்லாஹ் மனிதர்களுக்குக் கூறும் உதாரணங்களும். அவன் அவற்றைக் கொண்டு பலரை வழிதவறச் செய்கிறான். அவர்கள் அவற்றைச் சரியான முறையில் அணுகாதவர்கள். பலருக்கு நேர்வழிகாட்டுகிறான். அவர்கள்தாம் அல்லாஹ்வின் நோக்கத்தைப் புரிந்துகொண்டவர்கள். யாருடைய உள்ளங்கள் அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிய விரும்பவில்லையோ அவர்களைத்தான் அல்லாஹ் வழிதவறச் செய்கிறான். அதற்குக் கூலியாக அவர்களை வழிகேட்டில் இன்னும் ஆழ்த்திவிடுகிறான்.
இதுபோன்ற வசனங்களில் நாம் மிகப் பெரிய உண்மையை, அல்லாஹ் நம்பிக்கையாளர்களுக்கு அளிக்கும் பெரும் சிறப்பைக் காண்கிறோம். இந்த உண்மையை திருக்குர்ஆன் மீண்டும் மீண்டும் எடுத்துரைக்கிறது, நிலைநிறுத்துகிறது. அது அல்லாஹ்வுக்கும் நம்பிக்கையாளர்களுக்கும் இடையேயுள்ள தொடர்பைக் குறித்த உண்மைநிலையாகும். அவன் அவர்களின் அணியை தன் அணி என்றும் அவர்களின் விவகாரத்தை தன் விவகாரம் என்றும் கூறுகிறான். அவர்களின் ஒவ்வொரு செயலையும் தன்னோடு இணைத்துக் கூறுகிறான். அவர்களைத் தன்னோடு அரவணைத்துக் கொள்கிறான். அவர்களின் எதிரியை தன் எதிரி என்கிறான். அவர்களுக்கு எதிராக செய்யப்படும் சூழ்ச்சியை தனக்கு எதிராக செய்யப்படும் சூழ்ச்சி என்கிறான். இதுதான் மிக உயர்ந்த கண்ணியம். அவன் நம்பிக்கையாளர்களுக்கு உயர்வையும் பெரும் கண்ணியத்தையும் அளிக்கிறான். இந்தப் பிரபஞ்சத்திலுள்ள எல்லாவற்றையும்விட ஈமானே மிகப் பெரியது, மிகவும் கண்ணியமானது. அது நம்பிக்கையாளனின் உள்ளத்தில் எல்லையில்லா திருப்தியை ஏற்படுத்துகிறது, அல்லாஹ் நம்பிக்கையாளனின் விவகாரத்தை தன் விவகாரமாக, அவனது போராட்டத்தை தன் போராட்டமாக, அவனது எதிரியை தன் எதிரியாகக் காண்கிறான் என்பதை அவன் எண்ணும்போது. இந்த அரவணைப்பிற்கு, பாதுகாப்பிற்கு முன்னால் அடிமைகளின் சூழ்ச்சியும் ஏமாற்றும் என்ன செய்துவிடப் போகிறது!?
அல்லாஹ் அறிவித்த மறைவானவற்றின்மீது நம்பிக்கைகொள்வது மனிதன் அடையக்கூடிய உயர்ந்த நிலையாகும். தம் புலனுணர்வுகளால் உணரக்கூடியவற்றை மட்டுமே நம்பும் விலங்குகளின் நிலையைக் கடந்து புலனுணர்வுகளால் உணர்ந்துகொள்ளக்கூடிய இந்த குறிப்பிட்ட அளவைவிட பிரபஞ்சம் மிகப் பெரியது என்பதை உணரும் மனிதனாகிறான். இது பிரபஞ்சத்தின் உண்மைநிலை குறித்து, தனது உண்மைநிலை குறித்து, இந்தப் பிரபஞ்சத்தில் காணப்படக்கூடிய ஆற்றல்களின் உண்மைநிலையைக் குறித்து, இந்தப் பிரபஞ்சத்தை இயக்கும் ஆற்றலின் உண்மைநிலை குறித்து மனிதன் கொண்டுள்ள கண்ணோட்டத்தில் ஏற்பட்ட மிகப் பெரிய மாற்றமாகும். அதேபோன்று இது பூமியில் அவனது வாழ்க்கையில் ஏற்பட்ட மிகப் பெரும் மாற்றமுமாகும். புலனுணர்வுகளால் உணரக்கூடியவற்றை மட்டும் நம்புவோரும் அகப்பார்வையோடும் ஆழ்ந்த ஞானத்தோடும் இந்தப் பிரபஞ்சத்தை அணுகுவோரும் சமமாக மாட்டார்கள். இருவரின் வாழ்க்கையும் ஒன்றாக முடியாது. அகப்பார்வையுடையோர் தங்களின் குறுகிய வாழ்நாளிலே புலனுணர்வுகளால் உணரக்கூடியவற்றைவிடவும் இந்தப் பிரபஞ்சம் மிகப் பெரியது, விசாலமானது என்பதையும் இந்தப் பிரபஞ்சத்திற்கு அப்பால் இருக்கும் உண்மை இதனைவிட பெரியது என்பதையும் அதனிடமிருந்தே இது வெளிப்பட்டது என்பதையும் உணர்ந்து கொள்வார்கள். இறைவனைக் குறித்த உண்மைநிலையை பார்வைகளால் அடைந்துவிட முடியாது. அறிவால் அறிந்துகொள்ள முடியாது.
அன்று இஸ்லாமும் முஸ்லிம்களும் எதிர்கொண்ட அந்த சூழல்களைத்தான் பொதுவாக எல்லா இடங்களிலும் காலகட்டங்களிலும் – சிறிது மாற்றத்துடன் – முஸ்லிம்கள் எதிர்கொள்கிறார்கள். அதே வகையான நண்பர்கள், அதே வகையான எதிரிகள். இதுதான் குர்ஆனின் போதனைகளை இஸ்லாமிய அழைப்பின் நிரந்தர சட்டமாக ஆக்கி விடுகிறது. அதன் வசனங்களில் ஒவ்வொரு காலகட்டத்தையும் நிலையையும் எதிர்கொள்ள புத்தம் புதிய வழிமுறைகள் கிடைத்துக் கொண்டேயிருக்கின்றன. சிரமங்கள்மிகுந்த தம் நீண்ட பாதையில் முஸ்லிம் சமூகம் அந்த வசனங்களைக் கொண்டு வழிகாட்டலைப் பெற்றுக் கொண்டேயிருக்கிறது. அந்தப் பாதையில் வரக்கூடிய தடைகள் வெவ்வேறு வடிவங்களைக் கொண்டதாக ஆனால் ஒத்த இயல்பினைக் கொண்டவையாக இருக்கின்றன. குர்ஆனின் ஒவ்வொரு வசனத்திலும் இந்த தனித்தன்மை வெளிப்படுகிறது. இது அதன் அற்புதங்களில் ஒன்றாகும்.