கட்டுரைகள் குறும்பதிவுகள் 

எண்ணெய்க்கு கிடைக்கும் மதிப்பு மனித உயிர்களுக்கு கிடைக்குமா?

Loading

ஃபலஸ்தீனின் காஸா பகுதிக்குள் அத்தியாவசியப் பொருட்களை அனுமதிக்காமல், கடல், வான், தரை வழி என அனைத்தையும் முற்றுகையிட்டு பல ஆயிரம் அப்பாவி மக்களையும் பச்சிளம் குழந்தைகளையும் கொன்று குவித்த இஸ்ரேலைக் கண்டித்து, எந்த ஒரு தீவிர முயற்சியும் எடுத்திடாத உலக நாடுகள், ஈரான் ஹோர்முஸ் நீரிணையை மூடியதும் உடனடியாக போரை முடிக்க அமெரிக்காவிற்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன.

காஸா முற்றுகை 2023 அக்டோபர் தாக்குதலுடன் தொடங்கவில்லை. மாறாக, அது 2007 ஆம் ஆண்டு ஹமாஸ் தேர்தலில் வெற்றி பெற்றது முதல் இன்று வரை நீடிக்கிறது. சர்வதேச சட்டங்களை மீறி காஸாவின் கடல், வான், தரை வழித்தடங்களை இஸ்ரேல் முற்றுகையிட்டு காஸாவை ஒரு திறந்தவெளிச் சிறைச்சாலையாகவே மாற்றிவிட்டது.

காஸா ஃப்ளோடிலா என்னும் பெயரில் 2010 மே மாதம் துருக்கியைச் சேர்ந்த ஆர்வலர்கள் மாவி மர்மாரா என்ற கப்பலில் காஸாவை சென்றடைந்து முற்றுகையை முறியடிக்க முயற்சி செய்தனர்; அவர்களில் 9 நபர்களை சுட்டுக் கொன்றது இஸ்ரேலிய இராணுவம். ஃபலஸ்தீனிற்கு மனிதாபிமான உதவிகளை கொண்டு செல்லும் மக்கள் மீது இப்போதும் தாக்குதல்களை இஸ்ரேல் நடத்துகிறது.

இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக ஃபலஸ்தீன், லெபனான், ஏமன், சிரியா, மற்றும் ஈரான் ஆகிய அண்டை நாடுகளில் சர்வதேச விதிகளை மீறி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இவை இரண்டும் சர்வதேச நாடுகளை நேரடியாக பாதிக்காததனால் இஸ்ரேலுக்கு எதிராக எந்த ஒரு தீவிர நடவடிக்கையும் எடுக்காமல் சில சடங்கு ரீதியான அக்கறையை மட்டுமே உலக நாடுகள் வெளிப்படுத்தின.

ஆனால் அமெரிக்கா-ஈரான் போரால் ஹோர்முஸ் நீரிணையில் ஏற்பட்ட  சிறு இடையூறு, மேற்குலகம், அரபு நாடுகள் உட்பட அனைத்து நாடுகளையும் தீவிர போர் நிறுத்த முயற்சிக்கு நகர்த்தியது.

ஏனென்றால், இது அந்த நாடுகளில் பொருளாதாரம், சந்தை வீழ்ச்சி, விலை உயர்வு என அனைத்து வகைகளிலும் கடுமையாக பாதித்துள்ளது. உலகின் மூன்றில் ஒரு பங்கு உர வர்த்தகம் இந்த நீரிணை வழியாகவே நடைபெறுகிறது. மேலும் உணவு, மருந்துகள், தொழில்நுட்பப் பொருட்கள் உள்ளிட்டவற்றை மேற்கு ஆசிய நாடுகளுக்கு இறக்குமதி செய்வதற்கான ஒரு முக்கிய வழித்தடமாகவும் இந்த நீரிணை விளங்குகிறது.

அமெரிக்க எரிசக்தி தகவல் நிர்வாகத்தின் (EIA) மதிப்பீடுகளின்படி, 2025-ஆம் ஆண்டில், ஒரு நாளைக்கு சுமார் 20 மில்லியன் பீப்பாய் எண்ணெய் மற்றும் எண்ணெய் பொருட்கள் ஹோர்முஸ் நீரிணை வழியாகக் கடந்து சென்றன. இது ஆண்டுக்கு கிட்டத்தட்ட 600 பில்லியன் டாலர் மதிப்புள்ள எரிசக்தி வர்த்தகமாகும். 20% திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LPG), ஹோர்முஸ் நீரிணை வழியாகத்தான் கடந்து செல்கின்றது.

சியோனிச இஸ்ரேலின் தூண்டுதலின் பேரில் ஈரான் மீது சட்டவிரோதமாகப் போர் தொடுத்த அமெரிக்கா தனது பெரும் ராணுவ பலத்தை பயன்படுத்தி ஹோர்முஸ் நீரிணையை 60 நாட்களைக் கடந்தும் திறக்க இயலாமல் படுதோல்வி அடைந்தது. உலக நாடுகளிடமிருந்து அதிகரித்த அழுத்தத்தால் அவசரமாக ஓர் போர் நிறுத்தத்தை கொண்டு வந்தது.

ஆனால் இந்த அவசரம் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக காஸாவில் இடிபாடுகளுக்கு அடியில் புதைந்து போன குழந்தைகளின் கதறல்களாலோ, மருத்துவமனைகள், வீடுகள் இடிந்து விழுந்ததாலோ, அல்லது ஈரானில் பள்ளி குழந்தைகள் கொல்லப்பட்டதாலோ ஏற்படவில்லை.

மனிதாபிமானம் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்படும் போது அமைதியும், வர்த்தகம் அச்சுறுத்தப்படும்போது அவசரமும் உடனடியாக வெளிப்படுகிறது. உலகம் தனது மனசாட்சியை சந்தையின் ஓசைகளுக்கு ஏற்ப மாற்றியமைத்துக் கொண்டுள்ளது. உலக நாடுகள் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன என்பதை இது உணர்த்துகிறது.

காஸாவில் 2.4 மில்லியன் குடியிருப்பாளர்களுக்கான உள்கட்டமைப்பு சிதைந்து கிடக்கிறது. மருத்துவ அமைப்புகள் முழுமையான சரிந்துள்ளன. அங்கு நடைபெறும் அவலம் மறைக்கப்பட்டதும் அல்ல, தெளிவற்றதும் அல்ல. இருப்பினும் நாடுகளின் எதிர்வினை, வெறும் வெற்று அறிக்கைகளா வும் பின்விளைவுகள் அற்ற கண்டனங்களாகவும்  இருக்கின்றன.

மனிதர்களுக்கு ஏற்படுத்தப்படும் துன்பங்களின் அளவைக் கொண்டு சர்வதேச எதிர்வினைகள் வருவதில்லை, மாறாக பொருளாதார அபாயத்தின் நெருக்கத்தாலேயே ஏற்படுகிறது. உலக அரசியலின் நீதி தராசில் எல்லா ரத்தத்திற்கும் சமமான மதிப்பு இல்லை என்பது தெளிவாகியுள்ளது.

கூட்டணியை திரட்டி கடற்படைகளை உருவாக்க எண்ணெய்க்கு சக்தி உள்ளது.  ஆனால் குழந்தைகளின் மரணங்கள் எந்தவொரு பொருளாதார உறவுகளையோ, விநியோக சங்கிலிகளையோ தடை செய்வதில்லை.

போர்கள் அநீதியானவையாக இருக்கும்போது அவை எதிர்க்கப்படுவதில்லை. மாறாக அவை சிரமமாக இருக்கும்போதுதான் எதிர்க்கப்படுகின்றன; இது இன்றையக் காலத்தின் எழுதப்படாத கோட்பாடாக மாறிவிட்டது.

எண்ணெய்க்காக அணி திரண்டு நீதிக்காக போராடாத ஒரு நாகரிகம் முரணானது மட்டுமல்ல, அது மிகவும் ஆபத்தானதுமாகும்.  ஏனெனில் கருணை நிபந்தனைக்குட்பட்டதாகவும் நீதி தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் மாறும் போது நீதியின் அடித்தளங்களே அரிக்கத் தொடங்குகின்றன.

எந்தவொரு நாகரிகமும் அதன் கருவூலங்களின் செழிப்பையோ அல்லது எண்ணெய் வழித்தடங்களின் பாதுகாப்பையோ கொண்டு மதிப்பிடப்படாது; மாறாக, அது மனித உயிருக்கு அளித்த முக்கியத்துவத்தைக் கொண்டே மதிப்பிடப்படும் என்பதை நாடுகள் உணருமா?

Related posts

Leave a Comment