ஈரான் தலைநகர் தெஹ்ரானில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனிய்யா இஸ்ரேலால் படுகொலை செய்யப்பட்ட செய்தி உலகெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கடந்த 10 மாதத்துக்குள் இஸ்மாயில் ஹனிய்யாவின் குடும்ப உறுப்பினர்கள் 60 பேரை இஸ்ரேல் கொன்றுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம்கூட ஃகஸ்ஸாவில் இருந்த அவரின் மூன்று மகன்களைக் கொன்றது இஸ்ரேல்.
இப்போது இஸ்மாயில் ஹனிய்யா ஷஹீதாகியிருக்கிறார். இதற்குக் காரணம் என்னவென்று பலருக்கும் கேள்வி இருக்கும். குறிப்பாக இதற்கு 4 காரணங்களைச் சொல்லலாம்.
ஜூலை 31 நள்ளிரவில் ஈரான் தலைநகர் டெஹ்ரானில் ஹமாஸ் இயக்க அரசியல் பிரிவுத் தலைவரும் ஃபலஸ்தீனின் முன்னாள் பிரதமருமான இஸ்மாயில் ஹனிய்யா படுகொலை செய்யப்பட்டார். இந்தப் படுகொலைக்கு இஸ்ரேல் பொறுப்பு ஏற்கவும் இல்லை, மறுக்கவும் இல்லை. ஆனால், ஹனிய்யாவை படுகொலை செய்தது இஸ்ரேல்தான் என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்க முடியாது.
ஒரே நேரத்தில் ஒன்று அல்லது இரண்டு நோயாளிகள் வந்ததாக எனக்கு நினைவில்லை. ஒவ்வொரு வான்தாக்குதலும் டஜன் கணக்கான மக்களைக் காயப்படுத்தியது. ஒருநாள் தலை காயம், இரண்டு கால்களிலும் எலும்பு முறிவு, பாதிக்கப்பட்ட நுரையீரலுடன் ஒரு கர்ப்பிணி வந்தார். அவர் மரணித்துக் கொண்டிருக்கிறார் என்பது தெளிவாகத் தெரிந்தது. அனஸ்தீசியா இல்லாதபோதும் சிசேரியன் அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கு ஐசியூ மருத்துவர்கள் முடிவெடுத்தனர். பிறந்த அக்குழந்தை, குழந்தைகளுக்கான ஐசியூ பிரிவிற்கு கொண்டு செல்லப்பட்டது. பத்து நாள்கள் போராட்டத்திற்குப் பிறகு அப்பெண்மணி மரணித்தார்
இந்தத் தாக்குதல் யாருக்குச் சாதகமாக அமைந்தது என்பதைக் கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கையைக் கொண்டு கூற இது ஒன்றும் கிரிக்கெட் போட்டி அல்ல. ஆயிரக்கணக்கான மக்கள் இதில் கொல்லப்பட்டுள்ளார்கள் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் இதில் இஸ்ரேல் மிகப்பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது என்பதே உண்மை.
இஸ்ரேலுக்கு ஏற்பட்ட சேதம் அதன் உளவு மற்றும் இராணுவத் துறைகளின் தோல்விக்கும் அப்பாற்பட்டது; இஸ்ரேலுக்கு இதுவோர் அரசியல், உளவியல் பேரழிவு ஆகும். வெல்ல முடியாத அரசு என்று மார்தட்டிக்கொண்டிருந்த இஸ்ரேலுக்கு, இத்தாக்குதல் அதன் பலவீனத்தையும் படுமோசமான இயலாமையையும் காட்டியுள்ளது. ஃபலஸ்தீனை ஒட்டுமொத்தமாகப் புறக்கணித்துவிட்டு, மத்தியக் கிழக்கு பகுதிக்கு தன்னை புதிய தலைமையாக ஆக்கிக்கொள்வதற்கான அதன் திட்டங்களுக்கும் இது பேரிடியாய் அமைந்துள்ளது.
இந்தியாவில் மதச்சார்பின்மை என்பது மேற்கத்திய நாடுகளைப் போல் அனைத்து மதங்களையும் விலக்குவது அல்ல; மாறாக அவ்வனைத்தையும் சமமாக நடத்துவது எனக் கூறப்பட்டு வந்தாலும் இங்கு ஏன் பெரும்பான்மையினரின் அடையாளங்கள் இயல்பாகவும் சிறுபான்மையினரின் அடையாளங்கள் சந்தேகக் கண்கொண்டும் பார்க்கப்படுகின்றன? இந்திய தேசியம் ‘உள்ளடக்கும் தேசியம் (Inclusive Nationalism)’ என்றால் சகிப்புத்தன்மை, மதச் சுதந்திரம் போன்ற வார்த்தைகள் சிறுபான்மையினரை மையப்படுத்தி இருப்பதன் தேவை என்ன? இதுபோன்ற பல கேள்விகளுக்கு விடைகாண, இருவேறு துருவங்களான தேசியம், அரசு ஆகியவற்றை இணைத்து உருவாக்கப்பட்ட நவீன தேச அரசு எனும் கருத்தாக்கத்தின் வரலாற்றுப் பின்னணியையும் அதன் அடிப்படைகளையும் தெரிந்துகொள்ள வேண்டும். இக்கட்டுரை அதைக்குறித்தான புதிய கண்திறப்பை நமக்கு கொடுக்கிறது.
அணுக்களால் உருவான பொருள் உலகத்திலிருந்து பொருட்களற்ற அருவ உலகத்தை நோக்கி நாம் சென்றுகொண்டிருக்கிறோம் என்கிறார் தென்கொரியாவில் பிறந்த சுவிஸ் – ஜெர்மன் தத்துவவியலாளர் ப்யுங் சுல் ஹான். உருவில்லா அருவப் பொருட்களையே நேசிக்கவும் பகிரவும் செய்கிறோம், அவையே நம்மை ஆள்கின்றன. யதார்த்த உலகிற்கும் எண்ம உலகிற்குமான (digital world) வேறுபாடுகள் குறையும்போது நம்முடைய இருப்பு என்பது கேள்விக்குள்ளாகிறது என்கிறார் ஹான். உலகளவில் அதிகம் வாசிக்கப்படும் தத்துவவியலாளரான ஹான், நவதாராளவாத முதலாளித்துவத்தின் விளைவுகளை தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகிறார்.
உலகக் கோப்பையில் பொங்கிப் பெருகியிருக்கும் ஃபலஸ்தீன விடுதலை ஆரவாரம் அம்மக்களுக்கு அவர்கள் தனித்து விடப்படவில்லை என்ற செய்தியையும், உலகுக்கு ஃபலஸ்தீன விடுதலை வேட்கை உயிர்ப்புடன் இருக்கிறது என்ற செய்தியையும் பறைசாற்றியிருக்கின்றது. அதே நேரத்தில், இஸ்ரேல் என்னதான் அறபுலக அரசுகளுடன் ஒப்பந்தங்கள் ஏற்படுத்திக்கொண்டு தனது இருப்பை அங்கீகரிக்கச் செய்தாலும், மக்களைப் பொறுத்தமட்டில் அது என்றுமே ஒரு நாடாக அங்கீகாரம் பெற முடியாது என்ற செய்தி பொட்டில் அடித்தாற்போல் உணர்த்தப்பட்டிருக்கின்றது.
ஹமீது அல்கரின் இந்தப் புத்தகம் வஹ்ஹாபியத்தின் தந்தையான முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாபின் பூகோளப் பின்னணி, அறிவுத் தகைமை போன்ற அடிப்படையான அம்சங்கள் தொட்டு பலவற்றை விவாதிக்கின்றது. சுன்னீ இஸ்லாமிய மரபிலிருந்து வஹ்ஹாபியம் எவ்வாறு விலகி நிற்கிறது, நவீன கால வரலாற்றில் தோன்றிய பிற சீர்திருத்த இயக்கங்களிலிருந்து அது வேறுபடும் புள்ளிகள் என்னென்ன, பிறவற்றோடு வஹ்ஹாபிய இயக்கத்தை ஒப்பிடுவது ஏன் தவறு உள்ளிட்ட பல கேள்விகளுக்கு இது விடையளிக்கிறது. குறிப்பாக சஊதி அறபியாவின் உருவாக்கத்தில் வஹ்ஹாபியத்தின் செல்வாக்கு, அது ஏகாதிபத்திய சக்திகளுடன் கொண்ட உறவு, பண்பாட்டு வெளியில் அதன் பாதிப்புகள், முஸ்லிம்களிடையே அது கூர்தீட்டியிருக்கும் குறுங்குழுவாதம் ஆகியவையும் இப்புத்தகத்தில் விவரிக்கப்படுகின்றன.
வஹ்ஹாபியத்தின் வேர் முதல் நுனி வரை அலசும் இந்நூலின் ஒவ்வொரு பகுதியையும் தனித்தனியே எடுத்துக்கொண்டு விரிவாக ஆராய முடியும். அந்த அளவுக்குச் செறிவான உள்ளடக்கங்களைக் கொண்டிருக்கிறது இவ்வாக்கம். தாங்கள் மட்டுமே ஓரிறைவாதத்தை முறையாகக் கடைப்பிடித்து ஒழுகுபவர்கள் என்றும், தாங்களே நூதன வழக்கங்களைத் தவிர்த்து தூய இஸ்லாத்தைப் பின்பற்றுபவர்கள் என்றும் ஏகபோக உரிமை கோரும் வஹ்ஹாபிகளின் அடித்தளத்தை இப்புத்தகம் கேள்விக்குட்படுத்துகிறது.
‘பெண் உரிமைகளின் பெயரால்: ஃபெமோ நேஷனலிசத்தின் எழுச்சி’ எனும் தலைப்பிலான ஆர்வமூட்டும் புத்தகம் ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளார் சாரா ஃபாரிஸ். அதில் வலதுசாரி தேசியவாதிகளும் நவதாராளவாதிகளும் சில பெண்ணியவாதிகளும் பாலினச் சமத்துவம் கோரும் முகமையைச் சேர்ந்தோரும் முஸ்லிம் ஆண்களைப் பூதாகரப்படுத்தும் நோக்கிலும், தங்கள் சொந்த அரசியல் குறிக்கோள்களை அடைவதற்காகவும் பெண் உரிமைகளைப் பயன்படுத்திக்கொள்வதை ஆராய்கிறார். இந்தத் தரப்புகள் ஒவ்வொன்றும் தங்களுக்கிடையே முரண்படுபவையாகத் தெரிந்தாலும், ஒரு புள்ளியில் இவை சந்தித்துக்கொள்வதில் முக்கியமானதொரு அரசியல்-பொருளாதாரப் பரிமாணம் இருப்பதாக அவர் வாதிடுகிறார்.