பத்ர் தரும் படிப்பினைகள்
![]()
நன்மைகளை அள்ளித் தரும் புனிதமிக்க றமளான் மாதத்தை நாம் கடந்து கொண்டிருக்கிறோம். ஆன்மீக தேடலை மட்டுமன்றி முஸ்லிம்களுக்கு அரசியல் ரீதியான வெற்றிகளையும் இந்த மாதம் வழங்கியுள்ளது. மக்கா வெற்றியும் பத்ர் போர் வெற்றியும் அவற்றில் குறிப்பிடத்தக்கவை.
வரலாற்றில் பத்ர் போருக்கென்று தனி இடம் இருக்கிறது. அதிகாரத்தை முஸ்லிம்களிடமிருந்து அந்நியமாக்க வேண்டும் என்று திட்டமிட்டு சண்டையிட வந்தவர்களுக்கு அந்த நம்பிக்கையை தகர்த்து வந்த வழியிலேயே அவர்களை திருப்பி அனுப்பியது பத்ர் களம். இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட ஒரே காரணத்திற்காக மக்காவில் இருந்து விரட்டப்பட்ட முஸ்லிம்களுக்கு மதீனா அழகிய புகலிடத்தை கொடுத்தது. புகலிடமாக மட்டுமன்றி முஸ்லிம்களின் ஆட்சியின் முதல் இருப்பிடமாகவும் மதீனா திகழ்ந்தது.
அடிமைகளாக. அதிகாரமின்றி, தங்களால் அடக்கி ஒடுக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு அரசியல் அதிகாரம் கிடைத்ததை பொறுத்துக் கொள்ள முடியாத இஸ்லாத்தின் எதிரிகள் அரசியல் அதிகாரத்தை தகர்ப்பதற்கும் பறிப்பதற்கும் திட்டங்களை தீட்டி செயல்படுத்தினர். அவை அனைத்தையும் முஸ்லிம்கள் எதிர்கொண்டு வெற்றி கண்டனர். முஸ்லிம்கள் தங்களின் அரசியல் அதிகாரத்தை மதீனாவை கடந்து நிறுவி நீதியை நிலைநாட்டுவதற்கு பத்ர் தொடக்கப் புள்ளியாக அமைந்தது என்றால் அது மிகையல்ல.
போதிய வாகன வசதிகள் இன்றி, மழுங்கிய ஆயுதங்களுடன் குறைவான உணவுடன் முஸ்லிம்கள் பத்ர் களத்திற்கு வந்தாலும் அல்லாஹ்வின் மீதான நம்பிக்கையும் ஆதரவும் அவர்களுக்கு போதுமானதாக இருந்தது. போருக்கென்று பிரத்யேக தயாரிப்புகளுடன் வரவில்லையென்றாலும் முஸ்லிம்களை களத்தில் உறுதியாக நிற்க வைத்தது இந்த இறை நம்பிக்கைதான். எண்ணிக்கையிலும் போர் தளவாடங்களிலும் எதிரணியினர் வலுவாக இருந்தது அவர்களுக்கு எவ்வித உபயோகத்தையும் அளிக்கவில்லை. இறுதியில் வெற்றி முஸ்லிம்களின் பக்கமே வந்து நின்றது. நீதிக்கான போராட்டத்தில் எண்ணிக்கை ஒரு பொருட்டே அல்ல என்பது பத்ர் கற்றுத் தரும் ஒரு முக்கிய பாடம்.
நீதிக்கான போராட்டத்தில் சண்டைகளும் ஆபத்துகளும் சொல்லிவிட்டு வருவதில்லை. வியாபார கூட்டத்தை எதிர்கொள்ளச் சென்ற முஸ்லிம்களை ஆயுதம் தாங்கிய எதிரிகளின் பக்கம் அல்லாஹ் திருப்பினான். இரண்டு கூட்டங்களில் ஒன்றை நிச்சயம் உங்களுக்கு வசமாக்குவேன் என்று அல்லாஹ் வாக்களித்திருந்தான். இப்படி ஒரு நிலை ஏற்படும் பட்சத்தில் அதிகம் பிரச்சனை இல்லாத ஆபத்தில்லாத, அதிகம் எதிர்ப்பு காட்டாத வியாபாரம் கூட்டம் கிடைத்தால் நன்றாக இருக்கும் என்பதே மனிதனின் சிந்தனையாக இருக்கும்.
நபித்தோழர்களுக்கும் அப்படியான சிந்தனையே இருந்தது. ஆனால் அல்லாஹ்வின் ஏற்பாடு வேறாக இருந்தது.
உண்மையை நிலைநாட்டவும் எதிரிகளை வேரறுக்கவும் வேண்டுமென்றால் அதற்கு வியாபார கூட்டத்தை விட ஆயுதம் தாங்கிய படையை எதிர்கொள்ள வேண்டும் என்று அல்லாஹ் தீர்மானித்துவிட்டான். ‘நாம் விரும்பும் பொருளில் தீமையும் வெறுக்கும் பொருளில் நன்மையும் இருக்கும். இதனை நாம் அறியமாட்டோம் அல்லாஹ்வே அறிவான்’ என்று குர்ஆனில் கூறுவது போல் அனைத்தையும் அறிந்த அல்லாஹ் முஸ்லிம்களுக்கான எதிரிகளை தீர்மானித்துக் கொடுத்தான். எதிரிகளின் பொருளாதார வளம் ஒரு முக்கிய அச்சுறுத்தல்தான் என்றாலும் அதைவிட அவர்களின் ஆயுத பலம் ஆபத்தானது என்பதை அல்லாஹ் இதன் மூலம் உணர்த்தினான்.
நமக்கு எளிதாகவும் இழப்புகள் குறைவாக உள்ளது என்பதற்காகவும் எதிரியின் பலகீனமான பகுதியை தாக்கிவிட்டால் அதனால் பெரியளவில் இழப்புகள் எதிரணிக்கு ஏற்படப் போவதில்லை. சத்தியத்தையும் நீதியையும் நிலைநாட்டுவதற்கு எதிரியை வலிமையாக எதிர்க்க வேண்டும். சிறிய எதிர்ப்புகளை எதிர்கொண்டு சிறிய வெற்றியை பெறுவது நிரந்தர தீர்வாகவோ முழுமையான வெற்றியாகவே இருக்காது. அசதத்தியத்தை ஒட்டுமொத்தமாக அழிப்பதற்கே, பலமுள்ள எதிரியை அல்லாஹ் நேருக்கு நேராக சந்திக்க வைக்கிறானே தவிர நம்மை நிர்மூலமாக்குவதற்கு அல்ல என்பதையும் பத்ர் களம் உணர்த்தியது. அத்தகைய பலம் பொருந்திய எதிரியை எதிர் கொள்வதற்கு அச்சம் கொள்ளாமல் களத்தில் உறுதியாக நிற்க வேண்டும் என்பதையும் பத்ர் உணர்த்தியது.
எதிரியின் ஆயுத பலத்தை கண்டு அஞ்சிவிடாமல், நம்பிக்கையுடன் களத்தில் இறங்கும் போது, அந்த கூட்டத்திற்கு உதவி செய்வதற்கு அல்லாஹ் தயாராகவே இருக்கிறான். நீதிக்கான போராட்டத்தில் மனிதன் தன்னையே அர்ப்பணிக்க தயாராகும் போது அவனுக்கு உதவி செய்வதற்கு அல்லாஹ் முன் வருகிறான்.
பௌதீக விதிகளை பொய்ப்பிக்கும் அல்லாஹ்வின் உதவி முஸ்லிம்களுக்கும் எதிரிகளுக்கும் ஆச்சர்யத்தையே கொடுத்தது. இதனை ‘அதிசயம்’ என்று எதிரிகள் வர்ணிக்க, அல்லாஹ்வின் உதவி’ என்று முஸ்லிம்கள் திருப்தி கொண்டனர்.
முஸ்லிம்களின் கைகளுக்கு அதிகாரம் செல்வதை எதிரிகள் ஒரு போதும் விரும்ப மாட்டார்கள். இந்த அரசியல் அதிகாரம்தான் எதிரிகளுக்கு எரிச்சலையும் கோபத்தையும் ஏற்படுத்தியது. அதனை இல்லாமல் ஆக்குவதற்கு பொருளாதார பலத்தையும் ஆயுத பலத்தையும் திரட்டி வந்தார்கள். முஸ்லிம்களின் கைகளுக்கு அதிகாரம் சென்றுவிட்டால் அது தங்களின் சர்வாதிகாரத்திற்கும் வரம்புமீறல்களுக்கும் முற்றுப்புள்ளியை வைத்துவிடும் என்பதை உணர்ந்தே முஸ்லிம்களை அதிகாரத்தை விட்டும் தூரமாக்கிட விரும்பினார்கள். உரிமைகளை காக்கவும் நீதியை நிலைநாட்டவும் அதிகாரம் அவசியம் என்பதை உணர்ந்த முஸ்லிம்கள் அதனை காப்பதற்கு களத்தில் இறங்கிப் போராடினார்கள்.
முஸ்லிம்களின் அரசியல் அதிகாரத்தை பறிக்கும் செயல்திட்டங்கள் இன்றும் நடைமுறைபடுத்தப்படுகின்றன. முஸ்லிம்களின் வெளிப்படையான எதிரிகள் மட்டுமன்றி அவர்களின் நலனில் அக்கறை கொண்டவர்களும் அல்லது அக்கறை கொண்டது போல் காட்டிக் கொள்பவர்களும் கூட முஸ்லிம்களுக்கு அதிகாரத்தை பகிர்ந்து கொடுப்பதற்கு விரும்புவதில்லை.
அரசியல் அதிகாரத்தின் அவசியத்தை எதிரணியினர் விளங்கிய அளவிற்கு முஸ்லிம்கள் விளங்கவில்லையோ என்ற சந்தேகம் எழுகிறது. அதனால்தான் முஸ்லிம்களுக்கு அரசியல் அதிகாரம் தேவையில்லை என்பதை முஸ்லிம்களைக் கொண்டே வேறு வார்த்தைகளில் சொல்ல வைக்கின்றனர். உயிர் பயத்தை முஸ்லிம்களுக்கு ஊட்டி அதன் மூலம் அரசியல் அதிகாரம் வேண்டாம் என்று சொல்ல வைக்கிறார்கள்.
அதிகாரத்தை விட்டுக் கொடுக்க தயாரில்லாத காரணத்தினால்தான் அன்று பத்ரில் நிலைமை மோசமாக இருந்த போதும் நபித்தோழர்கள் அதனை மீட்பதற்கு தங்களையே இழப்பதற்கு தயாரானார்கள். குறைவான எண்ணிக்கை, மக்காவில் இருக்கக் கூடிய குடும்பத்தினரின் அபாய சூழல், மதீனாவில் உள்ள யூதர்கள் மற்றும் நயவஞ்சகர்கள் மூலம் ஏற்படும் ஆபத்துகள் என காரணங்களை தேடி அலையாமல் எதிரியை எதிர்ப்பதற்கு தயாரானார்கள். அதில் வெற்றியும் கண்டு தங்களின் அதிகாரத்தையும் தக்க வைத்தார்கள். பத்ர் களத்தில் நபித்தோழர்கள் பெற்ற வெற்றியே பின்னர் மக்கா வெற்றிக்கு அடித்தளமாக அமைந்தது.
காலம் காலமாக பயணிக்கும் ஒரே பாதையில், ஒரே செயல்திட்டத்தின் பிரகாரம் பயணிக்க வேண்டும் என்று எந்த நிர்ப்பந்தமும் கிடையாது. களத்தையும் சூழலையும் அறிந்தவர்கள் கொடுக்கும் அறிவுரைகளை நபி (ஸல்) எப்போதும் புறக்கணித்ததே கிடையாது. பத்ர் களத்தில் படையினர் முகாமிடுவதற்கான இடத்தை நபி (ஸல்) தேர்வு செய்த போது அதற்கு நேரெதிரான இடத்தை ஹூபாப் அல் முன்திர் (ரலி) என்ற நபித்தோழர் கூறிய போது அதனை நபி (ஸல்) அப்படியே ஏற்றுக் கொண்டார்கள். தனது தோழர் தகுந்த காரணங்களை முன்வைத்து தனது தரப்பு வாதத்தை நியாயப்படுத்திய போது அதனை நபி (ஸல்) ஏற்றுக் கொண்டார்கள். வியூகங்கள் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்று எந்த நியதியும் கிடையாது.
மதீனாவில் முஸ்லிம்களின் கைகளுக்கு அதிகாரம் சென்றது மக்கத்து குரைஷிகளுக்கு மட்டும் கோபத்தை ஏற்படுத்தவில்லை. மதீனாவில் இருந்த அப்துல்லாஹ் இப்னு உபை போன்றவர்களுக்கும் ஏமாற்றத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தியது. மதீனாவின் அதிகாரம் தனக்கே கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்தவருக்கு நபி (ஸல்) அவர்களின் வருகை ஏமாற்றத்தை கொடுத்தது. அதனால் வாய்ப்புகள் கிடைக்கும் போதெல்லாம் இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி முஸ்லிம்களை குழப்பிக் கொண்டிருந்தார். உள்ளிருந்தே அரிக்கும் இத்தகையவர்களை நபி (ஸல்) மிக கவனமாகவே கையாண்டார்கள்.
அப்துல்லாஹ் இப்னு உபை தன்னை முஸ்லிம்களில் ஒருவராகவே அடையாளப்படுத்திக் கொண்டார். எனவே, இவரைப் போன்றவர்கள் மீதான நடவடிக்கைகள் எதிரிகளுக்கு சாதகமாக அமைந்து விடக் கூடாது என்பதிலும் முஸ்லிம்களுக்கு மத்தியில் குழப்பங்கள் ஏற்பட்டு விடக்கூடாது என்பதிலும் நபி (ஸல்) மிக கவனமாகவே இருந்தார்கள்.
இறுதியாக, தனது தரப்பில் இருந்து அனைத்து தயாரிப்புகளையும் செய்து விட்டு படைத்தவனிடமே முழுமையாக மன்றாடினார்கள் நபி (ஸல்). ‘என்னால் இயன்ற அனைத்தையும் செய்துவிட்டேன். அதிலுள்ள குறைகளையும் தவறுகளையும் களைந்து வெற்றியை நீயே தர வேண்டும்’ என்று அல்லாஹ்விடம் சரணடைந்தார்கள். மனிதன் மிகவும் பலகீனமானவன். அவன் தனது ஆற்றல்களையும் திறமைகளையும் கண்டு அகங்காரம் கொண்டுவிடக் கூடாது என்பதை உணர்த்தும் விதத்திலேயே நபி (ஸல்) அவர்களின் இந்த செயல்பாடு அமைந்திருந்தது.
வரலாறுகள் மறக்கடிக்கப்படும் இன்றைய சூழலில் ஒவ்வொரு வருடமும் ரமலான் 17ஆம் தினத்தில் பத்ர் போரை முஸ்லிம்கள் நினைவு கூர்வது வரவேற்கத்தக்கது. நீதிக்கான போராட்டத்தில் தங்களின் இன்னுயிரை தியாகம் செய்த நபித்தோழர்களின் பெயர்களை மனனம் செய்யும் வழக்கமும் சிலரிடம் இருந்தது. இவற்றை வெறும் சடங்குகளாக மட்டும் வைத்திருக்காமல் பத்ர் போரின் நிகழ்வுகளையும் அது கற்றுத் தரும் பாடங்களையும் அறிந்து கொள்வது அவசியமாகும். பத்ர் களங்களும் மக்கா வெற்றிகளும் இன்னும் நமக்காக காத்துக் கொண்டிருக்கின்றன.

