இந்தியாவில் வெறுப்புக் குற்றங்கள்
ஜூன்– ஆகஸ்ட் 2025க்கான அறிக்கை
![]()
அறிக்கையின் சுருக்கம்
2025 ஜூன் முதல் 2025 ஆகஸ்ட் வரையிலான மூன்று மாதங்களில் மட்டும் இந்தியாவில் 141 வெறுப்புக் குற்றங்களும் 102 வெறுப்புப் பேச்சுகளும் பதிவாகியுள்ளதாக சிவில் உரிமைகள் பாதுகாப்பு அமைப்பின் (Association for Protection of Civil Rights) வெறுப்புக் குற்றங்களை கண்காணிக்கும் அறிக்கை குறிப்பிடுகிறது. ஜனநாயக விழுமியங்களையும், சமூகப் பாதுகாப்பையும் பலவீனப்படுத்தும் வகையில் நிகழும் விதிமீறல்களை பகுப்பாய்வு செய்யவும், ஆவணப்படுத்தவும், வெளிக்கொணரவும் சிவில் உரிமைகள் பாதுகாப்பு அமைப்பு செயல்படுகிறது.
இந்தியாவில் மதச் சிறுபான்மையினரின் பாதுகாப்பு, கண்ணியம் மற்றும் உரிமைகள் அதிகமாக பாதிக்கப்படுவதை இந்த அமைப்பின் சமீபத்திய அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. தாக்குதல்கள் தனிநபர்கள்மீது மட்டுமல்லாமல், அவர்களின் மத அடையாளங்கள், வழிபாட்டுத்தலங்கள் மற்றும் மதச் சின்னங்கள் மீதும் அதிகமாக நிகழ்ந்துள்ளன. இது மட்டுமின்றி சில இடங்களில் வழிபாட்டு நிகழ்வின்போது தாக்குதல் தொடுப்பது, மதச் சின்னங்களை சேதப்படுத்துவது அல்லது அகற்றுவது போன்ற சம்பவங்களும் அரங்கேறியுள்ளன.
சிறுபான்மையினருக்கு சட்ட ரீதியான பாதுகாப்பும் பலவீனமாக உள்ளதாக இந்த அறிக்கையில் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது. 141 வெறுப்புக் குற்றங்களில் 22 சம்பவங்களில் மட்டுமே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. 102 வெறுப்புப் பேச்சுகளில் வெறும் நான்கில் மட்டுமே முதல் தகவல் அறிக்கை பதிவாகியிருக்கிறது. இது சட்டம் ஒழுங்கின் நிலையை வெளிச்சமிட்டு காட்டுவதோடு தவறிழைத்தவர்கள் எந்தவித தண்டனையுமின்றி மிக எளிதாக தப்பும் சூழலையும் அம்பலப்படுத்துவதாக இந்த அறிக்கை கூறுகிறது.
வன்முறை, கும்பல் தாக்குதல் மற்றும் வழிபாட்டுத்தலங்கள் மீது தாக்குதல் ஆகியவை சர்வ சாதாரணமாகிவிட்டன. சில நேரங்களில் உயிரிழப்புகள் நடந்தாலும் சமூக அளவில் பெரியளவில் எதிர்வினைகள் ஏற்படுவதில்லை என இந்த அறிக்கை கூறுகிறது.
இந்தச் சம்பவங்கள் சிறுபான்மையினர் மத்தியில் அச்சத்தை அதிகரிப்பதோடு அவர்கள் தங்கள் மத நெறிமுறைகளை வெளிப்படையாக கடைப்பிடிக்கவும் பொது இடங்களில் சுதந்திரமாக நடமாடவும் தயங்கும் சூழலை உருவாக்கியிருப்பதாக இந்த அறிக்கை விவரிக்கிறது.
மதச் சின்னங்கள், வழிபாட்டுத் தலங்கள் மீதான தொடர் தாக்குதல்களும், அதிகரிக்கும் வெறுப்புப் பேச்சுகளும் சமூக அமைதியை குலைத்து, மதச் சிறுபான்மையினரின் உரிமைகளை பாதிக்கின்றன. இதைத் தடுக்க சட்ட சீர்த்திருத்தம், போதிய பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியம் என இந்த அறிக்கை வலியுறுத்துகிறது. ஜூன் 2025 – ஆகஸ்ட் 2025 வரையிலான சிவில் உரிமைகள் பாதுகாப்பு அமைப்பு வெளியிட்ட அறிக்கை பின்வருமாறு:
முக்கிய துளிகள்
- 141 வெறுப்புக் குற்றங்களும் 102 வெறுப்புப் பேச்சுகளும் பதிவாகியுள்ளன.
- 36 சம்பவங்களில் கிறிஸ்தவர்கள் குறிவைக்கப்பட்டுள்ளனர்.
- 202 சம்பவங்களில் முஸ்லிம்கள் குறிவைக்கப்பட்டுள்ளனர்.
- 102 வெறுப்புப் பேச்சுகளில் வெறும் நான்கில் மட்டுமே முதல் தகவல் அறிக்கை பதிவாகியுள்ளது.
- 141 வெறுப்புக் குற்றங்களில் வெறும் 22 குற்றங்களுக்கு மட்டுமே முதல் தகவல் அறிக்கை பதிவாகியுள்ளது.
வெறுப்புக் குற்றம்
இந்த குறிப்பிட்ட காலப்பகுதியில், வெறுப்புக் குற்றங்கள் ஆகஸ்ட் மாதத்தில் அதிக எண்ணிக்கையில் பதிவாகியுள்ளன.
ஜூன் 46
ஜூலை 45
ஆகஸ்ட் 50
மாநிலங்களில் பதிவாகியுள்ள வெறுப்பு குற்றங்கள்
ஹிமாச்சல பிரதேசம் 01
பஞ்சாப் 01
ஹரியானா 03
டெல்லி 03
ராஜஸ்தான் 08
குஜராத் 05
மத்திய பிரதேசம் 11
மகாராஷ்டிரா 14
உத்தரகாண்ட் 09
உத்தரப் பிரதேசம் 36
பிகார் 06
அசாம் 04
திரிபுரா 02
மேற்கு வங்கம் 03
ஜார்கண்ட் 03
ஒடிஷா 03
தெலங்கானா 06
சத்தீஸ்கர் 17
கர்நாடகா 05
தமிழ்நாடு 01
உத்தர பிரதேசம் (36), சத்தீஸ்கர் (17), மகாராஷ்டிரா (14) ஆகிய மாநிலங்கள் வெறுப்பு குற்றங்களில் முன்னணியில் உள்ளான.
பெரும்பாலான வெறுப்புக் குற்றங்களில் மிரட்டல்/துன்புறுத்தல் (49), உடல் ரீதியான தாக்குதல் (41), சொத்து மீது தாக்குதல் (31) நிகழ்ந்துள்ளன. 115 வெறுப்புக் குற்றச் சம்பவங்களின்போது அங்கு கும்பல் (Mob) இருந்துள்ளது.
- மிரட்டல் / தொந்தரவு – 49
- உடல் ரீதியான தாக்குதல் – 41
- சொத்து மீதான தாக்குதல் – 31
- பொது இடங்களை அணுகுவதை தடுத்தது – 9
- மரணத்தை ஏற்படுத்திய வன்முறை – 7
- கும்பல் வன்முறை – 2
- கைது – 2
உடல் ரீதியான தாக்குதல்
உடல் ரீதியான தாக்குதல் அரங்கேறிய 7 சம்பவங்களிலும் கும்பல் படுகொலை நிகழ்ந்திருக்கிறது.
மிரட்டல்/ துன்புறுத்தல்
மிரட்டல் மற்றும் துன்புறுத்தல் ஆகியவற்றை உள்ளடக்கிய வெறுப்புக் குற்றங்களை பகுப்பாய்வு செய்ததில், மத சிறுபான்மையினரின் இருப்பை எதிர்ப்பது, தனிநபர்களை ஆபாச வார்த்தைகளால் இகழ்வது, நிர்வாகத்திற்கும் தனிநபர்களுக்கும் அச்சுறுத்தல் விடுப்பது ஆகியவை பதிவாகியுள்ளன. இவை முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களை மிரட்டவும் / துன்புறுத்தவும் அதிகமாக பயன்படுத்தப்பட்ட முறைகளாக இருந்துள்ளன.
இதுதவிர, சதி முயற்சிகள், பொது இடங்களை அணுகுவதை விட்டு தடுத்தல், தவறாக நடந்துகொள்வது, ஊடுருவல் குற்றச்சாட்டுகளை சுமத்துவது, பொருளாதார கட்டுப்பாடுகள் விதிப்பது, பாலியல் தொந்தரவு கொடுப்பது, கண்ணியக் குறைவாக ஊர்வலமாக அழைத்துச் செல்வது அல்லது மத ரீதியான கோஷங்களை சொல்ல வற்புறுத்துவது போன்ற பொதுவெளியில் அவமானப்படுத்தும் செயல்களும் அரங்கேறியுள்ளன.
சொத்துகள் மீதான தாக்குதல்
இந்த காலக்கட்டத்தில் 39 இடங்களில் சொத்துகள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதில் வாகனங்கள் அதிகமாக குறிவைக்கப்பட்டன. தேவாலயங்கள், பள்ளிவாசல்கள், தர்காக்கள் 19 இடங்களில் தாக்கப்பட்டுள்ளன.
வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் போன்ற தனிநபர்களுக்குச் சொந்தமான சொத்துகளும் அதே எண்ணிக்கையில் (19) தாக்குதலுக்குள்ளாகின. மேலும் 1 பள்ளிக்கூடம் மீதும் தாக்குதல் அரங்கேறியது.
வெறுப்புக் குற்றங்களின்போது மத அடையாளங்களே அதிகளவில் குறிவைக்கப்பட்டன. இதற்கு அடுத்தபடியாக, மதமாற்றக் குற்றச்சாட்டுகள், மத ஊர்வலங்கள் அல்லது விழா கொண்டாட்டங்களின்போது வெறுப்புக் குற்றங்கள் அரங்கேறின.
மத திருவிழாக்கள்/ஊர்வலங்கள்/மதச் செயல்பாடுகளின் பின்னணியில் மொத்தம் 41 வெறுப்புக் குற்றங்கள் பதிவாகியுள்ளன. இவற்றில் 17 சம்பவங்கள் கிறிஸ்தவ பிரார்த்தனைகளுடன் தொடர்புடையவை, 14 சம்பவங்கள் முஸ்லிம்கள் பங்கேற்ற திருவிழாக்களுடன் தொடர்புடையவை, மேலும் 10 சம்பவங்கள் இந்து திருவிழாக்களுடன் தொடர்புடையவை.
முஸ்லிம்களின் வழிபாட்டுத் தலங்களில் நிலவும் உரிமை பிரச்னை
முஸ்லிம்களின் மூன்று வழிபாட்டுத் தலங்கள் மீது இந்துத்துவ அமைப்புகள் உரிமை கோருகின்றன. அவை:
- வாரணாசியின் துர்கா குண்டில் உள்ள இமாம்பரா
- இருமுறை குறிவைக்கப்பட்ட ஃபதேபூரிலுள்ள கல்லறை
- ஃபிரோசாபாத்திலுள்ள தர்கா.
இவற்றில் ஃபதேபூரில் உள்ள கல்லறை, ஃபிரோசாபாத்தில் உள்ள தர்கா மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் அதன் கட்டமைப்புகள் பலத்த சேதமடைந்தன. ஒரு இந்து சிலையும் ஃபிரோசாபாத்தில் உள்ள தர்காவில் வைக்கப்பட்டது. வாரணாசியில் உள்ள இமாம்பராவில் முன்பு கோவில் இருந்ததாக வலதுசாரிகள் பிரசாரம் செய்ததால் அந்த இடம் நிலத் தகராறில் சிக்கியிருக்கிறது.
இது தவிர, பள்ளிவாசல்கள், தர்காக்களை குறிவைத்து மேலும் 5 வெறுப்புப் பிரசாரங்கள் பதிவாகியுள்ளன.
வெறுப்புக் குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்கள்
- 3 மாதங்களில் 462 பேர் குறிவைக்கப்பட்டனர்.
- இதில் 84% பேர் ஆண்கள்; 16% பேர் பெண்கள்.
- 5 குழந்தைகள் மற்றும் 2 மூத்த குடிமக்களும் பாதிக்கப்பட்டனர்.
- 370 முஸ்லிம்கள், 86 கிறிஸ்தவர்கள் மற்றும் 6 இந்துக்கள் பாதிக்கப்பட்டனர்.
- 7 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். இவர்கள் அனைவருமே கும்பல் படுகொலையால் உயிரிழந்தனர்.
குற்றமிழைத்தவர்கள் நிலை என்ன?
82 வெறுப்புக் குற்றங்கள் அரசியல் கட்சிகள் அல்லது அதன் ஆதரவு அமைப்புகளால் நிகழ்ந்ததாக தெரிய வருகிறது. அதிகபட்சமாக பஜ்ரங் தள் 26 சம்பவங்களிலும் விஷ்வ இந்து பரிஷத் 16 சம்பவங்களிலும் பாஜக 12 சம்பவங்களிலும் ஈடுபட்டுள்ளன.
20 வெறுப்புக் குற்றங்களில் அரசு நிறுவனங்கள் உடைந்தையாக செயல்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. இதில் காவல்துறைக்கு அதிக பங்கு இருக்கிறது. கல்வி நிறுவனத்தின் அதிகாரிகள், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் ஆகியோரும் இதில் அடங்குவர்.
சட்ட நடவடிக்கை என்னவானது?
96 வெறுப்புக் குற்றங்களில் இதுவரை 23 சதவீத குற்றங்களுக்கு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 77% குற்றங்களுக்கு காவல்துறை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
வெறுப்புப் பேச்சுகளுக்கு காரணமானவர்கள் யார்?
- பிரதமர் 3
- முதலமைச்சர்கள் 22
- தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் 31
- அரசியல் கட்சியினர் / ஆதரவாளர்கள் – 38
- மதத் தலைவர்கள் 5
- இதர 3
வெறுப்புப் பேச்சு அரங்கேறியது எங்கே?
- பொதுக்கூட்டம்/பேரணி – 64.7%
- செய்தியாளர் சந்திப்பு/ ஊடக நேர்காணல் / ஊடக அறிக்கை – 25.5%
- இணையவழி – 6.9%
- நாடாளுமன்ற / சட்டமன்ற கூட்டம் – 2.9%
பெரும்பாலான வெறுப்புப் பேச்சுகள் பாஜகவும் (70) அக்கட்சியின் ஆதரவு அமைப்புகளான விஷ்வ இந்து பரிஷத் (7) மற்றும் பஜ்ரங் தள் (7) ஆகியவற்றால் நிகழ்ந்துள்ளன.
வெறுப்புப் பேச்சுக்கான சூழல்
பதிவான வெறுப்புப் பேச்சுகளில் பெரும்பாலானவை மதத்தை இழிவாகவும் தவறாகவும் சித்தரிக்கும் கருத்துகளைப் பரப்பியவையாக (78) இருந்துள்ளன. அதற்கு அடுத்ததாக, மக்களின் மத அடையாளங்களை குறிவைத்து தாக்கும் பேச்சுகளும் (59) மதமாற்றம் குறித்த குற்றச்சாட்டுகளும் (11) அடங்கும்.
- மதத்தை இழிவாகவும் தவறாகவும் சித்தரிக்கும் பேச்சுகள் – 78
- வெளிப்படையான மத அடையாளங்கள் / சின்னங்களை குறிவைத்து தாக்குதல் – 59
- மதமாற்ற குற்றச்சாட்டுகள் – 11
- மத ஊர்வலங்கள் / திருவிழாக்கள் – 7
- அசைவ உணவு (விற்பனை / உண்ணுதல் / கொண்டு செல்லுதல்) தொடர்பான பிரச்னைகள் -6
- வழிபாட்டுத் தலங்களை உரிமை கோரும் தகராறுகள் – 5
- மதங்களுக்கு இடையிலான உறவு / திருமணம் / காதலித்து ஓடிச் செல்லுதல் தொடர்பான பிரச்னைகள் – 2
பதிவான பெரும்பாலான வெறுப்புப் பேச்சுகள், குறிப்பிட்ட சமூகங்களைப் பற்றி வெறுப்புணர்வை உருவாக்கும் தவறான கருத்துகளை பரப்பின. இதில் ஜிஹாத் என்ற கருப்பொருள் அதிகமாக (31) பயனபடுத்தப்பட்டிருக்கிறது. அதனைத் தொடர்ந்து ஊடுருவல் குற்றச்சாட்டு (18) மற்றும் குறிப்பிட்ட சமூகத்தின் மக்கள் தொகை அதிகரிப்பதாக பேசப்பட்டது (4) ஆகியவை அடங்கும்.
வெறுப்புப் பேச்சுகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்
- ஜூன் முதல் ஆகஸ்ட் 2025 வரை இந்தியாவில் பதிவான வெறுப்புப் பேச்சு சம்பவங்களில் 83% (102) மத சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறையைத் தூண்டும் விதமாக இருந்தன.
- பதிவான 82 வெறுப்புப் பேச்சு சம்பவங்கள் ரபாத் திட்டத்தின் (Rabat Plan) அனைத்து அளவுகோல்களையும் பூர்த்தி செய்தன; மேலும் 20 சம்பவங்கள் அளவுகோலின் சில அம்சங்களை மட்டுமே பூர்த்தி செய்தன. ரபாத் திட்டம் ( Rabat Plan ) என்பது வெறுப்புப் பேச்சு எப்போது குற்றமாக கருதப்பட வேண்டும் என்பதை மதிப்பிடும் ஒரு சர்வதேச வழிகாட்டி திட்டமாகும்.
- இந்த ஆய்வில் 100 வெறுப்புப் பேச்சு சம்பவங்கள் தொடர்பான சட்ட நடவடிக்கைகளை கண்காணிக்க முடிந்தது.
- அவற்றில் வெறும் 4 சம்பவங்களில்தான் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
(Image credit:apcrindia)

