விஞ்ஞானிகள் பற்றிய கற்பிதங்களே அறிவியலாய் நமக்கு போதிக்கப்படுகின்றன. சுய முன்னேற்றத்திற்கான உந்துதலாகவே விஞ்ஞானிகள் பொதுச் சமூகத்திற்கு அறிமுகமாகியுள்ளார்கள். போற்றப்படும் விஞ்ஞானிகள் ஒருபுறமிருக்க, அவர்கள் முன்வைத்த கருத்தாக்கங்களைக் கொண்டு மேன்மேலும் அறிவியலை வளர்த்தெடுப்பதற்கு அறிவியலாளர்கள் மிக முக்கியமானவர்கள். அந்த வகையில், அறிவியலாளர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள், எப்படி அறிவியல் செய்கிறார்கள் என இரண்டாம் அத்தியாயம் முழுமையாக அலசுகிறது.
சீர்மை பதிப்பகம் வெளியிட்டுள்ள அறிவியல் என்றால் என்ன? என்ற நூலை நண்பர் கொள்ளு நதீம் மூலமாகப் பெற்றேன். பொறுமையாக ஒவ்வொரு அத்தியாயமாக வாசித்துக் கொண்டிருக்கிறேன். இதுவரை அறிவியல் குறித்துப் பல்வேறு புரிதல்கள் நமக்கு இருக்கலாம். பொதுவாக தொழில்நுட்ப வளர்ச்சியின் அடிப்படையில் அறிவியலை நாம் புரிந்து வைத்திருப்போம். ஆனால், உண்மையில் அறிவியல் என்றால் என்ன, எவையெல்லாம் அறிவியல், எவையெல்லாம் அறிவியல் இல்லை, அறிவியல் எப்படி இவ்வுலகில் ஆதிக்கம் செலுத்துகிறது, மனிதர்களுக்கு இவ்வுலகம் குறித்த புரிதலை எப்படி மாற்றியமைக்கிறது என்பன பற்றி மிக விரிவாக இந்நூல் விளக்குகிறது.
இந்தக் கட்டுரையை புத்தக விமர்சனமாக அன்றி, எனக்குப் புரிந்த விஷயங்களைப் பகிர்ந்துகொள்ளும் நோக்கில் எழுதுகிறேன். இந்தப் பகுதி முதல் அத்தியாயம் பற்றியது. மீதமுள்ள அத்தியாயங்கள் குறித்து அடுத்தடுத்த பகுதிகளில் பார்க்கலாம்.
முஸ்லிம்களின் உயிர் மற்றும் உடமைகளின் மீது சங் பரிவாரம் நிகழ்த்தும் திட்டமிட்ட வன்முறை வெறியாட்டங்களை, அதன் நாசகர சித்தாந்தத்தை பல புத்தகங்கள் அம்பலப்படுத்தி இருக்கின்றன. மேழி புக்ஸ் வெளியிட்டுள்ள மொழிபெயர்ப்பு நூலான நரக மாளிகை அத்தகைய கொடூரங்களை நிகழ்த்தும் இந்து தேசியவாத இயக்கத்தின் பிரம்மாண்டமான உள்கட்டமைப்பு பற்றியும், இந்து ராஷ்டிரக் கனவின் பெயரால் எத்தகைய மனித மிருகங்களை அது உருவாக்குகிறது என்பதையும் பதிவு செய்துள்ளது.
சமகாலத்தில் தீவிரமாக அலசப்படும் ஒரு தோற்றப்பாடாக நவநாத்திகம் (New-Atheism) மாறியிருக்கிறது. அந்த வகையில், நவநாத்திகவாதத்தை அதன் அறிவுத் தத்துவம், பண்பாட்டு நோக்கு மற்றும் சமூக-அரசியல் பரிமாணம் எனப் பல்வேறு கோணங்களில் ஆராயும் மிக முக்கியமான புத்தகமாக சமூகவியல் ஆய்வாளர் ஸ்டிபன் லெட்ரூவின் The Evolution of Atheism: The Politics of Modern Movement உள்ளது. யோர்க் பல்கலைக்கழத்தில் முனைவர் பட்டத்திற்காகச் சமர்பிக்கப்பட்ட ஆய்வை ஆக்ஸ்போர்ட் பல்கலைகழக பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. பொதுவாக, சமூகவியல் பரப்பில் மத நம்பிக்கையாளர்கள் எவ்வாறு நடந்து கொள்கிறார்கள், சமூக-அரசியல் விவகாரங்களை அணுகுவதில் அவர்களது மதம் எவ்வாறு செல்வாக்கு செலுத்துகிறது போன்ற கேள்விகளை ஆய்வு செய்வதிலேயே ஆய்வாளர்கள் அதிகம் கரிசனம் கொள்கிறார்கள். ஆனால், மதத்தைத் துறந்தவர்கள் அல்லது நாத்திகர்களின் சமூக நடத்தை எப்படியிருக்கிறது என்பது குறித்த ஆய்வுகள் சமூகவியல் துறையில் மிக அரிது. அந்த இடைவெளியை இப்புத்தகம் பூர்த்தி செய்ய முயல்வதாக நூலாசிரியர் குறிப்பிடுகிறார்.
எழுத்தாளர் சாளை பஷீர் அவர்களின் முதல் நாவலான ‘கசபத்’தை சமீபத்தில் படித்தேன். தென் தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்ட கடற்கரை ஊரான காயல்பட்டினம் தான் கதையின் நிகழ்விடம். காயல்பட்டினத்தை மையமாகக் கொண்டு அதன் வட்டார மொழியில் பண்பாட்டுப் பின்னணியில் வரும் முதல் நாவல் என நினைக்கிறேன்.
காயல்பட்டினம் மிகப் பழைமையான வரலாற்று எச்சங்களையும், பல ஸூஃபி அறிஞர்களின் தடங்களுடன் தமிழ்ச் செறிவும் கொண்ட இஸ்லாமியர்கள் கணிசமாக வாழும் ஓர் ஊர். இந்நாவலின் ஆசிரியர் சாளை பஷீரின் சொந்த ஊரும்கூட. தான் கண்ட வாழ்வியல் முறைகளை, எளிய மனிதர்களை சிலாகித்த இடங்களை மிகையில்லாமல் பதிவு செய்திருக்கிறார் சாளை பஷீர். காயல்பட்டின ஊரார், குறிப்பாக இஸ்லாமியர்கள் என்றாலே சிவப்புத் தோல் உடையவர்கள், பெரும் செல்வந்தர்கள் எனப் பொதுப்புத்தியில் கட்டமைக்கப்பட்ட பிம்பத்தை உடைத்தெறிந்து இருக்கிறார்.
ஒரு படைப்பு அதன் இலக்கியச் சுவைக்காகவும், அது உண்டாக்கும் கிளர்விற்காகவும் வாசிக்கப்பதோடு, அது பேசும் அரசியலுக்காகவும்தான் மனங்கொள்ளப்படுகின்றது. கிரானடா நாவல் பேசும் அரசியலின் தகிப்பு நம்மை முழுமையாக தன் வசம் எடுத்துக்கொள்கின்றது. அதன் ஒவ்வொரு சொல்லும் இன்றைய தினத்திற்குள்ளும் அதன் கணத் துகள்களுக்குள்ளும் சொரிகின்றது. சிலுவையின் இடத்தை காவி அனிச்சையாகவே மாற்றீடு செய்துகொள்கின்றது. நிகழ்கால இந்தியாவுடன் கிரானடாவின் பனுவலை இணைத்துப் பார்க்காமல் வாசிப்பதென்பது ஒரு வகையில் கள்ள வாசிப்பில்தான் சேர்த்தி.
கிரானடா ஒன்றாம் நாவலின் இறுதிப் பகுதியில் இடம்பெறும் சலீமாவின் மீதான மத விசாரணையையும், அதன் பிறகு கத்தோலிக்க மதத்தைச் சார்ந்த கஷ்டிலியப் படையாளிகளால் அவள் கொலைக்களத்தை நோக்கி அழைத்துச் செல்லும் படலத்தையும் வாசித்துக்கொண்டிருக்கும் நாளில்தான் கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பும் வெளியாகின்றது. கர்நாடகக் கல்லூரிகளில் முஸ்லிம் மாணவியர் ஹிஜாப் அணிவதற்கான மாநில அரசின் தடையை உறுதிப்படுத்திய தீர்ப்புதான் அது. இரத்தம் தோய்ந்த வரலாற்றின் ஓர் அத்தியாயம் தனது கூட்டாளியை இரத்தக் கவிச்சி மாறாமல் நோக்கி புன்னகைத்துப் புளகமெய்திய தருணம்.
ரகசியங்களின் திரைநீக்கம் (கஸ்ஃபுல் அஸ்றார்) என்ற இந்த நூல் நாட்குறிப்பு வகைமையைச் சார்ந்தது. உலகில் நாட்குறிப்பு வகையிலான இலக்கியங்கள் புதிதல்ல. சீனர்கள் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அன்றாட அரச நிகழ்வுகளையும் அலுவல்களையும் குறித்து வைத்ததன் மூலமாகத் தங்களது வரலாற்றைத் தக்க வைத்துக் கொண்டனர் என்பார் க.ப.அறவாணன் (பார்க்க: தமிழர் அடிமையானது ஏன்? எவ்வாறு?).
ரோமப் பேரரசனான மார்கஸ் ஆண்டோனியஸ் அரேலியஸ் எழுதிய ’தியானங்கள்’ (Meditations) நூலும் நாட்குறிப்பு வகைமைச் சார்ந்த தத்துவார்த்த நூலே ஆகும். தனிமனித ஒழுக்கம், அறவிழுமியங்கள், தனிமனிதனுக்கும் பிரபஞ்சத்துக்குமான தொடர்பு, இயற்கையின் இயல்புகள் போன்ற விஷயங்களின் மீது அப்புத்தகம் புத்தொளிப் பாய்ச்சுவதால் ஸ்தோயிக் மரபினர் என்றில்லாமல் அனைவரும் வாசிக்கக்கூடிய பொது பனுவலாக அது திகழ்கிறது.
’தியானங்கள்’ மனித வாழ்விற்கான நெறிமுறைகளை முதன்மையாகப் பேசுகின்றதென்றால் ’ரகசியங்களின் திரைநீக்கம்’ பரம்பொருளுக்கும் படைப்பினத்திற்குமான உறவை, காதலை, பக்திப் பரவசத்தைப் பேசுகிறது. ரூஸ்பிஹானின் நூல் முதன்மையாக இறைக் காதலையும் ஒன்றிணைவையும் பேசுவதால் இஸ்லாமிய மெய்யியல் நூல் என்ற தளத்தையும் தாண்டி அனைத்து மரபைச் சேர்ந்த ஆன்மிகச் சாதகர்களுக்குமான பொது நூலாகவுள்ளது.
சாளை பஷீர் தன் வரலாற்றிலிருந்தே காயல்பட்டினத்தின் கடந்த கால வரலாற்றை, தன்னைச் சூழ உள்ள மனிதர்களை, தன் சுயத்தின் நீட்சியை முகிழ்க்கச் செய்கிறார். அவரது கதை மாந்தர்களில் வெள்ளந்தி மனிதர்கள், எளியவர்கள், புத்தகப் பிரியர்கள், அடுத்தவரைச் சுரண்டி வாழ்பவர்கள், அடுத்தவர்களுக்கு உதவுபவர்கள், சம்பாத்தியமே வாழ்க்கை என அலைபவர்கள் எனப் பல்வேறு மனிதர்கள் வந்து போகிறார்கள். அவர் பாத்திர வடிவமைப்பை மிகக் கச்சிதமாக அமைத்திருப்பது அவரின் அனுபவத்தின் துணை கொண்டே. நாவலில் வரும் முதல் கதாபாத்திரமான தாவூதப்பா முதல் இறுதிக் கதாபாத்திரமான குட்டை ஷாஃபி வரை எந்தக் கதாபாத்திரமும் புனைவில் உருவாக்கப்படவில்லை என்பது மிகத் தெளிவு. மிகவும் தத்ரூபமாக அவர்களை எங்கள் மனக்கண் முன்பு நிறுத்துகிறார் சாளை பஷீர்.
மாப்ளா கிளர்ச்சி ஒரு வர்க்கப் போராட்டம் என்றபோதிலும், இந்து என்ற வகைமைக்குள் உள்ளடக்கப்பட்ட பல்வேறு சாதியினர் நிலப்பிரபுக்களின் அடக்குமுறையைச் சகித்துக் கொண்டபோது, முஸ்லிம்கள் மட்டும் கிளர்ந்தெழுந்தது ஏன்? அதற்கு ஒரே காரணம் இஸ்லாம் மட்டுமே. அதுதான் ஒன்றிணைவதற்கும் (பள்ளிவாசல்களில் தொழுகைக்காக ஒன்றுகூடுவது) போராடுவதற்கும் வலிமை கொடுத்தது. ஒருசில தருணங்களில் இந்தக் கிளர்ச்சிகளில் ஆலிம்களும் (மார்க்க அறிஞர்கள்) பங்கேற்றனர். பந்தலூர் மலையைச் சுற்றிலும் 15 கிலோ மீட்டர் சுற்றளவில் மட்டுமே அனைத்து கிளர்ச்சிகளும் நடைபெற்றன. கேரளாவின், குறிப்பாக மலபார் பிரதேசத்தின், நிலவுடமை உறவுகளைக் குறித்து அறிந்துகொள்ள ஒருவர் இந்தப் புத்தகத்தை வாசிக்கலாம்.
எதிர்மறையான விசயங்கள் வேகமாகப் பரவும் இயல்புடையவை என்பதை அவை சமூக ஊடகங்களிலும் வேகமாகப் பரவுகின்றன. ஆனாலும் அவற்றை நேர்மறையான, நல்ல விசயங்களைப் பரப்புவதற்கும் பயன்படுத்த முடியும், நாம் சில ஒழுங்குகளைக் கடைப்பிடித்தால். இந்தச் சிறிய புத்தகம் நாம் கடைப்பிடிக்க வேண்டிய, கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான சில ஒழுங்குகளை நமக்கு நினைவூட்டுகிறது.