கண்ணியம், சுயாதீனம், சுய நிர்ணய உரிமையுடன் ஆதிக்கத்தை நிறுவிய ஈரான்!
![]()
அமெரிக்காவுடன் ஈரான் இஸ்லாமியக் குடியரசு மேற்கொண்ட சமீபத்திய போர் நிறுத்த ஒப்பந்தம், 1979 இஸ்லாமியப் புரட்சிக்குப் பிந்தைய ஈரானின் குறுகிய, அதே நேரம் கொந்தளிப்பான, சவால்கள் மிக்க வரலாற்றில் மிக முக்கியமான ஒரு தருணமாக வரையறுக்கப்படுகிறது.
புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ள விவரங்கள் குறித்துப் பல்வேறு ஊகங்கள் நிலவினாலும், ட்ரம்ப் நிர்வாகம் தனது தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது மட்டும் தெளிவு.
இணைக்கோட்டில் இன்னொரு உண்மை என்னவென்றால், தன்னிடம் இவ்வளவு இராணுவப் பலமும் வல்லமையும் இருந்தும்கூட ஈரானைப் பணியவைப்பதிலும், தனது விருப்பத்தை அதன் மீது திணிப்பதிலும் அமெரிக்கா மிக அவமானகரமான தோல்வியைத் தழுவியுள்ளது.
மட்டுமின்றி, காலனித்துவ, ஸியோனிச இஸ்ரேலின் ஆட்சியாளரும் போர்க் குற்றவாளியுமான நெதன்யாஹுவின் தவறான வழிகாட்டலுக்கு இணங்க, அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டுப் போர், ஈரான் இஸ்லாமியக் குடியரசின் வீழ்ச்சிக்கும் ஆட்சி மாற்றத்திற்கும் வழிவகுக்கும் என அமெரிக்கா இலக்குகள் நிர்ணயித்தது. அந்த இலக்குகள் எதையுமே அடைய முடியாமல் போனது, ட்ரம்பின் ஏமாற்றத்தையும் துயரங்களையும் மேலும் அதிகரித்துள்ளது.
அமெரிக்க போர் துறைச் செயலாளர் பீட் ஹெக்செத் போன்ற ஸியோனிச வெறியர்களால் வழிநடத்தப்படும் அவரது வலதுசாரி அமைச்சரவை உணர்ந்து கொண்டதைப் போன்று ஈரான், வெனிசுலா அல்ல என்பதை ட்ரம்ப் உணர்ந்துகொண்டார்.
பிப்ரவரி 28, 2026 அன்று எடுக்கப்பட்ட முடிவின் பின்னணியில் உள்ள வியூகம்சார் கணக்கீடு மிகத் துல்லியமானது: “வெனிசுலா மாதிரி”யை அப்படியே மீட்டுருவாக்கம் செய்ய வேண்டும்; இதன் மூலம் ஈரான் தலைமைத்துவத்தின் அரசியல், ராணுவ நடத்தைகள் மாறும், அல்லது அது ஒட்டுமொத்தமாக வீழ்த்தப்படும்.
ஆனால் இந்தச் சூதாட்டக் கணக்கீடு தோல்வி கண்டது.
இத்தோல்விக்கான காரணம், ஈரான் இஸ்லாமியக் குடியரசின் காத்திரத் தன்மையும் அதன் கருத்தியல் பலமுமே ஆகும். ட்ரம்ப் தனது தோல்வியை ஒப்புக்கொண்டதன் மூலம் அது மீண்டும் நிரூபணமாகியுள்ளது.
எதிர்ப்பியக்க வளையத்துக்கு (Axis of Resistance) ஆதரவாக ஈரான் தொடர்ந்து உறுதியுடன் நின்றுகொண்டிருக்கும் சூழலில், அறபு நாடுகள் இஸ்ரேலின் கட்டளைகளுக்குப் பணியாமல், ஓரளவாவது தங்களின் சுயாதீனத்தை, சுய நிர்ணய உரிமையை வெளிப்படுத்தும் என நாம் எதிர்பார்ப்பது இயல்புதான். ஆனால் அப்படி நடப்பதாகத் தெரியவில்லை.
உதாரணமாக, லெபனானில் நிலவும் சூழலை எடுத்துக்கொள்ளுங்கள். இஸ்ரேலின் குண்டுவீச்சு மற்றும் கூட்டுப் படுகொலைகளுக்கு எதிராக அந்நாட்டு அரசாங்கம் நடந்துகொள்ளும் விதம் வியப்பூட்டுவதோடு அதிர்ச்சி அளிப்பதாகவும் உள்ளது.
லெபனான் பிரதிநிதிகள் இஸ்ரேல், அமெரிக்காவுடன் கையெழுத்திட்ட போர் நிறுத்த ஒப்பந்தம், முன்னெப்போதும் அறிந்திராத அல்லது மிக அரிதான ஓர் அரசியல் சரணாகதி வகையைச் சார்ந்தது என்பதை ‘ஹிஸ்புல்லாஹ்’ ஆய்வாளரான அமல் சஅது குறிப்பிடுகிறார்.
“தாக்குதலுக்கு உள்ளாகிவரும் லெபனான் அரசு, ஆக்கிரமிப்பு இஸ்ரேல் தன் பிராந்தியத்திலிருந்து வெளியேற வேண்டும் என்பதைப் போர் நிறுத்த நிபந்தனையாக முன்வைக்காமல், தன் சொந்த குடிமக்கள் அவர்களின் நிலத்திலிருந்து வெளியேற வேண்டும் என்ற நிபந்தனையை முன்வைக்கும் ஓர் ஆவணத்தில் கையெழுத்திட்டுள்ளது” என அவர் எழுதியுள்ளார்.
லெபனான்-இஸ்ரேல் மத்தியிலான பேச்சுவார்த்தைகளுக்கான எந்த ஒரு சட்டகமும் ஸியோனிச விரிவாக்கத்திற்கும் ஆக்கிரமிப்பிற்கும் இசைவாக அமைந்திருக்குமானால், அது லெபனானின் பாதுகாப்பு மற்றும் அரசியல் சூழலை நீண்ட காலமாக வடிவமைத்து வரும் ஓர் அடிப்படை முரண்பாட்டையே மீண்டும் தக்கவைக்கும்: அதாவது, லெபனான் அரசு ராஜதந்திரம் மேற்கொண்டு பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தங்கள் மேற்கொள்ளும். அதேநேரம், இஸ்ரேலை எதிர்கொள்வதில் ஹிஸ்புல்லாஹ் தொடர்ந்து அந்நாட்டின் முதன்மை ராணுவ சக்தியாகத் திகழும்.
இந்த முரண்பாடு அல்லது தொடர்பின்மை, நிலையான ஒரு தீர்வை எட்டுவதற்கான முயற்சிகளைத் தொடர்ந்து சிக்கலாக்குவதோடு, இரு தரப்பு ஆதரவையும் பெற்றுத்தரும் எந்த ஓர் ஒப்பந்தத்தின் சாத்தியத்தன்மை குறித்தும் கேள்விகளை எழுப்புகிறது.
தற்போதைய அமெரிக்க-ஈரான் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பின்னணியில் இதைப் பார்க்கும்போது, லெபனான் அரசு இஸ்ரேலின் ஒருதலைப்பட்சமான கோரிக்கைகளை ஏற்பதைத் தவிர்த்து, தன் எதிர்காலத்தை ஹிஸ்புல்லாஹ்வின் போராட்டத்தோடு பிணைத்துக்கொள்ள முன்வராத வரை அது நெதன்யாஹு மற்றும் அவரது பயங்கரவாதப் போர்க்குற்றக் கும்பலால் தொடர்ந்து அச்சுறுத்தப்பட்டு சிறுமைப்படுத்தப்படுவதைத் தவிர்க்க முடியாது.
ஈரானின் ஆதிக்கத்தைப் பொறுத்தவரை, இஸ்ரேல் ஹயோம் (Israel Hayom) என்ற நிகழ்நிலை இதழில் வெளியான, “இப்படித்தான் நெதன்யாஹுவின் ஈரான் கோட்பாடு தகர்ந்தது” (This is how Netanyahu’s Iran doctrine collapsed) என்ற ஒரு கட்டுரை, ஈரானுக்கு எதிரான போரில் ‘இஸ்ரேலின் வியூகம்சார் நிலைப்பாடு’ வியக்கத்தக்க விதத்தில் மோசமடைந்துள்ளதைக் கோடிட்டுக் காட்டுகிறது. இந்தப் புதிய வியூகம்சார் யதார்த்தம், வரவிருக்கும் ஆண்டுகளில் ‘ஈரானிய அச்சுறுத்தலை’ எதிர்கொள்வதை ‘இஸ்ரேலுக்கு மேலும் கடினமாக்கும்’ என்றும் அக்கட்டுரை வலியுறுத்துகிறது.
மேலும், இந்தத் தோல்வியின் வேர்கள், இஸ்ரேலின் பாதுகாப்பு அமைப்பிற்குள் நிலவிய ‘கட்டற்ற இறுமாப்பிலும் தவறான கணக்கீடுகளிலுமே’ உள்ளன என்றும் அது விளக்குகிறது.
பெய்ரூட்டை ஆக்கிரமிப்பதிலிருந்து இஸ்ரேலைத் தடுப்பது உட்பட, புதிய போர்த் தந்திர விதிகளை திணிக்கும் பொருட்டுப் பெரும் ஆபத்துகளை எதிர்கொள்ளவும் ஈரான் தயாராக உள்ளதாக ‘இஸ்ரேல் ஹயோம்’ தெரிவித்துள்ளது.
உருவாகி வரும் புதிய வியூகம்சார் சூழலை ‘அதிகரித்துவரும் சிக்கல்’ என விவரித்துள்ள அக்கட்டுரை, இது இஸ்ரேலுக்குக் கூடுதல் சவால்களை ஏற்படுத்தும் என்றும், குறிப்பாக அது அமெரிக்காவைச் சார்ந்திருப்பதைக் கருத்தில் கொள்ளும்போது இது மிக முக்கியமானது என்றும் அது கூறியுள்ளது.
ஈரானுடன் அமெரிக்கா மீண்டும் ஒரு ஒப்பந்தத்திற்குத் திரும்புவது – அது ஈரானின் அணுவாயுதப் பிரச்சினையைத் தீர்த்தால்கூட – ‘இஸ்ரேலின் வியூகம்சார் வரம்புகளை’ (Strategic limitations) மட்டுப்படுத்தவே செய்யும் என்றும் அக்கட்டுரை தெரிவித்துள்ளது.
அனைத்துக்கும் மேல், கடந்த மூன்றரை மாதங்களில் ஈரான் மற்றும் ஹிஸ்புல்லாஹ்வின் ஏவுகணைத் தாக்குதல்களால் இஸ்ரேலின் உட்கட்டமைப்பு வரலாறு காணாத விதத்தில் சர்வ நாசமடைந்துள்ளது; உயிர்ப் பலி மற்றும் புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கையும் வானளாவ உயர்ந்துள்ளது.
சுருங்கச் சொன்னால், ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலின் சமீபத்திய கூட்டு இராணுவ நடவடிக்கைகள் முழுமையான தோல்வி என்பதோடு, அவை ஈரானை அச்சுறுத்துவதிலும் பின்னடையச் செய்வதிலும் வெற்றி பெறவில்லை; அதிகாரச் சமநிலையை மாற்றியமைக்கவும் இல்லை. மாறாக, இஸ்ரேலை மிகப் பலவீனமான ஒரு வியூகம்சார் நிலைப்பாட்டுக்கே அவை தள்ளியுள்ளன.

