Gen Z அரசியலின் தொடக்கமா CJP?
![]()
உலகத்திலேயே அதிக இளைஞர்களைக் கொண்ட நாடாகவும் மிகப் பெரிய ஜனநாயக நாடாகவும் இந்தியா இருக்கிறது. அத்துடன், உலகிலேயே இரண்டாவது பெரிய தொழிலாளர் சக்தியைக் கொண்ட நாடாக உள்ள போதும், பாஜக ஆட்சியின் கீழ் தொடர்ச்சியாக வேலையில்லா திண்டாட்டத்தை நாடு சந்தித்து வருகிறது.
இந்நிலையில் 2026, மே 15 அன்று தலைமை நீதிபதி சூர்யகாந்த் வேலையில்லா இளைஞர்களை ‘கரப்பான் பூச்சி’, ‘அழுகும் மரத்திலிருந்து ஊர்ந்து வந்து அமைப்பைத் தாக்கும் ஒட்டுண்ணிகள்’ என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. “கரப்பான்களைப் போன்ற இளைஞர்கள் இருக்கிறார்கள்; அவர்களுக்கு எந்த வேலையும் கிடைப்பதில்லை, எந்தத் தொழிலிலும் அவர்களுக்கு இடமில்லை. அவர்களில் சிலர் ஊடகவியலாளர்களாகவும், சிலர் சமூக ஊடக, தகவல் அறியும் உரிமை ஆர்வலர்களாகவும், இன்னும் பிற ஆர்வலர்களாகவும் மாறி, எல்லோரையும் தாக்கத் தொடங்குகிறார்கள்” என்று அவர் கூறினார்.
இதன் தொடர்ச்சியாக, கரப்பான் ஜனதா கட்சி (Cockroach Janatha Party – CJP) என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தை அப்ஜித் திப்கே என்பவர் தொடங்கினார். இதில் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் சேர்ந்தனர். இரண்டு மணி நேரத்திற்குள், கரப்பான் ஜனதா கட்சி (CJP) கூகுள் ஃபார்ம் மூலம் 3,50,000-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களையும், இன்ஸ்டாகிராமில் 11 மில்லியன் பின்தொடர்பவர்களையும் பெற்றது.
22 மே 2026 நிலவரப்படி, CJP அதிகாரப்பூர்வமாக இன்ஸ்டாகிராமில் பாஜகவை முந்தியுள்ளது, மேலும் 20 மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்களைக் கொண்டுள்ளது.
இளைஞர்களின் அதிருப்தியே CJPஇன் தோற்றம்
இந்திய ஒன்றியத்தை 12 ஆண்டுகளுக்கு மேலாக ஆளும் பாஜக, 2014 மக்களவை தேர்தலில் பல திட்டங்களை அறிவித்தது. அதன் மைய கோசமாக “நல்ல நாட்கள் வருகிறது” (Achhe Din) என்பதே இருந்தது.
குறிப்பாக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு, சிறு குறு தொழில் மேம்பாடு, முறைகேடற்ற நிர்வாகம் என பல வாக்குறுதிகள் வழங்கப்பட்டன. முந்தைய அரசாங்கங்களின் மீதிருந்த அதிருப்தியாலும் பாஜகவின் வாக்குறுதிகள் மீது இருந்த நம்பிக்கையாலும் மக்கள், குறிப்பாக இளைஞர்கள், பாஜகவை தேர்ந்தெடுத்தனர்.
இந்தியாவில் உள்ள 140 கோடி மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் 30 வயதுக்கு உட்பட்டவர்கள். அதில் அரசியலில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை மிக குறைவு. சமீபத்திய கணக்கெடுப்பின்படி 29% இந்திய இளைஞர்கள் எந்த ஓர் அரசியல் ஈடுபாடுமின்றி இருப்பதாகவும், வெறும் 11% இளைஞர்களே அரசியல் கட்சியில் உறுப்பினர்களாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசியலை நிர்ணயிக்கக் கூடிய சக்திகளாக இளைஞர்களே இருக்கின்றனர். அரசியல் கட்சிகளின் வாக்குறுதிகளும் இளைஞர்களின் பிரச்சனைகளை மையப்படுத்திய அமைகிறது.
இந்தியாவின் GDP அளவிற்கு வேலையில்லா திண்டாட்டமும் அதிகரித்து வருகிறது. 2014 தேர்தலில் பாஜகவின் ஒரு முக்கிய வாக்குறுதியாக ‘ஆண்டுதோறும் இரண்டு கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்’ என கூறப்பட்டிருந்தது. ஆனால் அது நிறைவேற்றப்படவில்லை. அரசாங்கமும் அது குறித்தான தெளிவான தரவுகளை வெளியிடுவதும் இல்லை.
ராய்ட்டர்ஸ் அறிக்கையின்படி, 15 முதல் 29 வயதுக்குட்பட்ட இந்தியர்களிடையே வேலையின்மை விகிதம் சுமார் 9.9% ஆக உள்ளது. அதேவேளையில், பணவீக்கம் மற்றும் வேலை வாய்ப்புகள் குறித்த இளைஞர்களின் கவலைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதில் படித்த பட்டதாரி இளைஞர்களே பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர். தனியார் துறைகளில் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில்தான் பிரச்சனை உள்ளது எனப் பார்த்தால் பல்வேறு அரசுத் துறைகளில் கிட்டத்தட்ட பத்து லட்சம் பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும், அவற்றில் அதிகபட்சமாக 2,90,000 பணியிடங்கள் ரயில்வே துறையில் மட்டுமே இருப்பதாகவும் கூறப்படுகிறது. வேலையில்லாத் திண்டாட்டம் காரணமாக சில ஆயிரம் அரசு வேலைகளுக்கு பல லட்சம் நபர்கள் விண்ணப்பிக்கும் சூழலும் இருக்கிறது.
இராணுவத்தில் பணியாற்றுவதை மிகப்பெரும் கனவாக கொண்டிருந்த இளைஞர்களின் கனவில் மண்ணை அள்ளிப் போடும் வகையில் அக்னிபாத் திட்டத்தை பாஜக அரசாங்கம் கொண்டு வந்தது. இதற்கு எதிராக பெருமளவில் போராட்டங்கள் நடைபெற்றன.
வேலைவாய்ப்பை அதிகரிக்க 21ஆம் நூற்றாண்டின் வேலைச் சந்தைக்குத் தேவையான திறன்களை வேலை தேடுபவர்கள் பெறுவதற்கு உதவும் ‘திறன் இந்தியா’ போன்ற தனது முதன்மைத் திட்டங்களைப் பற்றி மோடி அரசு பெருமை பேசி வருகிறது. இருப்பினும், தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) ஆட்சிக்கு வந்ததிலிருந்து, கல்விக்கான அரசாங்கத்தின் செலவினம் சீராகக் குறைந்து வருகிறது.
2026இல் ஒன்றிய அரசாங்கம் மொத்த GDPஇல் கல்விக்காக 0.6% சதவீதமும் மாநிலங்களுடன் சேர்த்து 4.12% சதவீதமும் செலவு செய்கிறது. இது தேசிய கல்விக் கொள்கை (NEP 2024) பரிந்துரைபடியும், 2014 இல் பாஜக வாக்களித்த 6% சதவீதத்திலிருந்தும் குறைவாகும்.
இது மட்டுமின்றி தொடர்ச்சியாகவே போட்டித் தேர்வுகள் நடத்துவதில் முறைகேடு, வினாத்தாள் கசிவு ஆகியவை போட்டித் தேர்வுகளுக்காக கடுமையாக உழைக்கும் இளைஞர்களுக்கு மன உளைச்சலையும் கோபத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
பாஜக தலைமையிலான ஆட்சியில் இந்திய பல்கலைக்கழகங்களில் மாணவர் செயல்பாடுகளும் ஜனநாயக செயல்பாடுகளும் கடுமையாக கட்டுப்பாட்டுகளை எதிர்கொள்கின்றன. இந்திய பல்கலைக்கழகங்களில் அரசாங்கத்தை விமர்சிப்பவர்களுக்கு கடுமையான நெருக்கடிகளை கொடுத்து, ஒடுக்கு முறையை கையாண்டு வருகிறது பாஜக.
அதானி, அம்பானி போன்ற பாஜகவிற்கு நெருக்கமான பெரு முதலாளிகள் பொருளாதாரத்தில் வளர்ச்சி அடைந்தும், பாமர மக்கள் பொருளாதாரத்தில் வீழ்ச்சி அடைந்தும் வருகின்றனர். வருமானவரித் துறை, அமலாக்கத் துறை போன்ற அரசு நிறுவனங்களைப் பயன்படுத்தி தங்களுக்கு சாதகமாக செயல்படாத முதலாளிகள், எதிர் கட்சித் தலைவர்கள் மற்றும் சமூக செயல்பாட்டாளர்களை மிரட்டி வருகின்றனர்.
மேலும் ஊடக சுகந்திரத்திற்கு எதிரான சட்டங்களால் இந்தியாவில் உள்ள பெரும்பான்மை ஊடகங்கள் மக்களின் பிரச்சனைகளை பேசுவதைவிட அரசாங்கத்திற்கு சாதகமாகவே செயல்படுகின்றன. கடந்த சில ஆண்டுகளாகவே உலகளவில் ஊடக சுதந்திர குறியீடு பட்டியலில் இந்தியா பின்னோக்கிய செல்கிறது.
இது போன்ற ஏராளமான பிரச்சனைகளால் கொதித்துக் கொண்டிருந்த இளம் தலைமுறையினருக்கு எதிர் கட்சிகளும் நம்பிக்கை அளிக்கும் விதத்தில் செயல்படவில்லை. இந்நிலையில்தான் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் கருத்து இளைஞர்களின் எழுச்சிக்கு வித்திட்டது.
CJPஇல் உறுப்பினர் ஆவதற்கான தகுதிகளில் வேலையில்லாமல் இருப்பது, சோம்பேறியாக இருப்பது, எப்போதும் இணையத்தில் மூழ்கியிருப்பது, தொழில்முறையாகப் புலம்பும் திறன் கொண்டிருப்பது ஆகியவை அடங்கும்.
இதை தொடங்கிய அபிஜீத் திப்கே புனேயில் இதழியல் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்ற பின், அமெரிக்காவில் உள்ள பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் மக்கள் தொடர்புத் துறையில் முதுகலைப் பட்டம் படித்து வருகிறார். 2020 முதல் 2023 வரை, அவர் ஆம் ஆத்மி கட்சியின் சமூக ஊடகக் குழுவில் தன்னார்வலராகப் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
CJP இன் ஆதரவாளர்களில் 70% பேர் 28 வயதுக்கு குறைவானவர்கள் என்றும், எந்தக் கட்சியுடனும் தங்களை இணைத்துக் கொள்ளாத அரசியல் சார்பற்றவர்கள் என்றும் அபிஜித் கூறினார்.
“இந்தியாவில் வேலையின்மை மற்றும் வாழ்க்கைத் தரம் குறித்து அவர்கள் அரசாங்கத்தின் மீது விரக்தியடைந்துள்ளனர். ஆனால் அதே சமயம், அவர்கள் எதிர்க்கட்சிகள் மீதும் விரக்தியடைந்துள்ளனர், ஏனெனில் அரசாங்கத்தைப் பொறுப்பேற்கச் செய்வதற்கு எதிர்க்கட்சிகள் குறிப்பிடத்தக்க எதையும் செய்யவில்லை” என்று அவர் கூறினார்
கடுமையான விமர்சனங்களுக்கு பின்னர் தனது கருத்திலிருந்து பின் வாங்கிய தலைமை நீதிபதி, இந்திய இளைஞர்களை தான் குறிப்பிடவில்லை என்றும் தனது கருத்து சிலர் மோசடிப் பட்டங்களைப் பெறுவது தொடர்பானது என்றும், இளைஞர்கள் “வளர்ந்த இந்தியாவின் தூண்கள்” என்றும் கூறினார்.
சமூக வலைதள கணக்கா? அரசியல் இயக்கமா? Gen Z புரட்சியா?
2016 அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப் ஆதரவாளர்களை விவரிக்க ஹிலாரி கிளிண்டன் பயன்படுத்திய ‘வெறுக்கத்தக்கவர்கள்’ என்ற சொல் ஒரு முழக்கமாக மாறியதுடன் முக்கிய பேசுபொருளாகி ட்ரம்பின் வெற்றியை உறுதி செய்தது.
அதே போன்று, இந்தியாவில் மோசமான ஆட்சியிலிருந்து உயிர் பிழைப்பதற்கான ஓர் அடையாளமாக கரப்பான் பூச்சி மாறியுள்ளது. கரப்பான்கள் 30 கோடி ஆண்டுகளுக்கும் மேலாக, அதாவது டைனோசர்களை அழித்த விண்கற்களின் தாக்குதல் உட்பட, பல பேரழிவுகளிலிருந்து தப்பித்த ஒரு பூச்சி இனம். மிகவும் மீள்திறன் கொண்ட பூச்சிகளில் இதுவும் ஒன்று.
ஒவ்வொரு நிலப்பரப்பு சூழலுக்கும் ஏற்ப தன்னைத் தகவமைத்துக் கொள்ளும் இந்த உயிரினத்தின் திறன் அபாரமானது. எனவே, இந்த நையாண்டிப் பெயரில் ஒரு உண்மை பொதிந்துள்ளது.
இளைஞர்கள் மத்தியில் CJPக்கு கிடைத்த வரவேற்பைப் பார்த்து தென்கிழக்கு ஆசியாவில் உள்ள இலங்கை, நேபாளம், வங்கதேசம் ஆகிய நாடுகளில் நடைபெற்ற அரசாங்க எதிர்ப்பு போராட்டங்கள் போலவே இந்தியாவிலும் நடக்கும் என சிலர் கூறுகின்றனர்.
இது வங்கதேசம் அல்லது நேபாள மாணவர் இயக்கம் போன்றல்ல என்பதை குறிப்பிட்ட அப்ஜீத், இது வெறும் அரசியலமைப்பு ரீதியான பொறுப்புக்கூறல் மட்டுமே என்று கூறினார். இந்தியாவில் அவ்வாறான புரட்சிக்கான வாய்ப்பு மிக குறைவு. அத்துடன் இந்தியா போன்ற பெரிய நாடுகளில் மக்களை ஒருங்கிணைத்து போராட்டங்களை நடத்துவது எளிதல்ல.
ஏனென்றால், முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு பாஜக ஆட்சியில் அரசுக்கு எதிரான நடவடிக்கைகள் மீது கண்காணிப்பு அதிகமாக இருக்கிறது, அரசு நிறுவனங்கள் பாஜக சார்புநிலையில் செயல்படுகின்றனர். சமூக செயல்பாட்டாளர்கள் மீது யுஏபிஏ போன்ற ஒடுக்குமுறை சட்டங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அரசியலமைப்புக்கு உட்பட்ட நடவடிக்கைகள் கூட கடுமையான ஒடுக்கு முறைக்கு உள்ளாக்கப்படுகிறது. அதை வழிநடத்தும் தலைவர்கள் தேச துரோக முத்திரை குத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுகின்றனர்.
“அமைதியான ஜனநாயக வழிமுறைகள்” குறித்த அப்ஜிதின் கூற்று, தேர்தலில் போட்டியிட விரும்பும் ஒரு கட்சியின் சொல்லாடலாகும். ஆனால், தேர்தல்களில் அடையாளப்பூர்வமாகப் போட்டியிடுவதிலிருந்து வேறுபட்டு, தீவிரமாகப் போட்டியிடுவதற்கு, எந்தவொரு கூகுள் படிவத்தாலும் வழங்க முடியாத சில விஷயங்கள் தேவைப்படுகின்றன. அதற்குப் பணம், தொண்டர்கள், உள்ளூர் தலைமை தேவை. மேலும் CJP தொடங்கப்பட்டதும் அதை பாஜகவிற்கு எதிரான எதிர்கட்சிகளின் சூழ்ச்சி எனவும், முன்பு ஆம் ஆத்மி உடனான அப்ஜிதின் தொடர்பை முன்வைத்தும் பலர் விமர்சித்தனர்.
அதை தெளிவுபடுத்தும் வகையில் CJP எந்தவொரு அரசியல் அமைப்புடனும் இணைக்கப்படவில்லை என்று அப்ஜித் கூறினார். CJP அடிமட்ட உறுப்பினர்களை கொண்ட இயக்கமல்ல, அது ஒரு டிஜிட்டல் பிரசாரம்தான் என சிலர் அதை குறைத்து மதிப்பிட்டனர்.
இணையத்தில் மட்டும் செயல் பட்டுக்கொண்டிருந்த CJP உறுப்பினர்கள் இப்போது களத்தில் கரப்பான்களாக வேடமிட்ட போராட்டக்காரர்களாக மாறியுள்ளனர். “இது இணையத்தில் தொடரும், தேவைப்பட்டால் களத்திலும் இறங்கும்” என்று இது குறித்து அபிஜித் கூறினார்.
சுமார் 200,000 பின்தொடர்பவர்களைக் கொண்டிருந்த CJPஇன் வலைதள கணக்கு இந்தியாவில் முடக்கப்பட்டிருப்பதாக X தளத்தில் திப்கே எழுதியிருந்தார். இது அந்த இயக்கத்தின் மீதான முதல் வெளிப்படையான கட்டுப்பாடுகளில் ஒன்றாகும்.
புதிய பாதையை நோக்கி இந்திய அரசியல் களம்
இந்திய அரசியல் ஒரு புதிய பாதையை நோக்கி நகர்ந்துகொண்டு இருக்கிறது. புரட்சிக்கு பெயர்போன தெற்காசியாவில் உள்ள பல நாடுகளில் பெரும் அரசியல் மாற்றத்தை இளைஞர்கள் ஏற்படுத்தியுள்ளனர்.
இந்த புதிய அணியின் செல்வாக்கு பாரம்பரிய கட்சிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக பாரம்பரிய அரசியல் கட்சிகளின் உறுப்பினர் சேர்க்கை என்பது நீண்ட செயல் முறையை கொண்டதாக இருக்கும். அவர்களின் வலைதள பக்கங்களைக் கையாள பல குழுக்கள் இருக்கும். இதற்கு பெரிய அளவிலான நிதியும் தேவைப்படும். அனைத்து மரபார்ந்த வழிமுறைகளையும் தகர்த்தெறிந்து, எந்த ஒரு பெரிய குழுவோ நிதியோ இல்லாமல் CJP மிகக் குறுகிய காலத்தில் இந்த வளர்ச்சியை அடைந்திருக்கிறது.
மரபார்ந்த அரசியல்வாதிகள், கரப்பான் ஜனதா கட்சியின் எழுச்சியை உற்றுப் பார்த்துக்கொண்டே, அதை “Gen Z தலைமுறையினரின் இரைச்சல்” அல்லது ‘சமூக ஊடக மோகம்’ என்று கூறிப் புறக்கணிக்கிறார்கள்.
இத்தாலியில் உள்ள ஃபைவ்-ஸ்டார் இயக்கத்திலிருந்து ஒருவர் பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம். 2005இல் நகைச்சுவையாளர் பெப்பே கிரில்லோவின் வலைப்பதிவாகத் தொடங்கப்பட்ட இது, படிப்படியாக முன்னேறி 2018-ல் நாடாளுமன்றத்தின் மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்தது. கிரில்லோவுக்கு களத்தில் ஆட்கள் இல்லை; இத்தாலிய மேல்தட்டு மக்களைத் தாண்டிப் பரவிய ஒரு வைரல் வெடிப்பை (viral outbreak) அவர் எளிதாகப் பயன்படுத்திக் கொண்டார்.
20-ஆம் நூற்றாண்டில், பலத்தை நிரூபிப்பது தெருக்களில் இறங்கக்கூடிய மக்களின் எண்ணிக்கையைப் பற்றியதாக இருந்தது. ஆனால் இன்று இணையம் அதற்கான தளமாக மாறியுள்ளது. இதற்கு மற்றொரு வாழும் உதாரணம் தமிழக வெற்றிக் கழகம் (தவெக). அதிகாரபூர்வமாகக் கட்சி தொடங்கி 3 ஆண்டுகளில் இரண்டு வலுவான மாநில கட்சிகளை வீழ்த்தி ஆட்சி அமைத்துள்ளது. ஆனால் மிகக் குறைந்த அளவிலேயே பொதுக்கூட்டம், பேரணி, பிரசாரம் ஆகியவை நடத்தப்பட்டது. அவர்களின் முக்கிய பிரச்சாரக் களமாக மொபைல் திரையே இருந்தது. இப்போது இந்திய தேர்தல் என்பது ஓர் எண்ணிம தேர்தலாக (digital election) மாறியுள்ளது. இது இந்திய அரசியலின் புதிய சகாப்தம்.
X தளத்தில் CJP-யின் கொள்கை முழக்கம், “இளைஞர்களின், இளைஞர்களால், இளைஞர்களுக்கான அரசியல் முன்னணி. மதச்சார்பற்ற – சோசலிச – ஜனநாயக – சோம்பேறி இயக்கம்” என பதிவு செய்யப்பட்டுள்ளது.
இன்ஸ்டாகிராமில், அந்தக் கட்சி தன்னை “சோம்பேறி, வேலையில்லாத கரப்பான்களின் ஒன்றியம்” என்று அடையாளப்படுத்திக்கொண்டு, GEN Z தலைமுறையினரைத் தங்களுடன் சேருமாறு அழைப்பு விடுக்கிறது.
திப்கேவின் இணையவழி பக்கம் ஒரு முழு இயக்க வடிவை பெறுவதற்கான வேலைகள் செய்யப்பட்டு வருகிறது. CJP இன் செய்தித் தொடர்பாளர்களாக மூவர் நியமிக்கப் பட்டுள்ளனர். நீட் வினாத்தாள் கசிவை எதிர்த்து ஒன்றிய கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் என டெல்லி ஜந்தர் மந்தரில் திப்கே தலைமையில் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. மேலும் ஒன்றிய கல்வி துறை அமைச்சர் பதவி விலகவில்லை என்றால் நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் கிளர்ச்சி வந்துவிட்டது, அது பாரம்பரிய அரசியல் தலைவர்கள் இன்னும் படித்துப் பார்க்காத விதிகளின்படியே இயங்குகிறது. பிரதான ஊடகங்கள் காற்று எந்தத் திசையில் வீசுகிறது என்று இன்னும் கண்டறிய முயன்றுகொண்டிருக்கும் வேளையில், ஒரு புயல் ஏற்கெனவே தாக்கிவிட்டது.
ஆனால் அரசியலில் பயணிப்பதற்கு ஒரு கட்சியால் இணையத்தில் மட்டும் செயல்பட முடியாது. இணைய இயக்கத்தை தொடங்குவது எவ்வளவு எளிதோ அதைவிட எளிதானது அதனை முடக்குவது. இதனை CJP நிச்சயம் உணர்ந்திருக்கும். CJP இந்திய அரசியலில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியதை மறுக்க முடியாது. ஆனால் அவர்களின் உண்மையான நோக்கத்தையும் பின்புலத்தையும் அறிந்து கொள்வதற்கு அவர்களின் செயல்பாடுகளை உற்று நோக்க வேண்டும். அதற்கு சிறிது காலம் நாம் காத்திருக்க வேண்டும்.

