குறும்பதிவுகள் முக்கியப் பதிவுகள் 

ஈரானின் நிழல் இராணுவம்

Loading

பிப்ரவரி 28, 2026 அன்று ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் வான் தாக்குதல்களை தொடங்கின. தாக்குதலுக்கான காரணத்தை சுற்றி வளைத்து கூறாமல், ஈரானில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதே இத்தாக்குதல்களின் நோக்கம் என்று வெளிப்படையாகவே அறிவித்தனர். முதல் நாள் தாக்குதலில் ஈரான் தலைவர் (சுப்ரீம் லீடர்) ஆயத்துல்லாஹ் அலீ காமனெய்யி உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து இஸ்ரேல், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க நிலைகள், அந்நாடுகளின் விமான நிலையங்கள், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள், ஹோட்டல்கள் உள்ளிட்ட இடங்களில் ஈரான் தாக்குதல்களை நடத்தியது. இதனால் ஈரான் மற்றும் வளைகுடா நாடுகள் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது.

தாக்குதல்கள் தொடங்கிய ஒரு வாரத்தில் வளைகுடா நாடுகள் தாக்குதல் நடத்தினால் அன்றி அவர்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தாது என்று ஈரான் அதிபர் மசூத் பெஸஸ்கியான் அறிவித்தார். இந்த அறிவிப்பிற்கு பலத்த வரவேற்பு கிடைத்துக் கொண்டிருந்த நிலையிலேயே வளைகுடா நாடுகள் மீதான தாக்குதல்களும் தொடர்ந்தன. அதிபரின் இந்த அறிவிப்பை இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்பு படை (Islamic Revolutionary Guard Corps – IRGC ஐஆர்ஜிசி), ரசிக்கவில்லை என்றும் அவர்களே தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வருவதாகவும் செய்திகள் தெரிவித்தன.

அதிபரின் அறிவிப்பை கண்டுகொள்ளாத இந்த படையின் பின்னணி என்ன? சற்று சுருக்கமாக பார்க்கலாம்.

1979இல் நிகழ்ந்த ஈரானிய புரட்சி, அமெரிக்காவின் அடிவருடி ஷா ரெஸா பஹ்லவியின் சர்வாதிகார ஆட்சிக்கு முற்றுப்புள்ளியை வைத்தது. புரட்சியை ஏற்படுத்துவதை விட அதை பாதுகாப்பதே கடினமான பணி என்பதை உணர்ந்த புரட்சியின் கதாநாயகர்கள் இராணுவத்தின் மீது நம்பிக்கை கொள்ளாமல் அதற்கு இணையாக ஒரு படையை உருவாக்கினர். அதுதான் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்பு படை. புரட்சிக்கு பின்னர் அதி உயர் தலைவராக பதவியேற்ற ஆயத்துல்லாஹ் கொமைனியின் திட்டத்தில் உதயமானதே இந்த படை என்று கூறப்படுகிறது. பல வருடங்கள் ஷா பஹ்லவிக்கு விசுவாசமாக இருந்த இராணுவத்தினர் புரட்சிக்கு எதிராக செயல்படுவார்கள் என்ற சந்தேகமே இந்த படையின் உருவாக்கத்திற்கான காரணமாக இருந்தது.

பொதுவாக, ஒரு நாட்டை பாதுகாக்க இராணுவத்தை கட்டமைப்பார்கள். இங்கே புரட்சியை பாதுகாக்க புரட்சிகர படை கட்டமைக்கப்பட்டது. ஐஆர்ஜிசி படையினரை ‘இஸ்லாத்தின் வீரர்கள்’ என்று கொமைனி வர்ணித்தார். நாட்டின் இராணுவத்திற்கு இணையான படை என்று கூறப்பட்டாலும் நாட்டின் அதிபரின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படாமல் சுப்ரீம் லீடர் கட்டுப்பாட்டின் கீழ் இந்த படை செயல்படுகிறது. அதன் அடிப்படையில் 1989இல் கொமைனி மரணம் வரை அவரின் கட்டுப்பாட்டிலும், அதன் பின் அலீ காமனெய்யி படுகொலை செய்யப்படும் வரை அவரின் கட்டுப்பாட்டிலும் செயல்பட்டு வந்த இப்படை, இனி புதிய சுப்ரீம் லீடர் முஜ்தபா காமனெய்யி கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும்.

இராணுவத்தை போன்றே தரைப்படை, விமானப்படை, கப்பல்படை என முப்படைகளை ஐஆர்ஜிசி கொண்டுள்ளது. ஈராக் உடனான போர் ஐஆர்ஜிசி படையினருக்கு திருப்புமுனையாக அமைந்தது. சித்தாந்தத்தின் அடிப்படையில் தோற்றுவிக்கப்பட்ட இந்த பிரிவின் பங்களிப்பு, நாட்டின் மிக முக்கிய அங்கமாக அதனை மாற்றியது. முப்படைகளை தவிர்த்து உள்நாட்டு பாதுகாப்பை உறுதிப்படுத்த ஒரு துணை இராணுவப் படையையும் (பசீஜ்), ஈரானுக்கு வெளியே விவகாரங்களை கவனிப்பதற்கு ஒரு பிரிவையும் (அல் குத்ஸ் ஃபோர்ஸ்) ஐஆர்ஜிசி கொண்டுள்ளது.

ஐஆர்ஜிசி-யில் மொத்தம் இரண்டு இலட்சம் படையினரும் ஆறு இலட்சம் ரிசர்வ் படையினரும் உள்ளதாக கூறப்படுகிறது. பேலிஸ்டிக் ஏவுகணை திட்டம், அணு சக்தி திட்டம், ஹிஸ்புல்லாஹ் போன்ற வெளிநாட்டு படைகளுடன் தொடர்பு ஆகிய முக்கிய விவகாரங்களை ஐஆர்ஜிசி கவனித்து வருகிறது.

ஈரானின் இயற்கை வளங்கள், போக்குவரத்து, கட்டமைப்பு, தகவல் தொடர்பு உள்ளிட்ட துறைகளில் ஐஆர்ஜிசி கொண்டுள்ள பங்களிப்பு அதன் பொருளாதார முதுகெலும்பாக திகழ்கிறது. 

உள்நாட்டு பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக பசீஜ் படை 1979இல் தொடங்கப்பட்டது. தன்னார்வ அமைப்பு என்று கூறப்பட்டாலும் பொருளாதார நலன்களும் சலுகைகளும் காரணமாகவே பலர் இதில் இணைந்துள்ளதாக விமர்சகர்கள் கூறுகின்றனர். பெரும்பாலும் இளைஞர்களை உறுப்பினர்களாகக் கொண்ட இந்த பிரிவில் 4,50,000 பேர் உள்ளனர். 1980 முதல் 1988 வரை நடைபெற்ற ஈராக் உடனான போரின் போது, இராணுவத்தினர் முன்னேறிச் செல்வதற்கு ஏதுவாக கன்னிவெடிகளை அப்புறப்படுத்த மனித அலைகளாக இவர்கள் செயல்பட்டதை இப்போதும் ஈரானியர்கள் நெகிழ்ச்சியாக நினைவு கூர்கின்றனர்.

புரட்சிக்கு எதிராக வெளியே இருந்து வரும் சவால்களை எதிர்கொள்வதற்காக 1988இல் குத்ஸ் படை தொடங்கப்பட்டது. மேற்கு ஆசியாவில் ஈரான் ஆதரவு குழுக்களை உருவாக்குவதும் ஃபலஸ்தீன போராட்டத்தில் ஈடுபடும் அமைப்புகளுக்கு உதவி செய்வதும் இந்த பிரிவின் ஏனைய முக்கிய பணிகளாகும். ஆக்கிரமிப்பு சக்திகளிடமிருந்து இஸ்லாமிய புனித இடங்களை மீட்பது இந்த பிரிவின் முக்கிய நோக்கமாகும். 1982இல் லெபனான் மீது இஸ்ரேல் மேற்கொண்ட ஆக்கிரமிப்புகளை தொடர்ந்து ஒரு இஸ்லாமிய எதிர்ப்பு படை தோற்றுவிக்கப்பட்டது. அதுவே பின்னர் ‘ஹிஸ்புல்லாஹ்’ இயக்கமாக உருவானது. ஃபலஸ்தீனின் ஹமாஸ், இஸ்லாமிக் ஜிகாத் அமைப்புகள், யெமனின் ஹூத்திகள் ஆகியோருடன் அல் குத்ஸ் பிரிவு நெருங்கிய தொடர்புகளை கொண்டுள்ளது. அல் குத்ஸ் படைப் பிரிவின் கமாண்டராக இருந்த காசிம் சுலைமானி, ஜனவரி 2020இல் ஈராக்கில் வைத்து அமெரிக்கா நடத்திய தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார். 

ஐஆர்ஜிசி மற்றும் அதன் துணை இராணுப் படையினர் மீது ஏராளமான விமர்சனங்களும் முன்வைக்கப்படுகின்றன. ஆட்சியாளர்களுக்கு எதிரான போராட்டங்களை ஒடுக்குவதில் ஐஆர்ஜிசி-யும் அதன் துணை இராணுப் படையும் முக்கிய பங்கு வகித்ததாக குற்றம் சாட்டப்படுகிறது. ஜனவரி மாதம் ஈரான் அரசாங்கம் மற்றும் சுப்ரீம் லீடருக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களை வன்முறை மூலம் பசீஜ் படை எதிர்கொண்டதாக பலமான குற்றச்சாட்டுகள் எழுந்தன. மக்கள் போராட்டங்களை இராணுவம் இவ்வாறு கையாள்வதில்லை என்றும் ஐஆர்ஜிசி படையினரே வன்முறையை கொண்டு போராட்டங்களை ஒடுக்குகின்றனர் என்ற கருத்தும் ஈரான் மக்களிடம் உள்ளது.

ஐஆர்ஜிசி படையை 2019இல் பயங்கரவாத அமைப்பாக அமெரிக்கா அறிவித்தது. பிப்ரவரி 2026இல் ஐரோப்பிய யூனியனும் இதே போன்ற அறிவிப்பை வெளியிட்டது. இதனை தொடர்ந்து அனைத்து ஐரோப்பிய யூனியன் நாடுகளின் இராணுவ படைகளையும் பயங்கரவாத அமைப்புகளாக ஈரான் அறிவித்தது.

ஈரானின் அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் செல்வாக்கு செலுத்தி வரும் ஐஆர்ஜிசி தனது வரலாற்றில் மிக கடினமான சூழலை தற்போது எதிர்கொண்டு வருகிறது.  

Related posts

Leave a Comment