சீதா ராமம் திரைப்படத்தில் பல காட்சிகளில் முஸ்லிம் வெறுப்பு அப்பட்டமாக இடம்பெறுகிறது. அதை நைச்சியமாக முன்வைப்பதற்கெல்லாம் படக்குழுவினர் மெனக்கெடவே இல்லை. அதுபோல, தெலுங்குப் படத்துக்கே உரிய க்ரிஞ்சு அம்சங்கள் திரைப்படம் நெடுக இடம்பெறுகின்றன. ஆனால் யூடியூபில் பட விமர்சனம் தரும் பிரஷாந்த், ப்ளூ சட்டை போன்ற பலர் இதை ஆஹா, ஓஹோ எனப் புகழ்ந்து தள்ளியிருக்கிறார்கள்.
உலகிலேயே சட்ட விதிகளை மீறி சிறுபான்மையினர் வீடுகளைத் தகர்ப்பது இரண்டே நாடுகள்தான்; ஒன்று இஸ்ரேல், மற்றொன்று இந்தியா என்கிறார்கள். ஒரு நாடாக இந்தியாவுக்கு இது எவ்வளவு பெரிய அவமானம்? இந்தியர்கள் வெட்கித் தலைகுனியத்தான் வேண்டும்.
இந்து ராஷ்டிர கனவில் மிதக்கும் சங் பரிவாரம் முஸ்லிம்களை அதன் முதன்மை இலக்காக்கி தன் பாசிச செயல்திட்டத்தை முன்னெடுத்து வருகிறது. நாட்டில் மத ரீதியாக பதற்ற நிலை ஏற்பட்டால் அதை அருவடை செய்து பெரும் அரசியல் லாபமடைவது பாஜகதான் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. தற்போது பணவீக்கம், ரூபாய் மதிப்பு சரிவு, விலைவாசி உயர்வு எனப் பல பிரச்னைகள் இந்தியாவை சூழ்ந்துள்ளன. இந்திய மக்கள் வெறுப்பரசியலுக்கு இனியும் இடமளித்தால் இன்னொரு இலங்கையாக இந்தியா மாறக்கூடும் என்று எச்சரிக்கிறோம்.
ஹிஜாப் உங்கள் சுயதேர்வா அல்லது வீட்டிலுள்ளர்களின் அழுத்தத்தால் கடைப்பிடிக்கப்படுவதா?
இது எங்கள் மீது திணிக்கப்பட்டிருப்பதாக முஸ்லிமல்லாதோர் பலர் நினைக்கிறார்கள். அந்த அடிப்படையிலிருந்துதான் இந்தக் கேள்வி வருகிறது. நாங்கள் மூளை சலவை செய்யப்பட்டிருப்பதாகக்கூட ஒருசிலர் வெறுப்பைக் கக்குகிறார்கள். எங்களுக்கு சுயசிந்தனை இல்லை என்பதுபோல் அவர்கள் சித்தரிக்க முயற்சிக்கிறார்கள். ஒருவகையில் இதுவெல்லாம் முஸ்லிம் பெண்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறை.
சுயதேர்வு பற்றி ஒன்றைச் சொல்லியாக வேண்டும். ஒருவரின் சுயதேர்வு 100 சதவீதம் எந்தப் புற அழுத்தமும் இல்லாமல் மேற்கொள்ளப்படுவதாகச் சொல்ல முடியுமா? நம் சமூகத்தில் பெண்கள் முடியை நீளமாக விடுவதும், ஆண்கள் தன் முடியைக் கத்தரித்துக்கொள்வதும் அவரவர் விருப்பங்களின்படிதான் நடக்கிறதா? அவ்வாறு நடந்தால் மக்கள் எல்லோரும் எப்படி ஒன்றுபோல் இருக்க முடிகிறது?
அதனால் ஹிஜாபை திணிப்பு, அடிமைத்தனம் என்றெல்லாம் வெளியிலுள்ளோர் சொல்லக் கூடாது. அது எங்களை அவமதிக்கும் செயல். அப்படிச் சொல்வோரை சட்டப்படி தண்டிக்க வழிவகைகள் தேவை என்று நினைக்கிறேன். ஹிஜாப் குறித்து கருத்துச் சொல்லும் உரிமை மற்றவர்களைவிட எங்களுக்குத்தான் இருக்கிறது.
FIR படத்தைத் தொடர்ந்து இஸ்லாமிய வெறுப்பைக் கக்கும் மற்றுமொரு நச்சுக் குப்பைதான் இந்த Beast திரைப்படம். இதுபோன்ற படங்களைத் தொடர்ந்து வெளியிடும் உதயநிதி ஸ்டாலினின் கொள்கைப் பற்று மயக்கமடைய வைக்கிறது.
நாடே இந்துத் தீவிரவாதத்தால் பாதிக்கப்படும்போது, அதிலும் வடக்கில் இஸ்லாமியர்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறையைக் கண்டும்கூட இப்படியொரு படம் எடுக்க முடிகிறதென்றால் நெல்சன் போன்றவர்கள் யார் என்று அடையாளம் கண்டு கொள்ள வேண்டிய தருணம் இது.
ஒடுக்கப்படும் தமது சமூகத்தை ஒற்றைக்கல் கட்டுமானமாகச் சித்தரிப்பதும், அதற்குள் பல போக்குகள் இருப்பதைக் காண மறுப்பதும், தம் சமூகத்தின் மீது அரசு நிறுவன ஒடுக்குமுறையை நியாயப்படுத்தும் அளவுக்கு அவரது பகுத்தறிவு உணர்ச்சி செல்வதும் சரியானதாகத் தோன்றவில்லை. எந்தச் சமூகத்திலிருந்து வந்தாரோ, அந்தச் சமூகம் படும் பாடுகளைப் பரிவுணர்ச்சியுடன் காண அவருக்குக் கண் இல்லை. அத்துடன், பார்ப்பன ஆதிக்கத்தின் கோர வடிவான இந்து / இந்திய தேச அரசின் ஒடுக்குமுறை எதிர்த்துப் போராடும் திராவிட இயக்க உணர்ச்சியும் அவரிடமில்லை என எனக்குத் தோன்றுகிறது.
இதுபோன்ற குரல்களை பகுத்தறிவுவாதம், மத விமர்சனம் என பொத்தாம் பொதுவான போக்கில் திராவிட இயக்க மேடைகளில் அனுமதிப்பதும் நியாயமானதில்லை.
காஷ்மீர் ஃபைல்ஸ் திரையிடப்பட்ட திரையரங்குகளின் வாசல்களில் இஸ்லாமிய வெறுப்பு முழக்கங்கள் எழுப்பப்படுகின்றன; “துரோகிகளை அழிக்க வேண்டும், பழிதீர்க்க வேண்டும்” போன்ற முழக்கங்கள் வெகு இயல்பாக எழுப்பப்படுவது இந்தியாவில் இன்று பரவியிருக்கும் வெறுப்புச் சூழலை நமக்கு உணர்த்துகின்றன. அதே 90களின் இறுதியில் தேசியத் தொலைக்காட்சியான தூர்தர்ஷன் சேனலில் பொது நிதியைக் கொண்டு ராமாயணம் தொடர் ஒளிபரப்பப்பட்டது. இது இந்தியாவில் ராமர் அரசியல் வலுவாகக் காலூன்ற வழிவகுத்தது. பாபர் மசூதிக்கு எதிரான கரசேவைக்கு ஆள் சேர்க்கவும் இது பயன்பட்டது. அதுபோல, இன்று காஷ்மீர் ஃபைல்ஸ் படம் இந்துத் தேசியவாத நிகழ்ச்சி நிரலுக்கு மிக முக்கியப் பங்காற்றி வருகிறது.
இந்தத் திரைப்படத்தில் இடம்பெறும் உண்மைக்குப் புறம்பான அம்சங்கள் பலராலும் சுட்டிக்காட்டப்பட்டு வருகின்றன. வெளியேற்றப்பட்ட பண்டிட்களின் எண்ணிக்கை, கொல்லப்பட்டோர் எண்ணிக்கை, அன்று பாஜக ஆதரவு ஒன்றிய அரசின் ஆட்சி இருந்தது முதலான பல்வேறு அம்சங்கள் இப்படத்தில் பிழையாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இப்படியான தகவல் பிழைகளையெல்லாம் தாண்டி, இஸ்லாமிய வெறுப்பை உற்பத்தி செய்யும் தனது நோக்கத்தை கச்சிதமாக நிறைவேற்றியிருக்கிறது இந்தப் படம்.
கர்நாடகாவிலுள்ள பள்ளிகளில் ஹிஜாபுக்கு அம்மாநில அரசாங்கம் தடை விதித்தது செல்லும் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதுகுறித்து News TN சேனலுக்கு மெய்ப்பொருள் பொறுப்பாசிரியர் நாகூர் ரிஸ்வான் அளித்த பேட்டி இது.
தொடர்ச்சியாக பள்ளி நிர்வாகம், ஊடகம் உள்ளிட்டவை பாதிக்கப்பட்ட பெண் பிள்ளைகளை மேன்மேலும் தொந்தரவுக்கு உள்ளாக்குவதைப் பார்க்க முடிகிறது. ஹிஜாபுக்காகப் பேசும் மாணவிகள் 80 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண்கள் எடுக்கும் அளவுக்குத் திறமைவாய்ந்தவர்கள் அல்ல, அவர்கள் எப்போதும் அதை அணிந்திருந்தவர்களும் அல்ல என்றெல்லாம் ஆசிரியர்களே அவர்களைச் சாடுவது, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களையே பழிக்குற்றச்சாட்டுக்கு ஆளாக்குவது தொடர்கிறது. மாணவிகள் இதற்கு உரிய வகையில் பதிலடி தரவும் செய்கிறார்கள். கல்வியிலும் அதற்கு அப்பாலும் தாங்கள் எந்த அளவுக்கு சிறந்து விளங்குகிறோம் என்பதை சொல்லிக் காட்டுகிறார்கள். ஊடகங்கள் பாதிக்கப்பட்ட மாணவிகளையே குறிவைத்துத் தாக்குகின்றன. குறிப்பிட்டுச் சொல்வதென்றால், சில தொலைக்காட்சி சேனல்கள் ஆலியா என்ற ஒரு மாணவியைக் இலக்காக்கின. அவர் தேசிய அளவிலான கராத்தே போட்டியில் ஹிஜாபுடன் பங்கேற்றவர். மாநில அளவில் தங்கப் பதக்கம் வென்றவர். அவரிடம், எப்போது ஹிஜாப் போட ஆரம்பித்தீர்கள், நீங்கள் ஹிஜாபைக் கழட்டியதே கிடையாதா, எத்தனை ஆண்டுகளாக இதைக் கடைப்பிடிக்கிறீர்கள் என்றெல்லாம் ஊடகங்கள் கூச்சலிட்டன.
சமூகச் செயல்பாட்டாளர் சஃபூரா ஸர்கார், “முன்பு மாணவிகள் ஹிஜாப் அணிந்தார்களா, இல்லையா என்பது இங்கு பொருட்டல்ல. எனது அடிப்படை உரிமையை நான் எடுத்துக்கொள்வதற்கு எந்தக் கால வரையறையும் கிடையாது” என்கிறார். ஹிஜாப் அணிவதைத் தெரிவு செய்யும் முஸ்லிம் பெண்களின் உரிமைகள் இங்கு மறுக்கப்படுவதாகவும் குறிப்பிட்டுக் காட்டுகிறார்.
மனு ஆனந்த் என்பவர் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் FIR. விஷ்ணு விஷால் நடிப்பில் ஒரு திரில்லர் படமாக இது வெளிவந்துள்ளது. அவ்வளவு ரசிக்கும்படியாகவோ நேர்த்தியாகவோ இது எடுக்கப்படவில்லை என்பதால் பார்வையாளர்களை எந்தளவுக்கு ஈர்க்கும் என்று தெரியவில்லை. ஆனால் முஸ்லிம்கள் மீது அச்சத்தை அதிகரிக்கச் செய்தல், ‘கெட்ட முஸ்லிம்களை’ அழித்தல் போன்றவை மூலம் அவர்களுக்குக் கிளர்ச்சியூட்ட முயல்கிறது இப்படம்.
கர்நாடகாவில் இந்து தேசியவாதிகளால் ஹிஜாப் சர்ச்சையாக்கப்படும் சூழலில், அதற்குத் துணை போகும் வகையில் நீதிமன்றத்தின் செயல்பாடு அமைந்திருப்பதாக எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளருமான காமராசன் தெரிவிக்கிறார்.